LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஜெயமோகன்

மாடன் மோட்சம்

 

ஆடி மாதம், திதியை, சித்த யோகம் கூடிய சுபதினத்தில் சுடலை மாடசாமி விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக் கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின் மீது கீய்ஞ், கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து, பாதக்குறடு ஒலிக்கப் புறப்பட்டது. சேரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஒரு பயலுக்காவது இப்படி ஒரு தெய்வம், நடு ராத்திரி மையிருட்டில் பசியும், பாடுமாக அல்லாடுவதைப் பற்றிய பிரக்ஞை இல்லை. ‘வரட்டும் பாத்துக்கிடுதேன் ‘ என்று மாடன் கறுவிக் கொண்டது. இந்தக் காலத்தில் சில்லறைத் தொந்தரவுகளாவது தராமல் தேமே என்று இருக்கிற சாமியை எவன் மதிக்கிறான்? இப்படியே விட்டால் மீசையைக் கூட பீராய்ந்து கொண்டு போய் விடுவான்கள். இளிச்ச வாயன் என்ற பட்டமே தன்னை வைத்து ஏற்பட்ட மரபு தானோ என்ற சந்தேகம் மாடனுக்கு வந்தது.
இருண்டதும், சாக்கடை தாறுமாறாக வெட்டி ஓடியதுமான தெருவில், பன்றிகளின் அமறல் ஒலித்தது. ஞைய்ங் என்று ஒரு பன்றிக்குட்டி, அன்னையைக் கூப்பிட்டது. மாடனுக்கு நாவில் நீர் ஊறியது. பன்றிக் கறி படைக்கப் பட்டு வருஷம் நாலாகிறது. வந்த உத்வேகத்தில் ஒன்றைப் பிடித்து லவட்டி விடலாமென்று தான் தோன்றியது. ஆனால் தலைவிதி; சாமியானாலும், சடங்குகளுக்குக் கட்டுப்பட்டக் கட்டை, பலியாக மானுடன் தந்தால் மட்டுமே வயிற்றுப் பாடு ஓயும். திடீரென்று ஒரு சவலை நாய் ‘ளொள்?’ என்ற சந்தேகப் பட்டது. தொடர்ந்து நாலா திசைகளிலும் இருட்டுக்குள், ‘ளொள், ளொள்? ‘ என்று விசாரிப்புகள் எழுந்தன. ஒரு பயந்தாங்குளி, அதற்குள் பிலாக்கணமே ஆரம்பித்து விட்டிருந்தது. சவலை நாசியைத் தூக்கி, மூசு மூசு என்று மோப்பம் பிடித்தது. மாடனை உணர்ந்ததும், ஒரே பாய்ச்சலாக வராண்டாவில் ஏறி நின்று, பாட ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து சேரியே ஊளையொலிகளினால் நிறைந்தது. சுடலை மாடசாமி பூசாரி அப்பியின் குடிசை முன் வந்து நின்றது. பிறகு கதவிடுக்கு வழியாக, ஊடுருவி உள்ளே போனது. இருட்டுக்குள் பூசாரி ‘தர்ர் தர்ர் ‘ என்று குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனைத் தன் பட்டாக் கத்தியால் நெற்றிப் பொட்டில் தொட்டு ‘பிளேய், எலெய் அப்பி; பிள்ளேய் . . . ‘ என்று கூப்பிட்டு எழுப்பியது மாடன். ஒரே உதையால், பயலின் தொப்பையை உடைக்குமளவு வெறி எழாமல் இல்லை. ஆனால் மரபு, என்ன செய்ய? மேலும் அப்பி பரமபக்தன். ‘எலேய் பிள்ளே எளிவில மக்கா ‘ என்றது மாடன். அப்பி ‘ம்ம்ங் . . . ஜங் . . . சப் ஜப் . . . ‘ என்று சில ஒலிகளை வாயால் எழுப்பிவிட்டு, வரக் வரக் என்று சொறிந்து கொண்டான். நல்ல முங்கல். என்னது மசங்கின பனங்கள்ளா, எரிப்பனே தானா? மாடன் வாசனை பிடித்தது. பிறகு மீண்டும் எழுப்பியது. ஒரு வழியாகப் பூசாரி எழுந்து அமர்ந்தான். இருட்டில் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. ‘ஆரூ? ‘ என்றான். ‘நாந்தாம்பில’ என்றது மாடன்.
‘ஆரு மாயனா? ஏம்பிலே இந்நேரத்துக்கு ‘ என்றபடி அப்பி வாயை விரியத் திறந்து, கொட்டாவி விட்டான். ‘பிலெய் நாறி; இது நாந்தாம்பில மாடன்!’ என்றது மாடன், பொறுமையிழந்து போய்.
அப்பிக்குத் தூக்கம் போய்விட்டது. ‘ஓகோ ‘ என்றபடி எழுந்து அமர்ந்தான். ‘வாரும்; இரியும். என்ன காரிய மாட்டு வந்தீரு? ‘ என்றான்.
‘காரியமென்ன குந்தம். பிலெய் அப்பி, நீயிப்பம் எனக்க காவுப் பக்க மாட்டு வந்து எம்பிடு நாளுபில ஆவுது ? ‘
‘என்னவேய் ஒரு மேதிரி பேயறீரு? மிந்தா நேத்திக்கு வரேல்லியா? ‘
‘வச்சு, காச்சிப்பிடுவேன் பாத்துக்க. பிலேய் அப்பி, நீயாட்டா வந்தே? கள்ளு வெள்ளமில்ல ஒன்ன கொண்டு வந்தது? பிலெய் நான் கேக்கியது என்ன, நீ சொல்லுயது என்ன ? ‘
‘நீரே செல்லும் ஹாவ் . . . ‘ அப்பி சொடக்கு விட்டபடி வெற்றிலைப் பெட்டியைத் துழாவி எடுத்தான். ‘இருமே, வந்த காலிலே என்னத்துக்கு நிக்கிது ? ‘
‘பிலேய் அப்பி, ஒண்ணு ரெண்டல்ல ஆயிரம் வரிய மாட்டு நின்னு கிட்டு இருக்குத காலாக்கும் இது; பாத்துக்க . . . ‘
‘இருக்கட்டும் வேய், நமக்குள்ள என்னத்துக்கு இதொக்கெ ? இரியுமிண்ணே. ‘
‘செரி, ஒனக்க இஷ்டம் ‘ என்றபடி மாடன் அமர்ந்தது. ‘யெக்கப்போ . . . நடுவு நோவுது டோய் அப்பி . . . இருந்து கொற காலமாச்சுல்லா. ‘
‘செல்லும் வேய்; என்னவாக்கும் காரியங்க ? ‘ என்றான் அப்பி.
‘என்னாண்ணு சென்னா, இப்பம் வரியம் மூணு ஆவுது கொடயாட்டு வல்லதும் கிட்டி. ‘
அப்பி திடுக்கிட்டு, ‘அடப்பாவி . . . உள்ளதுதேன், நானும் மறந்துல்லா போனேன் ‘ என்றான்.
‘பூசெ வல்லதும் நடத்துத எண்ணம் உண்டுமா? ‘
‘என்னை என்னெளவுக்குக் கேக்குதீரு? நான் அங்க வந்து மோங்குயதுக்கு பகரம் நீரு இஞ்ச வந்து கண்ணீரு விடுதீராக்கும்? இஞ்ச இன்னத்த கோப்பு இருக்க, கொடை நடத்துயதுக்கு? ‘
‘ஒனக்க கிட்ட ஆரு பிலேய் கேட்டது? நம்ம பிரஜைகளுக்குச் செல்லிப்போடு.’
‘என்னது பிரஜைகளா? ஆருக்கு, ஒமக்கா? எளவுக்க கததேன் ஹெஹெ . . . ‘
‘ஏம்பிலேய்? ‘ என்றது மாடன் அதிர்ச்சியடைந்து!
‘அடக் கூறுகெட்ட மாடா ‘ என்று பூசாரி சிரித்தான். புகையிலையை அதக்கியபடி. ‘அப்பம் ஒமக்கு காரியங்களுக்க கெடப்பொண்ணும் அறிஞ்சூடாமெண்ணு செல்லும்.’
‘என்னத்த அறியியேதுக்கு ? ‘
‘இப்பம் சேரியில ஏளெட்டு பறக் குடிய விட்டா, பாக்கியொக்க மத்த சைடு பயவளாக்கும் பாத்துக்கிடும். ‘
‘மத்தவனுவண்ணு சென்னா ? ‘
‘வேதக்காரப் பயவளாக்கும்.’
‘அவனுவ இஞ்ச எப்படி வந்தானுவ? ‘
‘இஞ்ச ஆரும் வரேல்ல. ஒம்ம பிரஜைகள் தான் அங்க செண்ணு நாலாம் வேதம் வாங்கி முங்கினானுவ. ரெட்சணிய சேனேன்னு பேரு சவத்தெளவுக்கு. ‘
‘அப்பிடி வரட்டு ‘ என்றது மாடன் ஏமாற்றமாக.
‘அவியளுக்க சாமி உன்ன மாதிரி இல்ல.’
‘வலிய வீரனோவ்? ‘
‘ஒண்ணுமில்ல; தாடி வச்சுக்கிட்டு, பரங்கி மாம்பளம் கணக்கா ஒரு மேதிரிப் பாத்துக்கிட்டு, இருக்குதான். நெஞ்சில ஒரு கலயம் தீ போல எரிஞ்சுக்கிட்டு இருக்குது. ‘
‘ஆயுதம் என்ன வச்சிருக்கானாம்?’
‘நீரிப்பம் சண்டைக்கும், வளக்குக்கும் ஒண்ணும் போவாண்டாம். அவன் ஆளு வேற. வெள்ளக்காரனாக்கும்.’
‘பரங்கியோ?’ மாடனின் சுருதி தளர்ந்தது.
‘பின்னே? ராவிப் போடுவான். ஒமக்குக் கட்டாது. பேயாம காவில இருந்துப் போடும். ‘
‘அப்பம் பின்ன கொடைக்கு என்னலேய் வளி ? கும்பி எரியுதே?’
‘இஞ்ச பாரும். நீரு இப்பிடி மீசைல காக்காப்பீயும் வடிச்சு கிட்டு நின்னீருண்ணு சொன்னா ஒரு பய ஒம்ம மதிக்க மாட்டான்.’
‘பின்னெயிப்பம் என்னலெய் செய்யணும் இங்கியே? ‘
‘நாலு நீக்கம்பு, குரு எண்ணு எடுத்து வீசுமே. மத்த பயலுவ இப்பம் இஞ்ச வாறதில்ல. டவுணுக்கு செண்ணு கலர் வெள்ளமும் குளிகெயும் திங்கியானுவ. ஒம்ம நீக்கம்பு பரவி நாலு வேதக்காரனுவ தலெ விளணும். ஆத்தா, சாமி எண்ணு கரஞ்சிக்கிட்டு தாளி மவனுவ இஞ்ச ஓடிவரணும். மடிசீலயக் கிளிச்சுப் போட மாட்டானா ? அம்ம தாலிய அறுத்துப் போட மாட்டானா? எரப்பாளிப் பெயவ களிச்சினும். அப்பிக்க கிட்டயாக்கும் களி பாக்குதேன் . . . ‘
‘தீவாளிப் பெகளத்திலயும் ஒனக்கு இட்டிலி யாவாரம் . . . ‘ என்றது மாடன், இளக்காரமாக.
‘பின்னே ? நான் நல்லாயிருந்தாதானே ஒமக்கு ? ‘
‘செரி பாக்குதேன். ‘
‘பாக்கப்பிடாது; செய்யும். வாரி வீசும் நல்லா. மடி நெறய இருக்கே பண்டார வித்து. வரியம் பத்து ஆவுதில்லா. பயவ மறந்துப் போட்டானுவ மாடா. பேடிச்சாத் தான்லே இவிய வளிக்கு வருவினும். ‘
‘செரி, வாறேன். ‘
‘வேய் மாடா நில்லும் ‘ என்றான் அப்பி. ‘எளவ வாரிகிட்டு கால் பளக்கத்தில் இஞ்ச வந்திடாதியும். நாலெட்டு நீங்கி வீசும். ‘
‘செரிலேய் அப்பி. பாக்கிலாம் ‘ என்றபடி மாடன் புறப்பட்டுச் சென்றது.
‘வாளை மறந்து வச்சுக்கிட்டு போவுதீரே ? ‘
‘வயதாச்சில்லியா ? ‘ என்றபடி மாடன் வந்து எடுத்துக்கொண்டது. ‘வரட்டுமா டேய் அப்பி. ‘
‘நீரு தைரியமாட்டு போவும்வேய் மாடா . . . ‘ என்று அப்பி விடை கொடுத்தான். மீண்டும் புகையிலையை எடுத்தபடி.
இரண்டு
*******
மாடன் போகும் வழியிலேயே தீர்மானித்து விட்டது. வேறு வழியில்லை. ஒரு ஆட்டம் போட்டுத்தான் தீர வேண்டியிருக்கிறது. அந்தக் காலத்தில் செயலாக இருந்து போது ரொம்பவும் சாடிக் குதித்த சாமிதான். காலம் இப்போது கலி காலம். காடு மேடெல்லாம் காணாமல் போய், எங்குப் பார்த்தாலும் வீடும், தார் ரோடும், சாக்கடையும், குழந்தைகளுமாக இருக்கிறது. முழு எருமை காவு வாங்கிய அந்தப் பொன்னாட்களில் இப்பகுதி பெரிய காடு. ஊடே நாலைந்து குடிசைகள். அப்பியின் முப்பாட்டா ஆண்டி மாதா மாதம் கொடை நடத்திப் பலி தந்ததும், அஜீர்ணம் வந்து பட்ட அவஸ்தைகளெல்லாம் மாடனின் மனசுக்குள் இன்னமும் பசுமையாகத் தான் இருக்கின்றன. என்ன செய்ய? ஆனானப்பட்ட திருவட்டார் ஆதிகேசவப் பெருமாளுக்கே அந்திப்படிக்கு முட்டு எனும்போது குட்டி சாமிக்கு என்ன கொட்டியா வைத்திருக்கிறது? ஏதோ இந்த மட்டும் அப்பியாவது விசுவாசமாக இருக்கிறானே!
தன் கூடையின் விதைகளின் வீரியம் பற்றி மாடனுக்குச் சற்று சந்தேகம் தான். முன்பெல்லாம் காடும், வருடம் முழுக்க மழையும் இருந்தது. வீசியது என்றால் ஒன்றுக்குப் பத்தாக முளைக்கும். இப்போது இந்த வெயிலில், தார்ச்சாலையில் எவன் சட்டை செய்யப் போகிறான்? எனினும் கடமையைச் செய்து விடத் தீர்மானித்து, நள்ளிரவில் பாளைத் தாரை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியது. எது வேதக்காரன் வீடு, எது நம்மாள் வீடு என்று எப்படி அறிவது? குத்து மதிப்பாக வீசி வைத்தது. எதற்கும் ஜாக்ரதையாக அப்பியின் தெருப் பக்கமே போகவில்லை. தப்பித் தவறி ஏதாவது ஆயிற்றென்றால் சஸ்திரம் பண்ணிவிடுவான்.
திரும்பி வந்து சப்பக் கொட்டிக்கொண்டு அமர்ந்தது. இரண்டு நாள் ஒன்றும் ஆகவில்லை. யாரும் திரும்பிப் பார்க்க வில்லை. மூன்றாம் நாள் சிகப்பு பட்டாடை கட்டி, சதங்கையும் வாளும் குலுங்க, வாயில் வெற்றிலைச் சாறு தளும்ப, அப்பி அவ்வழியாக அவசரமாகப் போனான்.
‘எலேய் அப்பி, தூரமா? ‘ என்றான் மாடன்.
அப்பிக்குக் கோபம் வந்தது. ‘என்னவேய் இப்பம்? ஒரு காரியமாட்டு போவும்பம் பெறவீண்ணு விளிச்சலாமா? சாமியானா சாத்திரம் மாறிப் போவுமோ? ‘
‘மறந்து போட்டேம்பில ‘ என்றது மாடன் பரிதாபமாக.
‘செரி செல்லும். என்னவாக்கும் அரிப்பு? ‘
‘என்னலேய் ஆச்சு, நம்ம காரியங்க? ‘
‘ஒலக்கெ ‘ என்று அப்பி கையைக் காட்டினான்.
‘மொளைக்கியதுக்கு என்ன? நீக்கம்பு படந்திருக்கிய உள்ளதுதேன். ஆனா பிரயோசனம் இல்லியே. ‘
‘என்னத்த? ‘ என்றது மாடன் புரியாமல்.
‘அவனுவ வெள்ளைச் சட்டைக்காரனுவளை இஞ்சயே கொண்டாந்துட்டானுவ வேய். நம்ம பயவகூட அங்க செண்ணு கலர் வெள்ளமும், குளிகெயும் வாங்கித் திங்கியானுவ; பெறக்கிப் பய மவனுவ. நீரும் உம்ம வித்தும் . . . ‘
மாடனுக்கு அய்யே என்று ஆகிவிட்டது. ‘நீயிப்பம் எங்க லேய் போறே ? ‘
‘கஞ்சிக்கு வளி காணணுமே. நாலு வீடு செண்ணு மாடன மறந்து போடாதிய எண்ணு செல்லிப் பாக்குதேன். பத்துபேரு சிரிச்சுத் தள்ளினா ஒருத்தன் விள மாட்டானா ? இப்ப ராசப்பன் கெட்டினவ விளிச்சிருக்கா ‘ என்றான் அப்பி.
‘கிடாய்க்கு வளியுண்டாடோய் ? ‘
‘என்னது ? ‘
மாடன் தணிந்த குரலில், ‘கிடா ‘ என்றது.
‘கட்டேல போக! ‘அம்பது பைசா கோளிக் குஞ்சு ஒண்ணு போராதோ ‘ எண்ணு கேக்குதா அறுதலி. உமக்கு இஞ்ச கிடாய் கேக்குதோ ? ‘
‘செரி விடு. எரிப்பனெங்கிலும் கொண்டு வா. அரக்குப்பி போரும். ‘
‘எரியும், நல்லா எரியும். நான் வாறேன். வந்து பேயுதேன் ஒம்மக்கிட்டே. ‘
மாலையில் களைத்துப் போன அப்பி வந்து சேந்தான். சோனிக் கோழி ஒன்றையும் கால் குப்பி எரிப்பனையும் படைத்தான்.
நாக்கைச் சப்பியபடி மாடன் சொன்னது, ‘அமிர்தமாட்டு இருக்குடேய் அப்பி. ‘
‘காலம் போற போக்கப் பாருமே. முளு எருமை முளுங்கின நீரு . . . ‘
‘தின்னுக்கிட்டிருக்கும்பம் மனசக் கலக்குது மேதிரி பேயாதே டேய் அப்பி. கோளி அம்பிடுதேனா ? ‘
‘இல்லை; நான் தின்னுட்டேன். என் குடலைப் பிடுங்கித் திங்கும். ‘
‘கடேசில அதும் வேண்டி வரும் எண்ணுதான் தோணுது டேய் அப்பி ‘ மாடன் கட,கடவென்று சிரித்தது.
அப்பி பயந்து போனான். எனினும் அதை வெளியே காட்டாமல் ‘பயக்கம் பேயுத மூஞ்சியப்பாரு; ஓவியந்தேன் ‘ என்று நொடித்தான்.
மீசையைக் கோதியபடி மாடன் தலையை ஆட்டிச் சிரித்தது.
‘அப்பம் இன்னி என்னவாக்கும் பிளான் ? ‘ என்றான் அப்பி.
‘ஒறங்கணும் ‘ மாடன் சோம்பல் முறித்தது.
‘சீருதேன். அடுத்த கொடைக்கு என்ன செய்யப் போறீரு எண்ணு கேட்டேன். ‘
‘ஆமா, உள்ளதுதேன் ‘ என்றது மாடன் மந்தமாக.
‘என்ன உள்ளது ? மீசயப்பாரு. தேளுவாலு கணக்கா, மண்டைக்குள்ளே என்னவேய் களிமண்ணா ? ‘
‘பிலேய் அப்பி. எனக்க சரீரமே களிமண்ணுதானேல மக்கா. ஹெஹெஹெ . . . ‘
‘அய்யோ, அய்யோ ‘ அப்பி தலையிலடித்துக் கொண்டான்.
‘செரி இல்ல; நீ சொல்லு ‘ என்று மாடன்.
‘இன்னியிப்பம் ஒமக்க வித்து எறியுத வேலயெல்லாம் பலிச்சுக்கிடாது. ‘
‘உள்ளதுதேன். ‘
‘வேற வளி வல்லதும் பாக்கணும். ‘
‘வேற வளி பாக்கணும் ‘ என்றது மாடன் குழந்தை போல.
‘அவியக்கிட்ட நம்ம காவையும் பார்த்துக்கிடச் சென்னா என்ன வேய்? ‘
‘அவியள்லாம் இந்துக்க இல்லியா ? மாடனுக்கு அங்க என்ன டேய் காரியம்? ‘
‘இவிய வேதத்தில் சேத்துக்கிடுகிடுவானுவ அப்பம் இந்துக்க அங்க சேக்க மாட்டினுமா? பிலேய் மாடா ஒண்ணி அங்க, இல்லெங்கி இஞ்ச; ரண்டுமில்லாம இன்னி நிக்கப் பளுதில்ல வேய். ‘
