LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

மறைந்த சுழல்

                                          மறைந்த சுழல்

 

 ஆடி மாதம். மேலக்காற்று விர்விர் என்று அடித்துக் கொண்டிருந்தது. மரங்களின் கிளைகள் அந்தக் காற்றில் பட்ட பாட்டைச் சொல்லி முடியாது. நாலா பக்கமிருந்தும் 'ஹோ' என்ற இரைச்சல் சத்தம் எழுந்தது.

     பூங்குளம் கிராமம் ஜலத்திலே மிதந்து கொண்டிருப்பது போல் காணப்பட்டது. ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் புதுவெள்ளம் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு சுழிகள் நுரைகளுடன் அதிகவேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது. வயல்கள் எல்லாம் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தன. நாற்றங்கால்களில் இளம் நாற்றுக்கள் கொழு கொழுவென்று பசுமையாய்ப் படர்ந்து இருந்தன. அப்பயிரின் மீது சில சமயம் காற்று வேகமாய்ச் சுழன்று அடித்த போது, விதவிதமான சுழிகளும் கோலங்களும் தோன்றி மறைந்தன.

     தடாகங்கள் நீர் நிறைந்து அலைமோதிக் கொண்டிருந்தன. தாமரையும் அல்லியும் புத்துயிர் பெற்று, தளதளதளவென்று விளங்கிய புதிய இலைகளையும் மொட்டுகளையும் விட்டுக் கொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக மலர்ந்திருந்த தாமரைப் பூக்களை மேலக்காற்று படாதபாடு படுத்திற்று.

     மிருகங்களும் பட்சிகளுக்கும் கூடப் புது வெள்ளம் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை ஊட்டியிருப்பது போல் காணப்பட்டது. எருமை மாடுகள் தளர்ந்த நடையுடன் வந்து கொண்டிருந்தவை, நீர் நிரம்பிய தடாகத்தைப் பார்த்ததும் அதிவேகமாய்ப் பாய்ந்து வந்து தண்ணீரில் அமிழ்ந்தன. கொக்குகள் கூட்டங்கூட்டமாகப் பறந்து வந்து, குளக்கரைகளில் புதிதாய் முளைத்து வரும் கோரைகளுக்கு மத்தியில் உட்கார்ந்து மௌனானந்தத்தில் ஆழ்ந்துவிட்டன. பசுமையான கோரைகளுக்கிடையில் அந்தத் தூய வெண்ணிறக் கொக்குகள் நின்ற நிலையும், அவற்றின் நிழல் கீழே தண்ணீரில் பிரதிபலித்த தோற்றமும், ஆகா! எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த சித்திரக்காரன் எழுதிய சித்திரமோ இது என்று நம்மை அதிசயிக்கச் செய்தன.

 

*****

     கல்யாணி பூங்குளத்துக்கு வந்து, வண்டியை விட்டு, இறங்கி, வீட்டுக்குள் போனாளோ இல்லையோ, உடனே குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு, "அத்தை! நான் ஆற்றங்கரைக்குப் போய்க் குளித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். "என்னடி, அம்மா, இது? நாளைக்குப் போய் ஆற்றில் குளித்தால் போதாதா? இன்றைக்கே அவசரமா? மேலக்காற்றோ இப்படிச் சூறாவளியாய் அடித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காற்றில் போனால் உடம்புக்குத் தான் ஆகுமா? நான் தனியாயிருக்கும் போது நீ ஏதாவது உடம்புக்கு வருவித்துக் கொண்டு படுத்துக் கொண்டு விடாதே! என்னால் ஆகாது" என்றாள் அத்தை. 

     "நன்றாயிருக்கிறது. ஆற்றிலே புதுவெள்ளம் வந்திருக்கும் போது யாராவது வீட்டில் வெந்நீரில் குளிப்பார்களா? நான் மாட்டேன்" என்று சொல்லிவிட்டுக் கல்யாணி கிளம்பிச் சென்றாள். 

     நேரே அவள் பாழடைந்த கோவிலுக்குத்தான் சென்றாள் என்று சொல்லவும் வேண்டுமா? இந்தத் தடவை அவள் ஏமாற்றமடையவில்லை. மரத்தடியில் மேடை மீது முத்தையன் தலையில் கட்டிய முண்டாசுடன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய முகத்தில் குதூகலம் குடிகொண்டிருந்தது. கல்யாணியைப் பார்த்ததும் அவன், "ஸ்ரீமதி கல்யாணி அம்மாள், வரவேணும்! தங்களை எதிர் நோக்கிக் கொண்டுதான் இன்று காலை ஆறுமணியிலிருந்து காத்திருக்கிறேன்" என்றான்.

     கல்யாணி ஆனந்த பரவசமானாள். திடீரென்று தனக்கு இறகுகள் முளைத்து ஆகாசத்தில் பறப்பது போன்ற உணர்ச்சியடைந்தாள். சென்ற நாலு வருஷகாலத்தில் முத்தையன் ஒரு தடவையாவது இவ்வளவு சந்தோஷமாக அவளை வரவேற்றது கிடையாது. கல்யாணியின் கல்யாணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து அவர்களுக்குள் கோபமும் தாபமும் தான் அதிகமாயிருந்தன அல்லவா!

