|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் ஜே.டி.அலெக்சாண்டர் ஜேசுதாசன் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் ஜே.டி.அலெக்சாண்டர் ஜேசுதாசன் அறிமுகம்: கடந்த 25 ஆண்டுகளாகச் சித்த மருத்துவத்தில் பணியாற்றி வருபவர் மருத்துவர் அலெக்சாண்டர் ஜேசுதாசன் அவர்கள் ஆவார். மேலும் இவர் மருந்துசெய் துறையில் இருபதாண்டுக்கால அனுபவம் பெற்றவராகவும் உள்ளார். ஆயுஷ்பதி நிறுவனத்தின் மூலம் பல அரிய நிகழ்வுகளையும் செயல்பாடுகளையும் நிறுவனத்தலைவராகச் செய்து வருகின்றார். ஆயுஷ்பதி நிறுவனம் பல நாடுகளில் இன்று செயலாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. மருந்துகளின் தேவை: சித்த மருத்துவம் என்பது சிறப்பு மருத்துவம் அன்று. இது ஒரு பொது மருத்துவம் ஆகும். சித்த மருத்துவம் அனைவரையும் சென்றடையும் போதே சிறப்புற்று விளங்கும். சித்த மருத்துவத்தின் மிக முக்கியச் சிக்கலாக இருப்பது மருந்துகளின் பற்றாக்குறை ஆகும். பல மருந்துகளுக்கு உரிய மூலக்கூறுகள் பரவலாகக் கிடைக்கின்றனவா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே இவற்றைச் சார்ந்த நம்பகமான புள்ளிவிவரங்கள் தற்காலத்தில் முக்கியமாக உள்ளது. எனவே மருந்துகள் தயாரிப்பில் அதிக கவனம் தேவைப்படுகின்றது. இதற்கு அரசாங்கமும் பிற சார்பு நிறுவனங்களும் பங்கேற்பது அவசியமாகும். நம்பகத்தன்மை: இன்றையச்சூழலில் மக்கள் பலரும் சித்த மருத்துவத்தில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் பெரிதளவும் தயங்குகின்றனர். சித்த மருத்துவம் இந்தியாவின் தொன்மை வாய்ந்த மருத்துவங்களில் பிரதானமானது என்றால் அது திண்ணம். மனுக்குலம் தோன்றிய காலத்திலேயே தோன்றிய மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும். இம்மருத்துவம் இன்றளவும் அழியாமல் இருப்பதன் முக்கியக் காரணம் இத்தொன்மை ஆகும். சித்த மருத்துவத்தின் மருந்துகளும் இச்சிறப்பினைப் பெற்றுள்ளன. சித்த மருத்துவ முறைகளும் மருந்துகளும் பிரபலமாக இல்லாமல் இருப்பதன் முக்கியக் காரணம் சித்த மருத்துவத்தில் மக்கள் நம்பிக்கைப் பெரும்பான்மை இல்லாமையே ஆகும். மக்கள் நம்பிக்கையைப் பெறச் சித்த மருத்துவர்கள் முயற்சிப்பது மிக அவசியம். மருந்துகளில் நம்பகத்தன்மை, பாதுகாப்பு, பக்க விளைவுகளற்ற தன்மை ஆகியவை உள்ளன என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இது மருத்துவர்களின் கடமையாகும். பழம்பெரும் சித்தர்கள் காட்டிய மருத்துவ முறை என்பதாலும் காலம் கடந்து நீட்டிப்பதாலும் சில மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டிருக்கலாம் என்பதே மருந்துகளின் நம்பகமற்ற நிலைக்குக் காரணம் என்று கூறலாம். இன்றையச் சூழலில் மருந்துகளுக்கு தரக்கட்டுப்பாடு சரியாக நிர்ணயித்தால் மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெற முடியும். அல்லோபதி மருத்துவத்தின் வெற்றி இதன் அடிப்படையிலேயே உள்ளது. ஆயுஷ்பதி அமைப்பு: சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், வர்மம் போன்றவற்றிற்கான மாநாடுகள் பல்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றின் பயன்கள் பரவலாக இருப்பதில்லை. மேலும் இம்மருத்துவங்களின் மருந்துகளும் பெரிதளவில் அங்கீகரிக்கப்படவும் இல்லை. இதன் காரணமாக மருத்துவர் அலெக்சாண்டர் ஜேசுதாசன் அவர்கள் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் வர்மம் போன்றவற்றை இணைத்து ஒரு அமைப்பாக உருவாக்க எண்ணினார். இவ்வாறு உருவான அமைப்பே ஆயுஷ்பதி அமைப்பாகும். இன்றையச்சூழலில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்டஸ், வளைகுடா நாடுகள், அமெரிக்கா,கனடா போன்ற பலநாடுகளில் ஆயுஷ்பதி நிறுவனம் கிளை அமைத்து ஆலமரமாக வளர்ந்துள்ளது. ஆயுஷ்பதி நிறுவனத்தில் மருத்துவர்கள் மட்டுமின்றி தன்னார்வலர்கள், தொழில்முனைவோர் மற்றும் சாமானிய மாந்தர்கள் போன்றோரும் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் வாய்ப்புகள்: தமிழகத்தில் பயிற்சி பெறும் சித்த மருத்துவர்கள் அயல்நாடுகளில் பணியாற்ற விரும்பினால் அதற்கான வாய்ப்புகளும் சாத்தியக்கூறுகளும் அதிகமாக உள்ளன. