|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - சுபாஷ் சந்திரன் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - சுபாஷ் சந்திரன் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி: பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியானது அனைத்து சித்த மருத்துவர்களுக்கும் தாயகமாக விளங்குகிறது. அங்குப் படித்து தற்போது பேராசிரியராக பணியாற்றுகிற சுபாஷ் சந்திரன் அவர்கள் இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு அரும் பணியாற்றி வருகிறார். எந்த ஒரு கொடிய நோய் வந்தாலும் அதில் சித்த மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘நீட்’ நுழைவுத் தேர்வானது சித்த மருத்துவம் படிப்பதற்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் மொத்தம் 7 சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அடிப்படை மருத்துவம்: தமிழனின் அடிப்படை மருத்துவம் மற்றும் முதன்மை மருத்துவம் சித்த மருத்துவமே ஆகும். உயர்ந்த கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும். சித்த மருத்துவக் கல்லூரி போல் தான் எம்.பி.பி.எஸ். படிப்பும் நடக்கும். சித்த மருத்துவ படிப்பும் நான்கரை ஆண்டுகள் ஆகும். சித்த மருத்துவ சிக்கல்: வெளிநாட்டில் உள்ள தமிழர்களும், மற்ற மாணவர்களும் சித்த மருத்துவத்தின் பெருமையை உணர்ந்து அதனைப் படிக்க வருகின்றனர். ஆனால் இதில் ஏற்படுகின்ற சிக்கல் என்னவென்றால் ஆர்வத்துடன் வரும் மாணவர்கள் மொழி தெரியாத காரணத்தால் பின்வாங்குகின்றனர். நம் சித்த மருத்துவம் குறித்துப் பிற மொழியாளர்கள் உணர்ந்தால் தான் தமிழனின் பெருமையை உலகம் அறிந்து கொள்ளும். மற்ற மொழிகளிலும் சித்த மருத்துவ நூல்கள்: புதிதாகச் சித்த மருத்துவத்திற்குள் வருபவர்கள் அறிவியல் கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும். தமிழ் தெரிந்தவர்கள் தான் சித்த மருத்துவம் படிக்க வேண்டும் என்றில்லாமல் அனைவரும் சித்த மருத்துவம் படிக்க முன்வர வேண்டும். மற்ற மொழிகளிலும் சித்த மருத்துவம் குறித்த நூல்கள் வெளிவர வேண்டும். போலி மருத்துவரைக் கண்டுபிடிக்க… சித்த மருத்துவத்திலும் போலி மருத்துவர்கள் காணப்படுகின்றனர். சித்த மருத்துவத்தை முறையாகப் படித்து வந்த பட்டதாரி மருத்துவர்கள் மட்டுமே சித்த மருத்துவர்கள் ஆவர். ‘எல்லா நோயையும் நானே குணப்படுத்துவேன், நானே மருந்து கொடுப்பேன்’ என்றிருக்கின்றவர்கள் பெரும்பாலும் போலி மருத்துவர்களே. ஒவ்வொரு மருத்துவரும் அவர் படித்து மருத்துவரான தகுதிச் சான்றிதழை மருத்துவமனையின் முன்பு வருவோர் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். இது தமிழக அரசு விதித்துள்ள விதி ஆகும். இதை அனைத்து மருத்துவ மனைகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதைப் பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். சித்த மருத்துவம் வளர்ச்சி பெற… சித்த மருத்துவர்கள் தனக்கென ஓர் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சித்த மருத்துவ பிரிவுகளில் தனக்கு விருப்பமான ஒன்றில் சிறந்து விளங்க வேண்டும். மேலும் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் ‘இந்த நோய்க்கு இந்த மருத்துவரே சிறந்தவர். அவரைச் சென்று பாருங்கள்’ என்று எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு மருத்துவரே அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்க முடியாது. எனNவு, போட்டியின்றி மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அறிவியல் ரீதியான ஆராய்ச்சி: சித்த மருத்துவத்தைப் பொருத்தவரை அறிவியல் ரீதியில் அனைத்தையும் விளக்க வளரும் மருத்துவர்களும், வளர்ந்த மருத்துவர்களும் முன்வர வேண்டும். ஆராய்ச்சி நோக்கில் அணுக வேண்டும். ‘இந்த கசாயத்தைக் குடித்தால் இந்த நோய் இத்தனை சதவீதம் நீங்கும்’ என்று புள்ளிவிவரத்துடன் கூறுகின்ற அளவிற்கு முன்னேற வேண்டும். இந்த நாடித் துடிப்பினால் இந்த நோயைக் கண்டறியலாம் என்ற பட்டியல் வெளி வர வேண்டும். இதில் மாறுபட்ட கருத்தில்லாமல் ஒன்றிய முடிவுடன் செயல்பட வேண்டும். சித்த மருத்துவம் உலகெங்கும் பரவ வேண்டுமெனில் இது தான் சிறந்தது என்று கூறும் அளவிற்கு உறுதியான சான்றுகளை, தற்காலத்திற்கு ஏற்ற சான்றுகளைக் காட்ட வேண்டும். சித்த மருத்துவத்தைத் தொழில்நுட்ப ரீதியாக விளக்க வேண்டும். சித்த மருத்துவர்கள் களப்பணிகளைச் செய்ய வேண்டும். சிறு சிறு விஷயங்களையும் அறிவியல் முறையில் விளக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் சித்த மருத்துவத்தை எடுத்துக் கூறுவதோடு மேலும் சித்த மருத்துவத்தை எப்படி மேம்படுத்துவது என்று யோசிக்க வேண்டும். ஓலைச்சுவடிகள்: முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்து ‘ஓலைச்சுவடிகள்’ ஆகும். அவற்றைச் சேகரிக்கும் பணியிலும் டாக்டர். சுபாஷ் சந்திரன் அவர்கள் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து செயல்பட்டும் வருகிறார். ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கு மட்டும் எண்ணாமல், அவற்றைக் காலம் கடந்தும் அழியாமல் இருக்கும்படி நவீனமயமாக்க வேண்டும். எண்ணற்ற ஓலைச்சுவடிகளில் இன்று கிடைப்பது 10சதவீத ஓலைச்சுவடிகளே. அவற்றையாவது பாதுகாப்பாக வைக்க முன்வர வேண்டும். |
||||||||
by Lakshmi G on 18 Sep 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|