LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

தமிழன்பன் கவிதைகளில் மார்க்சியச் சிந்தனை - முனைவர் தெ. வாசுகி

மனிதகுல விடுதலையே மார்க்சியத்தின் அடிப்படை நோக்கமாகும். மனித குல விடுதலை என்பது மனித இனத்தில் ஆற்றலைப் புரிந்துகொள்ளும் திறனைக் குறிக்கிறது. இது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை என்று மார்க்சியம் கருதுகிறது. இனம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்து, ஆண், பெண் என்ற வேறுபாட்டைக் கடந்து, இயற்கை, செயற்கை என்பதைக் கடந்து அனைவருக்கும் கிடைப்பதைத்தான் மார்க்சியம் விரும்புகிறது. மார்க்சியம் என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சியை வழிநடத்திச் செல்ல உதவும் தத்துவமும் வாழ்க்கை முறையுமாம். கவிஞர் ஈரோடு தமிழன்பன் பாட்டாளி வர்க்கத்தை மையப்படுத்தி மார்க்சிய உணர்வோடு திகழ்வதோடு, கவிதைகளையும் படைத்து வருகின்றார். சமத்துவம் அமைந்த சமூக அமைப்பை விரும்பும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதைகளில் இடம் பெற்றுள்ள மார்க்சிய சிந்தனையை ஆராயுமுகமாக இக்கட்டுரை அமைகிறது.

தமிழன்பனின் மார்க்சிய சிந்தனை:

நாட்டில் பொதுவுடைமை என்னும் மலர் பூத்துக் குலுங்க வேண்டும் என்று தமிழன்பன் விரும்புகிறார். இதனை,

''மங்கல

மலர்களில் மகரந்தம் தூவிப்

பொதுவுடமைப்

பொன் கனாக்கனிய

நம் பங்கினை அளிப்போம் வா'' (திரும்பி வந்த தேர்வலம், ப.83)

எனும் கவிதையில் தெளிவுபடுத்துகின்றார்.

''சத்தியம்

கலசம்

சமத்துவம் சக்கரங்கள்

எவர்க்கும் எனும் உருவக அடிகளில் தமிழன்பன் சத்தியத்தோடு சமத்துவத்தையும் சேர்த்துக் கூறுகிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மூன்றையும் சில இடங்களில் ஒருங்கே கூறுகிறார்.

''இனி தாயின் கருவரைச் சுவரிலேயே

தனியுடைமை ஒழிக என்று

எழுதிவிட்டுக் குழந்தை

வெளியே வரும்'' (அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் ப.57)

என மற்றொரு கவிதையில் தம் குறிக்கோளைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

தட்டினால்

திறக்க வேண்டாம்

கேட்டால் கொடுக்க வேண்டாம்!

தட்டுவதும் கேட்பதும் - பழைய ஏற்பாடு!

பொதுவுடைமைதான் புதிய ஏற்பாடு! (திரும்பி வந்த தேர்வலம் ப.56)

என பைபில் தொடரையும், அது தொடர்பான சொற்களையும் நயமுறக் கையாண்டு பொதுவுடைமையை வரவேற்கும் தமிழன்பர்கள், சமதருமப் பாதை எனும் நெடுங்கவிதையில் நிகழ்கால அரசியல் அவலங்களையும், அவை தீரும் முறைகளையும், எதிர்கால இலக்கையும் விவரித்துள்ளார். (தீவுகள் கரையேறுகின்றன, பக். 19-24).

ஈரோடு தமிழன்பன் சிவப்பு சட்டை அணியவில்லையே தவிர இவருடைய சிந்தனைகள் எல்லாம் சிவப்பு சிந்தனைகளேதான் என்பதை

''உழைப்பவன் இந்தியன் - என்று சொல்

உறிஞ்சுபவன் அந்நியன் - என்று சொல்

வைகறைக்கு

வாரிசுகள் சிலர் மட்டுமே - என்னும்

வரலாற்றுப் பொய்மையைக்

கிழித்தெறி'' (ஊமை வெயில்)

எனும் கவிதையில் உழைப்பவன் இந்தியன், உறிஞ்சுபவன் அந்நியன் என்ற நிலையை மாற்றிச் சாதனைப் படைக்க ஆணையிடுகின்றார் தமிழன்பன்.

