LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அமரர் கல்கி

மணியக்காரர் மகள்

குமாரலிங்கம் கண்ணை மூடிக்கொண்ட பிறகு அவனுடைய செவிகள் மிகவும் கூர்மையாயின. குயில்கள் 'குக்கூ' என்று கூவும் சத்தமும் அணில்கள் 'கிச் கிச்' என்று இசைக்கும் சத்தமும் வேறு பலவகைப் பறவைகள் 'கிளக்' 'கிளக்' என்றும் 'கிளிங்' 'கிளிங்' என்றும் 'கிறீச்' 'கிறீச்' என்றும் கத்தும் சத்தமும் கேட்டன. இவ்வளவு சத்தங்களுக்கு மத்தியில் 'கலின்' 'கலின்' என்று கேட்ட மெட்டிகளின் சத்தத்திலேதான் அவனுடைய கவனம் நின்றது. சீக்கிரத்தில் அந்தச் சத்தம் நின்றுவிட்டது. அவ்வளவு காது கொடுத்து கவனமாகக் கேட்டும் கேட்கவில்லை. அந்தப் பெண் போய்விட்டாளா - அடாடா - போயே போய் விட்டாளா அவள் தலையிலே இருந்த கூடையில் மோரோ தயிரோ அல்லது சோறோ இருந்திருக்க வேண்டும். வயிற்றுப்பசி கொல்லுகிறதே; வந்தது வரட்டும் என்று அவளைப் பார்த்துப் பேசாமல் போனோமே நிஜமாகவே போய்விட்டாளா அல்லது ஒரு வேளை... குமாரலிங்கம் இலேசாகக் கண்ணிமைகளைச் சிறிது திறந்து பார்த்தான். அந்தப் பெண் போகவில்லை. தன் எதிரிலே அருகில் நின்று கொண்டிருக்கிறாள் என்று தெரிந்து கொண்டாள். உடனே தன்னை மீறிவந்த சங்கோசத்தினால் மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
குன்றிலிருந்து குதித்தோடும் அருவியின் சலசல சத்தத்தைப் போன்ற சிரிப்பின் ஒலி அவனுக்குக் கேட்டது. அந்த ஒலி செவியில் விழுந்ததும் ஸ்விட்சை அமுக்கியதும் இயங்கும் மின்சார இயந்திரத்தைப் போல் குமாரலிங்கம் பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தான். தன் முன்னால் நின்ற பெண்ணின் முகத்தை ஏறிட்டு உற்றுப் பார்த்தான். ஆச்சரியம் எல்லை மீறியது. அவள் தான்; சந்தேகமில்லை சோலைமலை இளவரசியேதான். உடுத்தியிருந்த உடையிலும் அணிந்திருந்த ஆபரணங்களிலுந்தான் வித்தியாசமே தவிர முகத்திலும் தோற்றத்திலும் யாதொரு வேற்றுமையும் இல்லை. குமாரலிங்கத்தின் தலை சுழன்றது. நல்ல வேளையாக அந்தப் பெண் அடுத்தாற்போல் சொன்ன வார்த்தை அவன் மயங்கிக் கீழே விழாமல் இருக்கச் செய்தது. "இந்த மண்டபத்தில் உச்சி வேளையில் படுத்துத் தூங்கக் கூடாது ஐயா இங்கே மோகினிப் பிசாசு உலாவுது என்று எல்லாரும் சொல்கிறாங்க" இதைக் கேட்டதும் குமாரலிங்கம் குபீர் என்று சிரித்தான். ஆனால் சிரிப்பின் சத்தம் அவ்வளவு கணீரென்று கேட்கவில்லை. அதன் காரணத்தை அந்தப் பெண்ணே கூறினாள்.