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணியாற்ற வேண்டின் அங்குப் பல சட்ட நடைமுறைகள் உள்ளன. அதன்படி ஆவணங்கள் சமர்ப்பித்தல், சித்த மருந்துகளின் அனுமதி, பணியிட அனுமதி போன்றவை பெற்ற பின்பே அந்நாடுகளில் மருத்துவராக பணியாற்ற முடியும். பிற நாடுகளில் சித்த மருத்துவர்கள் பணியாற்ற வாய்ப்புகள் உள்ளன. ஒருங்கிணைப்புச் சிக்கல்கள்: ஆயுஷ்பதி அமைப்பின் கீழ் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், வர்மா போன்ற மருத்துவ முறைகள் அடங்கியுள்ளன. வேறு வேறு துறைகளை ஒன்று சேர்க்கும் மையமாக ஆயுஷ்பதி அமைந்திருப்பதால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இம்மருத்துவ முறைகள் அனைத்துமே உலகறிய வேண்டும் என்ற இலட்சிய நோக்குடன் இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. ஆயுஷ்பதி அமைப்பில் அனைத்து தரப்பினருக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால் முன்னேற்றப்பாதையை நோக்கிச் செல்கின்றது என்றால் அது நிதர்சனமாகும். இணைந்து செயலாற்றல்: ஆயுஷ்பதி அமைப்பு எல்லாவற்றிற்கும் பொதுவாக இருப்பதனால் இணைந்து செயலாற்றுவது அவசியமாக உள்ளது என்று மருத்துவர் அலெக்சாண்டர் ஜேசுதாசன் அவர்கள் கூறுகின்றார். ஒவ்வொரு முறைக்கும் குறிப்பிட்ட இடமளிப்பதன் மூலம் இணைந்து பணியாற்றல் சாத்தியமாக உள்ளது என்றும் கூறுகின்றார். ஒவ்வொரு மருத்துவ முறையும் குறிப்பிட்ட சிறப்புத்தன்மையும் தனித்தன்மையும் பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. தொடர் இணைய உரை: கடந்த ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு அதனைக் கொண்டாடும் விதமாக முதன்முறையாக ஆயுஷ்பதி நிறுவனத்தின் சார்பில் 48 மணிநேர தொடர் இணைய உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்விற்கு இந்தியாவில் மட்டுமின்றி இந்தோனேசியா, இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பலரது உதவிகளும் கிட்டின. இந்த மாரத்தான் இணைய உரை சாதனை படைத்த சிறப்புப் பெற்றது. இவ்வாறு ஆயுஷ்பதி நிறுவனம் ஒவ்வொரு மருத்துவத்தினையும் கொண்டாடுதலையும் அங்கீகரித்தலையும் காணலாம். நீரிழிவு மருந்தாராய்ச்சி: உலகளவில் நீரிழிவு நோய் என்பது மிகப்பரவலாகக் காணப்படுகின்றது. குடும்பத்தில் ஒருநபர் என்றளவில் இந்நோய் இந்தியாவில் காணப்படுவதை மறுக்கமுடியாது. ஆயுஷ்பதி நிறுவனம் இதன் முன்னெடுப்பு நடவடிக்கையாக “டயாட்ரெல்” என்ற நீரிழிவு நோய் மருந்தினை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இம்மருந்து 21 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள ஒவ்வொரு மூலிகைகளும் தனித்தன்மை கொண்டவையாக உள்ளன. இம்மருந்தின் பயன்பாடு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இரவு முழுவதும் ஊறவைத்து பின் மருந்து நீரினை அருந்தும் வண்ணம் இம்மருந்தின் பயன்பாடு அமைந்துள்ளது. நல்ல முடிவுகளைத் தருவதாகப் பலரும் கூறுவதைக் காணலாம். சித்த மருத்துவத்தின் மேம்பாடு: சித்த மருத்துவத்தின் முன்னேற்றத்தினை வர்மத்தின் மூலம் கொண்டு செல்லலாம் என்பது ஆயுஷ்பதி அமைப்பின் தலைவரான மருத்துவர் அலெக்சாண்டர் ஜேசுதாசனின் கருத்தாக உள்ளது. ஏனெனில் வர்மம் சித்த மருத்துவத்தின் படிநிலைகளில் ஒன்று. எனவே இதனைச் செயலாற்ற முடியும் என்று கூறுகின்றார். மேலும் சித்த மருத்துவத்தை முழுமூச்சாக எண்ணிப் பணியாற்றும் மருத்துவர்களைத் திரட்டி செயலாற்றுவதன் மூலமும் சித்த மருத்துவம் தழைத்தோங்கும் என்றும் மருத்துவர் அலெக்சாண்டர் ஜேசுதாசன் கூறுகின்றார். |
||||||||
by Lakshmi G on 12 Jan 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|