LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- சு.மு.அகமது

மருதாணிப்பூக்கள் - சு.மு.அகமது (சுமுகன்)

மருதாணிப்பொடியை பொட்டலத்திலிருந்து கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு  குழைய குழைய கலந்து அரை எலுமிச்சம்பழ சாற்றையும் யூகலிப்டஸ் தைலத்தில் பத்து சொட்டுக்களும் தேயிலைத்தூள் ஒரு தேக்கரண்டியும் குழைத்திருந்த மருதாணிக்குழம்பில் போட்டு வலது கையின் விரல் நுனிகளாலேயே நன்றாக பிசைந்துவிட்டு கையை கழுவிக்கொண்டு வந்த ஜஹானுக்கு விரல் நுனிகளில் மருதாணியின் நிறம் தொற்றிக்கொண்டதில் சற்று வருத்தம் தான்.அழகான ஒரு டிசைன் போட முடியாதபடி வண்ணம் அப்பிக்கொண்டிருந்தது.மருதாணி கலப்பவர்களுக்கு சற்று தியாக மனப்பான்மை வேண்டும்.கரண்டி கொண்டு கலந்தால் சரியான கலவை கிடைக்காதென்று அப்பட்டமாக நம்பினார்கள்.

பக்கத்து வீட்டு பார்வதிக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது.நாளைய மறுநாள் ஆம்பூர் கமலா ராஜன் திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமண விழாவிற்கு நாளை மாலையே சென்று விட வேண்டும்.அதற்கு முன் முதல் வேலையாக மங்கல மருதாணியிட்டு கைகளையும் கால்களையும் ஓவியக்காட்சியகமாக்கி விடவேண்டும்.மெல்லிய கோடுகள்.அதில் துளிர் விடும் இலைகள்.இலைகளையொட்டியே சில பூக்கள்.இப்படி நிறைய விதவிதமான ரகங்களில் மருதாணியிட வேண்டிய பொறுப்பு தோழி ஜஹானுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

தோழியர் அனைவரும் குழுமிவிட்டிருந்தனர்.

“ஏய் ஜகான் நல்லா போடுடி.அப்பிடியே இத்த பாத்துக்கினே நின்னுப்புடனும்”என்றாள் ஒருத்தி.

இன்னும் மருதாணியிட ஆரம்பிக்கவேயில்லை.அதற்குள் ஒருத்தி,

“எல்லாத்தையும் இவளுக்கே போட்டிடாதேடி.எங்களுக்கும் கொஞ்சம் மீத்து வை”என்றாள்.

“ஆங்... எல்லாம் மீப்பாங்க.ஆடு ஆடு வாக்கிலேயே இருக்குதாம்.இவளுக்கு கறிச்சோறு வேணுமாம்”.நொட்டினாள் இன்னொருத்தி.

“எல்லாம் மீஞ்ச்சின்னா பாக்கலாம்”.முற்றுப்புள்ளி வைக்கப்பார்த்தாள் ஜஹான்.

“எல்லாத்துக்கும் எங்கயாவது எவனாவது மாமனோ மச்சானோ வராமயா பூடப்போறான்”.அங்கலாய்த்தாள் பார்வதியை விட இரண்டு வயது மூத்தவளான எதிர்வீட்டு  பங்கஜம்.கல்யாணக்கனவு காண ஆரம்பித்து ஐந்தாறு வருடங்கள் கடந்திருந்தது.

எல்லோரும் வட்டம் போட்டு அமர்ந்து கொண்டனர்.பார்வதி தனது இடது கையை நீட்டினாள்.

“இன்னா பீச்சாங்கையை நீட்டுற.நானென்ன ஜோசியமா பாக்க போறேன்.சோத்துக்கையை மொதல்ல காமிடி’’என்றவாறு அவளது வலது கையை எடுத்து வியர்த்து கசகசத்திருந்த உள்ளங்கையை முந்தானைத்துணியால் துடைத்தாள் ஜஹான்.

‘இன்னா இப்பவே வேக்குது”நக்கலடித்தாள் பங்கஜம்.

“ச்சீ...அமைதியா இரு”அடக்கினாள் ஜஹான்.

