LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

மனிதருள் மாணிக்கம்

அரசியல் வாழ்வுக்கு வருபவர்கள் தன்னலமற்ற , தியாகியாக இருப்பதில்லை , அதன்படி இருப்பவர்கள் மனிதருள் மாணிக்கமாகத் திகழ்வதில்லை . மனிதருள் மாணிக்கமாக , தன்னலமற்ற தியாகியாகத் திகழந்தவர் , நாம் போற்றிப் புகழும் கக்கன் அவர்கள் . தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் , உயர்குல மக்களே போற்றும் அளவிற்கு வாழ்ந்து காட்டியவர் அவர் .

அவரும் நானும்

‘நான் கோயம்புத்தூரில் துணை ஆட்சியராக , ஓர் ஆண்டு பயிற்சியை முடித்து , கோபிசெட்டிப் பாளையத்தில் கோட்டாட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டேன் . அப்போது , சுற்றுப்பயணமாக அங்கு வந்த மாண்புமிகு அமைச்சர் கக்கன் அவர்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன் . அப்போது அவர் பொதுப் பணித்துறையுடன் ஹரிஜன நலத்துறை அமைச்சராகவும் இருந்தார் . அவருடன் பல கிராமங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது .

சத்தியமங்கலம் வட்டத்தில் தாளவாடி என்னும் கிராமம் முன்னேற்றம் காணாத இடமாக இருந்தது . அங்குள்ள மக்களிடம் வேளாண்மை பற்றிய விவரங்களையும் , அவர்கள் துன்பங்களையும் பரிவோடு கேட்டறிந்தார் . அங்குள்ள தட்பவெப்ப நிலையை அதிகாரிகளிடம் கேட்டறிந்து , பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழிலை ஆரம்பித்து வைத்தார் . பிறகு பவானி வட்டத்தில் உள்ள பர்கூர் என்னும் கிராமத்திற்குச் சென்று , அங்கு வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் அவர்களின் தேவைகளையும் , கேட்டறிந்து அதிகாரிகளிடம் பேசி , ஆவன செய்வதாகக் கூறினார் . எல்லா மக்களிடமும் அவர் எளிய மனிதராகப் பழகி , அன்போடு அவர்களை அரவணைத்த விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது .

கும்பகோணத்தில் நாங்கள்

அதன்பிறகு , 1963 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் கோட்டாட்சித் தலைவராகப் பணிசெய்தபோது , அங்கும் கக்கன் அவர்கள் வந்தார்கள் . ஆடுதுறை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நெல் பரிசோதனை நிலையத்தைப் பார்வையிட்டு , உழவுத்தொழில் தொடர்பான பல கேள்விகள் கேட்டு , அவருக்கு இருந்த வேளாண்மைப் புலமையை வெளிப்படுத்தினார் . அங்குள்ள அலுவலகத்திற்கு வந்தவர் , எதேச்சையாக ஒரு மேசை இழுவைப் பெட்டியைத் திறந்து பார்த்தார் . சில அரசாங்கக் காகிதங்கள் எலிகளால் கடிக்கப்பட்டு , துண்டு துண்டாகக் கிடப்பதைப் பார்த்து , தொடர்புடைய எழுத்தரை மிகவும் கடிந்து கொண்டார் . அரசாங்கப் பொருள்களை எப்படிப் பேணவேண்டும் என்ற கோட்பாட்டினை அவர் சொன்னபோது எல்லாரும் வாயடைத்துப் போனார்கள் .

கன்னியாகுமரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ….

1964 ஆம் ஆண்டில் முதல் ஐந்து மாதங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் , மாவட்ட ஆதி திராவிட நல அலுவலராக நான் பணியாற்றினேன் . அப்பொழுது அமைச்சர் கக்கன் அவர்கள் அம்மாவட்டத்திற்கு வருகை தந்தார் . அப்பொழுது , சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டுச் சென்னை திரும்பும்போது என்னிடம் ‘செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இதே பணியைச் செய்வதற்கு வருகிறீர்களா ?’ என்று கேட்க , நானும் சம்மதித்தேன் .

