சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்ட் 201 ல் சிகிட்சைக்காக , மேலாண்மை பொன்னுசாமியை அக்டோபர் 29 அதிகாலை 12.30 மணிக்கு கொண்டு சேர்த்தோம்.முப்பத்து இரண்டு மணி நேரம் மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி எடுத்துக் கொண்டதை நேராக இருந்து பார்த்தேன். மேலாண்மையும் தன்னோடு போராடிக் கொண்டிருந்தார். அறுபத்தியாறு வயது இறப்பதற்கான வயதல்லதான். அக்டோபர் 27 அதிகாலை 3 மணிக்கு, கழிவறை போய் திரும்புகையில், நிலை தடுமாறி விழுந்து, கழுத்து தண்டுவடம் சேதாரம் ஆகி, சிகிட்சை பலனின்றி அக்டோபர் 30 காலை 8.15 மணி இறந்தார். அக்டோபர் 24 மாலை மேலாண்மை பொன்னுச்சாமியை , அவரது வீட்டில் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். கடந்த ஐந்தாண்டுகளாக பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவரின் வாசிப்பும் எழுத்தும் அவரை நோயின் கடுமையிலிருந்து சற்றே பாதுகாத்து வைத்திருந்தது.
சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் எழுதி வரும் வேள்பாரி தொடர்கதையை நான் அவரைப் பார்க்கப் போகையில் வாசித்துக் கொண்டிருந்தார். எப்படி இருக்கிறது வேள்பாரி என்றேன். நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறார் வெங்கடேசன். பாரியை முன் வைத்து மக்கள் வரலாற்றை , மார்க்சிஸ்ட் பார்வையில் அருமையாக எழுதிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்.
அக்டோபர் 28 அவரை மீண்டும் பார்ப்பதாக சொல்லி கிளம்பிப் போனேன். ஆனால் அவரை மருத்துவமனையில்தான் பார்க்க முடிந்தது. அக்டோபர் 29 மாலை அவர்,எமர்ஜென்சி வார்டில் சிகிட்சையில் இருந்த பொழுது, பேசணும் ; எழுதணும் என்று எழுத்துகளை உச்சரித்துக் கொண்டிருந்தார். நான் அருகிருந்து அவர் இடது உள்ளங்கையை தடவி விட்டுக் கொண்டே எழுதலாம் மேலாண்மை ; பேசலாம் என அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.
புது எழுத்தாளர்களின் படைப்புகளைப் தொடர்ந்து படிப்பார் மேலாண்மை. அவர்களை நேரில் காண்கையில் ஞாபகமாக அது குறித்துப் பேசுவார். பாராட்டுவார். தொடர்ந்து எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்துவார். செம்மலர் இதழ் ஆசிரியர் குழுவில் அவர் இருந்த பொழுது, இப்படியான இளம் எழுத்தாளர்களின் கதை,கவிதைகளை பிரசுரிக்க ஆர்வம் காட்டுவார்.
தன் கதைமொழியை எளிமையாகக் கையாண்டவர் மேலாண்மை பொன்னுச்சாமி. இந்த எளிமையை அவர் அறிந்தே செய்தார். சுமாரான படிப்பறிவு கொண்ட வாசகர்களும் , தன் படைப்புகளைப் படித்து புரிந்து கொள்ளவும் விவாதிக்கவும் அவர் மேற்கொண்ட உத்திதான் எளிமையான மொழிப் பயன்பாடு. இதில் அவர் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
எளிமையான மொழியின் வழியாக தான் பிறந்த விருதுநகர் மாவட்டத்தின் மக்களின் வாழ்கையை , அவர்களுக்கும் சமுகத்திற்குமான முரண்பாடுகளை, படைப்புகளாகக் கொண்டு வந்தார்.
இந்த எளிமை , பிற சிந்தனை சார்ந்த படைப்பாளர்களால் தொடர்ந்து கிண்டல் செய்யப்பட்டதுண்டு. இந்தக் கிண்டலை மேலாண்மை பொன்னுச்சாமி அறிவார். ஆனால் அவர் எளிமையாக எழுத நேர்ந்தமைக்கு காரணங்கள் இரண்டு. ஒன்று , வாசகர்பரப்பை விரிவாக்குவது. இரண்டு, கதை முன் வைக்கும் மார்க்சியம் சார்ந்த யதார்த்தவாத பார்வையை மக்களிடம் பரப்புவது ஆகும். மேலாண்மை கதைகளில் நேரடியான பிரச்சாரத் தொனி இருக்காது.அது கதையின் போக்கு சார்ந்து, சித்திரிப்பு சார்ந்து அழகியலாக இயங்கிக் கொண்டிருக்கும்.