பூந்துடைப்பம் குச்சிகளை உடைத்து நான்கைந்து அளவுகளில் வைத்திருந்தாள்.தடித்த குச்சியை முதலில் எடுத்து முக்கிய கோடுகளை வரையத்துவங்கினாள்.இது பழைய முறை. ஆம்பூரிலெல்லாம் தயாராய் முன்பே கலந்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் கோன்களினாலேயே மருதாணியிட்டு விடுகிறார்கள்.இவளுக்கு அது ஏற்புடையதாய் இருந்ததில்லை.தன் கையாலேயே பிசைந்து தயார் செய்து இடுவதில் இருக்கும் திருப்தி அதில் வருவதில்லை.

அரை மணி நேரத்தில் மருதாணியிட்டு முடித்திருந்தாள்.

பங்கஜம் கையை நீட்டினாள்.

“இரு அர்ஜண்ட்....”ஓடினாள் புழக்கடை பக்கம் ஜஹான்.பாத்ரூம் கதவு கரகரவென்று மூடிக்கொண்ட சத்தம் அவளது அவசரத்தை இவர்களுக்கு உணர்த்தியது.சிறிது நேரங்கழித்து ஈரமான கைகளை முந்தானையில் துடைத்தபடி உள்ளே வந்தாள்.

அதற்குள் அவசரக்குடுக்கை பங்கஜம் தொப்பலாக கை நிறைய மருதாணியை அப்பிக் கொண்டிருந்தாள்.

“என்னாடி பண்ணிக்கினு கீற.சரி சரி நல்லா காய்ஞ்சப்புறம் கழுவனும்.அப்ப தான் கலரு நல்லா ஏறும்”.

பார்வதி சுவற்றிலே சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தாள்.இடப்பட்ட மருதாணி காயத்துவங்கியிருந்தது.ஜஹான் முன்பே கரைத்து வைத்திருந்த சர்க்கரைக்கரைசலில் சிறிதை பஞ்சால் நனைத்தெடுத்து காய்ந்திருந்த மருதாணிப்பூச்சின் மீது தடவினாள்.

“நல்லா கலரு ஏறும்”.கண்களில் கேள்வியை தேக்கியவளுக்கு பதிலுரைத்தாள்.

கிளம்பும் போது ஏதோ ஞாபகம் வந்தவள் போல்,

“மருதாணி காயக்காயத்தான் நிறம் கொடுக்கும்.பிரிவென்று வந்தால் தான் நட்பின் வலி புரியும்”என்றாள்.

உருது கஜலின் தமிழாக்கம் தான் அது என்பது பார்வதிக்கு மட்டுமே புரிந்தது.கண்களின் ஓரங்கள் பனிக்க துவங்கின.

அடுத்த நாள் மாலை.ஆம்பூர் கமலா ராஜன் திருமண மண்டபத்துக்கு செல்லும் வழியில் ஒரு தனியார் பள்ளிக்கூட மதில் சுவற்றின் மீது ஒட்டப்பட்டிருந்த ஒரு சிறுவனின் முதலாம் ஆண்டு  நினைவஞ்சலி சுவரொட்டி ஜஹானின் கவனத்தை ஈர்த்தது.அதிலிருந்த சிறுவனின் இளஞ்சிரிப்பு மாறாத முகமும் எழுதப்பட்டிருந்த வாசகங்களும் பெரும் பாதிப்பை அவளுக்குள் ஏற்படுத்தியது.மண்டபத்துக்குள் சென்றவளுக்கு எந்த வேலையை செய்வதிலும் மனம் ஒன்றாது போனது.பார்வதியின் அறைக்குள் சென்றவள் விரித்திருந்த பாயில் சுருண்டு படுத்தாள்.

ள்ளியில்...

கண்களில் தளும்பின கண்ணீர்துளிகளை புறங்கையால் துடைத்துக்கொண்ட இளஞ்செழியன் அந்த தனியார் பள்ளியின் தமிழாசிரியன்.ஆசிரியர்கள் ஓய்வறையில் மேசை மீதிருந்த அந்த முதல் வருட திதி அறிவிப்பு அட்டையின் மீது மீண்டும் பார்வையை படரவிட்டான்.சென்ற வருடம் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த முருகேசன் விஷக்காய்ச்சல் கண்டு தகுந்த சிகிச்சையின்றி அகால மரணமடைந்தது நினைவிலாடியது.அட்டையிலிருந்த புன்முறுவல் மாறாத அவனின் முகத்தை கூர்ந்து பார்த்த போது அந்த புகைப்படத்தின் கண்களிலிருந்த அதீத  நம்பிக்கை இவனை ஏதோ செய்தது.மரணம் நிச்சயிக்கப்பட்டது தான் என்றாலும் அகால மரணமென்பது அதுவும் இளம் வயதில் என்பதை எளிதில் சீரணிக்க முடியாமல் போனது அவனால்.

