|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - கலந்துரையாடல் நிகழ்ச்சி |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - கலந்துரையாடல் நிகழ்ச்சி அறிமுகம்: தொன்மை வாய்ந்த சித்த மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மருத்துவர்களுக்கு மட்டுமின்றி நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகத்தாருக்கும் பொறுப்பு உண்டு. சிறந்த சித்த மருத்துவ நூல்களைப் பதிப்பித்து அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொழுதே சித்த மருத்துவம் மேன்மேலும் சிறப்புற்று வளரும். இத்தகைய அரிய பணியை ரத்தினநாயக்கர் சன்ஸ் பதிப்பகத்தாரான திரு.புருஷோத்தமன் அவர்கள், வர்ம மருத்துவ பதிப்பாளரான திரு.மோகன்ராஜ் அவர்கள், சான்லெக்ஸ் பதிப்பகத்தாரான திரு.இலட்சுமணன் அவர்கள் போன்றோர் செய்து வருகின்றனர். ரத்தினநாயக்கர் சன்ஸ் பதிப்பகம்: இப்பதிப்பகம் முதன்முதலில் ரத்தினநாயக்கர் என்பவரால் 1890 ஆம் ஆண்டு சென்னை கந்தன் கோட்டத்தில் தொடங்கப்பட்டது. முதலில் புத்தக விற்பனை நிலையமாக இப்பதிப்பகம் விளங்கியது. ஏனெனில் முற்காலத்தில் இலங்கை யாழ்ப்பாணம், ரங்கூன் போன்ற இடங்களிலிருந்து சித்த மருத்துவ நூல்கள் கிடைத்தன. எனவே இவற்றை வாங்கிவிற்கும் வாய்ப்பு அமைந்ததால் விற்பனை நிலையமாக இப்பதிப்பகம் உருவானது. பின்பு 1919 ஆம் ஆண்டில் புத்தகத்தைப் பதிப்பிக்கும் பதிப்பகமாகச் செயல்படத் தொடங்கியது. அப்போது சித்த மருத்துவ நூல்களுடன் ஜோதிட ஆன்மீக நூல்களையும் பதிப்பிக்கத் தொடங்கினர். தற்போது இப்பதிப்பகத்தை ரத்தின நாயக்கரின் வாரிசான திரு. புருஷோத்தமன் அவர்கள் நிர்வகிக்கின்றார். தொடர்ந்து நான்காம் தலைமுறையாக இப்பதிப்பகம் இயங்கிவருவது சிறப்பிற்குரியதாகும். சான்லெக்ஸ் பதிப்பகம்: 1990 ஆம் ஆண்டில் இப்பதிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. முழுவதும் கல்விசார்ந்த நூல்களை மட்டுமே பதிப்பிப்பதை நோக்கமாக இப்பதிப்பகம் கொண்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும். கிட்டத்தட்ட ஆயிரம் நூல்கள் இப்பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றில் பெரும்பான்மை பொறியியல் கல்வி சார்ந்த நூல்களாகும். சித்த மருத்துவம் சார்ந்த முப்பது நூல்கள் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இணையப் புத்தகங்களையும் வெளியிடுகின்றனர். தற்போது இப்பதிப்பகத்தினை திரு.இலட்சுமணன் அவர்கள் நிர்வகிக்கின்றார். வர்ம புத்தக பதிப்பாளர்: தனக்கென தனியொரு பதிப்பகம் இன்றி வர்ம மருத்துவ நூல்களையும் சித்த மருத்துவ நூல்களையும் பெரும்பான்மையாகப் பதிப்பித்து வருபவர் திரு.மோகன்ராஜ் அவர்களாவார். கல்லூரியில் படிக்கின்ற காலம் தொட்டே பதிப்பிப்பதில் ஆர்வம் உடையவராக உள்ளார். இவருக்கு இவரின் கல்லூரி ஆசிரியர்கள் பெரிதளவில் ஊக்கமளித்துள்ளனர். முதலில் தன் ஆசிரியரின் நூலினை அவரின் அனுமதியுடன் பதிப்பிக்கத் தொடங்கியுள்ளார். பின்பு கல்லூரியின் சார்பில் சித்த மருத்துவம் மற்றும் வர்ம நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினார். இவ்வாறு கல்லூரியின் மூலம் 24 நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதற்கான பொருட்செலவை மத்திய அரசு நல்கியுள்ளது. 