|
||||||||
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் |
||||||||
![]() செப்,29,2014 நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் கீழ்காணும் உரையாற்றினார்.
அனைத்து மக்களுக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் இந்தியா என்றால் பாம்பாட்டிகளின் நாடு என்ற எண்ணம் வெளிநாட்டினருக்கு இருந்தது. ஆனால் இன்று உங்களாலும், ஐ.டி. ஊழியர்களாலும் நம் நாட்டைப்பற்றிய பார்வை மாறியுள்ளது. பாம்பைப் பிடித்து விளையாடிய நம் இந்திய இளைஞர்கள் இன்று மவுசை (கணிப்பொறி மவுசை) பிடித்து விளையாடுகிறீர்கள். அமெரிக்கா மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் குடியேறியுள்ள இந்தியர்கள் தங்களுக்கென ஒரு மதிப்பை உருவாக்கியுள்ளார்கள்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் நீங்கள் பலபேர் ஒட்டுப் போடும் வாய்ப்பு இல்லாமல் இருந்தும் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று துளியும் உறக்கமின்றி தேர்தல் முடிவுகளை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்று நான் அறிவேன். இந்த தேர்தலின் வெற்றியை உலகம் முழுதும் கொண்டாடியது. தேர்தல் வெற்றிக்காக பலர் இங்கிருந்து இந்தியா வந்து உழைத்தீர்கள். அப்போது உங்கள் சந்தித்தபோது நான் உங்களிடம் எதுவும் கூறவில்லை. இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதில் உங்களின் பங்களிப்பு இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முழு பலத்துடன் ஒரு அரசு அமைந்துள்ளது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது ஏழை மக்கள் நம் சனநாயகத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று காட்டுகிறது.
தேர்தலில் வெற்றி என்பது வெறுமனே பதவியில் அமர்வது இல்லை. அது மிகப்பெரிய பொறுப்பு. வெற்றி பெற்ற அந்த நிமிடத்தில் இருந்து இதுவரை பதினைத்து நிமிடம் கூட விடுப்பு எடுக்காமல் உழைத்துவருகிறேன். என் மேல் நம்பிக்கை வைத்த மக்களை தலைகுனிய விடமாட்டேன். இன்று நாடு முழுதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனைவரும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இந்தயாவில் ஒவ்வொரு ஏழையும் நான் எவ்வளவு நாள் இதுபோல் வறுமையில் இருக்கவேண்டும் என்று கேள்வி கேட்கிறார்கள். எனவே நாட்டின் பொருளாதாரத்தில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றம் ஏற்படுத்த நான் உறுதியாக இருக்கிறேன்.
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அரசு உங்களைக் கைவிடாது. நீங்கள் ஒவ்வொருவரும் இந்த அரசின்மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்துள்ளீர்கள் என்று அறிவேன். உங்கள் எதிர்ப்பார்ப்புகளை 100 சதவீதம் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதிபட தெரிவிக்கிறேன். நான் குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடுகையில் "இந்தியா திரும்பும் எண்ணம் உள்ளவர்கள் நாடு திரும்ப இது சரியான தருணம்" என்று குறிப்பிட்டேன். அப்போது எனக்குத் தெரியாது நான் இந்தப் பொறுப்பை ஏற்கப்போகிறேன் என்று, இருப்பினும் இப்போதும் அதையே உங்களுக்கு கூறுகிறேன்.
