LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 696 - அமைச்சியல்

Next Kural >

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கி்ன்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக. (குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
அரசன் குறிப்பறிந்து காலம் பார்த்து வெறுப்பில்லாதனவாய்ச் சொல்ல வேண்டுவனவற்றை விரும்புமாறு சொல்க. இது சொல்லுந் திறம் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
குறிப்பு அறிந்து-அமைச்சர் முதலியோர் அரசனுக்குச் செய்தி சொல்லுங்கால் அவன் உள்ளக் குறிப்பையறிந்து;காலம் கருதி-சொல்லுதற் கேற்ற காலத்தையும் நோக்கி;வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல்-அவனுக்கு வெறுப்பில்லாதவற்றையும் வேண்டியவற்றையும் அவன் கேட்க விரும்பும் வகை சொல்க. கோப்பெருந்தேவி ஊடியிருக்கும்போது காமம் பற்றிய அவலமும், பகையரசர் இகழ்ந்து ஓலைவிடுத்தபோது வெகுளியும் பிறந்து, வேறு செய்தி சொல்வார்மீது வெறுப்பையும் சினத்தையும் விளைக்குமாதலின்,'குறிப்பறிந்து' என்றும்; வேட்டையாடவும் உரிமை மகளிரொடு விளையாடவும் கருதியபோது, போர்தவிர வேறெச்செய்தியிலும் மனம் பதியாதாகலின்,'காலங்கருதி'என்றும் கூறினார்.அரண்மனைப் பொற்கொல்லன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை அவன் தேவி ஊடிய காலத்துக்கண்டதும், அவ்வூடல் நீங்குதற் கேதுவான செய்தியுடைமை பற்றியே. "அறிகொன் றறியா னெனினு முறுதி யுழையிருந்தான் கூறல் கடன்" (638) என்றமையால், இங்கு'வெறுப்பில' என்றது வினைக்குரியன அல்லாதவற்றை யென அறிக. அரசர் தெய்வத் தன்மை யுடையராதலின்,இன்பமாகச் சுருக்கியும் விளக்கியும் சொல்லுக வென்பார்'வேட்பச் சொலல்' என்றார்.
கலைஞர் உரை:
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.
Translation
Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declare.
Explanation
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.
Transliteration
Kuripparindhu Kaalang Karudhi Veruppila Ventupa Vetpach Cholal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >