LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தமிழ் அறிவியலாளர்கள்

மயில்சாமி அண்ணாதுரை (வானியல்)

மயில்சாமி அண்ணாதுரை (பிறப்பு: ஜூலை 2, 1958; கோதவாடி - பொள்ளாச்சி - கோயம்புத்தூர்) தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியலாளர். தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்.


இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுமாணிப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.


அண்ணாதுரை தனது விடு முறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். மாணவர்களும் அவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.


தற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், "கையருகே நிலா" என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.


இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில், "கையருகே செவ்வாய்" என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.


தமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும்.


பிறப்பும் கல்வியும்


1958ஆம் ஆண்டு ஜூலைத்திங்கள் இரண்டாம் நாள் கோவை மாவட்டம் பொள்ளாச்சித்தாலுகா கோதாவடி கிராமத்தில் திரு.மயில்சாமி ஆசிரியருக்கும் திருமதி.பாலசரசுவதி அம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தார். பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். புகுமுக வகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப் படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திலும் பெற்று, முழுக்க முழுக்கத் தமிழகத்திலேயே தனது கல்வியைப் படித்தவர் இன்றைய இந்த நிலவுத் தமிழர்.


விண்வெளித் தொழில் நுட்ப ஆய்வு


1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தில் ஒரு அடிமட்ட அறிவியல் ஆய்வராச் சேர்ந்து, தனது தளராத உழைப்பாலும் சிறு சிறு கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத் தனது பெயரைப் பதித்துள்ளார். எட்டு இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராகச் சிறப்பாற்றியதின் பின் 2004இல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத்திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார். கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்களைத் தலைமை தாங்கி நிலவில் நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு.


சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பின், இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணச் செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பெரிய செயற்கைக் கோள்ப்பட்டாளத்தின் திட்ட இயக்குனராக உயர்ந்திருக்கிறார் முனைவர். மயில்சாமி அண்ணாதுரை.


இன்னும் பத்து ஆண்டுகள் இவரது செயல் முறை ஆய்வுப்பணிகள் தொடர வாய்ப்புக்கள் இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.


தமிழ்ப்பணி


தனது அறிவியல் பணிக்கு வெளியில் தாய்த்தமிழ் மீது பற்றும் தணியாத தாகமும் கொண்டவர். 'வளரும் அறிவியல்' என்று தமிழில் வெளிவரும் அறிவியல் மாத இதழின் கௌரவ ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட சிறந்த பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர். மனிதநேயம் கொண்ட சிறந்த மனிதர். சனி, ஞாயிறுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஓய்வு நேரங்களில் முகநூலின் மூலம் இளைய சமுதாயத்திடம் தொடர்பு கொண்டு கணிணி வாயிலாய், அறிவியல் பார்வை மற்றும் சமூகப் பணியுடன் தமிழார்வத்தையும் ஊட்டி வருகிறார்.


இந்திய நகரங்களின் பல தமிழ்ச்சங்கங்களிலும், அமெரிக்க மற்றும் சிங்கப் பூர்த் தமிழ் அமைப்புகளிலும் அறிவியல் தமிழில் சிறப்புரை ஆற்றியுள்ளார். கோவைச் செம்மொழி மாநாட்டில் முப்பது அறிவியலாளர்களைக் கொண்டு தலைலைதாங்கி நடத்திய “அறிவியல் தமிழ் ஆய்வரங்கம்” எல்லோராலும் பேசப்பட்ட ஒன்று. இவரது இளமை, கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு அனுபவங்களடங்கிய “கையருகே நிலா” என்ற புத்தகமும், “அரசுப் பள்ளி பாழல்ல அன்னைத்தமிழும் பாழல்ல” என்ற இவரது கவிதையும் , தமிழகப் பள்ளி மாணவர்களால் அதிகம் படிக்கப்படுகிறது. தமிழகப் பள்ளி இறுதி வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இவரது வாழ்க்கைக் குறிப்பும் அறிவியல் பணியும் குறிப்பிடப் பட்டிருப்பது ஒரு சிறப்பாகும்.

by Swathi   on 01 Nov 2014  0 Comments
Tags: Mylswamy Annadurai   மயில்சாமி அண்ணாதுரை   Tamil Space Scientist              
 தொடர்புடையவை-Related Articles
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை (வானியல்) மயில்சாமி அண்ணாதுரை (வானியல்)
சினிமாவை பற்றி மயில்சாமி அண்ணாதுரை கருத்து !! சினிமாவை பற்றி மயில்சாமி அண்ணாதுரை கருத்து !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.