|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர்.அன்பு கணபதி |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் -டாக்டர். அன்பு கணபதி
பாரம்பரிய மருத்துவர்: இத்தனை ஆண்டுகள் சித்த மருத்துவம் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணம் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் ஆவர். அப்படிப்பட்ட பாரம்பரிய மருத்துவர்களில் ஒருவர் மருத்துவர் அன்பு கணபதி ஆவார். பட்டதாரி மருத்துவர்களின் வழி பாரம்பரிய மருத்துவத்தைக் கடத்துவதற்கு மருத்துவர் அன்பு கணபதி அவர்களும் ஒரு காரணியாக விளங்குகிறார். சித்த மருத்துவத்தில் ஆர்வம்: மருத்துவர் அன்பு கணபதி அவர்களின் 10வது வயதில் அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவரை சோதித்த மருத்துவர் அன்பு கணபதியின் உடலில் அல்சர் உள்ளது என்றும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத அவரது குடும்பத்தினர் அன்பு கணபதியின் மாமாவான சித்த மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அவர் ஒரு பச்சிலையைக் கொடுத்து அதனை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிடக் கூறியுள்ளார். இன்று 71 வயது வரை அன்பு கணபதி அவர்களை அல்சர் நோய் தாக்கவில்லை எனப் பெருமிதத்துடன் கூறுகிறார். மேலும் அன்பு கணபதி அவர்கள் 1967ல் பச்சையப்பன் கல்லூரியில் படித்த போது ஆஸ்துமாவால் தாக்கப்பட்டார். அப்போதும் சித்த மருத்துவரின் அறிவுரைப்படி வில்வம், துளசி, வேம்பு ஆகியவற்றுடன் தகுந்த மூச்சுப்பயிற்சியையும் மேற்கொண்டார். 53 ஆண்டுகளாக ஆஸ்துமா அவரை தாக்கவில்லை. அவை மட்டுமல்லாமல் மருத்துவர் அன்பு கணபதி அவர்களின் தாத்தா சிறந்த ‘மரண நாடி மருத்துவர்’. அன்பு கணபதி அவர்களின் தாயார் எப்போதும் சித்தர் பாடல்களையே வாயில் இசைத்துக் கொண்டு இருப்பார். இந்த சூழல் தானாகவே அன்பு கணபதி அவர்களைச் சித்த மருத்துவத்தின் பால் ஈர்த்தது. இவையே சித்த மருத்துவத்தின் மேல் அன்பு கணபதி அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றும் கூறுகிறார். அறிவியல் ரீதியான நிரூபணம்: சித்த மருத்துவம் உலகெங்கும் பரவ வேண்டும் எனில் அதனை அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்ய வேண்டும். அந்த பொறுப்பு இன்றைய இளைஞர்களிடையே இருக்கிறது. இன்றைய சித்த மருத்துவ இளைஞர்கள் தங்களது முன்னோர்களிடம் கலந்தாலோசிக்க முன்வர வேண்டும். அவர்களின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சித்த மருத்துவ ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த நோய்க்கு எந்த மருந்து என்ற தெளிவான சிந்தனை வேண்டும். அரைகுறையாக எவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடாது. முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சித்த மருத்துவத்தின் ஒவ்வொரு முறையையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். அறிவியல் ரீதியில் அதனை மெய்ப்பிக்க வேண்டும். பாரம்பரியமும், அறிவியலும் ஒன்றுசேர வேண்டும். தீர்க்கப்பட முடியாத நோய்: ஒரு மருத்துவத்தால் ‘இந்த நோயைக் குணப்படுத்த முடியாது’ என்று கூறினால், அந்த நோய்க்கு அந்த மருத்துவத்தில் மருந்துகள் இல்லை என்றே பொருள். அந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று பொருள் கிடையாது. 2 செ.மீ. நீளமுள்ள சிறுநீரகக் கல்லைக் கூட சித்த மருத்துவ மூலிகைகளினால் கரைக்க முடிந்திருக்கிறது. உப்புசத்து, கொழுப்புச்சத்து ஆகியவை உடலில் சென்று படியும் போது அது கட்டியாக மாறுகிறது. அதனைக் கரைக்கக் கூடிய முறைகளைச் சித்தர்கள் கண்டறிந்திருந்து கூறியிருக்கின்றனர். சித்த மருத்துவத்தில் உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற வதந்தி பொதுவாக மக்களிடையேக் காணப்படுகிறது. சித்த மருத்துவத்தில் உலோகங்கள் பயன்படுத்தப்படுவது உண்மைதான். ஆனால் அவை நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. சித்த மருத்துவத்தில் உலோகங்கள் நீரில் கரையக் கூடிய பொருட்களாக மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றனவேத் தவிர அவை நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. தானே தயாரிக்கும் மூலிகைகள்: மருத்துவர் அன்பு கணபதி அவர்கள் சித்த மருத்துவ மருந்துகளைத் தானே தன்னுடைய மேற்பார்வையில் தயார் செய்கிறார். சரியாகச் சித்தர்கள் சொன்ன முறைப்படி தயாரிக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பிணியைக் குணப்படுத்தும் என்பதால் அதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். எந்த மூலிகையை எப்பருவத்தில் எடுத்து, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இவர் இயற்கை வேளாண்மையின் மூலம் மூலிகைகளைப் பண்ணைத் தோட்டமாகப் பயிரிட்டு அவற்றை மருந்தாகப் பக்குவமாகத் தயாரித்து தன்னுடைய மருத்துவத்திற்குப் பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |
||||||||
by Lakshmi G on 22 Nov 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|