|
|||||
வங்கிகளின் பின் இருக்கும் இருள் பக்கத்தை வெளிச்சமாக்கிய 'லக்கி பாஸ்கர்' |
|||||
![]() ஒரு சேமிப்புக் கணக்கு அல்லது கடன்... மிஞ்சிப்போனால் ஒரு பிக்சட் டெபாசிட். இதுதான் ஒரு எளிய, நடுத்தரக் குடும்பத்து மனிதர்களுக்கு வங்கியோடு இருக்கும் தொடர்பு. நாம் வங்கியில் செலுத்துகிற ஒவ்வொரு ரூபாயும் எங்கே எப்படி யாருக்குச் செல்கிறது என்பது எவருக்கும் தெரியாது. லக்கி பாஸ்கர் திரைப்படம் வங்கிகளின் பின்னணியில் இருக்கும் இருள் பக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.
1992-ல் வங்கிகளை முன்வைத்து நடந்த பங்குச் சந்தை மோசடிகளைச் சுவாரஸ்யத் திரைக்கதையோடு நம் முன் காட்சியாக விரிக்கிறது திரைப்படம். ரசீதுகள் மூலம் நடக்கும் முறைகேடுகள், வங்கிகளுக்கிடையே அங்கும் இங்குமாக பணத்தை நகர்த்தி நடக்கும் ஊழல்கள், பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் நடக்கும் மோசடிகள்,. அதிகார வர்க்கம் கைகோர்த்துக்கொண்டு அடிக்கும் கொள்ளைகள் என மிகத்தெளிவான காட்சியமைப்புகளால் ஒரு மிரட்டல் திரில்லராக திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர். வெங்கி அட்லூரி.
மும்பையில் ஒரு தனியார் வங்கியில் உதவிப் பொது மேலாளராகப் பணிபுரியும் பாஸ்கர், சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்படுகிறார். பாஸ்கரின் நினைவுகளில் கதை பின்னோக்கிப் பயணிக்கிறது. அப்பா, தம்பி, தங்கை, மனைவி, பிள்ளையெனப் பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் பாஸ்கர், வங்கிக் காசாளர் பணியில் கிடைக்கும் சம்பளத்தில் குடும்பத்தை நகர்த்தத் திணறுகிறார். குடும்பத் தேவைகள் ஒரு பக்கம், கடன் ஒரு பக்கமென அல்லலுறும் பாஸ்கருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் மறுக்கப்படுகிறது. விரக்தியுற்ற பாஸ்கர், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிப் பணத்தை வைத்து சட்டவிரோதச் செயல்களில் இறங்குகிறார். அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை பாஸ்கர் எதிர்கொள்ளும் முறையென விறுவிறுப்பாக நகர்கிறது படம்.
பாஸ்கராக வரும் துல்கர் சல்மான் இந்தப்படத்தின் ஆகப்பெரிய பலம். மகனின் பசியாற்ற முடியாத ஆற்றாமை, கடன்காரனால் ஏற்படும் அவமானம், உறவுகளால் அசிங்கப்படும்போது ஏற்படும் வருத்தம், ஆதங்கம், நெகிழ்ச்சி. திமிர் என அத்தனை முதிர்ச்சி அவருடைய நடிப்பில். பாஸ்கரின் மனைவியாக வரும் மீனாட்சி சௌத்ரியும் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து நடித்திருக்கிறார். தன் பிறந்தவீட்டில் மகன் அவமானப்படும்போது வருகிற ஆவேசம், அவனுக்குப் போதுமான 'வடபாவ்' வாங்கித்தர இயலாதபோது ஏற்படுகிற துக்கம், தன் கணவனை அம்மா தரக்குறைவாகப் பேசும்போது வருகிற கோபம் என அழுந்த மனதில் பதிகிறார். துல்கருக்கும் இவருக்குமான பந்தம் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
நண்பராக நடித்துள்ள ஹைப்பர் ஆதிக், அந்தோணியாக வரும் ராம்கி, பாஸ்கரின் மகனாக வரும் மாஸ்டர் ரித்விக் ஆகியோரும் நினைவில் நிற்கிறார்கள். மும்பையின் நெரிசல், திரைக்கதையின் பரபரப்பு அனைத்தையும் அவ்வளவு கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறது நிமிஷ் ரவியின் கேமரா. வீடுகளில் தெரியும் நேர்த்தி, 90-களில் காகிதக் குவியல்களோடு இயங்கும் வங்கி என கலை இயக்குநர் பங்லானின் பங்களிப்பும் நேர்த்தி. நவீன் நூலியின் படத்தொகுப்பு கதையை நேர்க்கோட்டில் நகர்த்திச் செல்கிறது. ஜி..வி.பிரகாஷின் இசை படத்தின் ஜீவனைக் கூட்டியிருக்கிறது.
துல்கரின் வார்த்தைகளில் கதை சொல்லல் என்பது சுவாரஸ்யமான யுத்தி. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பதற்றம் படம் முடிவடையும் வரை நம்மைத் தொடர்வது ஒருங்கிணைந்த படக்குழுவின் வெற்றிக்குச் சான்று. பங்குச்சந்தையை நிலைகுலைய வைத்த ஹர்ஷத் மேத்தாவின் மோசடி தான் படத்தின் இழை. அதோடு ஹவாலா, மணி லாண்ட்ரிங் போன்ற நிதி மோசடிகளையும் குழப்பமே இல்லாமல் எல்லோருக்கும் புரியும் மொழியில் பதிவு செய்கிறது, லக்கி பாஸ்கர்.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், தீபாவளியை ஒட்டி அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் குறைந்த திரையரங்குகளில் வெளியான இப்படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன.
நவம்பர் 28-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியானது. வெளியான நாள் முதலே பெரும் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து இந்தியாவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி 15 நாடுகளில் டாப் 10 பட்டியலிலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.
|
|||||
by on 03 Dec 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|