‘ஒனக்க விருப்பம் போலச் செய்யி ‘ என்றது மாடன் நிர்க்கதியாக.
‘எனக்க பிளான் என்னாண்ணு கேட்டியானா, ஒன்னய. மறிச்சுப் போட்டுட்டு இஞ்ச ஒரு சிலுவய நாட்டுவேன். அருவத்தில ரெட்சணிய பொரம் எண்ணு ஒரு போர்டும் எளுதி வச்சிடலாம் எண்ணு பாக்குதேன். ‘
‘பாவி மட்டே; என்ன எளவுக்கு டேய் அப்பி இதொக்க ? ‘ என்றது. பீதியுடன் கேட்டது மாடன். ‘இப்பம் இப்படி நின்னுக்கிட்டாவது இருக்குதேன். மறிஞ்சா பின்ன எள ஒக்கும் எண்ணும் தோனேல்ல. ‘
‘நீரு பயராதியும் வேய் மாடா; ஏமான் பெயவ ஒம்ம பொன்னு போல பாத்துக்கிடுவினும். ‘
‘அதுக்கு ஏன் டேய் இதொக்கெ ? ‘
‘வேய் மாடா, இப்பம் ஆதிகேசவன் கோவிலும் அம்மன் கோவிலுமொக்கெ எப்பிடி இருக்கு அறியிலாமா வேய் ? கொலு கொலுண்ணு வேய். வெளக்குக்கு வெளக்கென்ன; மந்திரமென்ன; நாலு சாமத்துக்கு பூசெ . . . கண்டாமணி . . . வரியத்துக்க மூணு திருவிளா, படையல் . . . கோளோட கோளுதான். இப்பம் இஞ்ச மகாதேவருக்கு ஸ்பீக்கரும் வாங்கப் போவினுமாம். நம்ம மகாதேவரு கோவிலிலே எம்பிடு கூட்டம் தெரியுமா? ‘
‘அது என்ன லேய் ஸ்பீக்கறு? ‘
‘காலம்பற பாட்டு போடுயதுக்கு. அதுக்க சத்தமிருக்கே, நூறுபறை கொட்டினா வராதுவேய். நம்ம மூலயம் வீட்டு கொச்சேமான் கோபாலன் நாயருதான் அதுக்க பெரசரண்டு. ஒரு கூட்டம் ஏமான் பெயவ காக்கி டவுசரு இண்டோண்டு கசரத் எடுக்கணும். டவுசரு இட்டனுவ ஆறெஸ்ஸு. மத்தவனுவ இந்துமின்னணி. ‘
‘அங்க கோளி உண்டோவ் ? ‘
‘அரிஞ்சுப் போடுவேன் பாத்துக்கிடும். நான் இஞ்ச மினக்கெட்டு யோசனை செய்யுதேன்; நீரு கோளியிலே இருக்குதீராக்கும். ‘
‘இப்பம் என்னலேய் செய்யப் போறே ? ‘ என்று மாடன் அலுப்புடன் கேட்டது.
‘ஏமான் பெயவளுக்கு ஒரு சொரனை வரட்டும் எண்ணுதேன் வேய். அவியளுக்கு வேற என்னத்த செய்தாலும் சகிக்கும், பேர மாத்தினா மட்டும் விடமாட்டானுவ ‘ என்றான் அப்பி.
‘என்னெளவோ, எனக்கொண்ணும் செரியா தோணேல்ல. ஒனக்க இஸ்டம் ‘ என்றது மாடன்.
‘நீரு தைரிய மாட்டு இரும் வேய் மாடா. நான் என்னத்துக்கு இருக்குதேன் ? ஒமக்கொண்ணு எண்ணு சென்னா நான் விட்டுருவேனா ? ‘
‘எனக்கு நீயில்லாம ஆரும் இல்லலேய் அப்பி ‘ மாடன் தழுதழுத்தது.
‘நான் உம்ம விட்டுட்டு போவமாட்டேன் வேய் மாடா பயராதியும் ‘ அப்பி மாடனைத் தோளில் தட்டிச் சமாதானம் செய்தான். ‘இப்பம் என்னத்துக்கு மோங்குதீரு ? வேய் இஞ்ச பாரும், ஏமான் பெயவ ஒமக்கு நல்ல முளுக் கிடாய வெட்டி பலி போடாம இருப்பினுமா ? என்னது, முளுக்கிடா . . . பாத்தீரா சிரிக்குதீரு. ‘
மாடன் சோகமான முகத்துடன் சிரித்தது. அப்பியும் உரக்கச் சிரித்தான். புட்டியில் எஞ்சியிருந்த ஓரிரு துளி எரிப்பனையும் அண்ணாந்து நாக்கு நீட்டி அதில் விட்டுக் கொண்டான்.
மூன்று
****
அப்பால் நடந்ததெல்லாம் மாடனுக்குத் சரியாகத் தெரியாது. குட்டி தேவதையாக இருந்தாலும் அதுவும் கடவுள்தானே! தன்னை மீறிய சம்பவங்களின் போது கல்லாகி விடுதல் என்ற பொது விதியிலிருந்து அது மட்டும் எப்படித் தப்ப முடியும் ? அன்றிரவு அப்பி மாடனைப் புரட்டிப் போட்டு, பீடத்தின்மீது மரச்சிலுவை ஒன்றையும் நட்டு விட்டுப் போனான். மாடனுக்கு மார்பை அடைத்தது. எத்தனை தலைமுறைகளைக் கண்டது. கடைசியில் பசிக் கொடுமையில் நாடகம் போட வேண்டிய நிலை வந்துவிட்டது. ஏதோ எல்லாம் ஒழுங்காக நடந்தேறி, வருஷா வருஷம் கொடை மட்டும் முறையாக கிடைத்துத் தொலைத்தால் போதும். கும்பி ஆறினால் அது ஏன் வேறு வம்புகளில் தலையிடப் போகிறது?
மாடன் படுத்தபடியே, வாளைக் கிடையாகப் பிடித்தபடி, உருட்டி விழித்து இளித்தது. மழை பெய்து தொலைக்குமோ என்று பயம் வந்தது. கூரையும் இல்லை . . . ஜலசமாதிதான் கதி.
அப்பி மறுநாள் காலையிலேயே வந்து விட்டான். குய்யோ. முறையோ என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதான். பழைய பறையர்கள் சிலருக்கு ஞானோதயம் வந்து, மாடனைத் தரிசிக்க ஓடோடி வந்தனர். முத்தம்மா கிழவி உடனே ஒப்பாரி பாடும் நட்சத்திரம்மாவுக்கு தகவல் சொல்ல அவளும், பரிவாரங்களும் வந்திறங்கி சுருதி கூட்டி, லய சுத்தமாக குரல் எழுப்ப, கூட்டம் களை கட்டிவிட்டது. அப்பிக்கே பயங்கரமான சோகம் வந்துவிட்டது. மாடனின் காம்பீர்யம் அந்நிலையிலும் ஜ்வலிப்பதாய் சிலர் புல்லரித்தனர். ஒரு சில வேதக்கார ஆசாமிகளும் வந்து எட்டி நின்று பார்த்தனர். என்ன இதெல்லாம் என்று அவர்களுக்குப் புரியவேயில்லை. மாடனின் வீழ்ச்சியில் அவர்களுடைய பரம்பரை மனம் நோகத்தான் செய்தது. எவனோ வம்புக்காரப் பயல் செய்த வினை; மாடனின் பீடத்திலே சிலுவைக்க என்ன வேலை என்று கருதிய எட்வர்டு என்ற முத்தன் அப்பிக்கு ஒரு கை கொடுத்து மாடனைத் தூக்கி நிறுத்த உதவ முன்வந்தான்.
அப்பி ஆக்ரோஷம் கொண்டான். ‘ச்சீ மாறி நில்லுலே, மிலேச்சப் பயல. மாடன் சாமியைத் தள்ளிப் போட்ட பாவி. ஒனக்க கொலம் வெளங்குமாவிலே ? ‘
எட்வர்டு முத்தன் தயங்கினான். ‘ஆருலே தள்ளிப் போட்டது ? ‘
‘நீதாம்பிலே. ஒங்க கூட்டம் தாம்பிலே தள்ளிப் போட்டது ‘ மடேரென்று மார்பில் ஓங்கி அறைந்தபடி அப்பி கூவினான்.
‘பிலேய் ஆரு வேணுமெங்கிலும் போங்கலேய். பால்ப் பொடியும், கோதம்பும் குடுத்து அப்பிய வளைக்க ஒக்காதுலேய். நான் இருக்க வரைக்கும் ஒரு பயலும் மாடனைத் தொட விடமாட்டேம்பிலேய் . . . ‘
வார்த்தை தடித்தது. குட்டிக் கைகலப்பு ஒன்று நடந்தது. இரு தரப்பினரும் விலக்கப்பட்டனர். அப்பி திங்கு திங்கென்று குதித்து, சன்னதம் கொண்டு ஆடினான்.
உபதேசி குரியன் தோமஸ் கூறினான், ‘அதொக்கெ செரிதன்னே அப்பி, குரிசில் மாத்திரம் தொடண்டா. அது சுயம்பாணு. ‘
சேரியே கலகலத்தது. சுயம்பு சிலுவை உதயமான சேதி அண்டை அயலுக்குப் பரவி ஊழியக்காரர்களும்ம் விசுவாசிகளும் குழுமத் தொடங்கினார்கள். கட்டைக் குரலில் குரியன் தோமஸ், ‘எந்ததிசயமே தெய்வத்தின் சினேகம் ‘ என்று பாட, தெருவில் சப்பணமிட்டு அமர்ந்த மீட்கப்பட்ட மந்தைகள் ஜால்ரா தட்டித் தொடர்ந்து பாடின. பரமார்த்த நாடார் அங்கே உடனே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை திறந்தார். ஞானப் பிரகாசத்தின் சுக்குக் காப்பித் தூக்கும் வந்து சேர்ந்தது. வெள்ளைச் சேலையைக் கழுத்து மூடப் போர்த்திய, கணுக்கை மூடிய ஜாக்கெட் தரித்த, வெற்று நெற்றியும் வெளிறிய முகமும் கொண்ட, தேவ ஊழியப் பெண்கள், பக்திப் பரவசத்தில் அழுதார்கள். குழந்தைகள் ஒன்றுக்கிருந்தும், வீரிட்டலறியும் களைகூட்டின. மீதமிருந்த ஆறு அஞ்ஞானிக் குடும்பங்களும் மீட்கப் படுதலுக்கு உள்ளாகி விடலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தபோது கார் நிறைய ஏமான்கள் வந்திறங்கினர்.
காதிலே அரளிப்பூ செருகி, சந்தனக் குங்குமப் பொட்டு போட்டு, சிவந்த ராக்கி நூலைக் மணிக்கட்டில் கட்டி, காவி வேட்டியும் சட்டையுமாக வந்த கோபாலன் நேராக அப்பியை அணுகினான். அப்பி அப்படியே சரிந்து ஏமானின் கால்களில் விழுந்தான். ரட்சணியபுரம் என்று கிறுக்கப் பட்டிருந்த பலகையையும், சிலுவையையும் கோபாலன் புருவம் சுருங்க உற்றுப் பார்த்தான்.
‘ஆரும் ஒண்ணையும் தொடப்பிடாது. எங்க அண்ணாச்சி? பாத்துக்கிடுங்க. நான் போலீசோட வாறேன்.’
பஜனைக் குழுவில் அமைதி கலைந்தது. ‘ஓடுலே காவிரியேலு . . . ஓடிச் செண்ணு வலிய பாஸ்டர வரச் செல்லு ‘ என்றார் டாக்கனார் வேலாண்டி மைக்கேல்.
ரகளை தொடங்கிவிட்டது என்று மாடன் அறிந்தது. கண்ணை மூடியது; அப்பியும் ஜாக்ரதையாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தான். பிறகு அவனை அப்பக்கமாகக் காணவில்லை.
போலீஸ் வந்தது. தொடர்ந்து பெரிய பாஸ்டர் அங்கி பளபளக்க வந்து சேர்ந்தார். சிலுவையைப் போலீஸ் அகற்ற வேண்டும் என்று குங்குமப் பொட்டுக்காரர்களும், அது சுயம்பு எனவே அங்கேயே இருக்கட்டும் என்று பாதிரியாரும் வற்புறுத்தினர். போலீஸ் குழம்பியது. கடைசியில் முரட்டுத்தனமான லத்திச் சார்ஜ் வரை சங்கதிகள் சென்றடைந்தன. டேனியல் குஞ்சனுக்கு மண்டையும், எஸ்தர் சின்னப் பொண்ணுக்கு முழங்காலும் உடைய நேர்ந்தது.தொடர்ந்து மூன்று நாட்கள் மாடனுக்குப் போலீஸ் காவல். சேரியிலும் சந்தையிலும். அடிதடியும் கொலையும் தண்ணீர் பட்டபாடு ஆயின. மொத்தம் ஏழு என்றார்கள். பாக்கி தொண்ணூற்று மூன்றை நதியில் வீசிவிட்டார்கள் என்றது வதந்தி. அப்பியைக் கண்ணிலே காணவில்லை. போலீஸ் துப்பாக்கிச் சூடு, சமாதானப் பேரணி, நூற்றி நாற்பத்து நாலு, ஆர்.டி.ஓ. விசாரணை, நீதி கேட்டு உண்ணாவிரதம், போஸ்டர் யுத்தம், மந்திரி வருகை, சேலை தானம், சர்வ கட்சி சமாதானக் கூட்டம்,சர்வ மதத் தலைவர்கள் அறிக்கை என்று சரித்திர வழமைப்படி சம்பவங்கள் நடந்தேறின. சமாதானப் பேச்சு வார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் உடன் பாடானது. தொடர்ந்து ஆள்பிடிக்கும் வேட்டை. ‘என்ன இருந்தாலும் அவிய ஏமான்மாருங்க. பறப்பய எண்ணும் பறப்பயதான்’ என்று பாதிரியார் வீடுவீடாகச் சென்று உபதேசம் செய்தார். ‘மறந்து போச்சா பளைய கதையொக்கெ? அங்க வலிய கோவில் பக்கமாட்டு உங்களயொக்கெ போவ விடுவனுமா? அவிய செத்தா நீங்க மொட்ட போடணும் எண்ணு அடிச்சவனுவதானே? இப்பம் என்னத்துக்கு வாறானுவ? ‘
சேரியில் ஹிந்து மதப் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. சொர்ணமலை தீபானந்தசாமி வந்து அனைவருக்கும் ஆசியளித்து, சாதி ஏதானாலும் ஹிந்து ஹிந்து தான் என்றார். ஒரே போடாக கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களே என்று அவர் கூறியது சற்று அதிகம் என்று பலர் அபிப்பிராயப் பட்டனர். சனாதன தருமம் என்றுமே அழிவற்றது என்று முழங்கினார். ஆகவே ஹிந்து மதத்தைக் காக்க இளைஞர்கள் முன்வரும்படி கண்ணீர் மல்க வேண்டினார். யாரும் மதம் மாறுதல் கூடாது என்று கெஞ்சினார். அப்பி பட்டு உடுத்தி, வாள் ஏந்தி, கூட்டுப் பஜனைக்கு வந்ததும், அங்கே தாதிங்க தெய் என்று ஆடியதும் பொதுவாக ரசிக்கப்படவில்லை. அவன் எரிப்பனில் முங்கி வந்திருந்தான். வீடு வீடாகச் சென்று விளக்குப் பூஜை செய்வது பற்றிக் கற்பிக்க சகோதரி சாந்தா யோகினி தலைமையில் மாமிகள் முன்வந்தனர். சேரிப் பிள்ளைகளுக்குப் போஜன மந்திரம் கற்பிக்கும் பணி எதிர்பார்த்ததை விடவும் மூன்று மாதம் அதிகமாக எடுத்துக் கொண்டது. சுற்றுப்புற ஊர்களில் எல்லாம் மாடனின் பெருமை பறைசாற்றப்பட்டு, ஜனங்கள் தரிசனம் செய்ய வந்தனர். புராணகதா சாகரம் அழகிய நம்பியாபிள்ளை வந்து திருவிளையாடல் புராணமும் திருப்புகழும் விரித்துரைத்தார். சுடலைமாடனின் உண்மையான வரலாறு அவரால் வெளிப்படுத்தப்பட்டது. தட்சன் யாகம் செய்தபோது தன்னை முறைப்படி அழைக்காததனாலும், பார்வதியை அவமானப்படுத்தியமையாலும் சினம் கொண்ட சிவபெருமான் நெற்றிக் கண் திறந்து, ஊழி நடனம் ஆடி, யாக சாலையை அழித்தார். அப்போது அவர் பிடுங்கி வீசிய சடைமுடிக் கற்றைகளிலிருந்து பத்ரகாளியும், வீரபத்திரனும் உதித்தனர். உதிரி மயிர்களில் இருந்து உதித்த அனேக கோடி பூதகணங்களில் ஒருவன்தான் மாடன் என்று அவர் அறிவித்தார். ‘சிவனின் மகனே போற்றி! சீரெழும் எழிலே போற்றி! சுடலை மாடா போற்றி! போற்றி! ‘ என்று அவர் நெக்குருகிப் பாடினார். இத்தனை நாள் கவனிப்பாரற்றுக் கிடந்த மாடன் கோவில் இனிமேலும் இப்படியே கிடக்கலாகாது என்று அவர் கூறினார். உடனே முறைப்படி பிரதிஷ்டை செய்து பூஜை புனஸ்காரதிகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நிதி வசூல் தொடங்கியது.
எதிர் முகாமிலும் நிதிவசூல் பரபரப்பாக நடைபெற்றது. சுயம்பு சிலுவையைத் தரிசிக்க வந்தவர்கள் தேங்காய், கோழி, சிலசமயம் ஆடு முதலானவற்றைத் தானம் செய்தனர். அவை அங்கேயே ஏலமிடப்பட்டன. இருசாரரும் சிலசமயம் கைலப்பில் இறங்கினாலும், பெரிதாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. பெரியதோர் தேவாலயம் அங்கு அமைக்கப்படும் என்று சபை அறிவித்தது. அங்கு அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன. நெய்யூரை சார்ந்த ஜெபமணி-எஸ்தர் தம்பதிகளின் குழந்தை சாம்சன் அருமைராசனுக்கு சிறுவயதிலேயே போலியோ வந்து நைந்துபோன கால் இங்கு வந்து கண்ணீருடன் முட்டிப்பாக ஜெபித்தபோது சரியாக ஆயிற்று. இதைப் போலவே திருச்சி அன்புசாமி, பாளையங்கோட்டை நத்தானியேல், வல்லவிளை அக்னீஸ் ஆகியோருக்கு வேலையும், ஞாறாம்விளை பாக்கியமுத்துவிற்கு லாட்டரியில் ஐநூறு ரூபாய் பரிசும், கிறிஸ்துராஜா நகர் ஹெலனா புரூட்டஸுக்கு பரிட்சையில் ஜெயமும் கர்த்தரின் வல்லமையினால் கிடைத்ததாக சாட்சி சொல்லப்பட்டது. ஞானப்பிரகாசம் அன்ட் சன்ஸின் ‘சுயம்பு கிறிஸ்துராஜா ஓட்டலும் ‘ பரமார்த்த நாடாரின் ‘மாடசாமித் துணை ஸ்டோர் வியாபாரமும்’ விருத்தி அடைந்தன. கலெக்டர் சம்சாரமே மாடனைக் கும்பிட வந்தாள். மறுநாளே திருநெல்வேலியில் இருந்து மந்திரி சம்சாரம் வந்து முழு இரவு எழுப்புதல் கூட்டத்தில் கலந்து கொண்டாள். பிஷப் வந்த அன்று அறுநூறு பேருக்கு அன்னதானமும், நூறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானமும் அளிக்கப்பட்டது.
மறுவருஷம் நடந்த இருமத சமரசக் கூட்டத்தில் தமிழ் தெரியாத கலெக்டர் உரையாற்றினார். ஆர்.டி.ஓ. தவசி முத்துப் பிள்ளை மேரியும் மாரியும் ஒன்றுதான் என்று பேசியதைப் பிஷப் ரசிக்கவில்லை என்று பிற்பாடு குறிப்பிடப்ப ட்டது. சர்வமத ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்றும், சுடலை மாடசாமிக் கோவில் தெருவின் கிழக்கு முனையிலும், சுயம்பு கிறிஸ்துராஜா ஆலயம் மேற்கு மூலையிலும் நிறுவப்பட வேண்டும் என்றும்; தர்க்க பூமி சர்க்காருக்கு விடப்படும் என்றும் மத ஒற்றுமை எக்காரணத்தாலும் தகர்க்கப்பட அனுமதிக்கலாகாது என்றும் ஏகமனதாக, ஒரு அபிப்பிராய வித்தியாச ஓட்டுடன், தீர்மானிக்கப்பட்டது. அசைவர்களுக்கு முயல் பிரியாணியும், பிறருக்கு வடை பாயாசத்துடன் சோறும் அரசுச் செலவில் வழங்கப்பட்டது. இரு சாரரும் போட்டோப் புன்னகையுடன் மறுநாளே தந்தி பேப்பரில் மைக்கறையாகத் தெரிய நேர்ந்தது. தருக்க பூமியில் ஒரு காந்தி சிலை நிறுவப்படும் என்ற முடிவை கலெக்டர் மறுவாரம் பலத்த கைதட்டலுக்கு இடையே, சேரியில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார். அந்தச் செலவை மாவட்ட கருவாடு மற்றும் கொப்பரை ஏற்றுமதியாளர் சங்கம் ஏற்கும் என்ற அதன் தலைவர் பச்சைமுத்து நாடார் மேடையில் ஒத்துக் கொண்ட இனிய நிகழ்ச்சியும் நடந்தேறியது.
நான்கு
******
இவ்வளவிற்கும் பிறகு தான் மாடன் கண் விழித்தது. அப்போது அது புது இடத்தில் இருந்தது. எதிரே கோயில் கட்டும் பணி வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சற்றுப் பெரிய கோவில்தான். மாடன் ஆறடி உயரமாயிற்றே. கோபுரம் வேறு. முன்பக்கம் பெரிய மண்டபம். இருபதடி உயர கர்ப்பக் கிருகம். பலிபீடம். மாடனுக்குக் கவலையாக இருந்தது. அப்பியைத் தேடிப் போவதா, பயலே வருவானா என்று இரண்டு நாளாகக் காத்திருந்தது. அப்போது அவனே வந்தான். உடம்பு பளபளவென்று இருந்தது. வாயில் செழிப்பாக வெற்றிலை. குடுமியில் நல்லெண்ணெய். ஷோக்காக இருந்தான்.
‘ஏம்பில காணுயதுக்கே இல்லியே’ என்றது மாடன்.
‘அனாத்தாதியும் வேய்; நான் எண்ணும் வந்து பாத்துக்கிட்டு தான் போறேன். நீருதான் மண்ணா கெடந்தீரு.’
‘பயந்து போட்டேன்டேய் அப்பி ‘ என்றது மாடன் அசமஞ்சமாக சிரித்தபடி.
‘பயருவீரு. ஒக்கெ ஓம்மச்சுட்டித்தான் பாத்துக்கிடும். இப்பம் எப்பிடி இருக்கேரு தெரியுமா? ‘
‘எப்படி? ‘
‘அடாடா, ஒரு கண்ணாடி இல்லாமப் போச்சே. சும்மா விஜெயகாந்த் வில்லன் வேசம் கெட்டினது மாதிரி இருக்கேரு. பட்டணத்திலேந்து வந்த பய. பெயிண்ட் வச்சு கீசியிருக்கான். உம்ம மீசையிருக்கே அடாடா . . . ‘
‘சத்தியமாட்டு ? ‘ என்று மீசையைத் தொட்டபடி மகிழ்ந்து கொண்டது மாடன்.
‘பின்னே என்ன ? இந்தால கோயிலு, எலக்ரிக் லைட். மாவெலத் தோரணம். பித்தளையில் மணி . . . ராஜபோகம்தேன். நம்ம மறந்திராதியும். ‘
‘மறப்பனா? ‘ என்றது மாடன் நன்றியுடன்.
அப்பி திடாரென்று அரைச் சிரிப்புடன் குரலைத் தாழ்த்தியவனாகக் குனிந்து ‘நீரு செவனுக்க பிள்ளையாமே? ‘ என்றான்.
மாடன் அதிர்ந்தது. ‘ஆரு சென்னா? ‘
‘ஆரு செல்லணுமோ அவியதான். புராணம் பிள்ளைதான் சென்னாரு. ‘
‘ஏனக்கு அறிஞ்சு கூடாம்; காட்டில பெறந்தவன் எண்ணு கேட்டிட்டுண்டு. அது காலம் கொற ஆச்சு. ‘
‘இருக்கும்வே ‘ அப்பி அருகே வந்தான். ‘இப்பம் நாமெல்லாம் இருக்கம், காட்டுக் குட்டியவதான? ஆரு கண்டா. நம்ம அப்பன்மாரு, ஏமான்மாரு இல்லை எண்ணு? அப்பம் கத அதாக்கும். ஹிஹிஹி . . . ‘
மாடனும் தர்ம சங்கடமாய்ச் சிரித்தது.
‘எதுக்கும் இப்பம் அவியளே செல்லியாச்சு, ஒம்ம அப்பன் செவன்தான் எண்ணு. வலிய கையாக்கும். ஒரு கெவுரவததான? பேயாம கமுக்கமாட்டு இருந்து போடும். ஒமக்கு என்னவே, இப்பம் நீரு ஏமான்மாருக்கும் சாமியில்லா? ‘
‘வெளையாடதடேய் அப்பி ‘ என்றது மாடன், வெட்கிச் சிரித்தபடி.
‘உம்மாண. இப்பம் பிள்ளைமாருவ என்ன, செட்டிய என்ன, நாயம்மாரு என்ன, அய்யமாரு என்ன . . . வாற சாதி சனமிருக்கே . . . அடாடா! பயலுவளுக்குப் பந்தாவும் பெகளவும் காணணும். பறப்பயவ வந்தா ஓரமாட்டு நின்னுகிட்டு பெய்யிடணும். இப்பம் பிரதிட்டெ பண்ணேல்ல. இன்னி அதுவும் ஆச்சிண்ணு சென்னா, நீருதான் கைலாசத்துக்கு வாரிசுண்ணு வச்சுக்கிடும். ‘
‘ஹெ . . . ஹெ . . . ஹெ . . . ‘ என்றது மாடன்.
‘இந்தச் சிரிப்ப மட்டும் வெளிய எடுக்காதியும், ஏமான் பயவ கண்டானுவண்ணு சென்னா அப்பமே எறக்கி வெளியில விட்டு போடுவானுவ. தெய்வமிண்ணா ஒரு மாதிரி மந்தஹாசமாட்டு இருக்கணும். இந்தால கையை இப்படிக் காட்டிக்கிட்டு…, வாளை ஓங்கப்பிடாது. மொறைச்சிப் பார்க்கப்பிடாது . . . ‘
‘என்னெளவுக்கு டோய் அப்பி இதொக்கெ ? ‘ மாடன் சங்கடத்துடன் கேட்டது.
‘என்ன செய்ய? காலம் மாறிப் போச்சு. நாமளும் மாறாம இருந்தா களியுமா? செல்லும்? கொஞ்சம் அட்ஜெஸ் செய்யும். போவப் போவச் செரியா போவும். அது நிக்கட்டு; இப்பம் நானறியாத்த வல்ல காரியத்திலயும் எறங்குதா மாடன்? ‘
‘நீ அறியாத்த காரியமா ? புண்ணில குத்தாத டேய் அப்பி. ‘
‘பின்ன இஞ்ச வாற பெண்ணுவளுக்கொக்கெ கெர்ப்பம் உண்டாவுதாமே? ‘
மாடன் திடுக்கிட்டது. ‘நான் ஒரு பாவமும் அறியல்ல டேய்; கண்ணாணை ஒன்னாணை . . . ‘ என்று பதறியது.
‘நாலு ஊருக்கு ஒரே பெரளி. பிள்ளையில்லாத்த மலடியொ இஞ்ச வாறாளுவ, பூஜை நடத்தியதுக்கு.’
‘நான் இஞ்ச என்னத்தக் கண்டேன்? லேய் அப்பி, எனக்கு இதொண்ணும் ஒட்டும் பிடிக்கேல்ல கேட்டியா? சும்மா இருக்கியவனுக்கு மேல, அதுமிதும் செல்லி பெரளி கெளப்பி விடுயதுண்ணா சென்னா, ஒரு மாதிரி அக்குறும்பா இல்ல இருக்குவு? ‘
‘விடும்; விடும் வேய் மாடா. ஒக்கெ அம்மிணிய. ஒரு கெவுரவம் தானேவேய் இதுவும்? நீரு பேயாம இரும். ‘
மாடன் சலிப்புடன் ‘அதென்ன டேய் என்னமோ சென்னியே, பிரதிட்டெ ? அதினி என்னெளவு டேய் வச்சு கெட்டப் போறாவ நம்ம தலைமேல ? ‘
‘மந்திரம் செல்லி யந்திரம் வச்சு அதுக்க மீத்த ஒம்ம தூக்கி வைப்பாவ. ‘
‘என்னத்துக்குடேய்? ‘ என்றது மாடன், பீதியுடன்.
‘நல்லதுக்குதேன். ஒமக்கு சக்தி வரண்டாமா வேய், அதுக்காச்சுட்டித்தான் எண்ணு வையும். ‘
‘சக்தியா? ‘
‘சக்திண்ணா பெலன். வலிய நம்பூரி வாறார். ‘
‘பிலெய் அப்பி; இந்தக் காடு போனப்பளே நமக்குப் பெலன் போச்சி. இன்னியிப்பம் என்னலேய் புத்தனாட்டு ஒரு பெலன்? ‘
‘அதொக்கெ பளைய கதையில்லா? இப்பமொக்கெ ஏதுவே காட்டுல சாமி? இப்பம் பட்டணம் சாமிக்குத்தான் வேய் பெலன். பட்டும், நகெயுமாட்டு போடுவாவ. படையல் போடுவாவ. எல்லாப் பெலனும் மேப்படி மந்திரத்தில இருக்குவேய். ‘
‘எனக்கும் போடுவாவளாடேய், நகெ? ‘ என்றது மாடன் கூர்ந்து.
‘கண்ணெப்பாரு. செம்மெ இருந்தீரு எண்ணு சென்னை போடம இருப்பினுமா? ‘
‘எலெய் அப்பி, நல்லதாட்டு ஒரு அட்டியெ பண்ணிப் போடச் செல்லுடேய் . . . ‘
‘போற போக்கப் பாத்தா ஏமான்மாரு ஒமக்குப் பூணூலே போட்டுருவானுவ எண்ணு தான் தோணுது. ஏதோ ஏளய மறக்காம இருந்தா போரும். ‘
‘நீ நம்ம ஆளுடேய் ‘ என்றது மாடன். ‘நான் எங்க இருந்தாலும் ஒன்னிய மறக்க மாட்டேன் பாத்துக்க . . . ‘
ஐந்து
****
உற்சாகமாய்த்தான் இருந்தது. கோவிலுக்கு முன் பெரிய பலிபீடம். அதைப் பார்த்த போதே மாடனுக்கு ஜொள்ளு ஊறியது. விசாலமாக முற்றம். முற்றம் நிறைய பலி! மீண்டும் பழைய நாட்கள்!
பழைய நாட்கள் புதுப் பொலிவுடன் திரும்புவது போலத் தான் தோன்றியது. கோவில் கட்டி முடிந்து, திறப்பு விழாவும் பிரதிஷ்டை மகா கர்மமும் நிச்சயிக்கப் பட்டது. உற்சாகம் கொண்ட ஜனத்திரள் வந்து குழுமியது. பொருட் காட்சிகள், தெருக் கடைகள், ரங்க ராட்டினம், நாலுதலை ஆடு, கம்பி சர்க்கஸ் என்று திருவிழாக் கோலாகலம். குழந்தைகள் முன்பு போலத் தன்மீது ஏறி விளையாட முடியாதது மாடனுககு என்னவோ போல இருந்தது. சுற்றியும் கம்பி வேலி போடப் பட்டிருந்தது. மந்திரியும், மகாதானபுரம் வைபவானந்த சரஸ்வதியும் வந்தனர். பூர்ண கும்ப மரியாதை, தங்கக் கிரீடம் வைத்து வரவேற்பு. சட்டையற்ற மேனியில் வியர்வையும் பூணூலும் நெளிய குடுமிக்காரர்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடினர். வளமுறைப்படி, நாயரும் பிள்ளையும் ஒரே சாதிதானா, இல்லை வேறு வேறா என்ற விவாதம் எழுப்பப்பட்டு, பார்க்கவன் நாயரின் பல், ஆனையப்ப பிள்ளையின் கண், விலக்கப் போன நடேச பிள்ளையின் மூக்கு ஆகியவை சேதமடைந்தன. நம்பூதிரியின் சகல ஜாதியினரையும் அதட்டினர். பிறர் முறைப்படி கீழே உள்ள ஜாதியினரை அதட்டினர். சர்க்கரைப் பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. ‘இந்தக் குடுமிப் பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ? சவத்தெளவு, எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . . ‘ என்று மாடன் வியந்து கொண்டது.
பெரிய நம்பூதிரி மைக் வைத்து, டேபிள் ஃபேன் ஓட, தூபம் வளர்த்து, அதில் நெய்யும் பிறவும் அவிஸாக்கி, இருபத்தி நாலு மணி நேர வேத கோஷத்தில் ஈடுபட்டிருந்தார். மணிக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருந்த அதன் அந்த மாற்ற மற்ற ராகம் குஞ்சன் மூப்பனின் பசுமாடு, தெரு முக்குச் சோனி நாய் ஆகியவற்றைப் பாதிப்படையச் செய்து தங்களை அறியாமலேயே அதே ராகத்தில் குரலெழுப்பும்படி அவற்றையும் மாற்றியது. மாடனின் பொறுமை கரைந்து கொண்டிருந்தது. யாரையாவது நாவாரத் திட்ட வேண்டும் போல இருந்தது. சுற்றிலும் கம்பிவேலி. ஜனத்திரள். அப்பியை வேறு காணவில்லை.
யந்திரபூஜை நடந்து கொண்டிருந்தபோது அப்பி வந்தான். மாடன் பிரகாசம் பெற்றது. அப்பியில் அந்த உற்சாகமான வாசனை வந்தது.
‘எரிப்பன் பெலமாடோய் அப்பி? ‘ என்றது மாடன்.
அப்பி பொல பொலவென்று அழுதுவிட்டான்.
‘ஏம்பிலேய் அப்பி? ‘ என்று மாடன் பதறியது.
‘நல்லாயிரும்; ஏழெயெ மறந்திராதியும்.’
‘என்னலேய் அப்பி, இப்பம் என்னத்துக்கு டேய் இப்பிடி கரையுதே? ‘ என்றது மாடன்.
‘உள்ளர விடமாட்டோமிண்ணு செல்லிப் போட்டாவ. ‘
‘மாடன் அதிர்ந்தது. ‘ஆரு? ‘
‘அய்யமாரு’
‘ஏம்பிலேய்? ‘
‘பிராமணங்க மட்டும்தேன் உள்ளே போலாமிண்ணு சென்னாவ. மந்திரம் போட்ட எடமில்லா? ‘
‘அப்பம் என்னையும் உள்ளார விடமாட்டானுவண்ணு செல்லு.’
‘நீரு எங்க? நீரு தெய்வமில்லா.’
மாடன் ஏதும் கூறவில்லை.
‘அப்பம் இனி எண்ணு காணுயது? ‘ என்று சற்று கழித்து, பேச்சை மாற்ற, கேட்டது.
‘நீரு வாருமே என்னைத்தேடி.’
‘பிலேய் அப்பி ‘ என்றது நெகிழ்ந்துபோன மாடன். ‘நான் எங்க இருந்தாலும் ஒனக்க மாடன் தாம்பில. ராத்திரி வாறேன். எரிப்பன் வாங்கி வயி. ‘
‘பைசா? ‘
‘பிரஜைகள் இவ்வளவு பேரு இருக்காவ? ‘
‘வயிறெரியப் பேயாதியும் வேய். அந்தாலப் பாத்தீரா உண்டியலு ? அண்டா மேதிரி இருக்கு. அதிலக் கொண்டு செண்ணு இடுதானுவ. மாடன்சாமிக்குத் தாறோம் உனக்கெதுக்கு இங்காவ. ‘
‘என்னலேய் அப்பி, இப்பிடியொக்கெ ஆயிப்போச்சு காரியங்க? ‘ என்றது மாடன்.
‘ஆருடா அது, மாடன் சாமியைத் தொடுறது? ‘ என்றது ஒரு குரல். பொன்னு முத்து நாடான் கம்புடன் ஓடிவந்தான்.
‘ஈனச்சாதிப் பயலே. சாமியைத் தொட்டா பேசுதே? ஏமான் ஏமான் ஓடி வாருங்க . . . ‘
ஸ்ரீகாரியம் ராமன் நாயரும், தர்மகர்த்தா கள்ளர்பிரான் பிள்ளையும் ஓடி வந்தனர்.
‘ஓடு நாயே. குடிச்சுப்புட்டு வந்திருக்கான். ஓடு. இந்தப் பக்கம் தலை காட்டினா கொண்ணு போடுவேன் ‘ என்றார் பிள்ளை.
‘கேடியாணு, மகாகேடியாணு ‘ என்று ராமன் நாயர் தர்மகர்த்தா பிள்ளையைச் சுற்றிக் குழையடித்தான்.
அப்பி தள்ளாடியபடி விலகி ஓடினான். இருமுறை விழுந்தான். தூரத்தில் நின்றபடி அவன் அழுவதும், மாடனை நோக்கிக் கையை நீட்டியபடி ஏதோ கூவுவதும் தெரிந்தது.
மாடனுக்கு மார்பை அடைத்தது. ஆயினும், அதன் மனம் விட்டுப் போகவில்லை. இன்னமும் ஒரே நம்பிக்கை பலிதான். எது எப்படியென்றாலும் இனி வருஷா வருஷம் கொடை உண்டு; பலி உண்டு. கும்பி கொதிக்கக் காத்திருக்க வேண்டியது இல்லை. அதுபோதும். அதற்காக எந்தக் கஷ்டத்துக்கு உள்ளாகவும் தயார்தான்.
வெயில் சாய ஆரம்பிக்கும்வரை பூஜையும் மந்திரச் சடங்குகளும் இருந்தன. அதன் தந்திரி நம்பூதிரி முன்னால் வர, ஒரு பெரிய கூட்டம் மாடனைச் சூழ்ந்தது. தூபப் புகையும், பூக்களும் மாடனுக்குத் தலைவலியைத் தந்த போதும்கூட மரியாதைகள் அதன் நொந்த மனசுக்கு சற்று ஆறுதலாகவே இருந்தன. பிற்பாடு மாடன் பெரிய கிரேன் ஒன்றின் உதவியுடன் தூக்கி உள்ளே கொண்டு செல்லப்பட்டு, யந்திர பீடத்தின்மீது அமர்த்தப்பட்டது.
மாடன் அறையை நோட்டம் விட்டது. நல்ல வசதியான அறைதான். ‘எலட்டிக்லைட் ‘ உண்டு. காற்றோட்டம் உண்டு. முக்கியமாக மழை பெய்தால் ஒழுகாது. திருப்தியுடன் தன் வாயைச் சப்பிக் கொண்டது. என்ன இழவு இது, பூஜைக்கு ஒரு முடிவே இல்லையா? சட்டு புட்டென்று பலியைக் கொண்டு வந்து படைக்க வேண்டியது தானே? எத்தனை வருஷமாகக் காத்திருப்பது. ஆக்கப் பொறுத்தாயிற்று, ஆறவும் பொறுத்து விடலாம்.
இரவான பிறகுதான் சகல பூஜைகளும் முடிந்தன. நம்பூதிரி குட்டிப் பட்டரை நோக்கிப் ‘பலி கொண்டு வாங்கோ ‘ என்றார். மாடனின் காதும், தொடர்ந்து சர்வாங்கமும் இனித்தன. அதன் ஆவல் உச்சத்தை அடைந்தது. தந்திரி நம்பூதிரி பலி மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார். ‘அவனும், அவனுக்க எளவெடுத்த மந்திரமும் ‘ என்று சபித்தபடி, பலிவரும் வழியையே பார்த்தது, மந்திரத்தினால் ஒரு மாதிரியாக ஆகி விட்டிருந்த மாடன்.
நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். ‘ஆருக்கு, எனக்கா ? ‘ என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது. வாளை ஓங்கியபடி, ‘அடேய் ‘ என்று வீரிட்டபடி, அது பாய்ந்து எழ முயன்றது. அசையவே முடியவில்லை. பாவி அய்யன் மந்திரத்தால் தன்னை யந்திர பீடத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டதை மாடன் பயங்கரமான பீதியுடன் உணர்ந்தது.
***
1989 ல் எழுதப்பட்டது .முதல் பிரசுரம் – 1991 புதிய நம்பிக்கை மும்மாத இதழில். திசைகளின் நடுவே தொகுப்பில் உள்ளது. [கவிதா பதிப்பகம் மறுபிரசுரம் 2002.]

