LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

மயிலை சீனி.வேங்கடசாமி

வணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது, அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களை "திசைச் சொற்கள்' என்பர் இலக்கண ஆசிரியர்.
தமிழில் போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, அரபி முதலிய அயல்மொழிச் சொற்கள் சில அண்மைக் காலத்தில் கலந்துவிட்டது போலவே, பாகத (பிராகிருத) மொழிகளில் ஒன்றான பாலி மொழியிலிருந்தும் சில சொற்கள் முக்காலத்தில் கலந்து காணப்படுகின்றன. பாலிமொழி இப்போது வழக்காறின்றி இறந்துவிட்டது. என்றாலும்,

பண்டைக்காலத்தில், வட இந்தியாவில் மகதம் முதலான தேசங்களில் அது வழக்காற்றில் இருந்து வந்தது. "தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்' எனப் போற்றப்படும் கெளதம புத்தர், இந்தப் பாலிமொழியிலேதான் தம் உபதேசங்களை ஜனங்களுக்குப் போதித்து வந்தார் என்பர். பாலிமொழிக்கு "மாகதி' என்றும் வேறு பெயர் உண்டு. மகத நாட்டில் வழங்கப்பட்டதாகலின் இப்பெயர் பெற்றது போலும். வைதீக மதத்தாருக்கு சம்ஸ்கிருதம் "தெய்வபாஷை' யாகவும், ஆருகதருக்குச் சூரசேனி என்னும் அர்த்த மாகதி "தெய்வ பாஷை'யாகவும் இருப்பதுபோல, பெளத்தர்களுக்கு மாகதி என்னும் பாலிமொழி "தெய்வபாஷை'யாக இருந்து வருகின்றது. ஆகவே, பண்டைக்காலத்தில் எழுதப்பட்ட பெளத்த நூல்கள் எல்லாம் பாலி மொழியிலே எழுதப்பட்டுவந்தன. பிற்காலத்தில், மகாயான பெளத்தர்கள், பாலி மொழியைத் தள்ளி, சம்ஸ்கிருத மொழியில் தம் சமய நூல்களை இயற்றத் தொடங்கினார்கள். ஆனாலும், தென் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பெளத்தர்கள் தொன்றுதொட்டு இன்றுவரையில் பாலி மொழியையே தங்கள் "தெய்வமொழி'யாகப் போற்றி வருகின்றார்கள். பெளத்தமதம், தமிழ்நாட்டில் பரவி நிலை பெற்றிருந்த காலத்தில், அந்த மதத்தின் தெய்வ பாஷையான பாலி மொழியும் தமிழ்நாட்டில் இடம்பெற்றது.

பாலிமொழி தமிழ்நாட்டில் இடம்பெற்றிருந்தது என்றால், தமிழ்நாட்டுப் பெளத்தர்கள் அந்த மொழியைப் பேசிவந்தார்கள் என்று கருதக்கூடாது. பாலிமொழி ஒருபோதும் தமிழ்நாட்டுப் பெளத்தப் பொதுமக்களால் பேசப்படவில்லை. ஆனால், பெளத்தக் குருமாரான தேரர்கள், பாலிமொழியில் இயற்றப்பட்ட தம் மத நூல்களைப் படித்து வந்தார்கள். பிராமணர்கள், தம்மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படிப்பதும், உலக நடவடிக்கையில் தமிழ், தெலுங்கு முதலான தாய்மொழிகளைக் கையாளுவதும்போல, பெளத்தப் பிக்ஷýக்கள் தம்முடைய மத நூல்களை மட்டும் பாலிமொழியில் கற்றும், உலக வழக்கில், தமிழ்நாட்டினைப் பொறுத்தமட்டில், தமிழ் மொழியைக் கையாண்டும் வந்தார்கள். இந்தப் பிக்ஷýக்கள் பொதுமக்களுக்குப் பாலிமொழி நூலிலிருந்து மத உண்மைகளைப் போதித்தபோது, சில பாலிமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. ஆருகதரும் பெளத்தரும் தமிழை நன்கு கற்றவர். அதனோடு பாகத, சம்ஸ்கிருத மொழிகளையும் பயின்றவர். இதனை,
""ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்
பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள்...''
என்று சமணரைப் பற்றித் திருஞானசம்பந்தர் திருவாலவாய்ப் பதிகத்தில் கூறியிருப்பதினாலும் அறியலாம்.

மாகதி என்னும் பாலிமொழிச் சொற்கள் சில தமிழில் கலந்துள்ளன என்பதைத் தக்கயாகப்பரணி உரையாசிரியர் கூறியதில் இருந்தும் உணரலாம். 410-ஆம் தாழிசை உரையில், "ஐயை-ஆரியை. இதன் பொருள் உயர்ந்தோரென்பது. ஆரியையாவது சங்கிருதம்; அஃது ஐயையென்று பிராகிருதமாய்த் திரிந்தவாறு; "மாகததென்னலுமாம்' என்று எழுதியிருப்பதைக் காண்க. அன்றியும் 485-ஆம் தாழிசையுரையில் "தளம்-ஏழு; இது பஞ்சமா ரூட பத்திர தளம்; இது மாகதம்' என எழுதியிருப்பதையுங் காண்க.

தமிழ்நாட்டிலே, காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, பாண்டிநாட்டுத் தஞ்சை, மானாவூர், துடிதபுரம், பாடலிபுரம், சாந்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பெளத்தபுரம் முதலான ஊர்களில் பாலிமொழியை நன்கறிந்திருந்த பெளத்த ஆசிரியர் பண்டைக் காலத்திலிருந்தனர் என்பது பெளத்த நூல்களாலும் பிற நூல்களாலும் தெரிகின்றது.