"பாவம் சிரிக்கக்கூடச் சக்தி இல்லை. வயிற்றுக்குச் சாப்பிட்டு ஒரு மாதம் ஆனாற்போலேயிருக்கு ஆளைப் பார்த்தால் உடம்புக்கு ஏதாவது அசௌக்கியமா ஐயா" என்று அவள் கூறியது குமாரலிங்கத்தின் செவியில் இன்ப கீதமாகப் பாய்ந்தது. "அதெல்லாம் எனக்கு உடம்பு அசௌக்கியம் ஒன்றுமில்லை. நீ யார் அம்மா" என்று குமாரலிங்கம் கேட்ட வார்த்தை ஈன ஸ்வரத்திலேதான் வெளி வந்தது."நான் இந்த ஊர் மணியக்காரர் மகள். உனக்கு உடம்பு அசௌக்கியம் இல்லாவிட்டால் பசியாய்த்தான் இருக்க வேணும். அப்படி நீ சுருண்டு படுத்துக் கிட்டிருப்பதைப் பார்த்தபோதே தெரிந்தது. சோறு கொஞ்சம் மிச்சம் இருக்கு; சாப்பிடுகிறாயா ஐயா" குமாரலிங்கத்தின் வயிறு 'கொண்டு வா கொண்டு வா' என்று முறையிட்டது. ஆனால் அவனுடைய சுயகௌரவ உணர்ச்சி அதற்குக் குறுக்கே வந்து நின்றது. "அதென்ன அப்படிக் கேட்டாய் என்னைப் பார்த்தால் அவ்வளவு கேவலமாயிருக்கிறதா பிச்சைக்காரன் மாதிரி தோன்றுகிறதா" என்றான் குமாரலிங்கம்.
"பிச்சைக்காரன் என்று யார் சொன்னாங்க பார்த்தால் மவராஜன் வீட்டுப் பிள்ளை மாதிரிதான் இருக்கு. ஆனால் எப்பேர்ப்பட்ட பிரபுக்களுக்கும் சில சமயம் கஷ்டம் வருகிறது சகஜந்தானே அதிலும் நல்லவங்களுக் குத்தான் உலகத்திலே கஷ்டம் அதிகமாய் வருகிறது. இராமர் சீதை அரிச்சந்திரன் சந்திரமதி தர்ம புத்திரர் இவர்கள் எல்லாரும் எவ்வளவோ கஷ்டப்படவில்லையா" இந்தப் பட்டிக்காட்டுப் பெண் விவாதத்தில் எவ்வளவு கெட்டிக்காரியாயிருக்கிறாள் என்று குமாரலிங்கம் மனத்திற்குள்ளே வியந்தான். எனினும் விவாதத்தில் தோற்க மனம் இல்லாமல் "அவர்களையெல்லாம் போல நான் நல்லவனுமில்லை; எனக்குக் கஷ்டம் ஒன்றும் வந்து விடவும் இல்லை" என்றான். "அப்படியென்றால் ரொம்ப சந்தோஷம்; நான் போய் வாரேன் உன்னோடு வெறும் பேச்சுப் பேசிக்கிட்டிருக்க எனக்கு நேரம் இல்லை. ஆயாள் கோபித்துக் கொள்வாள்" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் மேலே போகத் தொடங்கினாள். குமாரலிங்கத்துக்குத் தன் பிராணனே தன்னை விட்டுப் போவது போலிருந்தது. அவள் பத்தடி போவதற்கும் "அம்மா அம்மா இங்கே வா பசி காதை அடைக்கிறது. கொஞ்சம் சோறு போட்டுவிட்டுப் போ" என்றான்.