          ஆடி மாதம், திதியை, சித்த யோகம் கூடிய சுபதினத்தில் சுடலை மாடசாமி விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக் கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின் மீது கீய்ஞ், கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து, பாதக்குறடு ஒலிக்கப் புறப்பட்டது. சேரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஒரு பயலுக்காவது இப்படி ஒரு தெய்வம், நடு ராத்திரி மையிருட்டில் பசியும், பாடுமாக அல்லாடுவதைப் பற்றிய பிரக்ஞை இல்லை. ‘வரட்டும் பாத்துக்கிடுதேன் ‘ என்று மாடன் கறுவிக் கொண்டது. இந்தக் காலத்தில் சில்லறைத் தொந்தரவுகளாவது தராமல் தேமே என்று இருக்கிற சாமியை எவன் மதிக்கிறான்? இப்படியே விட்டால் மீசையைக் கூட பீராய்ந்து கொண்டு போய் விடுவான்கள். இளிச்ச வாயன் என்ற பட்டமே தன்னை வைத்து ஏற்பட்ட மரபு தானோ என்ற சந்தேகம் மாடனுக்கு வந்தது.இருண்டதும், சாக்கடை தாறுமாறாக வெட்டி ஓடியதுமான தெருவில், பன்றிகளின் அமறல் ஒலித்தது. ஞைய்ங் என்று ஒரு பன்றிக்குட்டி, அன்னையைக் கூப்பிட்டது. மாடனுக்கு நாவில் நீர் ஊறியது.

