|
|||||
பொதுவுடைமைப் போராளி ம.வெ.சிங்காரவேலர் நினைவு நாள் - 11.2.1946 |
|||||
"பொதுவுடைமைப் போராளி" ம.வெ.சிங்காரவேலர் நினைவு நாள் - 11.2.1946
லாப்லசின் வானியலைப் பற்றி வெண் மேக சித்தாந்தம், ஈன்ஸ்டனின் கால இடத் தத்துவம், மார்க்சின் மூலதனம், டார்வினின் உயிர்களின் தோற்றம் ஆகியவற்றை தமிழில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார். சிங்கார வேலர் தாய்மொழிக் கொள்கையை எங்கும் எப்போதும் வலியுறுத்தியவர். அதற்குத் தடையாக ஆங்கிலமோ, இந்தியோ வரக்கூடாது என்பார். 1938ஆம் ஆண்டு பள்ளிகளில் இந்தி கட்டாயத் திணிப்பு செய்யப்பட்ட போது குடியரசு ஏட்டில் (சூன் 1938) எழுதியது வருமாறு: "இந்தி கற்பிக்கும் முயற்சி தற்போது எதற்கு? நம் சிறுவர்களை வீண் பாடுபடுத்துவது ஏன்? இம்முயற்சி வீண்முயற்சியே அல்லாமல் புத்திசாலித்தனமாகாது. பூரண சுயராஜ்யம் நமது நாடு முழுமையும் அடையும் வரையில், இந்தி பாஷை மூலமாக மக்கள் ஜீவனத்திற்கு ஒன்றும் கற்கப் போவதில்லை. எவ்வித உதவியுமில்லாத இந்தி பாஷையை நம் சிறுவர்களுக்கு கற்பிப்பதால் யாது பிரயோசனம்?" தமிழ்மொழியின் தொன்மை குறித்தும் அனைத்து கலைகள், அரசு நிர்வாகம் ஆகியவை தமிழில் வேண்டுமென்றும் அதே குடியரசு ஏட்டில் மேலும் விளக்கிச் சொல்கிறார்: "தமிழ்நாட்டில் வழங்கிவரும் மொழிகளில் தமிழ் மொழி ஒரு புராதன மொழியாகும். தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் தமிழ் மொழியில் பிறந்து வளர்ந்து பேசிப் படித்து அநாதி காலமாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்மொழியைப் பேசிவரும் மக்கள் சில கோடிக்கணக்காக இருக்கின்றனர். இந்தத் தமிழ் மொழியை பேசிவரும் மக்களின் கல்வியும் நாகரிகரிமும் புராதனமானவை. "தமிழ்நாட்டுச் சமதர்மவாதிகளாகிய நாங்கள் எங்கள் தமிழ் நாட்டில் தமிழ் பாஷையிலன்றி மற்ற எந்த அந்நிய மொழிகளிலும் எங்கள் நாட்டு அரசியலை நடத்த விட மாட்டோம்." சகலவித விவகாரங்களுக்கும் சட்டம், நீதி, நிர்வாகம், விஞ்ஞானம், பொருளாதாரம், தொழிற்சங்கம் முதலிய பல்லாயிர ஸ்தாபனங்களும், இலாக்காகளும் தமிழ் மொழி மூலமாக நடத்தப்பட வேண்டும்." இந்தியத் துணைக்கண்டம் பிரித்தானியாரிடமிருந்து விடுதலைப் பெற்று 68 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் வேண்டும் எனும் சிங்கார வேலரின் கனவு பொய்த்துப் போய் விட்டன. இந்திமொழி தில்லி அரசாலும், ஆங்கிலமொழி தமிழக அரசாலும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டு தமிழ்மொழி அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. இது குறித்து கிஞ்சிற்றும் கவலை கொள்ளாது அவரின் வழித் தோன்றல்களான இந்தியப் பொதுவுடைக் கட்சி, மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி இவ்விரண்டும் அந்நிய மொழியில் நாட்டை நடத்த முற்படும் திராவிடக் கட்சிகளிடம் இரண்டு சீட்டுகளுக்காக மண்டியிட்டு கிடப்பது பேரவலமாகும். சிங்காரவேலர் கூட்டத்தில் பேசும் போது யாராவது கை தட்டினாலோ, மாலை அணிவித்தாலோ அதனை "பூர்ஷ்வா குணம்" என்பார். அவர் உயிரோடு இருந்திருந்தால் இரண்டு சீட்டுக்காக மண்டியிடுவதையும் பூர்ஷ்வா குணத்தின் பட்டியலில் சேர்த்திருப்பார்! |
|||||
by Swathi on 11 Feb 2014 0 Comments | |||||
Tags: ம.வெ.சிங்காரவேலர் ம.வெ.சிங்காரவேலர் நினைவு நாள் சிந்தனைச் சிற்பி Ma Po Singaravelar 11.2.1946 | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|