|
|||||
மாவொளி சுற்றுதல் |
|||||
"ஐப்பசி மாதம் அடைமழை" என்று சொல்வார்கள். ஐப்பசி மழையைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்திலும் மழை நீடிக்கும். இதனால் நீர்நிலைகள் நிரம்பி பூமி குளிர்ந்து எங்கெங்கும் நீரின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். சூரியனைக் காணமுடியாத அளவிற்கு மேகம் கருத்து சூழல் இருண்டு காணப்படும்.
இத்தகைய சூழலில் வெப்பம் குறைந்து உயிர்கள் ஒடுங்கும். ஆகையால் வெப்பத்தை செயற்கையாக உருவாக்கவே விளக்கேற்றுதல், மாவொளி சுற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் போன்றவற்றை கார்த்திகை மாதத்தில் கடைபிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
விளக்கேற்றுதல்
எண்ணிக்கையில் அதிகமான விளக்குகளை வீட்டிற்குள்ளே ஏற்றும்போது விளக்கின் வெப்பத்தால் வீட்டிற்குள் கதகதப்பைக் கொடுக்கும். நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய் போன்ற எண்ணைகளில் சிலவாவது நம் வீடுகளில் எப்போதும் இருக்கும். இவைகளை ஒன்றாகக் கூட்டி விளக்கேற்றும்போது கதகதப்பை கொடுப்பதுடன் குளிர்ந்த நிலையில் உருவாகும் கெட்ட நுண்ணுயிர்களையும் அழித்து, கொசு போன்ற சிற்றுயிர்களையும் துரத்தும். "தீபத்திற்கு விளக்கு ஏற்றினால் கொசு ஒழியும். அதன்பின் கொசுத் தொல்லை இருக்காது" என்று சொல்லுவார்கள். ஆனால் தற்போது விளக்கேற்றுதல் என்பது அலங்காரத்துக்கு மட்டுமானது என்பது போல் வீடுகளுக்கு வெளியே வரிசையாக விளக்கு ஏற்றி வைப்பது, மின்சார ஒளி விளக்கை அலங்காரமாக தொங்க விடுவது போன்ற அறிவிலா செயல்களும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் தீபத் திருநாளில் பட்டாசு வெடிக்கும் பைத்தியக்காரத்தனமும் சில ஆண்டுகளாக நம் மக்களிடையே தொற்றிக் கொண்டிருக்கிறது.
மாவொளி
மாவொளி சுற்றுவதை எங்கள் ஊரில் "கார்த் தீ" சுற்றுதல் என்பார்கள். தங்களை சுற்றி வட்ட வடிவில் அரண் அமைத்து தீயை சுற்றி, கார்காலக் குளிரிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் செயல் வடிவமாகத்தான் கார்த் தீ சுற்றுதல் இருந்து வருகிறது. கார்த்திகை மாதம் முழுநிலவு நாள் தொடங்கி மூன்று நாளைக்கு இந்த கார்த்தீ சுற்றுவதும் வீடுகளுக்குள் விளக்கேற்றுவதும் மரபு. கார்த்தீயை சுற்றுகையில் "கார்த்தீயோ கார்த்தீ... கம்பங்கார்த் தீ... பீ கார்த் தீ..,." என பாடிக்கொண்டே சுற்றுவர். சிறிய கம்பு அல்லது முழம் அளவு மட்டையில் கட்டிய கார்த்தீயை பிய்ந்து போகும்வரை சுற்றுவதாக இந்த பாட்டு அமையும். சில குழந்தைகள் கார்த்தீயை சுற்றி முடித்ததும் பீய்யில் (மலத்தில்) அடித்து பிய்த்து போட்டு விளையாடுவது வழக்கம். கார்த்திகை தீபத்தை தவிர்த்து வேறெப்போதும் இந்த கார்த்தீயை சுற்றக்கூடாது; மீறி சுற்றினால் உடலில் ஏற்படும் தீ காயம் ஆறாது என கூறுவதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
மழை நாட்களில் எல்லாம் நனைந்து ஈரமாய் இருக்கையில் பனை மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஓலைகளும் ஆண் பூ பூத்த காய்களும் சீக்கிரமாய் உளர்ந்துவிடும். நாடு முழுவதும் பனை மரங்கள் செரிவாய் இருந்த காலங்களில் பனையிலிருந்தே ஓலைகளையும் பூத்த காய்களையும் சேகரித்து கார்த்தி சுற்றுதல் சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். பிற்காலங்களில் சவுக்கு மரக் காய்கள், விரகு அடுப்புக் கரி, மரவாடியில் கிடைக்கும் மரத்தூள் என அந்தந்த பகுதிகளில் எளிதாக கிடைக்கக் கூடிய பொருட்களை சேகரித்து கார்த்தீ சுற்றியிருக்கிறார்கள்.
சொக்கப்பனை
சொக்கப்பனை கொளுத்துவதற்கு காரணமாக பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது. அதில் ஒன்று விவசாயம் செய்வதற்கு பனை மரக் காடுகளைக் கொளுத்தி அழித்த நிகழ்வை மீண்டும் நிகழ்த்தும் அடையாளமாகவே சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது என்று கூறப்படுவது ஏற்புடையதாக இல்லை. பனை மரங்களை வெட்டி அழித்து அதைக் கொளுத்தி, விவசாய நிலங்களை தயார் செய்வதற்கு ஏற்புடைய காலம், கோடை காலமா அல்லது மழை பொழிவு இருக்கும் கார்காலமா? என்று சிந்தித்தால் உண்மை விளங்கும்.
எனவே மேற்கூறியபடி குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ள வெப்பத்தை உருவாக்குவதற்காகவே சொக்கப்பனை கொளுத்தப் பட்டது என்பது உறுதி. கார்த்திகை தீபத்தின் போது விளக்கேற்றுதல், கார்த்தீ (மாவொளி) சுற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற எந்த ஒரு நிகழ்வும் வேறெந்த தமிழர் பண்டிகையிலும் செய்யப்படுவதில்லை.
இயற்கையோடு இணைந்து சூழலோடு ஒன்றி கொண்டாடப்படும் இந்த கார்த்திகை தீபத் திருநாளை உண்மைப் பொருள் உணர்ந்து கொண்டாடி அடுத்த தலைமுறைக்கும் நகர்த்துவோம்.
|
|||||
by Swathi on 23 Nov 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|