போகும்போது கொஞ்சம் சிடுசிடுப்போடு போனவள் இப்போது மலர்ந்த முகத்தோடு திரும்பி வந்தாள். "இதற்கு என்னத்திற்கு இவ்வளவு வறட்டு ஜம்பம் ஆளைப் பார்த்தால்தான் தெரிகிறதே மூன்று நாளாய்ப் பட்டினி என்று இந்தா" என்று சொல்லி ஒரு மலை வாழை இலையை எடுத்துக் கொடுத்தாள். "ஜம்பம் ஒன்றும் இல்லை அம்மா நீ யாரோ என்னவோ என்றுதான் நான் கொஞ்சம் யோசித்தேன்." "இதை முதலிலேயே நீ கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன். நாங்கள் நல்ல சாதிதான். முக்குலத்தோர் குலம். எங்கள் ஐயா பெயர் சிங்கார பாண்டியத் தேவர்." "சாதியைப்பற்றி நான் கேட்கவில்லை. நான் தேசத் தொண்டன். முக்குலத்தோரானாலும் எக்குலத்தோரானாலும் எனக்கு ஒன்றுதான்; வித்தியாசம் கிடையாது." இலையில் சோற்றைப் படைத்துக் கொண்டு மணியக்காரர் மகள் "தேசத் தொண்டன் என்றால் என்ன அது ஒரு சாதியா" என்று கேட்டாள். குமாரலிங்கம் அப்போது தன் மனத்திர்குள் 'அடாடா நம்முடைய பெண் குலத்தை நாம் எப்படிப் படிப்பில்லாமல் வைத்துக் கொண்டிருக்கிறோம் ' என்று எண்ணிப் பரிதாபப் பட்டான். பிறகு "தேசத் தொண்டன் என்பது ஒரு சாதியல்ல. தேசத் தொண்டர்களுக்குச் சாதி என்பதே கிடையாது" என்றான்.
"அது எப்படிச் சாதியே இல்லாமல் இருக்கும் ஏதாவது ஒரு சாதியில் பிறந்துதானே ஆக வேண்டும் தேசத் தொண்டர் என்றால் சாதி கெட்டவர்கள் என்று சொல்கிறாயா" "ராமா ராமா சாதியே இல்லை என்றால் சாதி எப்படிக் கெடும் இருக்கட்டும்; 'தேசம்' என்றால் இன்னதென்றாவது உனக்குத் தெரியுமா" "தெரியாமல் என்ன இந்த மலைக்கு அப்பாலே மலையாள தேசம் இருக்கிறது. கொலை கிலை பண்ணறவங்களைத் தேசாந்தரம் அனுப்பறாங்கள்" "அது போகட்டும்; காந்தி என்று ஒருவர் இருப்பதாகக் கேட்டிருக்கிறாயா" "காந்தி மகாத்துமா என்று சொல்லிக்கிறாக நேரே பார்த்ததில்லை." "சரி; காங்கிரஸ் மகாசபை என்றால் தெரியுமா" "எல்லாம் தெரியும். முன்னேயெல்லாம் காங்கிரஸ் என்று சொல்லி 'மஞ்சப் பெட்டியிலே வோட்டுப் போடு' என்று சொன்னாங்க. இப்போது 'காங்கிரஸ்காரனுங்க அங்கே கொள்ளையடிச் சாங்க' 'இங்கே கொள்ளையடிச்சாங்க' என்று சொல்லிக்கிறாங்க" "கடவுளே கடவுளே காங்கிரஸ்காரர்கள் கொள்ளையடிக்க மாட்டார்கள் அம்மா வெள்ளைக்காரர்களாகிய கொள்ளைக்காரர்களை இந்தப் பாரத தேசத்திலிருந்து துரத்துவதுதான் காங்கிரஸ் மகாசபையின் நோக்கம். இந்தப் புண்ணிய பூமியில் எத்தனையோ வீரப் பெண்மணிகள் இன்றைக்குச் சுதந்திரக் கொடியை நாட்டக் கிளம்பியிருக்கிறார்கள்..."
