LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

மல்லாடிஹள்ளியில் செய்த அற்புதங்கள் !

இவங்கள எல்லாம் திருத்தவே முடியாதுப்பா…!’ என்று சொல்லிவிட்டு, அவர்கள் திருந்துவதற்கு எந்தவித உதவியும் செய்யாமல் நகரும் மனிதர்களைத்தான் தற்போது எல்லா இடங்களிலும் பார்க்கிறோம். ஆனால், ஒரு ஊரின் மனிதர்கள் மோசமானவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்காக தன் வாழ்நாளில் ஒரு வருடத்தை செலவிட்ட மல்லாடிஹள்ளி சுவாமிகள், அந்த கிராமத்தில் செய்த அற்புதங்கள் என்னென்ன? தொடர்ந்து படியுங்கள்!


மல்லாடிஹள்ளி கிராம மக்களின் பழக்கவழக்கங்கள் வித்தியாசமாக இருந்தன. வாரத்துக்கு ஒரு நாள்தான் குளிப்பார்கள். அதேபோல் வீட்டைப் பெருக்கி அந்தக் குப்பையை வீதியில் போட்டுவிடுவார்கள். ஆனால், வீதியைச் சுத்தம் செய்ய யாரும் இல்லை. இவை ராகவேந்திரரை சிறிதும் அசைக்கவில்லை. முதல் நாளிலேயே நள்ளிரவே எழுந்து அந்தக் கிராமத்துத் தலைவரின் வீட்டு வாசலைச் சுத்தம் செய்துவிட்டு, பிறகு அந்தக் கிராமத்தில் வீடுகளின் முன்னால் உள்ள குப்பைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்து, ஒவ்வொரு வீட்டு முன்னாலும் பசுமாட்டுச் சாணம் தெளித்துக் கோலம் போட ஆரம்பித்தார். இதைப் பார்த்த பல இளைஞர்களும் அவருடன் இப்பணியில் இணைந்தனர். இப்படித் தன்னிடம் வந்த இளைஞர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.ராகவேந்திரர் வந்து ஏழு நாட்கள் முடிந்தன. அதற்குள் சுகாதாரம், யோகா என அனைத்தையும் முடுக்கிவிட்டிருந்தார். முடிவில் அந்த கிராமத்து மக்கள் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு நாடகமும் நடத்தப்பட்டது. அந்தக் கிராமத்தில் முதன் முறையாக ஒரு நாடகம். ஊர் இளைஞர்களே நடித்தனர். நாடகத்தை எழுதி இயக்கியது ராகவேந்திரர். ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் உற்சாகத்தோடும் இருந்தனர். விழா முடிவில் ஊர்மக்கள் அனைவருக்கும் விருந்தோம்பலுக்காக நன்றி தெரிவித்து விடைபெறுவதாக ராகவேந்திரர் அறிவித்தார். அவ்வளவுதான், ஊர் மக்கள் அனைவரும் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தனர். அனைவரும் அவரின் பாதங்களைப் பணிந்து தங்களைவிட்டுப் போக வேண்டாம் எனக் கதறினர்.

ராகவேந்திரரை மல்லாடிஹள்ளி கிராமத்துக்குப் போக வேண்டாம் என ஆரம்பத்தில் தடுத்த ஸ்வாமி சங்கரலிங்க பகவான்தான் அன்றைய விழாவில் சிறப்பு விருந்தினர். இந்தக் கிராமத்து மனிதர்களிடம் இவ்வளவு மாற்றங்களா என வியப்போடு பார்த்துக் கொண்டு இருந்தார். தன் கண்ணீரைத் துடைத்தவாறே ராகவேந்திரரைப் பார்த்து இந்த ஏழை மக்களுக்காக ஒரு வருடமாவது கிராமத்தில் தங்கியிருக்கும்படி வேண்டினார். அனைவரின் அன்பையும் மறுக்க இயலாமல் ஒரு வருடம் தங்கச் சம்மதித்தார் ராகவேந்திரர்.


