குறவர் சாதியைச் சார்ந்த குறவனும், குறத்தியும் உடும்புத் தோலாலான கிஞ்சிராவையோ, டால்டா டப்பாவையோ தட்டிக்கொண்டு ஆடுவது குறவன் குறத்தியாட்டம். வேடம் புனைந்து இசைக் கருவிகளுடன் பாட்டுப்பாடி ஆடுவதும் குறவன் குறத்தி ஆட்டமாகும். தமிழகத்தில் குறவர் என்ற சாதியினர் பரவலாக வாழ்ந்தாலும், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றனர். இவர்களிடமிருந்து வேறானவர்கள் நரிக்குறவர்கள். இந்த ஆட்டத்தை பிற எல்லா சாதியினரும் ஆடுகின்றனர். இவ்வாட்டம் கரகாட்டத்தின் துணை ஆட்டமாக உருப்பெற்றபோது ஆண் கலைஞரே குறத்தியாக வேடமிட்டு ஆடினார். இன்றைய நிலையில் பெண்களே குறத்தி வேடம் புனைகின்றனர். இவ்வாட்டத்தை நிகழ்த்தும் கலைஞர்கள் சென்னை, திருச்சி, கடலூர், திண்டுக்கல், பழனி, சேலம், இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் பெருமளவு உள்ளனர். இன்றைய நிலையில் இக்கலை பரவலாக வழக்கிலுள்ள கலையாகத் திகழ்கிறது.
|