LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர்

1
எப்படியேனும் நாளையிலிருந்து
குடிக்கக்கூடாது என்றெண்ணும்
குடிகாரனைப்போலத்தான் - நானும்

நாளைக்கேனும்
தமாதமின்றி வேலைக்குப் போகவேண்டுமென்று
தினமும் எண்ணிக்கொள்கிறேன்..
--------------------------------------------------------------------

2
உளி அடித்த சப்தம்
பாறை உடைந்த வலி
மனிதர் சிந்திய வியர்வை
குழந்தை அழுதக் கண்ணீர்
காக்கை குருவிகள் விட்ட உயிர்
மரம் பிடுங்கிய இடத்திலிருந்து -
வாழ்க்கையை தொலைத்தப் பூச்சிகள்
ஒரு காலையில் இறந்துபோன யானை
விபத்தில் இறந்த அவனோ அவளோ
இத்தனையும் நடந்த இடத்திற்கு
ஒற்றைப் பெயர் வைத்தனர்
கோயிலென்று..
--------------------------------------------------------------------

3
கலதரிசனம் கண்டு
பூரிக்கமுடியவில்லை
காலடியில்
பிச்சைக்காரி!
--------------------------------------------------------------------

4
கோயில்வாசலைக் கூட
தாண்டவில்லை சாதி,

பெரிதாகவும் சிறிதாகவும்
உள்ளேயும் வெளியேவும்
ஏக தாண்டவம் ஆடுகிறது;

சாமிக்குத்தான்
செம வேட்டை..
--------------------------------------------------------------------

5
கண்ணைக் குத்திவிடுமென்று
பயந்தவன்
தட்டில் காசு போட்டான்,

குத்தாதென்று
தெரிந்தவன்
வாசலில் பிச்சைப் போட்டான்,

சாமி தட்டிலும் இருந்தது
வாசலிலும் நின்றது..
--------------------------------------------------------------------

6
தினமும்
மூட்டையைச் சுமந்துக்கொண்டுதான்
பிள்ளைகள்
பள்ளிக்கூடம் போகின்றன,

முட்டைபோடும் பாவம்
அவர்களைச் சேராதுபோகலாம்..
--------------------------------------------------------------------

7
கடைக்கு கடை
ஆக்கிரமிப்பு,

மளிகை வாங்க வரிசையில் நின்ற
தமிழன் சொன்னான்
விட்டுக்கொடுத்தானாம்..
--------------------------------------------------------------------

8
காசு
பணம்
பொருள்
உடம்பு
ஏதேனும் கொடு;

எதைவேண்டுமோ செய்யுமிந்த
மனித இனம்..
--------------------------------------------------------------------

9
மதுக்கடையோரம்
மென்றுத் துப்பிய
எலும்புச் சில்லுகளை தேடி போனது
இரண்டு பூனைகள்;

எனக்கு பயம்
எங்கு ஒரு துளி மதுவோ
அல்லது சிகரெட்துண்டின் எச்சிலோ
பூனைகளின் உதட்டில் பட்டுவிடுமோ' என்று!
-------------------------------------------------------------------

10
மதுக்கடையோரம்
நடந்துச்செல்லும் பள்ளிமாணவர்களில்
ஒருவருக்கு அந்த நாற்றம்
பிடித்துவிட்டால்கூட போதும்;

அந்த ஒரு மாணவனிலிருந்து
சரிய துவங்கும்
நாளைய நம்
முழு சமுதாயத்தின் ஒழுக்கமும்..
-------------------------------------------------------------------

11
பள்ளிக்கூடத்தையும்
அருகே மதுக்கடைகளையும்
ஒரே தெருவில் வைத்திருக்கும் மனிதர்களால்
முரணாகவே
உருவாகிறதிந்த சமுதாயமும்..

முடிவில்
மதுக்கடைகளை மூடுவதற்கு
சுடுகாடுகளைத் தாண்டியே
போராட வேண்டியிருக்கிறது..
-------------------------------------------------------------------

12
மதுக்கடைகளில்
வேலைச் செய்யும்
சிறுவர்களின் வாழ்க்கையை
அங்கே குடிக்கச்செல்லும் பல
போராளிகளின் கண்களும்
பார்க்கத்தான் செய்கின்றன,

பல கல்வியாளர்களின்
கண்களிலும்
அந்தப் பிஞ்சுகளின் எதிர்காலம்
வெறும் சாராய நாற்றமாகவே தெரிகிறது..
-------------------------------------------------------------------

13
குடித்துவிட்டு
ஒருவன்
பேருந்திலேயே வாந்தியெடுக்கிறான்

அந்த பேருந்து
தான் அரசு பேருந்தாக இருந்ததில்
வெட்கப்பட்டுக் கொண்டது..
-------------------------------------------------------------------

14
போதையில்
பாதை விளங்காமல் சென்று
லாரியில் இடித்த இளைஞனை
சாகடித்தது லாரியா?
போதையா?

குடித்த இளைஞன்
குற்றவாளியா?
அல்லது விற்கும் அரசு
குற்றவாளியா ?

கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்
குடி நம் கண்களை
குத்திக்கொண்டுதான் இருக்கிறது..
-------------------------------------------------------------------

15
உழைத்து
குடித்து
சரிவதைவிட,

உழைக்காமல்
குடிக்காமல்
சாகலாம் போல்;

அப்போது
சாவது பெரிதாகத் தெரியும்
குடி ஒருவேளை
மலிந்துபோகலாம்..

- வித்யாசாகர்  

by Swathi   on 24 Sep 2015  1 Comments
Tags: வித்யாசாகர் கவிதை   குடியும் கோவில்வாசலும்                 
 தொடர்புடையவை-Related Articles
குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர் குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
விமானமேறி விட்டுப்போனவனே வா.. வித்யாசாகர் விமானமேறி விட்டுப்போனவனே வா.. வித்யாசாகர்
விளக்கில்லை வெளிச்சமுண்டு..  - வித்யாசாகர் விளக்கில்லை வெளிச்சமுண்டு.. - வித்யாசாகர்
கருத்துகள்
25-Sep-2015 09:37:31 வினோத் அமலன் said : Report Abuse
சிறப்பான கவிதைகள்.. கவிஞர் வித்யாசாகர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.