 

          பன்றிக் கறி படைக்கப் பட்டு வருஷம் நாலாகிறது. வந்த உத்வேகத்தில் ஒன்றைப் பிடித்து லவட்டி விடலாமென்று தான் தோன்றியது. ஆனால் தலைவிதி; சாமியானாலும், சடங்குகளுக்குக் கட்டுப்பட்டக் கட்டை, பலியாக மானுடன் தந்தால் மட்டுமே வயிற்றுப் பாடு ஓயும். திடீரென்று ஒரு சவலை நாய் ‘ளொள்?’ என்ற சந்தேகப் பட்டது. தொடர்ந்து நாலா திசைகளிலும் இருட்டுக்குள், ‘ளொள், ளொள்? ‘ என்று விசாரிப்புகள் எழுந்தன. ஒரு பயந்தாங்குளி, அதற்குள் பிலாக்கணமே ஆரம்பித்து விட்டிருந்தது. சவலை நாசியைத் தூக்கி, மூசு மூசு என்று மோப்பம் பிடித்தது. மாடனை உணர்ந்ததும், ஒரே பாய்ச்சலாக வராண்டாவில் ஏறி நின்று, பாட ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து சேரியே ஊளையொலிகளினால் நிறைந்தது. சுடலை மாடசாமி பூசாரி அப்பியின் குடிசை முன் வந்து நின்றது. பிறகு கதவிடுக்கு வழியாக, ஊடுருவி உள்ளே போனது. இருட்டுக்குள் பூசாரி ‘தர்ர் தர்ர் ‘ என்று குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனைத் தன் பட்டாக் கத்தியால் நெற்றிப் பொட்டில் தொட்டு ‘பிளேய், எலெய் அப்பி; பிள்ளேய் . . . ‘ என்று கூப்பிட்டு எழுப்பியது மாடன். ஒரே உதையால், பயலின் தொப்பையை உடைக்குமளவு வெறி எழாமல் இல்லை. ஆனால் மரபு, என்ன செய்ய? மேலும் அப்பி பரமபக்தன். ‘எலேய் பிள்ளே எளிவில மக்கா ‘ என்றது மாடன்.

 

        அப்பி ‘ம்ம்ங் . . . ஜங் . . . சப் ஜப் . . . ‘ என்று சில ஒலிகளை வாயால் எழுப்பிவிட்டு, வரக் வரக் என்று சொறிந்து கொண்டான். நல்ல முங்கல். என்னது மசங்கின பனங்கள்ளா, எரிப்பனே தானா? மாடன் வாசனை பிடித்தது. பிறகு மீண்டும் எழுப்பியது. ஒரு வழியாகப் பூசாரி எழுந்து அமர்ந்தான். இருட்டில் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. ‘ஆரூ? ‘ என்றான். ‘நாந்தாம்பில’ என்றது மாடன்.‘ஆரு மாயனா? ஏம்பிலே இந்நேரத்துக்கு ‘ என்றபடி அப்பி வாயை விரியத் திறந்து, கொட்டாவி விட்டான். ‘பிலெய் நாறி; இது நாந்தாம்பில மாடன்!’ என்றது மாடன், பொறுமையிழந்து போய்.அப்பிக்குத் தூக்கம் போய்விட்டது. ‘ஓகோ ‘ என்றபடி எழுந்து அமர்ந்தான். ‘வாரும்; இரியும். என்ன காரிய மாட்டு வந்தீரு? ‘ என்றான்.‘காரியமென்ன குந்தம். பிலெய் அப்பி, நீயிப்பம் எனக்க காவுப் பக்க மாட்டு வந்து எம்பிடு நாளுபில ஆவுது ? ‘‘என்னவேய் ஒரு மேதிரி பேயறீரு? மிந்தா நேத்திக்கு வரேல்லியா? ‘‘வச்சு, காச்சிப்பிடுவேன் பாத்துக்க. பிலேய் அப்பி, நீயாட்டா வந்தே? கள்ளு வெள்ளமில்ல ஒன்ன கொண்டு வந்தது? பிலெய் நான் கேக்கியது என்ன, நீ சொல்லுயது என்ன ? ‘‘நீரே செல்லும் ஹாவ் . . . ‘ அப்பி சொடக்கு விட்டபடி வெற்றிலைப் பெட்டியைத் துழாவி எடுத்தான். ‘இருமே, வந்த காலிலே என்னத்துக்கு நிக்கிது ? ‘‘பிலேய் அப்பி, ஒண்ணு ரெண்டல்ல ஆயிரம் வரிய மாட்டு நின்னு கிட்டு இருக்குத காலாக்கும் இது; பாத்துக்க . . . ‘‘இருக்கட்டும் வேய், நமக்குள்ள என்னத்துக்கு இதொக்கெ ? இரியுமிண்ணே. ‘‘செரி, ஒனக்க இஷ்டம் ‘ என்றபடி மாடன் அமர்ந்தது.

 

       ‘யெக்கப்போ . . . நடுவு நோவுது டோய் அப்பி . . . இருந்து கொற காலமாச்சுல்லா. ‘‘செல்லும் வேய்; என்னவாக்கும் காரியங்க ? ‘ என்றான் அப்பி.‘என்னாண்ணு சென்னா, இப்பம் வரியம் மூணு ஆவுது கொடயாட்டு வல்லதும் கிட்டி. ‘அப்பி திடுக்கிட்டு, ‘அடப்பாவி . . . உள்ளதுதேன், நானும் மறந்துல்லா போனேன் ‘ என்றான்.‘பூசெ வல்லதும் நடத்துத எண்ணம் உண்டுமா? ‘‘என்னை என்னெளவுக்குக் கேக்குதீரு? நான் அங்க வந்து மோங்குயதுக்கு பகரம் நீரு இஞ்ச வந்து கண்ணீரு விடுதீராக்கும்? இஞ்ச இன்னத்த கோப்பு இருக்க, கொடை நடத்துயதுக்கு? ‘‘ஒனக்க கிட்ட ஆரு பிலேய் கேட்டது? நம்ம பிரஜைகளுக்குச் செல்லிப்போடு.’‘என்னது பிரஜைகளா? ஆருக்கு, ஒமக்கா? எளவுக்க கததேன் ஹெஹெ . . . ‘‘ஏம்பிலேய்? ‘ என்றது மாடன் அதிர்ச்சியடைந்து!‘அடக் கூறுகெட்ட மாடா ‘ என்று பூசாரி சிரித்தான். புகையிலையை அதக்கியபடி. ‘அப்பம் ஒமக்கு காரியங்களுக்க கெடப்பொண்ணும் அறிஞ்சூடாமெண்ணு செல்லும்.’‘என்னத்த அறியியேதுக்கு ? ‘‘இப்பம் சேரியில ஏளெட்டு பறக் குடிய விட்டா, பாக்கியொக்க மத்த சைடு பயவளாக்கும் பாத்துக்கிடும். ‘‘மத்தவனுவண்ணு சென்னா ? ‘‘வேதக்காரப் பயவளாக்கும்.’‘அவனுவ இஞ்ச எப்படி வந்தானுவ? ‘‘இஞ்ச ஆரும் வரேல்ல. ஒம்ம பிரஜைகள் தான் அங்க செண்ணு நாலாம் வேதம் வாங்கி முங்கினானுவ. ரெட்சணிய சேனேன்னு பேரு சவத்தெளவுக்கு. ‘‘அப்பிடி வரட்டு ‘ என்றது மாடன் ஏமாற்றமாக.‘அவியளுக்க சாமி உன்ன மாதிரி இல்ல.’‘வலிய வீரனோவ்? ‘‘ஒண்ணுமில்ல; தாடி வச்சுக்கிட்டு, பரங்கி மாம்பளம் கணக்கா ஒரு மேதிரிப் பாத்துக்கிட்டு, இருக்குதான். நெஞ்சில ஒரு கலயம் தீ போல எரிஞ்சுக்கிட்டு இருக்குது.

 

      ‘‘ஆயுதம் என்ன வச்சிருக்கானாம்?’‘நீரிப்பம் சண்டைக்கும், வளக்குக்கும் ஒண்ணும் போவாண்டாம். அவன் ஆளு வேற. வெள்ளக்காரனாக்கும்.’‘பரங்கியோ?’ மாடனின் சுருதி தளர்ந்தது.‘பின்னே? ராவிப் போடுவான். ஒமக்குக் கட்டாது. பேயாம காவில இருந்துப் போடும். ‘‘அப்பம் பின்ன கொடைக்கு என்னலேய் வளி ? கும்பி எரியுதே?’‘இஞ்ச பாரும். நீரு இப்பிடி மீசைல காக்காப்பீயும் வடிச்சு கிட்டு நின்னீருண்ணு சொன்னா ஒரு பய ஒம்ம மதிக்க மாட்டான்.’‘பின்னெயிப்பம் என்னலெய் செய்யணும் இங்கியே? ‘‘நாலு நீக்கம்பு, குரு எண்ணு எடுத்து வீசுமே. மத்த பயலுவ இப்பம் இஞ்ச வாறதில்ல. டவுணுக்கு செண்ணு கலர் வெள்ளமும் குளிகெயும் திங்கியானுவ. ஒம்ம நீக்கம்பு பரவி நாலு வேதக்காரனுவ தலெ விளணும். ஆத்தா, சாமி எண்ணு கரஞ்சிக்கிட்டு தாளி மவனுவ இஞ்ச ஓடிவரணும். மடிசீலயக் கிளிச்சுப் போட மாட்டானா ? அம்ம தாலிய அறுத்துப் போட மாட்டானா? எரப்பாளிப் பெயவ களிச்சினும். அப்பிக்க கிட்டயாக்கும் களி பாக்குதேன் . . . ‘‘தீவாளிப் பெகளத்திலயும் ஒனக்கு இட்டிலி யாவாரம் . . . ‘ என்றது மாடன், இளக்காரமாக.‘பின்னே ? நான் நல்லாயிருந்தாதானே ஒமக்கு ? ‘‘செரி பாக்குதேன். ‘‘பாக்கப்பிடாது; செய்யும். வாரி வீசும் நல்லா. மடி நெறய இருக்கே பண்டார வித்து. வரியம் பத்து ஆவுதில்லா. பயவ மறந்துப் போட்டானுவ மாடா. பேடிச்சாத் தான்லே இவிய வளிக்கு வருவினும். ‘‘செரி, வாறேன். ‘‘வேய் மாடா நில்லும் ‘ என்றான் அப்பி. ‘எளவ வாரிகிட்டு கால் பளக்கத்தில் இஞ்ச வந்திடாதியும். நாலெட்டு நீங்கி வீசும். ‘‘செரிலேய் அப்பி. பாக்கிலாம் ‘ என்றபடி மாடன் புறப்பட்டுச் சென்றது.‘வாளை மறந்து வச்சுக்கிட்டு போவுதீரே ? ‘‘வயதாச்சில்லியா ? ‘ என்றபடி மாடன் வந்து எடுத்துக்கொண்டது. ‘வரட்டுமா டேய் அப்பி. ‘‘நீரு தைரியமாட்டு போவும்வேய் மாடா . . . ‘ என்று அப்பி விடை கொடுத்தான். மீண்டும் புகையிலையை எடுத்தபடி.

 

         இரண்டு*******மாடன் போகும் வழியிலேயே தீர்மானித்து விட்டது. வேறு வழியில்லை. ஒரு ஆட்டம் போட்டுத்தான் தீர வேண்டியிருக்கிறது. அந்தக் காலத்தில் செயலாக இருந்து போது ரொம்பவும் சாடிக் குதித்த சாமிதான். காலம் இப்போது கலி காலம். காடு மேடெல்லாம் காணாமல் போய், எங்குப் பார்த்தாலும் வீடும், தார் ரோடும், சாக்கடையும், குழந்தைகளுமாக இருக்கிறது. முழு எருமை காவு வாங்கிய அந்தப் பொன்னாட்களில் இப்பகுதி பெரிய காடு. ஊடே நாலைந்து குடிசைகள். அப்பியின் முப்பாட்டா ஆண்டி மாதா மாதம் கொடை நடத்திப் பலி தந்ததும், அஜீர்ணம் வந்து பட்ட அவஸ்தைகளெல்லாம் மாடனின் மனசுக்குள் இன்னமும் பசுமையாகத் தான் இருக்கின்றன. என்ன செய்ய? ஆனானப்பட்ட திருவட்டார் ஆதிகேசவப் பெருமாளுக்கே அந்திப்படிக்கு முட்டு எனும்போது குட்டி சாமிக்கு என்ன கொட்டியா வைத்திருக்கிறது? ஏதோ இந்த மட்டும் அப்பியாவது விசுவாசமாக இருக்கிறானே!தன் கூடையின் விதைகளின் வீரியம் பற்றி மாடனுக்குச் சற்று சந்தேகம் தான். முன்பெல்லாம் காடும், வருடம் முழுக்க மழையும் இருந்தது. வீசியது என்றால் ஒன்றுக்குப் பத்தாக முளைக்கும். இப்போது இந்த வெயிலில், தார்ச்சாலையில் எவன் சட்டை செய்யப் போகிறான்? எனினும் கடமையைச் செய்து விடத் தீர்மானித்து, நள்ளிரவில் பாளைத் தாரை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியது. எது வேதக்காரன் வீடு, எது நம்மாள் வீடு என்று எப்படி அறிவது? குத்து மதிப்பாக வீசி வைத்தது. எதற்கும் ஜாக்ரதையாக அப்பியின் தெருப் பக்கமே போகவில்லை.