2006 ஆம் ஆண்டிலிருந்து இப்பணியினை செய்து வருகின்றார். மத்திய அரசின் மூலம் ஓலைச்சுவடிகளை மின்மயப்படுத்தும் பணி இவருக்குத் தரப்பட்டது. அதன்மூலம் கிட்டத்தட்ட 2000 ஓலைச்சுவடிகளை மின்மயப்படுத்தியுள்ளார். இவற்றில் பெரும்பான்மை சித்த மற்றும் வர்ம மருத்துவம் சார்ந்தனவாகும். இத்தகைய ஓலைச்சுவடிகளை நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். தற்போது தன்னார்வலராகவும் புத்தகங்களைப் பதிப்பிக்கின்றார் திரு. மோகன்ராஜ் அவர்கள். பெரும்பான்மை வர்ம புத்தகங்களைப் பதிப்பிப்பதில் ஆர்வம் உடையவராக உள்ளார். பொருட்செலவு காரணமாகப் பல நூல்கள் பதிப்பிக்க முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கின்றார். புத்தக விற்பனை: பொதுவாகச் சித்த மருத்துவ நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் போது அவற்றை பத்து சதவிகிதத்தினரே வாங்குகின்றனர். அவ்வாறு வாங்குபவர்கள் சித்த மருத்துவர்களும் சித்த மருத்துவ பட்டதாரிகளும் மட்டுமே ஆவர். சித்த மருத்துவ நூலினை 1000 பிரதிகள் எடுத்துவெளியிட்டால் அவை விற்றுத்தீரக் குறைந்தது 10 வருடங்கள் ஆகின்றன. நூல்களை வாங்கப் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே பதிப்பகத்தினரால் நூல்கள் குறைந்த அளவிலேயே வெளியிடப்படுகின்றன. முந்நூறு பிரதிகளை வெளியிட்டால் அவற்றில் நூறு நூல்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன என்று திரு.மோகன்ராஜ் அவர்கள் கூறுகின்றார், இணையப்புத்தகங்களைப் பலரும் விரும்புவதாகத் திரு.இலட்சுமணன் அவர்கள் கூறுகின்றார். இணையதளத்திலும் சமூகவலைத்தளங்களிலும் இலவச மின்னூல்கள் பகிரப்படுவதால் பதிப்பகத்தில் குறைந்த அளவில் நூல்கள் வாங்கப்படுகின்றன. பதிப்பிக்க முடியாத பழைய நூல்களை மின்னூலாக்குதல் பயன்தரும் என்றும் தற்போது பதிப்பிக்கப்படும் நூல்களை இலவச மின்னூலாக்கினால் பதிப்பகத்தாருக்கு நலிவினை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமாகும். பதிப்பிக்க அணுகுதல்: சித்த மருத்துவம் சார்ந்த நூல்களோ அல்லது பிற நூல்களோ படைத்து அதனை பதிப்பகங்களின் மூலம் பதிப்பிக்க எண்ணும்போது சில வழிமுறைகள் உள்ளன. குறிப்பிட்ட நூலாசிரியர் குறிப்பிட்ட பதிப்பகத்தினை இணையதளத்திலோ, மின்னஞ்சலிலோ, தொலைப்பேசியிலோ அல்லது நேரிலேயோ அணுகலாம். முற்காலத்தில் நூலாசிரியர் தன் நூலினை பதிப்பகத்திற்கு எழுதிச் சமர்ப்பிப்பார். தற்போது தட்டச்சு செய்து தரும் நிலை வந்துவிட்டது. இதனால் குறைந்த நேரத்தில் நூலில் திருத்தங்கள் செய்து பதிப்பித்து வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய கணினி யுகத்தில் புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடல் மிகவும் இலகுவாக நடைபெறுகின்றது. எனவே சிறந்த நூல்கள் அதிகம் வெளியிட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. சித்த மருத்துவர்கள் இச்சூழலைப் பயன்படுத்திச் சிறந்த நூல்களை வெளியிடல் அவசியமாகும். புத்தகங்களை விற்றல்: பதிப்பகத்தார் புத்தகங்களை விற்பதில் பல சிக்கல்களைச் சந்திக்கின்றனர். சிறந்த நூலாக இருந்தாலும் விலையின் காரணமாக வாங்காமல் போகும் மக்கள் பலராவர் என்று திரு.புருஷோத்தமன் அவர்கள் கூறுகின்றார். இது நிதர்சனமான உண்மையும் ஆகும். எனவே பதிப்பகத்தார் புத்தகக் கண்காட்சியின் பொழுது தள்ளுபடியாகக் குறிப்பிட்ட சதவிகிதத்தில் நூல்களைத் தருவதற்கு முன்வருகின்றனர். நல்ல நூல்கள், பாரம்பரிய சித்த நூல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது. பலர் இணையதள வர்த்தகங்களின் மூலம் நூல்களை வாங்க முற்படுதலைக் காணலாம். மாணவர்கள் பாடநூல்களைத் தாண்டி பிற நூல்களை வாங்கி வாசித்தல் குறைவாக உள்ளது. இந்நிலை மாற அனைவரும் சிறந்த சித்த மருத்துவ நூல்களை வாங்கி வாசிப்பது நிச்சயம் உதவும்.
|
||||||||
by Lakshmi G on 17 Jan 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|