|
|||||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு |
|||||
![]() மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினரான எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடந்த கட்சியின் 24-ஆவது மாநாட்டில் அவர் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தின் மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த மாநாட்டில் 8 புதிய உறுப்பினர்களுடன், 18 உறுப்பினர்களைக் கொண்ட பொலிட் பீரோவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேபோல், பொலிட் பீரோ உறுப்பினரான பினராயி விஜயனுக்கு கேரள முதல்வராக இருக்க, கட்சி பதவி வகிக்க உச்ச வயது வரம்பு 75 என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீதாராம் யெச்சூரி மறைந்ததைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பு காலியாக இருந்தது. இந்த நிலையில், பிரகாஷ் காரத் இடைக்கால ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொலிட் பீரோ உறுப்பினரான எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த பேபி?
கடந்த 1954-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் எம்.ஏ.பேபி பிறந்தார். இவரது பெற்றோர் பி.எம்.அலெக்ஸாண்டர் மற்றும் லில்லி அலெக்ஸாண்டர். பள்ளிக் காலத்தில் என்என்எஸ்-ல் இருந்த போது பேபியிடம் அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆரம்பக்கட்ட ஆர்வம், அவர் கொல்லம் எஸ்என் கல்லூரியில் சேர்ந்து படித்த போது தீவிரமடைந்தது. அங்கு அவர் பி.ஏ. அரசியல் அறிவியல் எடுத்துப் படித்தார். ஆனால் பட்டத்தை முடிக்கவில்லை.
கட்சியின் இளைஞர் அமைப்புகளில் தீவிரமாக இயங்கி பேபி, இந்திய மாணவர் அமைப்பு எஸ்எஃப்ஐ, மற்றும் ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு (டைஃபி) ஆகியவற்றில் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
பின்னர் சிபிஐ (எம்)-ன் மத்தியக் குழு உறுப்பினராகவும் ஆனார். கடந்த 1986 - 1998 வரை இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2006 முதல் 2016 வரை இரண்டு முறை குந்தாரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். பேபி, கேரளா அரசியலில் கடந்த 2006 - 2011 ஆண்டில் பொதுக்கல்வி மற்றும் கலாச்சாரத்துறையின் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு முதல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கும் அமைப்பான பொலிட் பீரோவில் உறுப்பினராக இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டார் ஆனால் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் என்.கே.பிரேமசந்திரனிடம் தோல்வியைத் தழுவினார். அரசியலைக் கடந்து பேபி எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
|
|||||
by hemavathi on 06 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|