எழுத்தும் வாசிப்பும் பல அடுக்குகளைக் கொண்டது. தொடக்கக் கல்வி கற்ற வாசகர்கள் , உயர்நிலைக்கல்வி வாசகர்கள், கல்லூரிக்கல்வி வாசகர்கள் என வாசிப்பின் தளம் , அடுக்குகள் பல ரசனைப் போக்குகளையும் கொண்டது. வாசிப்பின் இந்த அடுக்குகளை எளிய வாசகர்கள் சாராத படைப்பாளர்களால் அறிய முடியாது.
வாசகர்களின் மனநிலை , பல்வேறு வர்க்கப் பிரிவுகள் சார்ந்த அழகியல் ரசனை , அரசியல் பார்வை இவைகளை மேலாண்மை பொன்னுச்சாமி அறிவார். மேலாண்மையின் படைப்பின் அரசியல் என்பது, கிராமப்புறம் சார்ந்த நகர்ப்புறம் சார்ந்த எளிய மக்களின் சமூகப் புரிதலை மாற்றும் முயற்சிகள் என்பதாகவே , தன் எழுத்துகளின் செயற்பாட்டுத் தளத்தைப் புரிந்து வைத்திருந்தார். தமிழில் வெளி வந்து கொண்டிருக்கும் பல சிந்தனைப் போக்குகள் கொண்ட படைப்புகளை மேலாண்மை வாசித்தும் அறிந்தும் வைத்திருந்தார். உழைக்கும் மக்களின் அரசியலை கிண்டல் செய்யும் புறக்கணிக்கும் எழுத்துகளையும் அறிந்து வைத்திருந்தார். இந்தப் புரிதலும் தேவையும் தான், மேலாண்மை எழுத்துகளின் வடிவமாகவும் உள்ளீடாகவும் அடியோட்டமாகவும் இருந்தன. 1972 ல் பரிசு என்கிற கதையோடு செம்மலரில் எழுதத் தொடங்கிய மேலாண்மை , நாற்பதாண்டுகள் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்தார். தொடர்ச்சியான எழுத்தின் தீவிரமும் புது வாசகப்பரப்பை பரிட்சயம் செய்து கொள்ளவும் அவர் கல்கி, ஆனந்தவிகடன் என்று தன் எழுத்தை புதுப்பரப்பிற்கு அறிமுகம் செய்தார். செம்மலர்,கல்கி,விகடன் என வாசகப்பரப்பிற்கு எளிமையும் உள்ளடக்கத்தின் தீவிரமும் கொண்டு எழுதினார்.
நூல் அறிமுகம் எழுதும் பொழுது , அன்னபாக்கியன் என்ற புனைபெயரில் எழுதினார். இவரின் படைப்புகளை அன்னம், குமரிப்பதிப்பகம், வானதி பதிப்பகம், நியூ செஞ்சுரி புக் அவுஸ், அம்ருதா பதிப்பகம் என வெளியிட்டுள்ளார்கள். செம்மலரில் மேலாண்மை தொடராக எழுதி வந்த சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் , சிறுகதையின் எழுதுமுறைகளை வடிவமுறைகளைப் பற்றி அனுபவத்திலிருந்து எழுதியது பெருத்த வரவேற்பை பெற்றது.
விவசாயத்தில் நுழைந்து விட்ட நவீனமுறை , விவசாயிகளை பலி வாங்குவது பற்றி மேலண்மை எழுதிய நாவல் உயிர்நிலம் பெரும் பாராட்டைப் பெற்றது.
சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைப் பின்னணியில் , சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்ற அரசின் சட்டம் , வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களை பாதிப்பதை, வயதிற்கு வராத சிறுமி , வயிற்றுப்பாட்டிற்காக மாராப்பு போட்டு வேலைக்குப் போவது பற்றி எழுதிய அரும்பு சிறுகதை, மேலாண்மையின் மாஸ்டர் பீஸ் ஆகும். அரும்பு கதை தமிழின் மிகச்சிறந்த நூறு சிறுகதைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
ஐந்தாம் வகுப்பு வரைப் படித்த மேலாண்மை போன்னுச்சாமி, இப்படியாக சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள்,கட்டுரைகள் என 36 நூல்களை தமிழிற்கு தந்துள்ளார். பதினைந்தாண்டுகளாக மாணவர்கள் இவரின் படைப்புகளை முனைவர் பட்ட ஆய்விற்கு உட்படுத்தி வருகின்றனர். உயர்கல்வி கற்காத மேலாண்மை , பல்கலைக்கழகங்களால் பயிலப்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டு அரசின் விருதுகள்,இந்திய அரசின் சாகித்ய அகாதமி விருது பெற்ற , எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் மறைவு, கேரள முதல்வர் பினராயி விஜயன் சொல்லியது போல, தேசத்திற்கான , முற்போக்கு இலக்கியத்திற்கான பேரிழப்பு.
இரா.தெ.முத்து
துணைப்பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
|