முருகேசனின் பெற்றோர் வந்து அந்த அறிவிப்பிதழை கொடுத்துவிட்டு,

“கண்டிப்பாக வரனும் சார்.வந்தா அவன் ஆத்மா ரொம்ப சந்தோஷப்படும்” என்று கேவிக் கேவி அழுதவாறு கூறி சென்றது மனதில் இன்னும் உறுத்திக்கொண்டிருந்தது.கனத்துப் போன  மனதோடு தான் சக ஆசிரிய நண்பன் கருத்தழகனோடு வாணியம்பாடிக்கு அருகிலிருந்த மாராப்பட்டு கிராமத்துக்கு சென்றான்.

வீட்டை கண்டுபிடிப்பதில் சிரமமே ஏற்படவில்லை.யமஹா கிரக்ஸ்ஸை தெருவோரத்தில் நிறுத்திவிட்டு சற்று காலாற நடந்து வீட்டுக்குள் நுழைந்தனர் இருவரும்.

நடுவறையில் சுவற்றையொட்டி ஒரு மர நாற்காலியின் மீது ஒன்றுக்கு ஒன்றரை அடி சட்டத்தில் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.கண்ணாடிக்கும் கடின பலகைக்கும் இடையில்  முருகேசனின் அழகிய புகைப்படத்தில் குழைத்த குங்குமம் இடப்பட்டிருந்தது.வழக்கமாக  புகைப்படத்தைச் சுற்றி வளையமிட்டிருக்கும் பூமாலை இல்லாதது வித்தியாசமாய் இருந்தது.உதிரிப்பூக்கள் மட்டும் நறுமணம் பரப்பிக்கொண்டிருந்தன.

“மரகதம்...ஸ்கூல்லர்ந்து சாருங்க எல்லாம் வந்திருக்காங்க.குடிக்க தண்ணி கொண்டாம்மா”. மனைவிக்கு இவர்கள் வந்திருப்பதை தெரிவித்தார் முருகேசனின் அப்பா.

அறையிலிருந்து எட்டிப்பார்த்தவள் சொம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு  லேசான சோகச்சிரிப்பை உதிர்த்தாள்.

‘காப்பி சாப்புடுறீங்களா...” என்றவளுக்கு “வேணாம்” என்று ஒருமித்த குரலில் பதிலுரைத்தனர் இருவரும்.

“படையலெல்லாம் முடிஞ்சிடிச்சு.அய்யிரு கூட போயிட்டாரு.வாங்க சாப்பிடலாம்”.

“பரவாயில்லை.சும்மா பாத்துட்டு போயிடலாமேன்னு தான் வந்தோம்”என்று இளஞ்செழியன் முடிக்கும் முன்பே அவன் அடுத்த அறையிலிருந்து வெளிப்பட்டான்.

“குட்மார்னிங் சார்...’’ என்று இரண்டு முறை தலையை ஆட்டிய சாந்தோஷ் இவர்களது பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்.

“டேய் நீ ஸ்கூலுக்கு போகல...”.பொறுப்பாய் கேட்டான் கருத்தழகன்.

“இல்ல சார்.ஜவஹர் பிரகாஷ் மூர்த்தி நான் எல்லாரும் ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு வந்துட்டோம்”

இளஞ்செழியனுக்கு ஆச்சரியமாக இருந்தது.இவன் மட்டுமன்றி இவனோடு இன்னும் மூன்று  பேர் பள்ளிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு வந்திருக்கின்றனர்.

“எங்கடா அவன்ங்க”

“சார் சாப்பாடு பரிமாறிக்கினு இருக்குறான்ங்க சார்.கூப்புடட்டுமா சார்”

‘’வேணாம்”

”சரிங்க சார்”

திரும்பிப்போனவன் நின்று “சார் வாங்க சாப்புடலாம்”என்றான்.

ஆச்சரிய முடிச்சுகள் முகத்தை விட்டு விலகாத நிலையிலேயே லேசான புன்முறுவலை உதடுகள் மீது தவழவிட்டு ”அப்புறமா சாப்பிடறோம்டா’’என்றான் இளஞ்செழியன். கருத்தழகன் தலையை ஆட்டினான்.