ஆதலால் , உடனே நான் செங்கல்பட்டு மாவட்டத்தில் , மாவட்ட ஆதி திராவிட நல அலுவலராக மாற்றப்பட்டுப் பணியில் சேர்ந்தேன் . அப்பொழுது , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகம் சைதாப்பேட்டையில் தற்பொழுது உள்ள அரசு கலைக் கல்லூரி கட்டடத்தில் செயல்பட்டு வந்தது . மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அலுவலகமும் அங்குதான் இருந்தது . ஆகவே , நான் சென்னையில் வசித்து வந்தேன் . இதனால் அமைச்சர் அவர்களைப் பணி தொடர்பாக அவ்வப்போது சந்திக்கும் நல்ல வாய்ப்புக் கிடைத்தது .

மேலும் , அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சில சமயங்களில் சுற்றுப்பயணம் வந்தார் . அவ்வாறு வரும்போது எல்லாம் , முக்கியமாக தலித் மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அவர்கள் குடியிருக்கும் சூழ்நிலைகள் , அங்கு வேண்டிய அடிப்படை வசதிகளான வீட்டு வசதி , குடிநீர் , தெருவிளக்கு , இணைப்புச் சாலை , மயான வசதி போன்றவைகளையும் கேட்டு , வேண்டிய இடங்களில் தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்வார் . மாவட்டத்திலுள்ள மாணவர் விடுதிகள் , துறை நடத்தும் பள்ளிகளுக்குச் சென்று பார்வையிடுவார் . அக்காலத்தில் பல விடுதிகள் தனியார் கட்டடங்களில்தான் இயங்கி வந்தன .

ஆதலால் , மாணவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அங்கு இருக்கின்றனவா என்று கேட்டு அறிந்தும் , அவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தன்மையைக் கேட்டும் , விடுதிக் காப்பாளர்களுக்குத் தக்க அறிவுரைகள் கொடுப்பார் . மாணவர் விடுதியாக இருந்தாலும் , பள்ளியாக இருந்தாலும் , தொடர்புடையவர்களிடம் அங்குள்ள மாணவர்களின் கல்வியைப்பற்றி மிகவும் கவனமாகக் கேட்டு , அவர்களுக்கு மாணவர்களை நன்றாகக் கல்வியைக் கற்க வைக்கவேண்டும் என்று அறிவுரைகள் கொடுப்பார் . மாணவர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வார் .

இவ்வாறு அமைச்சர் அவர்களைத் தனியாகப் பார்க்கும்போது , அவர் கொடுத்த அறிவுரைகள் மற்றும் கற்றுப்பயணத்தின்போது சொல்லிய கருத்துக்கள் மற்றும் அறிவுரைகள் எனது மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன . மக்களோடு மக்களாகச் சாமான்ய மனிதராக நின்று அவர்களின் துயர்நீக்கும் ஒரு மாபெரும் மனித நேயத்தை அவரிடமும் நான் கண்டேன் .

எனக்கு அப்பொழுது வயது 31 ஆகும் . பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள்தான் ஆகியிருந்தது . அவருடைய அறிவுரைகள் நான் பிற்காலத்தில் இந்தத் துறையின் இயக்குநராகவும் செயலாளராகவும் பணியாற்றும்போது நல்ல வழிகாட்டிகளாக அமைந்தன . ஏன் ? எனது பணிக்காலம் முழுதும் பொதுமக்களிடம் எவ்வாறு பழகவேண்டும் , அரசுப் பணிகள் செய்யும்போது எவ்வாறு மனிதாபிமானம் கொண்டு செயல்படவேண்டும் என்ற நல்ல கருத்துக்கள் எனது மனத்தில் புதிய வழிவகுத்தன .

பிறகு , எனக்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நேர்முக ( பொது ) உதவியாளராக மாற்றல் உத்தரவு வந்தது .

அந்த உத்தரவைத் திரு . கக்கன்ஜி அவர்களிடம் சொல்லி , அதை ரத்துசெய்யக் கேட்டுக்கொண்டேன் .

அவரோ , “ உமக்குக் கிடைத்திருப்பது அருமையான பணி ! அங்குதான் ஏழை எளிய மக்களுக்கு உதவமுடியும்” என்று சொல்லி , உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டார் .

பரிந்துரைகளை ஏற்காமல் நேர்மையாகவும் மக்களுக்காகவும் வாழ்ந்த மேதைதான் திரு . கக்கன்ஜி அவர்கள் . அதிகாரிகளிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பழகும் பண்பாடு நம்மை அடிமையாக்கிவிடும் .

“அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்

நன்கு உடையான் கட்டே தெளிவு”

என்னும் வள்ளுவர் குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அவர்

– திரு . அ . பத்மநாபன் ஐ . ஏ . ஏஸ்

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.