|
|||||
மக்கள் சிந்தனைப்பேரவை ஒரு முன்மாதிரி அமைப்பு -வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி |
|||||
மக்கள் சிந்தனைப்பேரவை ஒரு முன்மாதிரி அமைப்பு -வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி மக்கள் சிந்தனைப் பேரவையின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழாவினை கொண்டாடவிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன், வாழ்த்துகிறேன். ஒரு அமைப்பு சமூக நோக்கத்திற்காக தொடங்கப்பட்டு கால் நூற்றாண்டு காலம் தொய்வில்லாமல் இயங்குவது என்பது எவ்வளவு கடினமானப் பணி என்பதை அனைவராலும் எளிதாக உணர்ந்துகொள்ள முடியாது. இது தலைமைப்பண்புள்ள தலைவர்களுக்கே உரிய சவாலான , சாதனையான பயணம். மக்கள் சிந்தனைப் பேரவை என்றாலே ஒரு உயர்ந்த நோக்கும், மேம்பட்ட தரமும், நேர்த்தியான திட்டமிடுதலும், சிரிய சந்திப்பாக இருந்தாலும், பெரும் மாநாடாக இருந்தாலும் உரிய மெனக்கெடல் செய்து தரமாக முன்னெடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பல ஆண்டுகளாக பேரவையின் செயல்பாட்டை அறிந்திருந்தாலும், நேரடித் தொடர்பில் வந்தது பேரவைத் தலைவரின் அமெரிக்கப் பயணத்தின்போதுதான். நண்பரகள் அழைத்து அவரது கனடா வருகையைக் கூறியதும், இதை வாய்ப்பாகக் கருதி நாங்களும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட அருகில் உள்ள சில தமிழ்ச்சங்க மக்களிடம் பேசவைக்கவேண்டும் , சிறப்பிக்கவேண்டும் என்று திட்டமிட்டு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் உரையாற்ற அழைத்திருந்தோம். அங்கு அறிமுக உரையில் நான் பேசியபோது எனது சிந்தனையை செதுக்கிய டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு அடுத்து தமிழ்நாட்டில் ஒரு சிந்தனைத் திறன் மிக்க , செயல்திறன் மிக்கத் தலைவராக பொதுவாழ்வில் நான் பார்ப்பது மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களைத்தான். பேரவையின் பணிகள் ஆழமாகவும் , அடர்த்தியாகவும் ஈரோட்டில் மட்டுமன்றி தமிழ்நாடு முழுதும் பரவி வருகிறது. அது நிலைப்பெறும்போது தமிழ்ச்சமூகம் பெரும்பயனை அடையும் , அடையவேண்டும், இப்படி ஒரு இயக்கம் தமிழ்நாட்டிற்கு முன்மாதிரியாக விளங்குவது சமூக வளர்ச்சிக்கு அவசியம் என்று குறிப்பிட்டேன்.
மேலும் அவரது உரை வாசிங்டன் பகுதியில் மிகச்சிறப்பாக அமைந்தது (வாசிங்டனில் பேசிய காணொளியைக் காண : https://www.youtube.com/watch?v=fQraj-N4M7k ) . அங்குள்ள சமூக நோக்குள்ள தமிழன்பர்கள் அவரது வருகையை பெரிதும் போற்றினர். வாசிங்டன் வாட்டத் தமிழ்ச்சங்கம் சிறப்பானதொரு வரவேற்பை வழங்கி பாராட்டி பெருமைசெய்தது. செல்லும் மாநிலங்களில் எல்லாம் ஆங்காங்கு உள்ள தமிழ் உணர்வுள்ள, சமூக அக்கறைகொண்டு அன்பர்கள் திரளாகக் கூடி பேரவைத் தலைவரது உரையை, மக்கள் சிந்தனைப்பேரவையின் செயல்பாட்டை அறிந்து மகிழ்ந்தனர். அங்கு தங்கியிருந்த நாட்களில் குடும்பம் குடும்பமாக நேரில் வந்து பேசி செயல்பாடுகளை அறிந்து சென்றனர். ஒரு விருந்தினராக எங்களுடன் வாசிங்டன் பகுதியில் பேரவைத் தலைவர் தங்கியிருந்த சில நாட்களில் ஈரோடு புத்தகத் திருவிழா நிகழ்வுக்கு அவர்கள் அங்கிருந்து எடுத்த முயற்சிகளை ஓரளவு அறிவேன். பல ஆண்டுகளாக நடக்கும் ஒரு நிகழ்வை அப்படியே பின்பற்றி அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்துவது எளிது என்றாலும், அப்படி இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய பணியை, புதிய பார்வையோடு எவ்வளவு மெனக்கெட்டு திட்டமிடுகிறார்கள் என்பதை நேரில் கண்டு அறிந்து வியந்தேன். இத்தனை ஆண்டுகள் நடந்துவிட்டதே , பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்வது கண்டு நேர்த்தியாக ஒரு நிகழ்ச்சி யை நடத்துவதில் உள்ள சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லவேண்டும். மக்கள் சிந்தனைப் பேரவை ஒரு சாதாரண சந்திப்பாக இருந்தாலும் அனைவருக்கும் முறையாக தனித்தனியாக கடிதம் அனுப்பி, ஒரு மேடையை முறையாக அலங்கரித்து ,அதற்கென ஒரு விளம்பரப் பதாகை பிழையின்றி தயாரித்து வைத்து ஒவ்வொன்றுக்கும் பேரவை கொடுக்கும் நேர்த்தியான முக்கியத்துவம் என்னை வியக்கவைக்கிறது, அதிலிருந்து பிற அமைப்புகள் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. அமெரிக்காவில் இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு நேரடிச் சந்திப்புகளுக்கு அழைத்துச்செல்லும்போது எத்தனை மணிக்கு செல்லவேண்டும் என்பதை அறிந்து நேரம் தவறாமல் சில மணித்துளிகள் முன்னதாகவே சென்றுவிடவேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஏற்றுக்கொண்ட பொது நிகழ்வுகளுக்கு செல்லும்போது நேரம் தவறாமை எனபதை கடைபிடிக்கவேண்டும் என்று உறுதியுடன் இருப்பது ஒரு தலைசிறந்த பண்பு. அதற்கு அதிக திட்டமிடுதல்கள் தேவை , அது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் , அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் எவரையும் காக்க வைக்காமல் திட்டமிடவேண்டும் என்பது அனைவருக்கும் பொருந்தும். இளையோருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும், அமைப்புகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகவும் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு..ஸ்டாலின் குணசேகரன் அவர்களும், மக்கள் சிந்தனைப் பேரவையும் தமிழ்ச்சமூகத்தில் விளங்குவது நமக்குப் பெருமை. எங்கெல்லாம் உலக நிகழ்வுகள் நடக்கிறதோ , குறிப்பாக வளைத்தமிழ் ஈடுபடுகிறதோ அதில் பொருத்தமான ஆளுமையாக மக்கள் சித்தனைப்பேரவைத் தலைவரை அழைப்பது வழக்கம். அதன்படி வட அமெரிக்காவில் புதிய சிந்தனையாக நாம் முன்னெடுத்துள்ள "வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் " என்ற அமர்வில் முதல் ஆளுமையாக பெருமையோடு அழைத்திருந்தோம். அதைத் தொடர்ந்து திருக்குறள் ஐம்பெரும் விழா -2024, சித்த மருத்துவ முப்பெரும் விழா என்று நம்முடைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு ஆளுமையாக அழைத்து கருத்துகளை கேட்பது வழக்கம். வேடந்தாங்கலுக்கு செல்லும் பறவைகளைப் போல புத்தக ஆர்வலர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆளுமைகளின் நேர்த்தியான உரைகளை கேட்க விரும்புபவர்கள் என்று பெரும்பாலோர் ஒவ்வொரு ஆண்டும் செல்வது ஈரோடு புத்தகத் திருவிழா. பல முக்கிய பேச்சாளர்களின் மிகழ்ச்சிறந்த உரைகள் நிகழ்ந்த மேடை ஈரோடு புத்தகத்திருவிழா . ஒவ்வொரு ஆண்டும் உரைகளின் தலைப்புகள், ஆளுமைகள் என்று ஒவ்வொன்றிற்கும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உழைப்பு கண்டு வியந்திருக்கிறேன். மக்கள் சிந்தனைப் பேரவை இதை ஒரு தவமாக