LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- வாசித்த அனுபவம்

குறிஞ்சி மலர் நாவல் – அமரர் நா. பார்த்தசாரதிகுறிஞ்சி மலர் நாவல் – அமரர் நா. பார்த்தசாரதி

சென்ற வருட விடுமுறையில் தாயகத்திற்குச் சென்றிருந்த பொழுது வீட்டிலிருந்த குறிஞ்சி மலர் நாவலை கையோடு எடுத்து வந்தேன்.  அப்பா என்னிடம் இந்நாவலை வாசிக்கும்படி பலமுறைக் கேட்டிருந்தும், நான் அதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று தட்டிக்கழித்து வந்தேன்.

இப்படி எடுப்பாரற்று பல நாட்களாக என் அறையில் மறைந்திருந்த இந்நாவலை சென்ற வாரம் வெளியே எடுத்துப்பார்த்தேன்; முன் அட்டையில் தமிழழகு கொஞ்சும் ஒரு பெண்ணின் படமும், எரிதழல் கண்களும் கூரிய சிந்தனையும் உடைய ஒரு ஆணின் படத்தையும் பார்த்தபொழுது இக்கதை இவர்களிவருக்கும் இடையில் உருவாகும் காதல் பற்றிய கதையாக இருக்குமென்று நினைத்தது எவ்வளவு தவறு என்பதை பின்னர் அறிந்தேன்.

மறைந்த எழுத்தாளர், சாகித்திய அகாதமி விருது பெற்ற அமரர் நா. பார்த்தசாரதி அவர்களின் கற்பனையில் உருவான கருத்தாழமிக்க இந்நாவல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்ததாகக் கேள்வியுற்றேன். 

இக்கதையில் வரும் சில முக்கியக் கதாபாத்திரங்கள்: பூரணி, அரவிந்தன், பேராசிரியர் அழகிய சிற்றம்பலம், முருகானந்தம், மங்களேஸ்வரி அம்மாள், வசந்தா, மீனாட்சிசுந்தரம் பிள்ளை,  பர்மாக்காரர், திருநாவுக்கரசு, செல்லம் மற்றும் மங்கையர்க்கரசி.

கதையின் நாயகி பூரணி, தமிழ்ப் பேராசிரியரான தன் தந்தையின் மடியில் தமிழ்ப் பயின்று,  உயரிய அறநெறிக் கொள்கையுடன், பாரதி ஏட்டில் ஏட்டிழெழுதிய நல்லொக்கத்துடன் வாழும் ஒரு புதுமைப்பெண்.

கதையின் நாயகன் அரவிந்தன், சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அவலங்கள், அநியாயங்கள் அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடும் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள இலட்சிய இளைஞன்.

அக்காலத்தில் இந்நாவலைப் படித்து அதன் ருசியில் இலயிக்கப்பட்ட ரசிகர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்று பெயர் சூட்டியதாகக் கேள்வியுற்று வியப்படைந்தேன்.

இந்நாவலை வாசிக்கும்போது நான் ரசித்து வியந்த ஒரு முக்கிய விடயம், கதையின் ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்தில் அமைந்திருக்கும் சங்கப்பாடல்களும், ஆசிரியரின் கவிதைகளுமாகும். இந்தத் தொடக்கப் பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் அப்பகுதியின் கருவை ஏங்கி நிற்பதாகத் தோன்றியது. 

உதாரணத்திற்கு தந்தையின் மறைவை எண்ணிச் சோர்ந்திருக்கும் பூரணியின் உள்ளத்தில் தோன்றும் ஒலியொன்று, அவள் தினம் சந்திக்கும் துன்பங்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டுமென்பதை உரைக்கும் பாடல்;

"ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின் ஓடுகின்றன

ஒவ்வொரு நாளாய் வீடுகின்றன என்செய்வோம்

இனி அவ் வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே" -நற்றிணை


"என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை

இனித்தெய்வேமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்

இந்த ஊன் எடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை

பிறப்பதற்கு முன் செய்த தீவினையா இங்ஙேன வந்து மூண்டதுவே!"


அரவிந்தன் தான் பூரணியை எதேட்சையாகக் கண்ட நினைவை தன் நோட்டு புத்தகத்தில் கவிதையாக வடித்திருந்தது;

"தரளம் மரைந்த ஒளி தவழக் குடைந்து - இரு

பவளம் பதித்த இதழ் முகிலைப் பிடித்துச் சிறு நெறியைக் கடைந்து – இரு

செவியில் திரிந்த குழல் அமுதம் கடைந்து - சுவை அளவிற் கலந்து - மதன் நுகரப் படைத்த எழில்"

``பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்

என் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்

மண் வழி நடந்தடி வருந்தப் போனவன்

கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம்’’ -- கம்பன்

தந்தையின் மறைவிற்குப் பின் தன்னை வளர்த்து ஆளாக்கிய தன் முதலாளியின் இறப்பை நினைத்து மனம் வாடி துன்புரும் அரவிந்தனின் மனக் கண்ணாடியை எடுத்துரைக்கும் பாடல்;

''ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை

நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையல் காட்டிரைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்கள். -- திருமூலர்


இறுதியில் பூரணி தன் காதலனைப் பிரிந்து துயருரும் நிலையைக் கூறும் பாடல்`

"பிறவாமை வேண்டும்!