ஏழு நாட்களிலேயே புரட்சியை நிகழ்த்தியவருக்கு ஒரு வருடம் என்பது மிகப் பெரிய காலம் அல்லவா? எனவே, இந்த ஒரு வருடத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்காக ஒரு பெரிய பட்டியல் தயாரிக்க ஆரம்பித்தார். அந்தக் கிராமத்தில் மக்கள் எந்த ஒரு நோக்கமும் இன்றி, உற்சாகமும் இன்றி வாழ்ந்து வந்தனர். கலாச்சாரம், விழா என்பதெல்லாம் பல வருடங்களாக இல்லை. எனவே, முதல் வேலையாக, அந்த ஊரில் ஏற்கனவே வாழ்ந்து வந்திருந்த பாரப்ப ஸ்வாமி என்னும் ஒரு மகானுக்கு ஒரு கோவில் கட்டி, தினமும் மக்களை அங்கு கூட்டி பஜனைப் பாடல்கள் பாடச் செய்தார். அந்தக் கோவிலை மையமாக வைத்தே திருவிழா போன்றவற்றைத் தொடங்கினார். மெதுவாக ஊரில் பழைய கலாச்சாரம் திரும்பியது. மக்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க ஆரம்பித்தனர்.


அடுத்து, ஊட்டச் சத்தின்மை மற்றும் சுகாதாரமின்மை காரணமாகப் பல நோய்களில் அவதிப்பட்டு வந்த கிராம மக்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் செய்ய ஆரம்பித்தார். தானே மருந்துகளைத் தயார் செய்து அவர்களுக்குக் கொடுத்தார். அந்த ஊரில் ஒரு முறை காலரா நோய் அனைவருக்கும் பரவத் தொடங்கியது. மற்றொரு முறை பக்கத்து ஊரில் பிளேக் நோய் அனைவருக்கும் தொற்ற ஆரம்பித்தது. அப்போதெல்லாம் அவர் தன் உயிர்பற்றி சிறிதும் கவலைப்படாமல் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டு முழுமையாகச் சிகிச்சை அளித்தார். காலராவில் பாதிக்கப்பட்ட ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கும்கூட சிகிச்சை அளித்தார். அதையெல்லாம் அருகே இருந்து கவனித்த ஊர் மக்களுக்கு அவர்மேல் இருந்த மதிப்பும் அன்பும் பல மடங்காகியது. ராகவேந்திரரை மல்லாடிஹள்ளி ஸ்வாமிகள் என்று அழைக்க ஆரம்பித்திருந்தனர்.

ஒரு முறை அந்தக் கிராமத்துத் தலைவருக்கு ஒரு கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. குறிப்பிட்ட தேதி இரவில் தாங்கள் வர இருப்பதாகவும், குறிப்பிட்ட அளவு பெருந்தொகை தங்களுக்குத் தர வேண்டுமென்றும் மறுத்தால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்று எழுதியிருந்தனர். கிராமத் தலைவர் ராகவேந்திரரின் உதவியை நாடினார். உடனே ராகவேந்திரர் ‘ஊருக்குள் வந்தால் உயிருடன் திரும்ப மாட்டாய்’ என்று பலகைகளில் எழுதி தன் பெயரையும் அதில் கீழே குறிப்பிட்டு கிராமத்தின் நான்கு மூலைகளிலும் வைத்துவிட்டார். கொள்ளைக் கும்பல் சொல்லியிருந்த தேதியில் இரவில் தன்னந்தனியாகக் கிராமத்துத் தெருக்களில் ரோந்து வந்தார். ஆனால் பயந்துபோன கொள்ளையர்கள் வரவே இல்லை.


ஒப்புக்கொண்ட ஒரு வருட காலமும் முடிவுக்கு வந்தது. எனவே, இனி இந்த மக்கள் தங்களைக் காத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன், மேலும் பல ஊர்களில் தனக்கான பணிகள் காத்திருக்கின்றன என்று அந்த ஊரில் இருந்து கிளம்ப ஆயத்தமானார்.

by Swathi   on 29 Mar 2014  0 Comments
Tags: மல்லாடிஹள்ளி   Arputhangal                 
 தொடர்புடையவை-Related Articles
மல்லாடிஹள்ளியில் செய்த அற்புதங்கள் ! மல்லாடிஹள்ளியில் செய்த அற்புதங்கள் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.