போராட்டம்:

வர்க்க சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் சார்பாகக் குரல் கொடுக்கும் பொறுப்பு ஒரு சமூகக் கலைஞனுக்கு இருப்பதால் தமிழன்பனும் உழைக்காது வாழும் முதலாளியின் உயர்நிலையை அம்பலப்படுத்தி, உழைப்புச் சுரண்டலால் ஓட்டாண்டியாய் வாழும் தொழிலாளியின் வாழ்வைச் சிறப்புற விளங்குகிறார்.

கறுத்த பகல் நாள்களில்

காவியிருள் அலைகளில்

உறுத்தலுற்ற வர்க்கத்தின்

உயிர் விழிப்பு வருகிறதோ?

போதனையைப் புறந்தள்ளிப்

போராட்டக் கருவியுடன்

போதிமரத் தோனியிது

புறப்பட்டு வருகிறதோ? (தோனி வருகிறது. ப.2)

என உழைக்கும் வகுப்பினரின் போராட்ட வருகையை குறிப்பால் உணர்த்துகிறார். உழைப்பவர்க்கே எல்லாம் என்கிற பொதுவுடைமை, சமன் செய்தால் மட்டுமே சாத்தியம் என்கிறார் தமிழன்பன் (ஊ.வெ.ப.45)

புரட்சி:

சமுதாய அமைப்பில் அல்லது ஒரு நாட்டின் ஆட்சியில் பெரும் மாற்றத்தை விளைவிப்பது, ஒரு துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எனும் இரு பொருளில் இச்சொல் வழங்கப்படுகிறது. மார்க்சியர் ஒரு குறிப்பிட்ட துறையில் நிகழும் தீவிரமான பண்பு மாற்றம் புரட்சி என்பர். தமிழன்பன் புரட்சி பற்றிக் குறிப்பாகவும், நேரடியாகப் பயன்படுத்தியும் புனைந்துள்ள கவிதைப் பகுதிகள் பரவலாகக் காணப்படுகின்றன.

''ஏழைமையைப் பரிந்துரைக்கும்

நீதிநூல்களில்

பயணம் போவதை நிறுத்தி

புரட்சியின்

வரலாற்றுக் காற்றோடு

நம்

உயிர்ப்புக்கு

உறவு தேடுவோம்!'' (ஊ.சு.வ.ஓ. ப.11)

எனும் கவிதை நீதி அறம், எளிமை முதலியவற்றின் பேரால் சுரண்டலை நியாயப்படுத்தும் போக்கிற்கு எதிராக வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு புரட்சிகளை முன்னோடியாகக் கொண்டு விளங்குகிறார்.

''உடற் குருதியால்

சிவக்கும் புரட்சி

உதட்டுச் சாயத்தால் அல்ல'' (தி.வ.தே., ப.52-53)

எனப் புரட்சியின் தீவிரநிலையை உணர்த்தும்.

வன்முறை:

பாட்டாளி மக்கள் உடைமை வகுப்பினரிடமிருந்து முற்றாக அதிகாரத்தைக் கைப்பற்றும் இறுதிப் போராட்டமான புரட்சி அமைதியாகவோ வன்முறை மூலமோ, நடக்கலாம். ஆளும் உடைமை வகுப்பினர் வெகு மக்கள் எழுச்சியை வன்முறையால் ஒடுக்கும் போது ஆயுதந்தாங்கிய போராட்டம் தேவையானதென நியாயப்படுத்தப்படுகிறதென்பர் தமிழன்பன். வன்முறை வகுப்பு போராட்டத்தைப் பரிந்துரைக்கும் தமிழன்பன்,

நிகழ்—டி

ஏற்றும்

ஏ.கே.47 துப்பாக்கியிலிருந்து-ஒரு

தோட்டா - நம்

உறக்கத்திற்கு!

ஒரு தோட்டா

கிழக்கின் மார்புக்கு!

ஓ!

குருதி கொட்டியபடி

விடியல்! (ஊ.சு.வ.ஓ. ப.112)

என்பதில் துப்பாக்கியே குறியீடாகிறது என்கிறார்.