தமிழில் கலந்து வழங்கும் பாலிமொழிச் சொற்கள் அனைத்தினையும் எடுத்துக்காட்ட இயலவில்லை. அவ்வாறு செய்வது, தமிழ், பாலி என்னும் இரு மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்களால் மட்டுமே இயலும். ஆயினும், பாலிமொழிச் சொற்கள் தமிழில் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. யாம் அறிந்தமட்டில், தமிழில் வழங்கும் பாலிச் சொற்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.

உய்யானம், ஆராமம் - பூந்தோட்டம் என்பது பொருள்.
பெளத்தரின்பள்ளி, விகாரை, தூபி முதலியவை இருக்கும் இடத்தைச் சேர்ந்த பூஞ்சோலைகளுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. இச்சொற்கள் மணிமேகலையில் வந்துள்ளன.

சமணர்: இப்பெயர் ஜைன, பெளத்தத் துறவிகளுக்குப் பொதுப்பெயர். ஆயினும், இப்போது தமிழ்நாட்டில் ஜைன மதத்தினரை மட்டும் குறிக்கத் தவறாக வழங்கப்படுகின்றது. வடமொழியில் இது "ஸ்மரணர்' என்று வழங்கப்படுகிறது. இச்சொல் தேவாரம், மணிமேகலை முதலிய நூல்களில் காணப்படுகின்றது.

சைத்தியம், சேதியம், தூபம் தூபி: இச் சொற்கள் பெளத்தர் வணங்குதற்குரிய கட்டடங்கள், ஆலயங்கள் முதலியவற்றைக் குறிக்கின்றன. தூபம், தூபி என்பனவற்றை ஸ்தூபம், ஸ்தூபி என்னும் வடமொழிச் சொற்களின் தமிழ்த் திரிபாகவும் கொள்ளலாம். ஆயினும், பாலிமொழியிலிருந்து தமிழில் வந்ததாகக் கொள்வதுதான் வரலாற்றுக்குப் பொருத்தமுடையது. இச்சொற்களை மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் காணலாம்.
தேரன், தேரி: இவை பெளத்தத் துறவிகளில் மூத்தவர்களுக்கு வழங்கும் ஆண்பால் பெண்பாற் பெயர்கள். இச்சொற்கள் மணிமேகலை, நீலகேசி, தேவாரம் முதலிய நூல்களில் வந்துள்ளன.

பிக்ஷ பிக்ஷணி: (பிக்கு, பிக்குணி) முறையே பெளத்த ஆண், பெண் துறவிகளைக் குறிக்கின்றன. மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் இச்சொற்கள் காணப்படுகின்றன.
விகாரை, விகாரம்: பெளத்தக் கோயிலுக்கும் பிக்ஷக்கள் வாழும் இடத்துக்கும் பெயர்.
வேதி, வேதிகை: திண்ணை என்பது பொருள். அரசு முதலான மரங்களின்கீழ் மக்கள் தங்குவதற்காகக் கட்டப்படும் மேடைக்குப் பெயர்.
போதி - அரசமரம், பாடசாலை - பள்ளிக்கூடம், விகாரை - பெளத்த பிக்குகள் வசிக்கும் கட்டடம்,
வேணு, வெளு - மூங்கில், சீலம் - ஒழுக்கம், அர்ஹந்தர் - பெளத்தமுனிவர், சீவரம் - பெளத்த பிக்குகள் உடுத்தும் ஆடை,
சேதியம் - கோயில், ததாகதர் - புத்தர், தம்மம் - தர்மம், நிர்வாணம் - பெளத்தருடைய வீடுபேறு, சாவகர் - பெளத்தரில் இல்லறத்தார், ஹேது - (ஏது) காரணம்.

இவையன்றியும், நாவா (கப்பல்), பக்கி (பறவை), பாடசாலை (பள்ளிக்கூடம்), நாவிகன் (கப்பலோட்டி), பதாகை(கொடி), நாயகன் (தலைவன்), தாம்பூலம் (தாம்பூலம்-வெற்றிலை), முதலிய சொற்களும் பாலிமொழியிலிருந்து பெளத்தர் மூலமாகத் தமிழ்நாட்டில் வழங்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றன. பாகத, அஃதாவது, பிராகிருத மொழிச் சொற்களுக்கும் சம்ஸ்கிருத மொழிச் சொற்களுக்கும் சிறு வேறுபாடுகள்தாம் உள்ளன. எனவே, இச்சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தனவா, பிராகிருத மொழியிலிருந்து வந்தனவா என்று முடிவுகட்ட இயலாது. ஆனால், தமிழ்நாட்டு வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால், பெளத்த மதமும் சமண மதமும் முதலில் தமிழ்நாட்டில் சிறப்புற்றிருந்தனவென்பதும், பிறகுதான் வைதீகப் பார்ப்பனீயம் சிறப்புப் பெற்றதென்பதும் நன்கு விளங்கும். எனவே, பெளத்தரின் சமய மொழியாகிய மாகதி(பாலி), சமணரின் சமய மொழியாகிய அர்த்த மாகதி என்னும் இரண்டும் பிராகிருத மொழிகளின் மூலமாகத்தான் பல திசைச்சொற்கள் தமிழில் கலந்திருக்க வேண்டும்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.