கடந்த 19 ஆண்டுகளாக புதிய சிந்தனைகள், புதிய இலக்குகளுடன் ஒவ்வொரு ஆண்டும் செய்துவருவது போற்றத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத்திருவிழாவில் ஒரு பகுதியாக பன்னாட்டுத் தமிழரங்கம் என்ற நிகழ்ச்சியில் பதினோரு நாடுகளை சார்ந்த பிரதிநிதிகளில் அமெரிக்கா சார்பாக நானும் கலந்துகொண்டு பெருமைப்பெற்றேன். தமிழ்நாட்டில் இயங்கும் அமைப்புகள் உலகம் என்று போட்டுக்கொண்டு உலகத் தொடர்புகள் இல்லாமல் உள்ளூரில் நிகழ்ச்சியை நடத்தவே சிரமப்படுவார்கள். ஆனால் இதுபோன்ற பன்னாட்டு நிகழ்வுகளை அதற்குரிய தரத்தோடு நடத்துவதில் பேரவை எடுத்த முயற்சி பெருவெற்றிபெற்றது. தமிழ்நாட்டில் இருக்கும் வழக்கமான ஆளுமைகள் இல்லாமல் ஒரு நாளை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒதுக்கி அவர்களை மேடையேற்றி, அத்தனை நாடுகளில் தமிழர்களின் நிலையை பேசவைத்தது தமிழில் ஒரு முன்மாதிரி துணிச்சலான செயல். ஈரோடு புத்தகத்திருவிழா தரமானதும், தனித்துவமானதும் , நுழைவுக்கட்டணம் இல்லாமல் தொடர்ந்து நடந்துவருவதும் அனைவரும் அறிந்ததே. வாசிப்பின் அவசியத்தை, படைப்பாளிகளை கொண்டாடும் இப்புத்தகத் திருவிழாவில் உலகத் தமிழர்களின் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் "உலகத் தமிழர் படைப்பரங்கம்" என்ற தனி அரங்கை ஒவ்வொரு ஆண்டும் ஒரு வெளிநாடு வாழ் தமிழ் ஆளுமையைக் கொண்டு திறந்துவைக்கப்படுவது தொடர்ந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை பெரிதும் ஊக்கப்படுத்தும் செயல்.
வட அமெரிக்காவில் தமிழர்கள் பல தலைப்புகளில் இணையமர்வுகளாக சந்திக்க வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை சிறப்பாக செயல்படுவதுபோல், தமிழ்நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் சந்தித்து உரையாட தரமான தளமாக ஈரோடு புத்தகத் திருவிழா களம் அமைத்துள்ளது. இதில் சாதி, மத அரசியல் வேறுபாடுகள் இல்லாத தமிழ், இலக்கிய ஆர்வத்தோடு, சமூக சிந்தனையோடு அனைவரும் சந்தித்து உறவாடும் தலமாக இது விளங்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து விடுதலைப்போரில் பங்கேற்றவர்களின் முழு வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ள மிகச்சிறந்த , முதன்மையான நூலாக வெளிவந்துள்ள திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் எழுதிய "விடுதலை வேள்வியில் தமிழகம்" நூலின் மூன்றாம் பதிப்பு வெளிவந்துள்ளது சிறப்பு. இருப்பினும், அது அடையவேண்டிய உயரத்தை, உரிய பரவலாக்களை இன்னும் முழுமையாக அடையவில்லை என்பதும், அதை மக்களிடம் கொண்டுசேர்ப்பது, உள்வாங்குவது சமூகத்தின் கடமை என்பதையும் உள்வாங்குவோம்.
ஒரு புத்தகத் திருவிழா நடத்துவது மட்டும் இவ்வமைப்பின் நோக்கமல்ல என்பதையும் , ஒருங்கிணைந்த பார்வையுடன் பயணிக்கும் அமைப்பு என்பதையும் பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் பாரதி விழா, அறிவியல் நாள், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என்று பல்வேறு நிகச்சிகளை ஒருங்கிணைக்கும் பயணிக்கும் மக்கள் சிந்தனைப்பேரவையின் சீரிய தொண்டு 25 முடிந்து 50 ஆம் ஆண்டு, 100வது ஆண்டு என்று தொடர்ந்து பயணிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 22 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|