''சமூக மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும்

கல்விக் கூடமே

புரட்சிப்படையின் பாசறை ஆகும்

இனிமேல் தான்

கலைமகள் விழா என்றால்

ஆயுத பூஜை என்பது அர்த்தமாகும்'' (தீ.க., ப.118)

என ஆயுதப்புரட்சியைச் சுவையான சொல் விளையாட்டுக்களாக்கி, சொல்லாற்றல் மிக்க கவிஞர் எனும் நிலையில் தமிழன்பன் புரட்சிகரத் தொடர்களை உருவாக்கியிருக்கிறார் எனும் முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

மானுட ஒருமை:

உலகப் பாட்டாளிகளின் ஒற்றுமை என்கிற மார்க்சிய அடிப்படையில் தேச வரம்பற்றவர்கள் என்று பாடிய தமிழன்பன் கொள்கைச் சார்வுகளுக்கு அப்பாற்பட்டு மானுட ஒருமை பாடிய இடங்களும் உள்ளன.

போர்களை ஒழிக்கப் போர் தொடுக்க வேண்டும் என்றும் வளரும் பாரதம் பற்றிப் பாடும் போது ''மானுடம் ஒரிமை'' என்றும், ''ஒரு நல்ல தொடக்கம் தொடருமா?'' எனும் தலைப்பில் அமைந்த கவிதையில் அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காகச் செய்துக் கொண்ட பல்வேறு நாட்டின் ஒப்பந்தத்தை வரவேற்றுப் பாடியுள்ளார்.

உலகளாவிய பார்வை:

மார்க்சியக் கவிஞன் உலக மக்கள் எல்லாம் ஒரு தாய் மக்களாகக் காணும் உயர்ந்த உள்ளம் படைத்தவன். இனம், மொழி, நாடு அவனுக்கு எல்லைகளல்ல. அதனால்தான் ''உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்'' எனக் குரல் கொடுத்தார் மார்க்சு. இதனைக் கவிதையில் நிறைவேற்றியவர் தமிழன்பன். தமிழினம் என்கிற அளவிலன்றித் தேசிய இனங்களின் போராட்டத்தைப் பொதுவாகவே ஆதரிக்கும் பரந்த பார்வை தமிழன்பன் கவிதைகளில் காணப்படுகிறது.

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு வங்கப் பகுதியில் மொழிவழித் தேசிய இன உணர்ச்சி அடிப்படையிலான போராட்டம் முஜிப் உர் ரகுமான் தலைமையில் நிகழ்ந்தது. அப்போராட்டத்தை ஊக்குவித்து தனிப்பட்ட அவலத்தை, கொடுமையை மனிதநேய அடிப்படையில் சித்தரிக்கின்றார்.

''எரிகின்ற வியட்நாம் ஈமத்தெருக்களில்

சமதருமச் சாதனைக்குப் பாசறைகள்

செய்திடுவோம்'' (தோ.வ., ப.43)

என வியட்நாம் போராட்டத்தை வரவேற்கிறார்.

அமெரிக்க ஆதரவு பெற்ற இசுரேல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற யாசர் அராஃபத் தலைமையில் பாலஸ்தீனியர் நடத்தும் போராட்டத்தை ''தாய்'' என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் வரவேற்றுப் பாடுகின்றார் தமிழன்பன்.

உழைப்பின் உயர்வு:

உழைப்பாளர் தம் பசியையும், பிற அவலங்களையும் சுட்டும் தமிழன்பன் உழவர்களைப் போற்றுபவராக திகழ்கின்றார். இதனை,

''இத்தோள் சுமக்கும்

கலப்பை களைத்தான்

ஏழுவண்ண வானவில்லில்

வானம் எதிர்ப்பார்க்கிறது''

எனும் கவிதையில் தெளிவுபடுத்துகின்றார்.

மேலும் விறகு விற்போர், ஊர்தி ஓட்டுநர் நெசவு நெய்வோர் முதலியோர்க்கும் மதிப்பளித்து கவிதை புனைந்துள்ளார்.

''கூலி விவசாயி கால்களின் சேறே

ஜனநாயக மங்கைக்குச் சந்தனம் ஆகும்

விறகு பிளக்கும் வேலையாள் கைகளே

அரசியல் சட்டத்தை அதிகாரம் செய்யும்'' (தீ.க., ப.74)

என அரசியல் அதிகாரத்தோடு தொடர்புப்படுத்தியும் உழைப்போரின் எதிர்காலம் பற்றியும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் தமிழன்பன்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.