"கொடி போடுகிறவர்கள் போடட்டும். அதெல்லாம் எனக்கு என்னத்திற்கு எங்க ஐயாவுக்கு என்னமோ இப்போதெல்லாம் காங்கிரஸ்காரங்க என்றால் ரொம்பக் கோவம்..." "அடாடா அப்படியா அவரை மட்டும் நான் நேரில் பார்த்தால் உண்மையை எடுத்துச் சொல்லி அவர் மனத்தை மாற்றி விடுவேன்..." "எங்க ஐயாவை உனக்குத் தெரியாது. தெரிந்தால் இப்படிப் பேசமாட்டாய். ரொம்பக் கோவக்காரர். 'காங்கிரஸ்காரனுங்க யாராவது இந்த ஊரில் கால் எடுத்து வைக்கட்டும்; காலை ஒடித்து விடுகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நீ காங்கிரஸ் கட்சிக்காரன் என்றால் எங்க அப்பா ஊருக்குத் திரும்பி வரத்துக்குள்ளே போய் விடு" இந்த வார்த்தைகள் குமாரலிங்கத்துக்கு அவ்வளவாக ரஸிக்கவில்லை. இன்னதென்று விவரமாகாத ஒருவிதத் திகில் அவன் மனத்தில் உண்டாயிற்று. எல்லாம் காலையில் கண்ட கனவில் நடந்த மாதிரியே நடக்கிறதே என்ற எண்ணமும் தோன்றியது. "சரி அந்தப் பேச்சை விட்டுவிடலாம்... உன் பெயர் என்ன" "என் பெயர் பொன்னம்மா எதற்காகக் கேட்கிறாய்" "இவ்வளவு உபகாரம் எனக்குச் செய்தாயே உன் பெயரையாவது நான் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டாமா "
"உபகாரம் செய்கிறவர்களை இந்த நாளில் யார் ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறார்கள் அதெல்லாம் வெட்டிப் பேச்சு காரியம் ஆக வேண்டியிருந்தால் சிநேகம் உறவு எல்லாம் கொண்டாடுவார்கள்; காரியம் ஆகிவிட்டால் நீ யாரோ நான் யாரோ" "அப்படிப்பட்ட மனிதன் அல்ல நான். ஒரு தடவை உதவி செய்தவர்களை ஒரு நாளும் மறக்க மாட்டேன். அதிலும் உன்னை நிச்சயமாக மறக்க மாட்டேன் - ஆமாம்; மணியக்காரர் மகள் என்கிறாயே யாருக்குச் சாப்பாடு கொண்டு போனாய் வேறு யாரும் வேலைக்காரர் இல்லையா" "வேலைக்காரர்கள் இருக்கிறார்கள் எல்லோரும் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். கரும்பு வெட்டி இப்போது வெல்லம் காய்ச்சியாகிறது. அப்பா ஊரில் இல்லாததால் ஆயாளும் அண்ணனும் ஆலை அடியில் இருக்கிறார்கள். வெறுமனே வீட்டிலே குந்தி இருப்பானேன் என்று அவர்களுக்குச் சோறு கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருகிறேன்." "அப்படியானால் நாளைக்கும் இந்த வழி வருவாயா " "வந்தாலும் வருவேன். ஆனால் நாளைக்குக்கூட நீ இங்கேயே இருப்பாயா உனக்கு வீடு வாசல் வேலை வெட்டி ஒன்றும் கிடையாதா" "நான் தான் அப்போதே சொன்னேனே தேசத் தொண்டு தான் எனக்கு வேலை என்று." "அதென்னமோ எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் போய் வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் பொன்னம்மாள் அங்கிருந்து புறப்பட்டாள்."நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் போகிறாயே நாளைக்கும் இந்த மாதிரி ஒரு பிடி சோறு போட்டுவிட்டுப் போனாயானால் தேவலை. இன்னும் இரண்டு மூன்று நாளைக்கு நான் இந்தப் பாழும் கோட்டையிலே இருந்து தீர வேண்டும். சாப்பிட்ட பிறகுதான் களைப்பு இன்னும் அதிகமாய்த் தெரிகிறது. இரண்டு மூன்று நாளைக்கு ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது போலிருக்கிறது. ஊருக்குள் வரலாம் என்று பார்த்தால் உன் தகப்பனார் காங்கிரஸ்காரன் என்றால் காலை ஒடித்து விடுவார் என்கிறாய்." "அதில் என்னமோ சந்தேகமில்லை. உனக்கு நான் சோறு போட்டதாகத் தெரிந்தால் என்னையே அவர் காளவாயில் வைத்து விடுவார்" "அப்படியானால் நீதான் இரண்டு மூன்று நாளைக்கு எனக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்."