”சார் எல்லாரும் சாப்டுட்டாங்க.வாங்க சார் ”

அவனது கட்டாய உபசரிப்பு கையை உரிமையோடு  பற்றி இழுத்தது எல்லாம் கலந்து இவனை என்னமோ செய்தது.தனது கையை விடுவித்துக் கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை.அவனது பிஞ்சு கைகளின் நடுக்கம் அவனுக்கு இவன் மீதிருந்த மரியாதை கலந்த பயத்தை இவனுக்கு அறிவுறுத்தியது.ஆதரவாய் அவனது கையின் மீது தனது இடது கையை வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டான்.கண்களின் ஓரங்களில் அநியாயத்துக்கு கண்ணீர் தளும்பியது.அவனது பொறுமையை சோதிக்க விரும்பாது,

‘’வாங்க கருத்தழகன் சார்” என்றான் இளஞ்செழியன்.

உரிமையோடு இளஞ்செழியனின் பக்கம் திரும்பி பார்வையாலேயே வரவேற்றான் சந்தோஷ்.அவனது பிடி சற்று தளர்ந்ததாய் உண்ர்ந்த இளஞ்செழியன் தனது இடது கையை எடுத்துக்  கொள்ள அவன் தனது கையை விலக்கிக்கொண்டான்.

சாப்பிட்டு முடித்தவர்கள் கை அலம்பிக்கொண்டிருந்தனர்.ஜவஹர் பிளாஸ்டிக் மக்கில் தண்ணீர் அள்ளி கொடுத்துக்கொண்டிருந்தான்.

அறைக்குள் தனியாளாய் ஒருவன் மட்டும் மோர் சாதத்தை வழித்து சூப்பிக்கொண்டிருந்தான்.

“அண்ணா இன்னுங் கொஞ்சம் சாதம் போடட்டுமா” என்று கேட்டபடி பிரகாஷ் நின்றிருக்க  சாப்பிட்டுக்கொண்டிருந்தவனுக்கு வாயோரத்தில் மோர் ஒழுகியது.

மூர்த்தி எச்சில் இலைகளையும் தண்ணீருக்கான கிளாஸ்களையும் அன்னக்கூடையில் அள்ளி  போட்டுக்கொண்டிருந்தான்.

”டேய்..இத்த எங்க கொட்றது”.பிரகாஷிடம் கேட்டான்.

“அப்பிடி ஓரமா வை.சாப்டுட்டு போனப்புறம் கொட்டிக்கலாம்”.

அன்னக்கூடையில் அள்ளி வைத்திருந்தவைகளை கையலம்புமிடத்தில் வைத்து    விட்டு கைகளை கழிவிக்கொண்டு உள்ளே வந்தான்.

அதற்குள் இளஞ்செழியனையும் கருத்தழகனையும் அழைத்துக்கொண்டு சந்தோஷ் அந்த அறைக்குள் நுழைந்திருந்தான்.இவர்களை பார்த்ததும் மூவரும் ஓடிவந்தனர்.

“குட்மார்னிங் சார்” என்றனர் மூவரும்.

“டேய் என்னாங்கடா எல்லாரும் ஒண்ணா சேந்து வந்துட்டிருக்கீங்க”.

கனத்திருந்த மனதை இலேசாக்க இளஞ்செழியன் முயற்சித்தான்.என்னாங்கடா எனும் போது முகத்தில் சிரிப்பின் இழையை சுழற்சியாய் அலைய விட்டான்.மூவரின் முகமும் இளஞ்சிவப்பாகியது.

பேசிக்கொண்டிருக்கையிலேயே முருகேசனின் அப்பாவும் அம்மாவும் வந்தனர்.

‘இப்ப யாருமில்ல.நீங்க மட்டுந்தான் பாக்கி.சாப்டுடுங்க”.உபசரித்தாள் மரகதம்.

இருவரும் அமைதியாக தரையில் விரித்திருந்த பாயில் அமர்ந்து கொண்டனர்.

“நீங்க...”என்று அவர்கள் இருவரையும்அழைத்தான் இளஞ்செழியன்.

“இல்ல அப்புறமா சாப்ட்டுக்குறோம்” என்ற முருகேசனின் அப்பாவை இடைமறித்து,

“அண்ணா நீங்களும் அக்காவும் ஒக்காந்துக்கங்க.நாங்க சாப்பாடு போடறோம்” என்ற சந்தோஷை பார்த்து மீண்டும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றான் இளஞ்செழியன். உரிமையான அவனது உபசரிப்பு கைதேர்ந்த பக்குவப்பட்டவனுக்கே உரித்தானதாய் இருந்தது.

