LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- புதுமைப்பித்தன்

கொடுக்காப்புளி மரம்

 நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது.

நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா அஞ்ஞாதவாசம் – உருவத்தையும் மாற்றிக் கொண்டு – செய்து கொண்டு இருப்பதாகத் தெரியும். தேக ஆரோக்கியத்திற்காக அங்கு சென்று வசிக்க வேண்டாம். அதற்கு வேறு இடம் இருக்கிறது. ராமனுடைய பெயரை வைத்துக் கொண்டால் ராமன்போல் வீரனாக இருக்க வேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? இதில் ஒன்றும் அவசியமில்லை.

அங்கு வசிப்பவர்கள் எல்லோரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அதாவது அங்கு வசிப்பவர்கள் என்றால், அவர்களுடைய வீடு என்ற ஹோதாவில் ஒரு குடிசை; சில இடத்தில் ஓட்டுக் கட்டிடம் கூட இருக்கும். முக்கால்வாசி சாமான் தட்டுமுட்டுகள் வெளியே. சமையல் அடுப்பும் வெளியே. எல்லாம் சூரிய பகவானின் – அவர்கள் கிறிஸ்தவர்கள் – நேர் கிருபையிலேயே இருக்கும்.

ஆண்கள், ஏகதேசமாக எல்லாரும், பட்லர்கள் அல்லது ‘பாய்கள். பெண்கள் சுருட்டுக் கிடங்கிலோ அல்லது பக்கத்திலிருக்கும் பஞ்சாலைகளிலோ தொழிலாளிகள். அங்கு அவர்கள் தொழிலைப் பற்றிக் கவனிக்க நமக்கு நேரமில்லை.

காளியக்காவும் இசக்கியம்மாளும் அங்கு குடியிருக்கவில்லை. செபஸ்தியம்மாளும் மேரியம்மாளும்தான் குடியிருந்தார்கள். உண்மையில் காளியக்காள்கள் புதிய பெயர்களில் இருந்தார்களே ஒழிய வேறில்லை. மாதா கோவிலுக்குப் போகும் அன்றுதான் ஆரோக்கியமாதாவின் கடாக்ஷம் இருப்பதாகக் காணலாம். பரிசுத்த ஆவி அவர்களுடைய ஆத்மாவைத் திருத்தியிருக்கலாம்; அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அந்த ஆத்மா சில வருஷங்கள் தங்கி இருப்பிடத்தைச் சுத்தப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியும்.

ஆரோக்கிய மாதா தெருவில் ஒரு முனையில் அவற்றைச் சேராது தனித்து ஒரு பங்களா – அந்தத் தெருக்காரர்கள் அப்படித்தான் சொல்லுவார்கள் – இருக்கிறது. அது பென்ஷன் பெற்ற ஜான் டென்வர் சுவாமிதாஸ் ஐயர் அவர்கள் வீடு. அவர் ஒரு புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர். பெரிய பணக்காரர். “ஒட்டகங்கள் ஊசியின் காதில் நுழைந்தாலும் நுழைந்து விடலாம். ஆனால் செல்வந்தர்கள் மோட்ச சாம்ராஜ்யத்தின் வாசலைக் கடக்க முடியாது என்றார் கிறிஸ்து பகவான். சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்றோ என்னவோ, கர்த்தரின் திருப்பணியைத் தனது வாழ்க்கையின் ஜீவனாம்சமாகக் கொண்டார். உலகத்தின் சம்பிரதாயப்படி அவர் பக்திமான்தான். எத்தனையோ அஞ்ஞானிகளைக் குணப்படுத்தும்படியும், என்றும் அவியாத கந்தகக் குழியிலிருந்து தப்ப வைத்தும், மோக்ஷ சாம்ராஜ்யத்திற்கு வழி தேடிக் கொடுத்திருக்கிறார். நல்லவர்; தர்மவான்; ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குச் செல்வார். புதிய ஏற்பாட்டில் மனுஷ குமாரனின் திருவாக்குகள் எல்லாம் மனப்பாடம்.

அவர் பங்களா முன்வாசலில் ஒரு கொடுக்காப்புளி மரம் பங்களா எல்லைக்குட்பட்டது. ஆனால் வெளியே அதன் கிளைகள் நீட்டிக்கொண்டு இருக்கும்.

வெறுங் கொடுக்காப்புளி மரமானாலும் அதன் உபயோகம் அதிகம் உண்டு. கொடுக்காப்புளிப் பழம் ஒரு கூறுக்கு ஒரு பைசா வீதம் விலையாகும்பொழுது அதை யாராவது விட்டு வைப்பார்களா? பள்ளிக்கூட வாசலிலும், மில் ஆலைப் பக்கங்களிலும் சவரியாயி காலையில் ஒரு கூடை எடுத்துக் கொண்டு சென்றால் ஒரு மணி நேரத்தில் கூடை காலி.

எவ்வளவு வருமானமிருந்தாலும் இந்தக் கொடுக்காப்புளி வியாபாரத்தில் சுவாமிதாஸ் ஐயரவர்களுக்கு ஒரு பிரேமை. ‘ஆண்டவன் மனித வர்க்கத்திற்காகவே சகல ஜீவராசிகளையும் மரம் செடி கொடிகளையும் சிருஷ்டித்தார். அதைப் புறக்கணிப்பது மனித தர்மமல்ல. மேலும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும், தாழ்தப்பட்டவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் இதை மலிவாகக் கிடைக்கும்படி செய்வதினால் கிறிஸ்துவின் பிரியத்தைச் சம்பாதிப்பதற்கு வழி என்பது அவர் நியாயம். அவர்கள் தான் மோஷ சாம்ராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்கள். அவர்கள் இதற்காகத் திருட ஆரம்பித்துப் பாப மூட்டையைக் கட்டிக் கொள்ளாதபடி இவர் இந்தக் கைங்கர்யம் செய்து வருகிறார்.