"நல்ல காரியம் முதலில் நாளை ஒரு நாளைக்கு என்கிறாய். அப்புறம் மூன்று நாளைக்கி என்கிறாய். வழிப் போக்கர்களுக்குச் சோறு கொண்டு வந்து படைப்பது தான் எனக்கு வேலை என்று நினைத்தாயா" "சரி அப்படியென்றால் நான் பட்டினி கிடந்து சாகிறேன். இங்கே பறந்து திரியும் கழுகுகளுக்கு நல்ல இரை கிடைக்கும். இன்றைக்குக் கூட உன் பாட்டுக்குப் பேசாமல் போயிருக்கலாமே தூங்கினவனை எழுப்பிச் சோறு போட்டு இருக்க வேண்டாமே" பொன்னம்மாள் 'கலகல'வென்று சிரித்தாள். அவள் சிரித்த போது குமாரலிங்கத்துக்குக் குன்றும் மரமும் கொடியும் சகல ஜீவராசிகளும் 'கலகல'வென்று சிரிப்பது போலத் தோன்றியது. அவனுடைய சோர்வடைந்த முகத்திலும் புன்னகை பூத்தது. பொன்னம்மாளை முன்னைவிட ஆர்வத்தோடு பார்த்து "ஏன் சிரிக்கிறாய்" என்று கேட்டான். "தூங்கினவனை எழுப்பியதாகச் சொன்னதற்குத் தான் சிரித்தேன். நிஜமாக நீ தூங்கினாயா அல்லது பொய் சொல்லுகிறாயா" "இல்லை; பொய்த் தூக்கந்தான். ஆனால் நான் கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தபோது நீ சிரித்தாயே; அது எதற்காக" "நீ எழுந்து உட்கார்ந்து என்னைப் பார்த்ததும் சிரிக்க முடியாமல் சிரித்தாயே அது எதற்காக முதலில் அதைச் சொல்."
"நீ முதலில் சொன்னால் அப்புறம் நானும் சொல்கிறேன்." "நிச்சயமாகச் சொல்வாயா" "சத்தியமாய்ச் சொல்லுகிறேன்." "நேற்றைக்கு நான் சந்திரஹாசன் கதை படித்துக் கொண்டிருந்தேன்" "ஓஹோ உனக்குப் படிக்கக்கூடத் தெரியுமா" "ஏன் தெரியாது நாலாவது வகுப்பு வரையில் படித்திருக்கிறேன். அப்புறம் வீட்டிலேயே கதைப் புத்தகங்கள் படிப்பதுண்டு." "சரி மேலே சொல்லு" "சந்திரஹாசன் கதையில் இப்படித்தான் ஒரு ராஜகுமாரன் நந்தவனத்தில் வந்து படுத்துத் தூங்குகிறான். மந்திரிகுமாரி அங்கே வந்து அவனைப் பார்த்துவிட்டு தன் ஐயாதான் தனக்கு மாப்பிள்ளை தேடி அனுப்பியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்கிறாள். இப்போது எங்க ஐயாவும் ஊரில் இல்லாதபடியால் அவர்தான் ஒரு வேளை மாப்பிள்ளையைத் தேடி அனுப்பியிருக்கிறாரோ என்று நினைத்தேன். அது என்ன பைத்தியக்கார எண்ணம் என்று தோன்றியதும் சிரிப்பு வந்தது" "ஏன் அதைப் பைத்தியக்கார எண்ணம் என்கிறாய் ஏன் உண்மையாயிருக்கக்கூடாது" "உன்னோடு வெறும் பேச்சுப் பேச எனக்கு நேரம் இல்லை. நீ என்னைப் பார்த்ததும் ஏன் சிரித்தாய் என்று சொல்லுவாயா மாட்டாயா "
"நான் எழுந்து உட்கார்ந்ததும் 'இந்த மண்டபத்தில் உச்சி வேளையில் படுக்கக்கூடாது மோகினிப்பிசாசு இங்கே இருக்கிறது' என்று சொன்னாயல்லவா உன்னைத் தவிர வேறு மோகினிப் பிசாசு எங்கேயிருந்து வரப்போகிறது என்று எண்ணிச் சிரித்தேன். எப்பேர்ப்பட்ட தேவலோகத்து மோகினியும் அழகுக்கு உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும்" "உன்னைப்பற்றி ஒரு பாட்டு இட்டுக் கட்டியிருக்கிறேன். கேட்டுவிட்டுப் போ" "பாட்டா எங்கே சொல்லு"