மீண்டும் பிறப்பு உண்டேல்

உன்னை மறவாமை வேண்டும்!"

இப்படி கதை முழுவதும் சங்கப்பாக்களும், பாரதியார் மற்றும் திருவள்ளுவரின் வரிகளும் வந்து வந்து வாசிப்பவர்களுக்கு தமிழ் விருந்தளித்துச் செல்கிறது.  

கதையின் கரு நம்மில் பலருமறிந்த ஒன்றே. அதாவது கல்யாண வயதில் தன் தந்தையை இழந்து சோகத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பெண், தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்/இன்னல்கள், அவள் இச்சமூகத்தால் பார்க்கப்படும் விதம், தான் வாழும் சமூகத்தின் மரபு திரியாமல், தந்தைக் கற்றுக் கொடுத்த தமிழாலும், அவரின் உயரிய அறநெறிக் கொள்கைகளைப் பார்த்து வளர்ந்ததால் தவறேதும் செய்யாமல், சமூகத்தை துணிச்சலாக எதிர்கொள்வதும், நிதிப்பற்றாக்குறைகளைச் சமாளித்து, தாய் தந்தையிழந்த தன் உடன்பிறப்புக்களை வழிநடத்திச் செல்லும் தாயின் உள்ளம் படைத்த, அப்பாவின் பெயருக்குக் களங்கமேற்படாமல் அவரின் பெருமையை ஏந்திச் செல்லும் ஒரு புரட்சிப் பெண்ணின் கதையாகும். 

அப்பெண் தான் ஏதேட்சையாக சந்திக்கும் ஒரு இளைஞனை முதலில் தவறாகப் புரிந்து கொள்வதும், அதுவே பின்னாளில் தவறெனப் புரிந்து அவனிடம் மன்னிப்புக் கேட்பதும், அதன்பின் அவர்களிவருக்குமிடையே நட்பென்ற மலர்ப் பூத்து, அது பின்னாளில் நட்பையும் கடந்துக் காதலாக மலர்கிறது. இப்படி அவர்களிவரும் தங்களைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை  எதிர்த்துக் கொதித்தெழுந்து, அத்தவறுகளை களைக்க முற்படுவதும், அதனால் அவர்களடையும் துயரங்களை எதிர்த்து வெற்றி கொள்ளுவதும் கதையின் சுருக்கமாகும்.

ஆசிரியர் இக்கதை முழுவதும் பல நல்ல கருத்துக்களையும், சமூகத்தில் புரைகளாக நிற்கும் தவறான செல்வந்தர்களின் செயல்பாட்டையும், அவர்கள் நல்ல மனிதர்களை எப்படி துன்புறுத்துகிறார்கள் என்பதை  இதில் உலாவரும் கதாபாத்திரங்களினூடே சரிவரப் புகுத்தி வெற்றி கண்டுள்ளார். ஆசிரியரின் தமிழ் வளமை போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.

ஆனாலும் இனிவரும் தலைமுறையினர் இந்நாவலை விரும்பிப் படிப்பார்களா என்பதில் சிறிது ஐயமெழுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கதையில் சில இடங்களில் சுவாரசியம் மெல்ல மெல்லக் குறைந்து, அடுத்து வரும் நிகழ்வுகள் வாசகர்களுக்கு எளிதில் யூகிக்கக் கூடியவையாக அமைந்துள்ளது. மேலும் கதை முழுவதும் சோக நெடி அதிகமுள்ளதாகத் தோன்றுவது முடிவில் சலிப்பூட்டுகிறது. 

ஆனால் மேற்குறிப்பிட்ட கருத்துக்களனைத்தையும் நாவல் வந்த அந்தக்கால கட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஏன் இந்நாவல் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டு வெற்றி பெற்றதென்பது புரிகிறது. இந்த நாவலின் காட்சி வடிவமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பானது. அதில் அரவிந்தனாக நடித்தவர், திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். அன்றைய நாட்களில் இக்காட்சித்தொடரால் பலரும் ஈர்க்கப்பட்டிருந்தது இந்நாவலின் மிகப்பெறிய வெற்றியாகக் கருதுகிறேன்.

கதையில் வரும் பூரணி, அரவிந்தன் போன்று அறநெறியில் வாழும் மனிதர்கள் இன்று நம்முடன் இருக்கிறார்களா என்றால் வெற்றிடமே நிரம்பும். இத்தகு கொள்கைநெறியுடன் வாழ்பவர்களை இனி நேரில் காண்பதென்பதரிது.

by varun   on 04 Nov 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.