கொடுக்காப்புளியில் உதிர்ந்து விழும் பழங்கள் சவரியாயிக்குக் குத்தகை. நாளைக்குக் கால் ரூபாய். காலையிலும் மாலையிலும் வந்து எடுத்துக்கொண்டு போக வேண்டியது. பணம் அன்றன்று கொடுத்து விட வேண்டியது. இதுதான் ஒப்பந்தம்.

இதனால் ஒரு ஏழை விதவைக்கு ஒரு வழி ஏற்பட்டிருக்கவில்லையா? சுவாமிதாஸ் ஐயரவர்கள் இதைவிடத் தனது தர்ம சிந்தனையைக் காட்ட வேறு என்ன செய்ய முடியும்?

திங்கட்கிழமை காலை.

சவரியாயி வரக் கொஞ்சம் நேரமாகிவிட்டது.

அந்தத் தெருவின் மற்றொரு கோடியில் பெர்னாண்டஸ் என்ற பிச்சைக்காரன் – பிறப்பினால் அல்ல; விதியின் விசித்திர விளையாட்டுக்களினால்; அகண்ட அறிவின் ஒரு குருட்டுப் போக்கினால். எடுத்த காரியம் எல்லாம் தவறியது. மனைவியும் பெண் குழந்தையின் பொறுப்பைத் தலையில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்.

இரண்டு உயிர்களுக்கு உணவு தேடுவதற்கு வழியும் இல்லை. இதனால் பிச்சைக்காரன் வீட்டின் முன்வந்து கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக்கொண்டு நிற்பான். அது ஹிந்து வீடானாலும் சரி, புரொட்டஸ்டண்ட் அல்லது முகமதிய, எந்த வீடானாலும் சரி. கிடைக்காவிட்டால் முனங்கலும் முணுமுணுப்பும் கிடையாது. இந்த விஷயத்தில் அவன் குழந்தையும் – அதற்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் – அதுவும் வரும். அதற்கென்ன? உத்ஸாகமான சிட்டுக்குருவி.

உலகத்தின், தகப்பனின் கவலைகள் ஏதாவது தெரியுமா? எப்பொழுதும் சிரிப்புத்தான். பெர்னாண்டஸின் வாழ்க்கை இருளை நீக்க முயலும் ரோகிணி.

அன்று சுவாமிதாஸ் ஐயர் அவர்களுடைய வீட்டையடைந்தான். வந்தபொழுதெல்லாம் இரண்டணா என்பது சுவாமிதாஸ் அவர்களின் கணக்கு. அது கிடைக்காத நாள் கிடையாது. அதிலே பெர்னாண்டஸ்ஸிற்கு ஐயரவர்களின் மீது பாசம். ஏமாற்றுக்கார உலகத்தில் தப்பிப் பிறந்த தயாளு என்ற எண்ணம்.

“தோஸ்தரம் அம்மா! தோஸ்தரம் வருது ஆண்டவனே! என்றான்.

‘ஸ்தோத்திரம் என்ற வார்த்தை வராது. அதற்கென்ன? உள்ளத்தைத் திறந்து அன்பை வெளியிடும்பொழுது தப்பிதமாக இருந்தால் அன்பில்லாமல் போய்விடுமா?

சுவாமிதாஸ் ஐயர் சில்லறை எடுக்க வீட்டிற்குள் சென்றார்.

கூட வந்த குழந்தை. கொடுக்காப்புளிப் பழம் செக்கச் செவேலென்று அவளை அழைத்தன. ஓடிச்சென்று கிழிந்த பாவாடையில் அள்ளி அள்ளி நிரப்புகிறது.

வெளியே வந்து கொண்டிருந்த சுவாமிதாஸ் ஐயர் கண்டுவிட்டார். வந்துவிட்டது கோபம்.

“போடு கீழே! போடு கீழே!” என்று கத்திக் கொண்டு வெளியே வந்தார்.

குழந்தை சிரித்துக்கொண்டு ஒரு பழத்தை வாயில் வைத்தது. அவ்வளவுதான். சுவாமிதாஸ் கையிலிருந்த தடிக் கம்பை எறிந்தார்.

பழத்துடன் குழந்தையின் ஆவியையும் பறித்துக்கொண்டு சற்றுதூரத்தில் சென்று விழுந்தது.

திக்பிரமை கொண்டவன்போல் நின்ற பெர்னாண்டஸ் திடீரென்று வெறிபிடித்தவன் போல் ஓடினான்.

குழந்தையிடமல்ல.

கீழே கிடந்த தடியை எடுத்தான்.

“போ நரகத்திற்கு, சைத்தானே! என்று கிழவர் சுவாமிதாஸ் மண்டையில் அடித்தான். கிழவரும் குழந்தையைத் தொடர்ந்தார்.

பிறகு…?

கைது செய்தார்கள். கிழவர் அடித்தது எதிர்பாராத விபத்தாம். பெர்னாண்டஸ் கொலைகாரனாம்!

அவனும் நியாயத்தின் மெதுவான போக்கினால் குழந்தையைத் தொடர்ந்து செல்லக் கொஞ்ச நாளாற்று. வேறு இடத்திலிருந்துதான் பிரயாணம்.

by Swathi   on 26 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.