"பொன்னம்மாள் ரொம்பப் பொல்லாதவள் பொய் என்ற வார்த்தையே சொல்லாதவள்"
பொன்னம்மாள் திரும்பிப் பார்த்து இன்னும் ஒரு தடவை அவனுக்கு அழகு காட்டிவிட்டு விரைவாக நடந்தாள். அவள் நடையிலும் தோற்றத்திலும் என்றுமில்லாத மிடுக்கும் கம்பீரமும் அன்று காணப்பட்டன. பொன்னம்மாள் போன பிறகு குமாரலிங்கம் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். அன்று அதிகாலை நேரத்தில் அங்கே தான் வந்து உட்கார்ந்த போது கண்ட கனவுக் காட்சியில் நடந்தது போலவே ஏறக்குறைய இப்போது உண்மையாக நடப்பதை எண்ணி எண்ணி வியந்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் யாரோ குடியானவர்கள் அந்தப் பக்கம் நெருங்கி வருவதாகத் தோன்றவே எழுந்து சென்று சற்றுத் தூரத்தில் இடிந்து கிடந்த அரண்மனைக்குள்ளே புகுந்தான். அங்கு எவ்வித நோக்கமும் இன்றி அலைந்தான். மறுபடியும் அதே மாய உணர்ச்சி - அந்த இடங்களில் எல்லாம் ஏற்கெனவே ஒரு தடவை சஞ்சரித்திருப்பது போன்ற உணர்ச்சி - அவனைக் கவர்ந்தது. அதை உதறித் தள்ளிவிட்டு வெளியில் வந்து பாழடைந்த கோட்டை கொத்தளங்களிலும் அருகிலேயிருந்த காட்டுப் பிரதேசங்களையும் சுற்றி அலைந்தான். அஸ்தமித்ததும் களைப்பு மேலிட்டு வந்தது. மறுபடியும் வஸந்த மண்டபத்தில் உட்கார்ந்தான். அந்தக் கோட்டையிலும் அரண்மனையிலும் முற்காலத்தில் யார் யார் வசித்தார்களோ என்னென்ன பேசினார்களோ ஏதேது செய்தார்களோ என்றெல்லாம் அவனுடைய உள்ளம் கற்பனை செய்து கொண்டிருந்தது.
பகலில் வெகு நேரம் தூங்கியபடியால் இரவில் சீக்கிரம் தூக்கம் வராதோ என்று முதலில் தோன்றியது. அந்த பயத்துக்குக் காரணமில்லையென்று சற்று நேரத்துக்கெல்லாம் தெரிந்தது. அவனுடைய கண்கள் சுழன்றன. நி த்திரா தேவியின் பூப்போன்ற கரங்கள் அவனுடைய கண்ணிமைகளைத் தடவிக் கொடுக்கத் தொடங்கின. அச்சமயம் கிழக்குத் திக்கில் குன்று முகட்டில் மேலே வெள்ளி நிறத்து நிலவின் ஒளி பரவிற்று. சிறிது நேரத்துக்கெல்லாம் ஏறக்குறைய முழுவட்ட வடிவமாயிருந்த சந்திரன் குன்றின் மேலே வந்தது. பால் போன்ற நிலவு அந்தப் பழைய கோட்டை கொத்தளங்களின் மேலே நன்றாய் விழுந்ததும் மறுபடியும் காலையில் நேர்ந்த அதிசய அநுபவம் குமாரலிங்கத்துக்கு ஏற்பட்டது. பாழடைந்த கோட்டை கொத்தளங்கள் புதிய கோட்டை கொத்தளங்கள் ஆயின. இடிந்து கிடந்த அரண்மனை மேல் மச்சுக்கள் உள்படப் புதிய வனப்புப் பெற்றுத் திகழ்ந்தன. வஸந்த மண்டபமும் புதிய தோற்றம் அடைந்தது. சுற்றிலும் இருந்த நந்தவனத்திலிருந்து புது மலர்களின் நறுமணம் பரவி வந்து தலையைக் கிறுகிறுக்கச் செய்தது. குமாரலிங்கமும் மாறனேந்தல் இளவரசனாக மாறினான்.

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.