LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

மாசிலாபுரத்து கிணற்று நீர்

நூறு வருடங்களுக்கு முன்னால், அதாவது நம் நாட்டை பிரிட்டிஷார் ஆண்டு கொண்டிருந்த காலம், தமிழ்நாட்டில் மாசிலாபுரம் என்னும் ஒரு ஊர் இருந்தது.

அந்த ஊரில் சுமார் இருநூறு குடும்பங்கள் வசித்து வந்தனர். அவர்களது முக்கிய தொழில் விவசாயம்தான்.

      அந்த ஊர் ஐந்து தெருக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் பொது கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றில்தான் அந்த ஊர் மக்கள் அனைவரும் வந்து

“இறைத்து” குடிப்பதற்கும், மற்றவைகளுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். அதனால் எப்பொழுதும் அந்த கிணற்றுக்கு அருகில் ஆண்கள்,பெண்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

      அந்த கிணற்றுக்கு இதனால் மிகவும் பெருமை. நம்மால்தான் இந்த ஊர் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருந்தது. அதனால் அந்த கிணற்றுக்குள் எப்பொழுதும் தண்ணீர் ஊறி கிணறு நிறைந்து தளக்..புளக்..என்ற சத்த்த்துடன் காணப்படும்.இப்படியாக அந்த ஊரின் வாழ்க்கை போய்க்கொண்டிருந்த பொழுது ஒரு நாள் !

      அந்த ஊரில் கணபதியப்பன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தார்.அவருடைய மகன் வையாபுரி பிரிட்டிஷ் இராணுவத்தில் வட நாட்டில் வேலை செய்து கொண்டிருந்தான். அவ்வப்பொழுது ஊருக்கு வந்து அப்பா அம்மாவை பார்த்து விட்டு செல்வது அவனது வாடிக்கை. அப்படி ஒரு முறை வீட்டுக்கு வந்தவன், அம்மா தண்ணீர் பிடித்து வருகிறேன் என்று குடத்தை எடுத்து கிளம்பும்போது, நானும் உன் கூட வருகிறேன் என்று சொன்னான். அம்மா வேண்டாண்டா நீ வீட்டுல இரு நான் விரைசலா போய் ஒரு குடம் தண்ணி புடிச்சுட்டு வந்துடறேன் என்று சொல்ல இவன் அம்மாவின் தோளை பற்றிக்கொண்டு அம்மா..என் செல்ல அம்மா நான் வந்து இன்னைக்கு உனக்கு தண்ணி “இறைத்து” தருவேன் என்று கொஞ்சவும், சரி வா என்று அவனையும் அழைத்துக்கொண்டு அந்த கிணற்றுக்கு வந்தாள்.

      அந்த கிணறு இந்த ஊரில் இருப்பவர்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும். காரணம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எப்படியும் ஒரு முறை இந்த கிணற்றுக்கு வந்து சென்றிருக்க வேண்டும். அதனால் அந்த கிணறு எல்லோரையும் ஞாபகம் வைத்திருக்கும். வையாபுரியை பார்த்தவுடன் இது இன்னாரின் பையன் என்று தெரிந்து கொண்டது. என்றாலும் வாய் விட்டு சொல்லமுடியாதல்லவா! அதனால் தளக்..புளக்..என்று அலைகளை எழுப்பி சத்தம் இட்டது.

      அம்மாவுக்கு தண்ணீர் இறைக்கும் போது “ஏனம்மா  நீங்க இரண்டு பேரும் பேசாம என் கூட டெல்லி வந்துடுங்களேன்.

      ஐயோ..நாங்க வரலைப்பா, அவ்வளவு தூரம் எல்லாம் எங்களால வர முடியாது.

அங்க எல்லாம் ரொம்ப குளிருமாமே

      குளிரும் இருக்கும், நல்லா வெயிலும் அடிக்கும், என்னைய அடுத்த மாசம் அநேகமா லண்டனுக்கு அனுப்புவாங்கன்னு நினைக்கிறேன்.

      அவ்வளவு தூரம் அம்மாவையும், அப்பாவையும் விட்டு போறியா?

அம்மா, அம்மா போய் ஆறு மாசத்துல திரும்பி வந்துடுவேன்

எப்படி அவ்வளவு தூரம் போவீங்க? குதிரை வண்டியிலயா?

பையன் சிரி சிரி என்று சிரிக்கிறான், அம்மா “இன்னும் இந்த கிணத்து தண்ணியாட்டமே”  இருக்கறயே, கடல் தாண்டி போகணும்.

ஐயோ கடலா அது எப்படி இருக்கும்?

மறுபடி சிரித்து, அம்மா நிறைய தண்ணியும் ரொம்ப பெரிசா இருக்கும்.

அப்ப இதை விட பெரிய கிணறா இருக்குமா?

மறுபடி சிரிக்கிறான், அம்மா இந்த கிணரு எல்லாம் கடலுக்கு ஒரு துளி கூட இல்லைம்மா

அப்ப அதுல எப்படி போவ?

கப்பல்ல போவேன்மா..

அது எப்படி இருக்கும்?

அதுவும் பெரிசா இருக்கும்..

சரி சரி எப்படியோ பத்திரமா போய்ட்டு திரும்பி வந்து சேரு, சொல்லிக்கொண்டே அம்மா தண்ணீர் நிரம்பிய குடத்தை தூக்கிக்கொண்டாள்.

      இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிணற்றுக்கு தாங்க முடியாத கோபம் வந்து விட்டது. இந்த ஊருக்கே தண்ணிய கொடுத்துகிட்டு இருக்கேன்,என்னைய போய் கேவலமா பேசிட்டானே இந்த தம்பி, பாக்கலாம் நானும் அந்த கடலை பாக்கணும். பாக்கலாம் அது என்னை விட பெரிசா? இல்லை நான் பெரிசான்னு

இப்படி நினைத்துக்கொண்டாலும், எப்படி கடலை பார்ப்பது என்று ஒரே சிந்தனையாக போய்விட்டது, அந்த கிணற்றுக்கு.

      இதை நினைத்து நினைத்து கிணற்றுக்கு தண்ணீர் கூட கொஞ்சம் வற்றி விட்டது.

என்ன கிணத்துல தண்ணி வத்துனமாதிரி இருக்கு? என்று ஊர் மக்கள் இரண்டு நாட்களிலேயே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்.

கிணற்றுக்கோ எப்படியும் கடலை பார்த்தே தீரவேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.

கணபதியப்பனின் மனைவி நான்கு நாட்கள் கழித்து மீண்டும் தண்ணீர் எடுக்க வந்தாள். அங்குள்ள பெண்கள் கேட்டார்கள், பையன் கிளம்பியாச்சா?

இல்லை இன்னைக்குத்தான் கிளம்புறான், அதுக்குள்ள தண்ணி எடுத்துட்டு போயிடலாமுன்னு வந்தேன்.

நம்ம ஊர் தண்ணிய பாட்டில பிடிச்சு கொடுத்துடு. போய் சேர்ற வரைக்கும் குடிக்க தண்ணி வேணுமில்லை….அங்குள்ள பெண்கள் யோசனை சொன்னார்கள்.

இதை கேட்டுக்கொண்டிருந்த கிணற்றுக்கு ஒரே சந்தோசமாகிவிட்டது. எப்படியும் பாட்டிலில் என்னை ஊற்றி கொடுப்பார்கள். நான் அவனுடன் வட இந்தியாவுக்கு செல்வேன், முடிந்தால் கடலையும் பார்க்க முடியும் என்று நினைத்து

கொண்டது.

      அந்த கிணற்றின் அதிர்ஷ்டமோ என்னவோ முக்கால்வாசி குடித்து விட்டு மிச்சதண்ணீருடன் பாட்டிலை கணபதியப்பன் பையன் தன் கைப்பையிலேயே வைத்துக்கொண்டான்

      ஒரு வாரத்திற்குள் அவனுக்கு லண்டனுக்கு செல்ல ஆர்டர் வந்து விட்டதால்

லண்டனுக்கு கப்பல் ஏறி விட்டான். கப்பலில் அங்கு போய் சேர ஒரு மாதம் ஆகும்.

      கப்பல் வேகமாக போய்க்கொண்டிருந்தது. மேல் மாடியில் ஒரு அறையில் இருந்து வெளியே வந்த வையாபுரி கப்பலின் மட்ட தளத்திற்கு வந்து நின்று கீழே குனிந்து கடலை பார்த்துக்கொண்டிருந்தான். கடல் பெரிய பெரிய அலைகளுடன் கொந்தளித்து கொண்டிருந்தது. அப்பொழுது அவனுக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் கையில் எடுத்து வராத்து ஞாபகம் வரவே, மீண்டும் அவன் அறைக்கு ஓடி சென்றவன் தன் கைப்பையை திறந்து பார்க்க அந்த கிணற்றின் மிச்ச தண்ணீர் அப்படியே இருந்தது. ஆனால் ஊரில் இருந்து எடுத்து வந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகி விட்டதே?

      சட்டென கப்பலின் மட்டத்துக்கு வந்து கப்பல் ஓரம் சென்று பாட்டிலில் இருந்த

மிச்சத்தண்ணீரை முழுவதும் கடலுக்குள் கொட்டினான்.மீண்டும் புதிதாக தண்ணீர் பிடிக்க உள்ளே சென்றான்.

      கடலுக்குள் விழ சென்று கொண்டிருந்த மாசிலாபுரம் கிணற்று நீர் கீழே கடலை பார்த்து தன்னை விட பெரியவன் என்று மனதுக்குள் ஒப்புக்கொண்டாலும், தான் விழுந்தவுடன் பெரிய அலைகள் உருவாகிக்கொண்டிருப்பதை பார்த்து என்னுடைய துளியூண்டு தண்ணிக்கே இந்த கடல் இப்படி பயந்து குதிக்குதே என்று நினைத்து கொண்டே உள்ளே சங்கம்மாகி விட்டது.

      குட்டீஸ் நாமும் கிணற்று தண்ணீரின் எண்ணத்துக்கு மதிப்பளித்து அந்த மிச்ச தண்ணீர் விழுந்ததற்கு கடல் பயந்து குதிக்கிறது என்று ஏற்றுக்கொள்வோமா? இல்லை என்றால் கிணற்று தண்ணீருக்கு வருத்தமாகி விடும்.

      இருந்தாலும் கிணற்று நீர் கடலை அடையவேண்டும் என்று நினைத்து சாதித்து விட்டதற்கு நாம் பாராட்டத்தான் வேண்டும் இல்லையா குட்டீஸ்

Masilapurathu Well water
by Dhamotharan.S   on 10 Aug 2017  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
மறக்க முடியாத நாள் மறக்க முடியாத நாள்
பேராசை பெருநட்டம் பேராசை பெருநட்டம்
அனைவரும் சமம்- என்.குமார் அனைவரும் சமம்- என்.குமார்
அன்பு- என்.குமார் அன்பு- என்.குமார்
கருத்துகள்
07-Jun-2018 09:11:23 vennila said : Report Abuse
நைஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.