 

        தப்பித் தவறி ஏதாவது ஆயிற்றென்றால் சஸ்திரம் பண்ணிவிடுவான்.திரும்பி வந்து சப்பக் கொட்டிக்கொண்டு அமர்ந்தது. இரண்டு நாள் ஒன்றும் ஆகவில்லை. யாரும் திரும்பிப் பார்க்க வில்லை. மூன்றாம் நாள் சிகப்பு பட்டாடை கட்டி, சதங்கையும் வாளும் குலுங்க, வாயில் வெற்றிலைச் சாறு தளும்ப, அப்பி அவ்வழியாக அவசரமாகப் போனான்.‘எலேய் அப்பி, தூரமா? ‘ என்றான் மாடன்.அப்பிக்குக் கோபம் வந்தது. ‘என்னவேய் இப்பம்? ஒரு காரியமாட்டு போவும்பம் பெறவீண்ணு விளிச்சலாமா? சாமியானா சாத்திரம் மாறிப் போவுமோ? ‘‘மறந்து போட்டேம்பில ‘ என்றது மாடன் பரிதாபமாக.‘செரி செல்லும். என்னவாக்கும் அரிப்பு? ‘‘என்னலேய் ஆச்சு, நம்ம காரியங்க? ‘‘ஒலக்கெ ‘ என்று அப்பி கையைக் காட்டினான்.‘மொளைக்கியதுக்கு என்ன? நீக்கம்பு படந்திருக்கிய உள்ளதுதேன். ஆனா பிரயோசனம் இல்லியே. ‘‘என்னத்த? ‘ என்றது மாடன் புரியாமல்.‘அவனுவ வெள்ளைச் சட்டைக்காரனுவளை இஞ்சயே கொண்டாந்துட்டானுவ வேய். நம்ம பயவகூட அங்க செண்ணு கலர் வெள்ளமும், குளிகெயும் வாங்கித் திங்கியானுவ; பெறக்கிப் பய மவனுவ. நீரும் உம்ம வித்தும் . . . ‘மாடனுக்கு அய்யே என்று ஆகிவிட்டது. ‘நீயிப்பம் எங்க லேய் போறே ? ‘‘கஞ்சிக்கு வளி காணணுமே. நாலு வீடு செண்ணு மாடன மறந்து போடாதிய எண்ணு செல்லிப் பாக்குதேன். பத்துபேரு சிரிச்சுத் தள்ளினா ஒருத்தன் விள மாட்டானா ? இப்ப ராசப்பன் கெட்டினவ விளிச்சிருக்கா ‘ என்றான் அப்பி.‘கிடாய்க்கு வளியுண்டாடோய் ? ‘‘என்னது ? ‘மாடன் தணிந்த குரலில், ‘கிடா ‘ என்றது.‘கட்டேல போக! ‘அம்பது பைசா கோளிக் குஞ்சு ஒண்ணு போராதோ ‘ எண்ணு கேக்குதா அறுதலி. உமக்கு இஞ்ச கிடாய் கேக்குதோ ? ‘‘செரி விடு.

 

       எரிப்பனெங்கிலும் கொண்டு வா. அரக்குப்பி போரும். ‘‘எரியும், நல்லா எரியும். நான் வாறேன். வந்து பேயுதேன் ஒம்மக்கிட்டே. ‘மாலையில் களைத்துப் போன அப்பி வந்து சேந்தான். சோனிக் கோழி ஒன்றையும் கால் குப்பி எரிப்பனையும் படைத்தான்.நாக்கைச் சப்பியபடி மாடன் சொன்னது, ‘அமிர்தமாட்டு இருக்குடேய் அப்பி. ‘‘காலம் போற போக்கப் பாருமே. முளு எருமை முளுங்கின நீரு . . . ‘‘தின்னுக்கிட்டிருக்கும்பம் மனசக் கலக்குது மேதிரி பேயாதே டேய் அப்பி. கோளி அம்பிடுதேனா ? ‘‘இல்லை; நான் தின்னுட்டேன். என் குடலைப் பிடுங்கித் திங்கும். ‘‘கடேசில அதும் வேண்டி வரும் எண்ணுதான் தோணுது டேய் அப்பி ‘ மாடன் கட,கடவென்று சிரித்தது.அப்பி பயந்து போனான். எனினும் அதை வெளியே காட்டாமல் ‘பயக்கம் பேயுத மூஞ்சியப்பாரு; ஓவியந்தேன் ‘ என்று நொடித்தான்.மீசையைக் கோதியபடி மாடன் தலையை ஆட்டிச் சிரித்தது.‘அப்பம் இன்னி என்னவாக்கும் பிளான் ? ‘ என்றான் அப்பி.‘ஒறங்கணும் ‘ மாடன் சோம்பல் முறித்தது.‘சீருதேன். அடுத்த கொடைக்கு என்ன செய்யப் போறீரு எண்ணு கேட்டேன். ‘‘ஆமா, உள்ளதுதேன் ‘ என்றது மாடன் மந்தமாக.‘என்ன உள்ளது ? மீசயப்பாரு. தேளுவாலு கணக்கா, மண்டைக்குள்ளே என்னவேய் களிமண்ணா ? ‘‘பிலேய் அப்பி. எனக்க சரீரமே களிமண்ணுதானேல மக்கா.

 

        ஹெஹெஹெ . . . ‘‘அய்யோ, அய்யோ ‘ அப்பி தலையிலடித்துக் கொண்டான்.‘செரி இல்ல; நீ சொல்லு ‘ என்று மாடன்.‘இன்னியிப்பம் ஒமக்க வித்து எறியுத வேலயெல்லாம் பலிச்சுக்கிடாது. ‘‘உள்ளதுதேன். ‘‘வேற வளி வல்லதும் பாக்கணும். ‘‘வேற வளி பாக்கணும் ‘ என்றது மாடன் குழந்தை போல.‘அவியக்கிட்ட நம்ம காவையும் பார்த்துக்கிடச் சென்னா என்ன வேய்? ‘‘அவியள்லாம் இந்துக்க இல்லியா ? மாடனுக்கு அங்க என்ன டேய் காரியம்? ‘‘இவிய வேதத்தில் சேத்துக்கிடுகிடுவானுவ அப்பம் இந்துக்க அங்க சேக்க மாட்டினுமா? பிலேய் மாடா ஒண்ணி அங்க, இல்லெங்கி இஞ்ச; ரண்டுமில்லாம இன்னி நிக்கப் பளுதில்ல வேய். ‘‘ஒனக்க விருப்பம் போலச் செய்யி ‘ என்றது மாடன் நிர்க்கதியாக.‘எனக்க பிளான் என்னாண்ணு கேட்டியானா, ஒன்னய. மறிச்சுப் போட்டுட்டு இஞ்ச ஒரு சிலுவய நாட்டுவேன். அருவத்தில ரெட்சணிய பொரம் எண்ணு ஒரு போர்டும் எளுதி வச்சிடலாம் எண்ணு பாக்குதேன். ‘‘பாவி மட்டே; என்ன எளவுக்கு டேய் அப்பி இதொக்க ? ‘ என்றது. பீதியுடன் கேட்டது மாடன். ‘இப்பம் இப்படி நின்னுக்கிட்டாவது இருக்குதேன். மறிஞ்சா பின்ன எள ஒக்கும் எண்ணும் தோனேல்ல. ‘‘நீரு பயராதியும் வேய் மாடா; ஏமான் பெயவ ஒம்ம பொன்னு போல பாத்துக்கிடுவினும். ‘‘அதுக்கு ஏன் டேய் இதொக்கெ ? ‘‘வேய் மாடா, இப்பம் ஆதிகேசவன் கோவிலும் அம்மன் கோவிலுமொக்கெ எப்பிடி இருக்கு அறியிலாமா வேய் ? கொலு கொலுண்ணு வேய். வெளக்குக்கு வெளக்கென்ன; மந்திரமென்ன; நாலு சாமத்துக்கு பூசெ . . . கண்டாமணி . . . வரியத்துக்க மூணு திருவிளா, படையல் . . . கோளோட கோளுதான். இப்பம் இஞ்ச மகாதேவருக்கு ஸ்பீக்கரும் வாங்கப் போவினுமாம். நம்ம மகாதேவரு கோவிலிலே எம்பிடு கூட்டம் தெரியுமா? ‘‘அது என்ன லேய் ஸ்பீக்கறு? ‘‘காலம்பற பாட்டு போடுயதுக்கு. அதுக்க சத்தமிருக்கே, நூறுபறை கொட்டினா வராதுவேய்.

 

          நம்ம மூலயம் வீட்டு கொச்சேமான் கோபாலன் நாயருதான் அதுக்க பெரசரண்டு. ஒரு கூட்டம் ஏமான் பெயவ காக்கி டவுசரு இண்டோண்டு கசரத் எடுக்கணும். டவுசரு இட்டனுவ ஆறெஸ்ஸு. மத்தவனுவ இந்துமின்னணி. ‘‘அங்க கோளி உண்டோவ் ? ‘‘அரிஞ்சுப் போடுவேன் பாத்துக்கிடும். நான் இஞ்ச மினக்கெட்டு யோசனை செய்யுதேன்; நீரு கோளியிலே இருக்குதீராக்கும். ‘‘இப்பம் என்னலேய் செய்யப் போறே ? ‘ என்று மாடன் அலுப்புடன் கேட்டது.‘ஏமான் பெயவளுக்கு ஒரு சொரனை வரட்டும் எண்ணுதேன் வேய். அவியளுக்கு வேற என்னத்த செய்தாலும் சகிக்கும், பேர மாத்தினா மட்டும் விடமாட்டானுவ ‘ என்றான் அப்பி.‘என்னெளவோ, எனக்கொண்ணும் செரியா தோணேல்ல. ஒனக்க இஸ்டம் ‘ என்றது மாடன்.‘நீரு தைரிய மாட்டு இரும் வேய் மாடா. நான் என்னத்துக்கு இருக்குதேன் ? ஒமக்கொண்ணு எண்ணு சென்னா நான் விட்டுருவேனா ? ‘‘எனக்கு நீயில்லாம ஆரும் இல்லலேய் அப்பி ‘ மாடன் தழுதழுத்தது.‘நான் உம்ம விட்டுட்டு போவமாட்டேன் வேய் மாடா பயராதியும் ‘ அப்பி மாடனைத் தோளில் தட்டிச் சமாதானம் செய்தான். ‘இப்பம் என்னத்துக்கு மோங்குதீரு ? வேய் இஞ்ச பாரும், ஏமான் பெயவ ஒமக்கு நல்ல முளுக் கிடாய வெட்டி பலி போடாம இருப்பினுமா ? என்னது, முளுக்கிடா . . . பாத்தீரா சிரிக்குதீரு. ‘மாடன் சோகமான முகத்துடன் சிரித்தது. அப்பியும் உரக்கச் சிரித்தான். புட்டியில் எஞ்சியிருந்த ஓரிரு துளி எரிப்பனையும் அண்ணாந்து நாக்கு நீட்டி அதில் விட்டுக் கொண்டான்.மூன்று****அப்பால் நடந்ததெல்லாம் மாடனுக்குத் சரியாகத் தெரியாது.

 

        குட்டி தேவதையாக இருந்தாலும் அதுவும் கடவுள்தானே! தன்னை மீறிய சம்பவங்களின் போது கல்லாகி விடுதல் என்ற பொது விதியிலிருந்து அது மட்டும் எப்படித் தப்ப முடியும் ? அன்றிரவு அப்பி மாடனைப் புரட்டிப் போட்டு, பீடத்தின்மீது மரச்சிலுவை ஒன்றையும் நட்டு விட்டுப் போனான். மாடனுக்கு மார்பை அடைத்தது. எத்தனை தலைமுறைகளைக் கண்டது. கடைசியில் பசிக் கொடுமையில் நாடகம் போட வேண்டிய நிலை வந்துவிட்டது. ஏதோ எல்லாம் ஒழுங்காக நடந்தேறி, வருஷா வருஷம் கொடை மட்டும் முறையாக கிடைத்துத் தொலைத்தால் போதும். கும்பி ஆறினால் அது ஏன் வேறு வம்புகளில் தலையிடப் போகிறது?மாடன் படுத்தபடியே, வாளைக் கிடையாகப் பிடித்தபடி, உருட்டி விழித்து இளித்தது. மழை பெய்து தொலைக்குமோ என்று பயம் வந்தது. கூரையும் இல்லை . . . ஜலசமாதிதான் கதி.அப்பி மறுநாள் காலையிலேயே வந்து விட்டான். குய்யோ. முறையோ என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதான். பழைய பறையர்கள் சிலருக்கு ஞானோதயம் வந்து, மாடனைத் தரிசிக்க ஓடோடி வந்தனர். முத்தம்மா கிழவி உடனே ஒப்பாரி பாடும் நட்சத்திரம்மாவுக்கு தகவல் சொல்ல அவளும், பரிவாரங்களும் வந்திறங்கி சுருதி கூட்டி, லய சுத்தமாக குரல் எழுப்ப, கூட்டம் களை கட்டிவிட்டது. அப்பிக்கே பயங்கரமான சோகம் வந்துவிட்டது.

 

       மாடனின் காம்பீர்யம் அந்நிலையிலும் ஜ்வலிப்பதாய் சிலர் புல்லரித்தனர். ஒரு சில வேதக்கார ஆசாமிகளும் வந்து எட்டி நின்று பார்த்தனர். என்ன இதெல்லாம் என்று அவர்களுக்குப் புரியவேயில்லை. மாடனின் வீழ்ச்சியில் அவர்களுடைய பரம்பரை மனம் நோகத்தான் செய்தது. எவனோ வம்புக்காரப் பயல் செய்த வினை; மாடனின் பீடத்திலே சிலுவைக்க என்ன வேலை என்று கருதிய எட்வர்டு என்ற முத்தன் அப்பிக்கு ஒரு கை கொடுத்து மாடனைத் தூக்கி நிறுத்த உதவ முன்வந்தான்.அப்பி ஆக்ரோஷம் கொண்டான். ‘ச்சீ மாறி நில்லுலே, மிலேச்சப் பயல. மாடன் சாமியைத் தள்ளிப் போட்ட பாவி. ஒனக்க கொலம் வெளங்குமாவிலே ? ‘எட்வர்டு முத்தன் தயங்கினான். ‘ஆருலே தள்ளிப் போட்டது ? ‘‘நீதாம்பிலே. ஒங்க கூட்டம் தாம்பிலே தள்ளிப் போட்டது ‘ மடேரென்று மார்பில் ஓங்கி அறைந்தபடி அப்பி கூவினான்.‘பிலேய் ஆரு வேணுமெங்கிலும் போங்கலேய். பால்ப் பொடியும், கோதம்பும் குடுத்து அப்பிய வளைக்க ஒக்காதுலேய். நான் இருக்க வரைக்கும் ஒரு பயலும் மாடனைத் தொட விடமாட்டேம்பிலேய் . . . ‘வார்த்தை தடித்தது. குட்டிக் கைகலப்பு ஒன்று நடந்தது. இரு தரப்பினரும் விலக்கப்பட்டனர். அப்பி திங்கு திங்கென்று குதித்து, சன்னதம் கொண்டு ஆடினான்.உபதேசி குரியன் தோமஸ் கூறினான், ‘அதொக்கெ செரிதன்னே அப்பி, குரிசில் மாத்திரம் தொடண்டா. அது சுயம்பாணு. ‘சேரியே கலகலத்தது.