வாழையிலையின் மீது தண்ணீர் தெளித்து துடைத்தவுடன் இனிப்பை வைத்தான் பிரகாஷ். கருத்தழகன் இனிப்பு வேண்டாமென்றான்.உடனடியாக அவனுக்கு போண்டாவை வைத்தான்  இனிப்புக்கு பதிலாக.கருத்தழகன் இளஞ்செழியனை பார்த்து புன்னகைத்தான்.

மரகதம் சாதத்தில் சாம்பார் விட்டு குழைத்தாள்.ஒரு கவளம் எடுத்து வாயருகே கொண்டு சென்றவள் ”என் செல்லம்.என் ராசா’’ என்று கதறியழுதாள்.

கலவரத்தோடு இலைகளிலிருந்து கைகளை எடுத்துக்கொண்டனர் இருவரும்.நின்றிருந்த நால்வரும் மிரண்டுப்போய் மிரட்சியோடு பார்வையை மரகதத்தின் மீது செலுத்தினர்.

முருகேசனின் அப்பா ”மரகதம் என்னா இது.இப்ப ஏன் அழுவுறே.பாரு அங்க.பசங்க மெரண்டுப்போயி நிக்குதுங்க” என்றவர், “செல்லங்களா நீங்களும் அக்கா  கூட ஒக்காந்து சாப்டுங்கடா”என்றார்.

‘அண்ணா நீங்கெல்லாம் சாப்புட்டு முடிச்சிடுங்க.நாங்க கடைசிலே தான் சாப்புடுவோம்”என்றனர் நால்வரும்.

கருத்தழகனுக்கு விக்கலித்தது.ஜவஹர் தண்ணீர் கொடுத்தான்.போண்டாவிலிருந்து பச்சைமிளகாய் எட்டிப்பார்த்தது.தண்ணீர் குடித்தவனுக்கு விக்கல் சற்று தணிந்தது.

சாப்பிட்டு முடித்ததும் இருவரும் கிளம்பினர்.

“டேய் நீங்கெல்லாம் எப்பிடிடா வருவீங்க.இப்பவே கிளம்பறீங்களா”.இளஞ்செழியன் கேட்டான்.

“இல்ல சார்.நாங்க சாயங்காலம் வரிக்கும் இங்கயே இருந்துட்டு அப்புறமா வருவோம்”என்றனர்.

மரகதம் நால்வரையும் ஒரு சேர அணைத்துக்கொண்டாள்.

“கண்ணுங்களா அப்பிடியே முருகேசன பாக்குற மாதிரி இருக்குடா உங்கள பாக்கும் போது”என்றாள்.

சற்று நேரத்தில் உடையப்போகும் அணையின் பெருக்கை சமாளிக்க இயலாதென்ற எண்ணமெழ இவர்கள் இருவரும் பைக்கில் ஆம்பூரை நோக்கி பயணப்பட்டனர்.

வழியில், “ சார் என்னா யோசனை” என்றான் கருத்தழகன்.

”ஒண்ணுமில்ல...இந்த பசங்கள நெனச்சிகிட்டேன் அதாங்.என்ன இவன்ங்க ஒரு ஆறாங்கிளாஸ்லேர்ந்து தான் ஒண்ணா படிச்சிருப்பானுங்க.அந்த ஒரு வருசத்து சிநேகிதமே இப்படி திக்கா மாறிப்போயி...’’முடிக்கவில்லை இளஞ்செழியன்.அதற்குள்,

“ஆமாம்லே.எப்பிடி ஒண்ணா கொழஞ்சி அவுங்க வீடு மாதிரியே உரிமையோட வேலை செஞ்சிக்கினு.ரொம்பவே வித்தியாசமா இர்ந்திச்சி” என்றான் கருத்தழகன்.

யமஹாவை வேகமாக ஓட்டினான் இளஞ்செழியன்.பள்ளிக்கூடம் கண்களுக்கு தெரிந்தது. பள்ளிக்குள் நுழையும் போது தான் கவனித்தான்,சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வண்டிமாடு ஒன்று திண்ண ஆரம்பித்திருந்தது.சுவற்றின் மீதான பசைக்கறை கண்களுக்கு அப்பட்டமாக தெரிந்தது.சற்று தூரத்தில் கமலா ராஜன் கல்யாண மண்டபத்திலிருந்து மதிய விருந்து குப்பைகளை அள்ளிக்கொண்டு மாட்டுவண்டி ஒன்று சாலையை கடந்து கொண்டிருந்தது.

by Swathi   on 08 May 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.