மதுவிற்கு எதிரான போராட்டத்திற்காக 19 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஆனந்தன் அவர்கள் நேற்று(மே 10) பெயிலில் விடுதலையானார். அவரைச் சந்தித்தோம். சிறை செல்வது இது 5வது முறை என்பதால் சிறை வாழ்க்கை பழகிவிட்டது என்றார். இரு கைகளிலும் ஏதோ ஸ்டாம்பு(முத்திரை) குத்தியது போல் தெரிந்தது. என்னவென்று கேட்டோம், “...விடுதலை செய்யப்படுபவர்கள் கையில் இது குத்தப்படுவது வழக்கம். விடுதலையானவர்கள் ஊர் சென்று சேர்வதற்கு கையில் காசில்லாமல் இருக்கலாம். அவர்கள், இந்த முத்திரையைப் பேருந்தில் காட்டினால் பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை. இந்தமுறை, இரு கைகளில் உள்ள முத்திரையைக் காட்டித்தான் புழல் சிறையிலிருந்து பிராட்வே வந்து சேர்ந்தேன்(பேருந்தில்)” என்றார்.
அடுத்தகட்டப் போராட்டம் மக்களைத் திரட்டி, இன்னும் வலுவாக நடத்தப்படும் என்று தெரிவித்தார். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில், ஜீன் 22(ஞாயிறு) அன்று தமிழகமெங்கும் இருக்கும் மதுஒழிப்பு ஆர்வலர்களை ஒருங்கிணைத்து திருச்சியில் கூட்டம் ஒன்று நடத்த இருக்கிறோம் ; அதில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். அவசியம் வருவதாகத் தெரிவித்தார்.
ஆனந்தன் அவர்கள் தமிழக அரசு ஊழியராக இருந்தவர். சமூகப் பணிகளுக்காக, அரசுப் பணியைத் துறந்து, சிறையில் சீரழிந்து – பேருந்தில் அத்தனை பயணிகளுக்கு நடுவில் கையிலுள்ள சிறை முத்திரையைக் காண்பித்து பயணித்து - இரவில் முன்பதிவில்லா பயணத்தில், 20நாள் தாடி மட்டும் உடன்செல்ல, தனியாக மதுரை திரும்பும் - இவரின் தியாகத்தை விவரிக்க வார்த்தையில்லை, வணங்குவோம்.
ஓரிரு நாள் சிறைசெல்லும் அரசியல்வாதிகளுக்கு, உண்ணாவிரதம் நடத்தும் தலைவர்களுக்கு கிடைக்கும் சமூக அங்கீகாரம், உணர்வுபூர்வமாக 19 நாள் சிறையில் இருந்து திரும்பிய ஆனந்தன் அவர்களுக்குக் கிடைக்கவில்லையே என்பது மட்டும்தான் நம் ஆதங்கம்.
|