 

       சுயம்பு சிலுவை உதயமான சேதி அண்டை அயலுக்குப் பரவி ஊழியக்காரர்களும்ம் விசுவாசிகளும் குழுமத் தொடங்கினார்கள். கட்டைக் குரலில் குரியன் தோமஸ், ‘எந்ததிசயமே தெய்வத்தின் சினேகம் ‘ என்று பாட, தெருவில் சப்பணமிட்டு அமர்ந்த மீட்கப்பட்ட மந்தைகள் ஜால்ரா தட்டித் தொடர்ந்து பாடின. பரமார்த்த நாடார் அங்கே உடனே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை திறந்தார். ஞானப் பிரகாசத்தின் சுக்குக் காப்பித் தூக்கும் வந்து சேர்ந்தது. வெள்ளைச் சேலையைக் கழுத்து மூடப் போர்த்திய, கணுக்கை மூடிய ஜாக்கெட் தரித்த, வெற்று நெற்றியும் வெளிறிய முகமும் கொண்ட, தேவ ஊழியப் பெண்கள், பக்திப் பரவசத்தில் அழுதார்கள். குழந்தைகள் ஒன்றுக்கிருந்தும், வீரிட்டலறியும் களைகூட்டின. மீதமிருந்த ஆறு அஞ்ஞானிக் குடும்பங்களும் மீட்கப் படுதலுக்கு உள்ளாகி விடலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தபோது கார் நிறைய ஏமான்கள் வந்திறங்கினர்.காதிலே அரளிப்பூ செருகி, சந்தனக் குங்குமப் பொட்டு போட்டு, சிவந்த ராக்கி நூலைக் மணிக்கட்டில் கட்டி, காவி வேட்டியும் சட்டையுமாக வந்த கோபாலன் நேராக அப்பியை அணுகினான். அப்பி அப்படியே சரிந்து ஏமானின் கால்களில் விழுந்தான். ரட்சணியபுரம் என்று கிறுக்கப் பட்டிருந்த பலகையையும், சிலுவையையும் கோபாலன் புருவம் சுருங்க உற்றுப் பார்த்தான்.‘ஆரும் ஒண்ணையும் தொடப்பிடாது. எங்க அண்ணாச்சி? பாத்துக்கிடுங்க. நான் போலீசோட வாறேன்

 

        ’பஜனைக் குழுவில் அமைதி கலைந்தது. ‘ஓடுலே காவிரியேலு . . . ஓடிச் செண்ணு வலிய பாஸ்டர வரச் செல்லு ‘ என்றார் டாக்கனார் வேலாண்டி மைக்கேல்.ரகளை தொடங்கிவிட்டது என்று மாடன் அறிந்தது. கண்ணை மூடியது; அப்பியும் ஜாக்ரதையாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தான். பிறகு அவனை அப்பக்கமாகக் காணவில்லை.போலீஸ் வந்தது. தொடர்ந்து பெரிய பாஸ்டர் அங்கி பளபளக்க வந்து சேர்ந்தார். சிலுவையைப் போலீஸ் அகற்ற வேண்டும் என்று குங்குமப் பொட்டுக்காரர்களும், அது சுயம்பு எனவே அங்கேயே இருக்கட்டும் என்று பாதிரியாரும் வற்புறுத்தினர். போலீஸ் குழம்பியது. கடைசியில் முரட்டுத்தனமான லத்திச் சார்ஜ் வரை சங்கதிகள் சென்றடைந்தன. டேனியல் குஞ்சனுக்கு மண்டையும், எஸ்தர் சின்னப் பொண்ணுக்கு முழங்காலும் உடைய நேர்ந்தது.தொடர்ந்து மூன்று நாட்கள் மாடனுக்குப் போலீஸ் காவல். சேரியிலும் சந்தையிலும். அடிதடியும் கொலையும் தண்ணீர் பட்டபாடு ஆயின. மொத்தம் ஏழு என்றார்கள். பாக்கி தொண்ணூற்று மூன்றை நதியில் வீசிவிட்டார்கள் என்றது வதந்தி. அப்பியைக் கண்ணிலே காணவில்லை. போலீஸ் துப்பாக்கிச் சூடு, சமாதானப் பேரணி, நூற்றி நாற்பத்து நாலு, ஆர்.டி.ஓ. விசாரணை, நீதி கேட்டு உண்ணாவிரதம், போஸ்டர் யுத்தம், மந்திரி வருகை, சேலை தானம், சர்வ கட்சி சமாதானக் கூட்டம்,சர்வ மதத் தலைவர்கள் அறிக்கை என்று சரித்திர வழமைப்படி சம்பவங்கள் நடந்தேறின.

 

       சமாதானப் பேச்சு வார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் உடன் பாடானது. தொடர்ந்து ஆள்பிடிக்கும் வேட்டை. ‘என்ன இருந்தாலும் அவிய ஏமான்மாருங்க. பறப்பய எண்ணும் பறப்பயதான்’ என்று பாதிரியார் வீடுவீடாகச் சென்று உபதேசம் செய்தார். ‘மறந்து போச்சா பளைய கதையொக்கெ? அங்க வலிய கோவில் பக்கமாட்டு உங்களயொக்கெ போவ விடுவனுமா? அவிய செத்தா நீங்க மொட்ட போடணும் எண்ணு அடிச்சவனுவதானே? இப்பம் என்னத்துக்கு வாறானுவ? ‘சேரியில் ஹிந்து மதப் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. சொர்ணமலை தீபானந்தசாமி வந்து அனைவருக்கும் ஆசியளித்து, சாதி ஏதானாலும் ஹிந்து ஹிந்து தான் என்றார். ஒரே போடாக கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களே என்று அவர் கூறியது சற்று அதிகம் என்று பலர் அபிப்பிராயப் பட்டனர். சனாதன தருமம் என்றுமே அழிவற்றது என்று முழங்கினார். ஆகவே ஹிந்து மதத்தைக் காக்க இளைஞர்கள் முன்வரும்படி கண்ணீர் மல்க வேண்டினார். யாரும் மதம் மாறுதல் கூடாது என்று கெஞ்சினார். அப்பி பட்டு உடுத்தி, வாள் ஏந்தி, கூட்டுப் பஜனைக்கு வந்ததும், அங்கே தாதிங்க தெய் என்று ஆடியதும் பொதுவாக ரசிக்கப்படவில்லை. அவன் எரிப்பனில் முங்கி வந்திருந்தான். வீடு வீடாகச் சென்று விளக்குப் பூஜை செய்வது பற்றிக் கற்பிக்க சகோதரி சாந்தா யோகினி தலைமையில் மாமிகள் முன்வந்தனர். சேரிப் பிள்ளைகளுக்குப் போஜன மந்திரம் கற்பிக்கும் பணி எதிர்பார்த்ததை விடவும் மூன்று மாதம் அதிகமாக எடுத்துக் கொண்டது.

 

       சுற்றுப்புற ஊர்களில் எல்லாம் மாடனின் பெருமை பறைசாற்றப்பட்டு, ஜனங்கள் தரிசனம் செய்ய வந்தனர். புராணகதா சாகரம் அழகிய நம்பியாபிள்ளை வந்து திருவிளையாடல் புராணமும் திருப்புகழும் விரித்துரைத்தார். சுடலைமாடனின் உண்மையான வரலாறு அவரால் வெளிப்படுத்தப்பட்டது. தட்சன் யாகம் செய்தபோது தன்னை முறைப்படி அழைக்காததனாலும், பார்வதியை அவமானப்படுத்தியமையாலும் சினம் கொண்ட சிவபெருமான் நெற்றிக் கண் திறந்து, ஊழி நடனம் ஆடி, யாக சாலையை அழித்தார். அப்போது அவர் பிடுங்கி வீசிய சடைமுடிக் கற்றைகளிலிருந்து பத்ரகாளியும், வீரபத்திரனும் உதித்தனர். உதிரி மயிர்களில் இருந்து உதித்த அனேக கோடி பூதகணங்களில் ஒருவன்தான் மாடன் என்று அவர் அறிவித்தார். ‘சிவனின் மகனே போற்றி! சீரெழும் எழிலே போற்றி! சுடலை மாடா போற்றி! போற்றி! ‘ என்று அவர் நெக்குருகிப் பாடினார். இத்தனை நாள் கவனிப்பாரற்றுக் கிடந்த மாடன் கோவில் இனிமேலும் இப்படியே கிடக்கலாகாது என்று அவர் கூறினார். உடனே முறைப்படி பிரதிஷ்டை செய்து பூஜை புனஸ்காரதிகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நிதி வசூல் தொடங்கியது.எதிர் முகாமிலும் நிதிவசூல் பரபரப்பாக நடைபெற்றது. சுயம்பு சிலுவையைத் தரிசிக்க வந்தவர்கள் தேங்காய், கோழி, சிலசமயம் ஆடு முதலானவற்றைத் தானம் செய்தனர். அவை அங்கேயே ஏலமிடப்பட்டன. இருசாரரும் சிலசமயம் கைலப்பில் இறங்கினாலும், பெரிதாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

 

        பெரியதோர் தேவாலயம் அங்கு அமைக்கப்படும் என்று சபை அறிவித்தது. அங்கு அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன. நெய்யூரை சார்ந்த ஜெபமணி-எஸ்தர் தம்பதிகளின் குழந்தை சாம்சன் அருமைராசனுக்கு சிறுவயதிலேயே போலியோ வந்து நைந்துபோன கால் இங்கு வந்து கண்ணீருடன் முட்டிப்பாக ஜெபித்தபோது சரியாக ஆயிற்று. இதைப் போலவே திருச்சி அன்புசாமி, பாளையங்கோட்டை நத்தானியேல், வல்லவிளை அக்னீஸ் ஆகியோருக்கு வேலையும், ஞாறாம்விளை பாக்கியமுத்துவிற்கு லாட்டரியில் ஐநூறு ரூபாய் பரிசும், கிறிஸ்துராஜா நகர் ஹெலனா புரூட்டஸுக்கு பரிட்சையில் ஜெயமும் கர்த்தரின் வல்லமையினால் கிடைத்ததாக சாட்சி சொல்லப்பட்டது. ஞானப்பிரகாசம் அன்ட் சன்ஸின் ‘சுயம்பு கிறிஸ்துராஜா ஓட்டலும் ‘ பரமார்த்த நாடாரின் ‘மாடசாமித் துணை ஸ்டோர் வியாபாரமும்’ விருத்தி அடைந்தன. கலெக்டர் சம்சாரமே மாடனைக் கும்பிட வந்தாள். மறுநாளே திருநெல்வேலியில் இருந்து மந்திரி சம்சாரம் வந்து முழு இரவு எழுப்புதல் கூட்டத்தில் கலந்து கொண்டாள். பிஷப் வந்த அன்று அறுநூறு பேருக்கு அன்னதானமும், நூறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானமும் அளிக்கப்பட்டது.மறுவருஷம் நடந்த இருமத சமரசக் கூட்டத்தில் தமிழ் தெரியாத கலெக்டர் உரையாற்றினார். ஆர்.டி.ஓ. தவசி முத்துப் பிள்ளை மேரியும் மாரியும் ஒன்றுதான் என்று பேசியதைப் பிஷப் ரசிக்கவில்லை என்று பிற்பாடு குறிப்பிடப்ப ட்டது.

 

          சர்வமத ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்றும், சுடலை மாடசாமிக் கோவில் தெருவின் கிழக்கு முனையிலும், சுயம்பு கிறிஸ்துராஜா ஆலயம் மேற்கு மூலையிலும் நிறுவப்பட வேண்டும் என்றும்; தர்க்க பூமி சர்க்காருக்கு விடப்படும் என்றும் மத ஒற்றுமை எக்காரணத்தாலும் தகர்க்கப்பட அனுமதிக்கலாகாது என்றும் ஏகமனதாக, ஒரு அபிப்பிராய வித்தியாச ஓட்டுடன், தீர்மானிக்கப்பட்டது. அசைவர்களுக்கு முயல் பிரியாணியும், பிறருக்கு வடை பாயாசத்துடன் சோறும் அரசுச் செலவில் வழங்கப்பட்டது. இரு சாரரும் போட்டோப் புன்னகையுடன் மறுநாளே தந்தி பேப்பரில் மைக்கறையாகத் தெரிய நேர்ந்தது. தருக்க பூமியில் ஒரு காந்தி சிலை நிறுவப்படும் என்ற முடிவை கலெக்டர் மறுவாரம் பலத்த கைதட்டலுக்கு இடையே, சேரியில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார். அந்தச் செலவை மாவட்ட கருவாடு மற்றும் கொப்பரை ஏற்றுமதியாளர் சங்கம் ஏற்கும் என்ற அதன் தலைவர் பச்சைமுத்து நாடார் மேடையில் ஒத்துக் கொண்ட இனிய நிகழ்ச்சியும் நடந்தேறியது.நான்கு******இவ்வளவிற்கும் பிறகு தான் மாடன் கண் விழித்தது. அப்போது அது புது இடத்தில் இருந்தது. எதிரே கோயில் கட்டும் பணி வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சற்றுப் பெரிய கோவில்தான். மாடன் ஆறடி உயரமாயிற்றே. கோபுரம் வேறு. முன்பக்கம் பெரிய மண்டபம். இருபதடி உயர கர்ப்பக் கிருகம். பலிபீடம். மாடனுக்குக் கவலையாக இருந்தது. அப்பியைத் தேடிப் போவதா, பயலே வருவானா என்று இரண்டு நாளாகக் காத்திருந்தது. அப்போது அவனே வந்தான்.

 

           உடம்பு பளபளவென்று இருந்தது. வாயில் செழிப்பாக வெற்றிலை. குடுமியில் நல்லெண்ணெய். ஷோக்காக இருந்தான்.‘ஏம்பில காணுயதுக்கே இல்லியே’ என்றது மாடன்.‘அனாத்தாதியும் வேய்; நான் எண்ணும் வந்து பாத்துக்கிட்டு தான் போறேன். நீருதான் மண்ணா கெடந்தீரு.’‘பயந்து போட்டேன்டேய் அப்பி ‘ என்றது மாடன் அசமஞ்சமாக சிரித்தபடி.‘பயருவீரு. ஒக்கெ ஓம்மச்சுட்டித்தான் பாத்துக்கிடும். இப்பம் எப்பிடி இருக்கேரு தெரியுமா? ‘‘எப்படி? ‘‘அடாடா, ஒரு கண்ணாடி இல்லாமப் போச்சே. சும்மா விஜெயகாந்த் வில்லன் வேசம் கெட்டினது மாதிரி இருக்கேரு. பட்டணத்திலேந்து வந்த பய. பெயிண்ட் வச்சு கீசியிருக்கான். உம்ம மீசையிருக்கே அடாடா . . . ‘‘சத்தியமாட்டு ? ‘ என்று மீசையைத் தொட்டபடி மகிழ்ந்து கொண்டது மாடன்.‘பின்னே என்ன ? இந்தால கோயிலு, எலக்ரிக் லைட். மாவெலத் தோரணம். பித்தளையில் மணி . . . ராஜபோகம்தேன். நம்ம மறந்திராதியும். ‘‘மறப்பனா? ‘ என்றது மாடன் நன்றியுடன்.அப்பி திடாரென்று அரைச் சிரிப்புடன் குரலைத் தாழ்த்தியவனாகக் குனிந்து ‘நீரு செவனுக்க பிள்ளையாமே? ‘ என்றான்.மாடன் அதிர்ந்தது. ‘ஆரு சென்னா? ‘‘ஆரு செல்லணுமோ அவியதான். புராணம் பிள்ளைதான் சென்னாரு. ‘‘ஏனக்கு அறிஞ்சு கூடாம்; காட்டில பெறந்தவன் எண்ணு கேட்டிட்டுண்டு. அது காலம் கொற ஆச்சு. ‘‘இருக்கும்வே ‘ அப்பி அருகே வந்தான். ‘இப்பம் நாமெல்லாம் இருக்கம், காட்டுக் குட்டியவதான? ஆரு கண்டா. நம்ம அப்பன்மாரு, ஏமான்மாரு இல்லை எண்ணு? அப்பம் கத அதாக்கும். ஹிஹிஹி . . . ‘மாடனும் தர்ம சங்கடமாய்ச் சிரித்தது.‘எதுக்கும் இப்பம் அவியளே செல்லியாச்சு, ஒம்ம அப்பன் செவன்தான் எண்ணு. வலிய கையாக்கும். ஒரு கெவுரவததான? பேயாம கமுக்கமாட்டு இருந்து போடும்.