     "நான் இன்று உன்னை பார்ப்பது அதிர்ஷ்டவசந்தான்! இத்தனை நேரம் திருப்பதிக்குக் கிட்டத்தட்ட நான் போயிருக்க வேண்டியது" என்றாள் கல்யாணி.

     "ஓகோ! அதென்ன சமாச்சாரம்? இதோ இந்த அக்கிராசன பீடத்தில் அமர்ந்து எல்லாம் விவரமாகச் சொல்லவேணும்" என்றான் முத்தையன். அவளுடைய குடத்தை வாங்கிக் கீழே வைத்து, அவளையும் அந்த மேடையில் உட்காரச் செய்தான்.

 

*****

     கல்யாணி, அன்று நடந்ததையெல்லாம் ஒருவாறு சொன்னாள். ராயவரம் ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, முத்தையனைப் பற்றிய பேச்சு காதில் விழுந்ததையும், "கொள்ளிடக்கரைக்குத் தான் வந்திருப்பான்" என்ற வார்த்தையைக் கேட்டவுடனே தான் திருப்பதிக்குப் போகாமல் திரும்பி வந்துவிட்டதையும் கூறினான்.

     "கல்யாணி! உன்னுடைய இப்பேர்ப்பட்ட அன்புக்கு நான் எந்த வகையில் தகுந்தவன் என்று தான் தெரியவில்லை. உன்னுடைய அன்பைக் கூட ஒரு சமயம் நான் சந்தேகித்தேனே? அதை நினைத்தால் ஆச்சரியமாயிருக்கிறது" என்றான் முத்தையன்.

     கல்யாணிக்கு அப்போது ரயில்வே ஸ்டேஷனில் காதில் விழுந்த இன்னும் சில விஷயங்கள் ஞாபகம் வந்தன. அவள் முகத்தில் உடனே துன்பக் குறி தோன்றிற்று.

     "அதெல்லாம் சரிதான்; ஆனால்..." என்று கேட்க ஆரம்பித்தவள், தயக்கமடைந்து நிறுத்திவிட்டாள்.

     "என்ன? என்ன?" என்று முத்தையன் கேட்டான்.

     கல்யாணி பேச்சை மாற்றி, "ரயிலேறுகிற சமயத்தில் நான் வரவில்லையென்று சொல்லிவிட்டேனல்லவா? அப்பாவும் சின்னம்மாவும் என்ன நினைத்தார்களோ தெரியாது. என்னைப் பைத்தியம் என்றே முடிவு கட்டியிருப்பார்கள். ஸ்டேஷனில் இருந்தவர்கள் கூட என்னைப் பார்த்துச் சிரித்திருப்பார்கள்" என்றான்.

     "இவ்வளவுதானே கல்யாணி! நாம் இரண்டு பேரும் பைத்தியங்கள் தான். பைத்தியங்களாகவே இருப்போம். சிரிக்கிறவர்களெல்லாம் சிரித்துக் கொள்ளட்டும். இன்னும் கொஞ்ச நாள் தானே சிரிப்பார்கள்? நாம் இருவரும் கப்பலேறி ஆனந்தமாகக் கடல் பிரயாணம் செய்யும் போது அவர்களுடைய சிரிப்பு நம்மைத் தொடர்ந்து வரப் போகிறதா? அக்கரைச் சீமைக்குப் போய் ஆனந்தமாய்க் காலங் கழிக்கும் போது தான் அவர்களுடைய பரிகாசம் நம் காதில் விழப்போகிறதா!...கல்யாணி! என்னுடைய வேலையெல்லாம் ஆகிவிட்டது. அபிராமியைப் பார்த்து விட்டேன். அவள் சௌக்யமாயிருக்கிறாள். அவளை பாதுகாப்பதற்கு ஓர் ஆசாமியும் ஏற்பட்டு விட்டான். இனிமேல் நாம் எங்கே வேணுமானாலும் போகலாம். இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கே போலீஸ் ஆர்ப்பாட்டம் அதிகமாயிருக்கும். அந்தக் கலவரம் அடங்கும் வரையில் நான் ஜாக்கிரதையாயிருக்கவேணும். அப்புறம், நாம் கப்பலேறிக் கிளம்பி விட்டோ மானால், பிறகு எது எப்படிப் போனால் நமக்கு என்ன? சொர்க்க வாழ்வை அடைந்தவர்களுக்கு மண்ணுலகத்தைப் பற்றிக் கவலை ஏன்?" என்றான்.

 

*****

     பிறகு சில தினங்கள் கல்யாணிக்கும் முத்தையனுக்கும் சொர்க்க வாழ்வாகவே சென்று வந்தன. அவர்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம். ஆனால் அந்த வெள்ளத்தின் அடியில் ஒரு பெருஞ்சுழல் வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.