 

           ஒமக்கு என்னவே, இப்பம் நீரு ஏமான்மாருக்கும் சாமியில்லா? ‘‘வெளையாடதடேய் அப்பி ‘ என்றது மாடன், வெட்கிச் சிரித்தபடி.‘உம்மாண. இப்பம் பிள்ளைமாருவ என்ன, செட்டிய என்ன, நாயம்மாரு என்ன, அய்யமாரு என்ன . . . வாற சாதி சனமிருக்கே . . . அடாடா! பயலுவளுக்குப் பந்தாவும் பெகளவும் காணணும். பறப்பயவ வந்தா ஓரமாட்டு நின்னுகிட்டு பெய்யிடணும். இப்பம் பிரதிட்டெ பண்ணேல்ல. இன்னி அதுவும் ஆச்சிண்ணு சென்னா, நீருதான் கைலாசத்துக்கு வாரிசுண்ணு வச்சுக்கிடும். ‘‘ஹெ . . . ஹெ . . . ஹெ . . . ‘ என்றது மாடன்.‘இந்தச் சிரிப்ப மட்டும் வெளிய எடுக்காதியும், ஏமான் பயவ கண்டானுவண்ணு சென்னா அப்பமே எறக்கி வெளியில விட்டு போடுவானுவ. தெய்வமிண்ணா ஒரு மாதிரி மந்தஹாசமாட்டு இருக்கணும். இந்தால கையை இப்படிக் காட்டிக்கிட்டு…, வாளை ஓங்கப்பிடாது. மொறைச்சிப் பார்க்கப்பிடாது . . . ‘‘என்னெளவுக்கு டோய் அப்பி இதொக்கெ ? ‘ மாடன் சங்கடத்துடன் கேட்டது.‘என்ன செய்ய? காலம் மாறிப் போச்சு. நாமளும் மாறாம இருந்தா களியுமா? செல்லும்? கொஞ்சம் அட்ஜெஸ் செய்யும். போவப் போவச் செரியா போவும். அது நிக்கட்டு; இப்பம் நானறியாத்த வல்ல காரியத்திலயும் எறங்குதா மாடன்? ‘‘நீ அறியாத்த காரியமா ? புண்ணில குத்தாத டேய் அப்பி. ‘‘பின்ன இஞ்ச வாற பெண்ணுவளுக்கொக்கெ கெர்ப்பம் உண்டாவுதாமே? ‘மாடன் திடுக்கிட்டது. ‘நான் ஒரு பாவமும் அறியல்ல டேய்; கண்ணாணை ஒன்னாணை . . . ‘ என்று பதறியது.‘நாலு ஊருக்கு ஒரே பெரளி.

 

        பிள்ளையில்லாத்த மலடியொ இஞ்ச வாறாளுவ, பூஜை நடத்தியதுக்கு.’‘நான் இஞ்ச என்னத்தக் கண்டேன்? லேய் அப்பி, எனக்கு இதொண்ணும் ஒட்டும் பிடிக்கேல்ல கேட்டியா? சும்மா இருக்கியவனுக்கு மேல, அதுமிதும் செல்லி பெரளி கெளப்பி விடுயதுண்ணா சென்னா, ஒரு மாதிரி அக்குறும்பா இல்ல இருக்குவு? ‘‘விடும்; விடும் வேய் மாடா. ஒக்கெ அம்மிணிய. ஒரு கெவுரவம் தானேவேய் இதுவும்? நீரு பேயாம இரும். ‘மாடன் சலிப்புடன் ‘அதென்ன டேய் என்னமோ சென்னியே, பிரதிட்டெ ? அதினி என்னெளவு டேய் வச்சு கெட்டப் போறாவ நம்ம தலைமேல ? ‘‘மந்திரம் செல்லி யந்திரம் வச்சு அதுக்க மீத்த ஒம்ம தூக்கி வைப்பாவ. ‘‘என்னத்துக்குடேய்? ‘ என்றது மாடன், பீதியுடன்.‘நல்லதுக்குதேன். ஒமக்கு சக்தி வரண்டாமா வேய், அதுக்காச்சுட்டித்தான் எண்ணு வையும். ‘‘சக்தியா? ‘‘சக்திண்ணா பெலன். வலிய நம்பூரி வாறார். ‘‘பிலெய் அப்பி; இந்தக் காடு போனப்பளே நமக்குப் பெலன் போச்சி. இன்னியிப்பம் என்னலேய் புத்தனாட்டு ஒரு பெலன்? ‘‘அதொக்கெ பளைய கதையில்லா? இப்பமொக்கெ ஏதுவே காட்டுல சாமி? இப்பம் பட்டணம் சாமிக்குத்தான் வேய் பெலன். பட்டும், நகெயுமாட்டு போடுவாவ. படையல் போடுவாவ. எல்லாப் பெலனும் மேப்படி மந்திரத்தில இருக்குவேய். ‘‘எனக்கும் போடுவாவளாடேய், நகெ? ‘ என்றது மாடன் கூர்ந்து.‘கண்ணெப்பாரு. செம்மெ இருந்தீரு எண்ணு சென்னை போடம இருப்பினுமா? ‘‘எலெய் அப்பி, நல்லதாட்டு ஒரு அட்டியெ பண்ணிப் போடச் செல்லுடேய் . . . ‘‘போற போக்கப் பாத்தா ஏமான்மாரு ஒமக்குப் பூணூலே போட்டுருவானுவ எண்ணு தான் தோணுது. ஏதோ ஏளய மறக்காம இருந்தா போரும். ‘‘நீ நம்ம ஆளுடேய் ‘ என்றது மாடன். ‘நான் எங்க இருந்தாலும் ஒன்னிய மறக்க மாட்டேன் பாத்துக்க . . . ‘ஐந்து****உற்சாகமாய்த்தான் இருந்தது.

 

           கோவிலுக்கு முன் பெரிய பலிபீடம். அதைப் பார்த்த போதே மாடனுக்கு ஜொள்ளு ஊறியது. விசாலமாக முற்றம். முற்றம் நிறைய பலி! மீண்டும் பழைய நாட்கள்!பழைய நாட்கள் புதுப் பொலிவுடன் திரும்புவது போலத் தான் தோன்றியது. கோவில் கட்டி முடிந்து, திறப்பு விழாவும் பிரதிஷ்டை மகா கர்மமும் நிச்சயிக்கப் பட்டது. உற்சாகம் கொண்ட ஜனத்திரள் வந்து குழுமியது. பொருட் காட்சிகள், தெருக் கடைகள், ரங்க ராட்டினம், நாலுதலை ஆடு, கம்பி சர்க்கஸ் என்று திருவிழாக் கோலாகலம். குழந்தைகள் முன்பு போலத் தன்மீது ஏறி விளையாட முடியாதது மாடனுககு என்னவோ போல இருந்தது. சுற்றியும் கம்பி வேலி போடப் பட்டிருந்தது. மந்திரியும், மகாதானபுரம் வைபவானந்த சரஸ்வதியும் வந்தனர். பூர்ண கும்ப மரியாதை, தங்கக் கிரீடம் வைத்து வரவேற்பு. சட்டையற்ற மேனியில் வியர்வையும் பூணூலும் நெளிய குடுமிக்காரர்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடினர். வளமுறைப்படி, நாயரும் பிள்ளையும் ஒரே சாதிதானா, இல்லை வேறு வேறா என்ற விவாதம் எழுப்பப்பட்டு, பார்க்கவன் நாயரின் பல், ஆனையப்ப பிள்ளையின் கண், விலக்கப் போன நடேச பிள்ளையின் மூக்கு ஆகியவை சேதமடைந்தன. நம்பூதிரியின் சகல ஜாதியினரையும் அதட்டினர். பிறர் முறைப்படி கீழே உள்ள ஜாதியினரை அதட்டினர். சர்க்கரைப் பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. ‘இந்தக் குடுமிப் பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ? சவத்தெளவு, எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . . ‘ என்று மாடன் வியந்து கொண்டது.

 

             பெரிய நம்பூதிரி மைக் வைத்து, டேபிள் ஃபேன் ஓட, தூபம் வளர்த்து, அதில் நெய்யும் பிறவும் அவிஸாக்கி, இருபத்தி நாலு மணி நேர வேத கோஷத்தில் ஈடுபட்டிருந்தார். மணிக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருந்த அதன் அந்த மாற்ற மற்ற ராகம் குஞ்சன் மூப்பனின் பசுமாடு, தெரு முக்குச் சோனி நாய் ஆகியவற்றைப் பாதிப்படையச் செய்து தங்களை அறியாமலேயே அதே ராகத்தில் குரலெழுப்பும்படி அவற்றையும் மாற்றியது. மாடனின் பொறுமை கரைந்து கொண்டிருந்தது. யாரையாவது நாவாரத் திட்ட வேண்டும் போல இருந்தது. சுற்றிலும் கம்பிவேலி. ஜனத்திரள். அப்பியை வேறு காணவில்லை.யந்திரபூஜை நடந்து கொண்டிருந்தபோது அப்பி வந்தான். மாடன் பிரகாசம் பெற்றது. அப்பியில் அந்த உற்சாகமான வாசனை வந்தது.‘எரிப்பன் பெலமாடோய் அப்பி? ‘ என்றது மாடன்.அப்பி பொல பொலவென்று அழுதுவிட்டான்.‘ஏம்பிலேய் அப்பி? ‘ என்று மாடன் பதறியது.‘நல்லாயிரும்; ஏழெயெ மறந்திராதியும்.’‘என்னலேய் அப்பி, இப்பம் என்னத்துக்கு டேய் இப்பிடி கரையுதே? ‘ என்றது மாடன்.‘உள்ளர விடமாட்டோமிண்ணு செல்லிப் போட்டாவ. ‘‘மாடன் அதிர்ந்தது. ‘ஆரு? ‘‘அய்யமாரு’‘ஏம்பிலேய்? ‘‘பிராமணங்க மட்டும்தேன் உள்ளே போலாமிண்ணு சென்னாவ. மந்திரம் போட்ட எடமில்லா? ‘‘அப்பம் என்னையும் உள்ளார விடமாட்டானுவண்ணு செல்லு.’‘நீரு எங்க? நீரு தெய்வமில்லா.’மாடன் ஏதும் கூறவில்லை.‘அப்பம் இனி எண்ணு காணுயது? ‘ என்று சற்று கழித்து, பேச்சை மாற்ற, கேட்டது.‘நீரு வாருமே என்னைத்தேடி.’‘பிலேய் அப்பி ‘ என்றது நெகிழ்ந்துபோன மாடன். ‘நான் எங்க இருந்தாலும் ஒனக்க மாடன் தாம்பில. ராத்திரி வாறேன்.

 

           எரிப்பன் வாங்கி வயி. ‘‘பைசா? ‘‘பிரஜைகள் இவ்வளவு பேரு இருக்காவ? ‘‘வயிறெரியப் பேயாதியும் வேய். அந்தாலப் பாத்தீரா உண்டியலு ? அண்டா மேதிரி இருக்கு. அதிலக் கொண்டு செண்ணு இடுதானுவ. மாடன்சாமிக்குத் தாறோம் உனக்கெதுக்கு இங்காவ. ‘‘என்னலேய் அப்பி, இப்பிடியொக்கெ ஆயிப்போச்சு காரியங்க? ‘ என்றது மாடன்.‘ஆருடா அது, மாடன் சாமியைத் தொடுறது? ‘ என்றது ஒரு குரல். பொன்னு முத்து நாடான் கம்புடன் ஓடிவந்தான்.‘ஈனச்சாதிப் பயலே. சாமியைத் தொட்டா பேசுதே? ஏமான் ஏமான் ஓடி வாருங்க . . . ‘ஸ்ரீகாரியம் ராமன் நாயரும், தர்மகர்த்தா கள்ளர்பிரான் பிள்ளையும் ஓடி வந்தனர்.‘ஓடு நாயே. குடிச்சுப்புட்டு வந்திருக்கான். ஓடு. இந்தப் பக்கம் தலை காட்டினா கொண்ணு போடுவேன் ‘ என்றார் பிள்ளை.‘கேடியாணு, மகாகேடியாணு ‘ என்று ராமன் நாயர் தர்மகர்த்தா பிள்ளையைச் சுற்றிக் குழையடித்தான்.அப்பி தள்ளாடியபடி விலகி ஓடினான். இருமுறை விழுந்தான். தூரத்தில் நின்றபடி அவன் அழுவதும், மாடனை நோக்கிக் கையை நீட்டியபடி ஏதோ கூவுவதும் தெரிந்தது.மாடனுக்கு மார்பை அடைத்தது. ஆயினும், அதன் மனம் விட்டுப் போகவில்லை. இன்னமும் ஒரே நம்பிக்கை பலிதான். எது எப்படியென்றாலும் இனி வருஷா வருஷம் கொடை உண்டு; பலி உண்டு.

 

         கும்பி கொதிக்கக் காத்திருக்க வேண்டியது இல்லை. அதுபோதும். அதற்காக எந்தக் கஷ்டத்துக்கு உள்ளாகவும் தயார்தான்.வெயில் சாய ஆரம்பிக்கும்வரை பூஜையும் மந்திரச் சடங்குகளும் இருந்தன. அதன் தந்திரி நம்பூதிரி முன்னால் வர, ஒரு பெரிய கூட்டம் மாடனைச் சூழ்ந்தது. தூபப் புகையும், பூக்களும் மாடனுக்குத் தலைவலியைத் தந்த போதும்கூட மரியாதைகள் அதன் நொந்த மனசுக்கு சற்று ஆறுதலாகவே இருந்தன. பிற்பாடு மாடன் பெரிய கிரேன் ஒன்றின் உதவியுடன் தூக்கி உள்ளே கொண்டு செல்லப்பட்டு, யந்திர பீடத்தின்மீது அமர்த்தப்பட்டது.மாடன் அறையை நோட்டம் விட்டது. நல்ல வசதியான அறைதான். ‘எலட்டிக்லைட் ‘ உண்டு. காற்றோட்டம் உண்டு. முக்கியமாக மழை பெய்தால் ஒழுகாது. திருப்தியுடன் தன் வாயைச் சப்பிக் கொண்டது. என்ன இழவு இது, பூஜைக்கு ஒரு முடிவே இல்லையா? சட்டு புட்டென்று பலியைக் கொண்டு வந்து படைக்க வேண்டியது தானே? எத்தனை வருஷமாகக் காத்திருப்பது. ஆக்கப் பொறுத்தாயிற்று, ஆறவும் பொறுத்து விடலாம்.இரவான பிறகுதான் சகல பூஜைகளும் முடிந்தன. நம்பூதிரி குட்டிப் பட்டரை நோக்கிப் ‘பலி கொண்டு வாங்கோ ‘ என்றார். மாடனின் காதும், தொடர்ந்து சர்வாங்கமும் இனித்தன. அதன் ஆவல் உச்சத்தை அடைந்தது.

 

         தந்திரி நம்பூதிரி பலி மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார். ‘அவனும், அவனுக்க எளவெடுத்த மந்திரமும் ‘ என்று சபித்தபடி, பலிவரும் வழியையே பார்த்தது, மந்திரத்தினால் ஒரு மாதிரியாக ஆகி விட்டிருந்த மாடன்.நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். ‘ஆருக்கு, எனக்கா ? ‘ என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது. வாளை ஓங்கியபடி, ‘அடேய் ‘ என்று வீரிட்டபடி, அது பாய்ந்து எழ முயன்றது. அசையவே முடியவில்லை. பாவி அய்யன் மந்திரத்தால் தன்னை யந்திர பீடத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டதை மாடன் பயங்கரமான பீதியுடன் உணர்ந்தது.***1989 ல் எழுதப்பட்டது .முதல் பிரசுரம் – 1991 புதிய நம்பிக்கை மும்மாத இதழில். திசைகளின் நடுவே தொகுப்பில் உள்ளது. [கவிதா பதிப்பகம் மறுபிரசுரம் 2002.]

by parthi   on 14 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.