21-ம் நூற்றாண்டு ஆசியாவை மையமாகக் கொண்டு இயங்கும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவின் மதிப்புமிக்க பல தலைவர்கள் 21-ம் நூற்றாண்டு ஆசியா, குறிப்பாக இந்தியாவை மையமாக வைத்து இயங்கும் என்பதை வெளிப்படையாக கூறிவருகிறார்கள். இந்தியாவிற்கு அந்தத் தகுதியும் வலிமையையும் இருக்கிறது. இந்தியா உலகின் மிகவும் இளமையான நாடு. பழமையான கலாச்சாரத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதம் 35 வயதிற்கு கீழ் இருக்கிறது. நமக்கு இவ்வளவு பெரிய இளைஞர் சக்தி இருக்கிறது. நம் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை இந்த இளைஞர் சக்தியை மூலதனமாகக்கொண்டு அடைய இருக்கிறது. என் நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் கடவுளின் முகமாகப் பார்க்கிறேன். நம்முடைய முக்கிய வலிமை என்பது நம் வலிமையான சனநாயகமாகும். உடுத்த துணியில்லாமல் இருக்கும் மக்களும் அரசியல் கூட்டங்களில் அமர்ந்து நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நபரை அடையாளம் காண்பதை காண்கிறேன். இந்திய சனநாயகம் என்பதும் ஒரு சாதாரண அமைப்பு இல்லை, அது ஒரு நம்பிக்கை.
உலகம் முழுதும் இந்தியாவை கூர்ந்து கவனிக்கிறது. ஏன் என்றால் இந்தியா 1.25 பில்லியன் மக்கள் தொகையை கொண்ட மிகப்பெரிய சந்தையாக நம்மைப் பார்க்கிறார்கள். இது உலகின் எங்கும் காண முடியாதது. இந்த வலிமையைக் கொண்டு இந்தியா புதிய உயரத்தை எட்டும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
வீடு கட்டுவது, மருத்துவம், கல்வி என்று ஒவ்வொன்றையும் அரசு மட்டுமே செய்ய முடியாது. மக்கள் பங்களிப்புடன்தான் இதை முழுமையாக செய்துமுடிக்கமுடியும். இதுவரை இருந்த அரசுகள் அனைத்து பொறுப்புகளையும் தாங்களே சுமந்து வந்துள்ளது அதனாலேயே நம் அரசுகள் திறம்பட செயல்பட முடியவில்லை என்று அறிகிறேன். நான் பல ஆயிரம் மயில்களுக்கு அப்பால் இருந்தாலும், உங்களின் எண்ணமும் எதிர்பார்ப்பும் எனக்கு முழுமையாக உணர்ந்துகொள்ள முடிகிறது. இன்று நமக்கு ஒரு மாற்றம் வேண்டும்... நம் வரலாற்றை திரும்பிப்பார்த்தால் நம்மை பலர் 1000-1200 ஆண்டுகள் ஆண்டுள்ளார்கள். இருப்பினும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு தன்னலமற்ற தலைவர்கள் தோன்றி இந்த நாட்டிற்கு தன்னை அர்ப்பணித்து வழிநடத்தியுள்ளார்கள். நமக்கு அந்த பாரம்பரியம் இருக்கிறது.
மகாத்மா காந்தி என்ன செய்தார்? இந்திய சுதந்திரப்போராட்டத்தை ஒரு இயக்கமாக மாற்றினார். ஒவ்வொரு தனி மனிதரும் தாங்கள் செய்யும் காரியங்களை நம் நாட்டின் விடுதலைக்காக இருக்கும்படி வழிஏற்படுதினார் . இந்திய விடுதலைப் போராட்டம் எப்படி ஒரு மக்கள் இயக்கமாக மாறியதோ அதுபோல் இந்தியாவின் வளர்ச்சியும் ஒரு மக்கள் இயக்கமாக வேண்டியது கட்டாயம். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தான் செய்யும் காரியம் அனைத்தும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக செய்கிறேன் என்ற உணர்வுடன், ஈடுபாட்டுடன் செய்ய முன்வரவேண்டும். உதாரணமாக ஒரு பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ஒருவர் தான் இந்த நாட்டிற்கு சேவை செய்கிறோம் என்ற உணர்வுடனும், தான் செய்யும் சேவை பிரதமர் பதவியை விட உயர்ந்தது என்ற உணர்வும் கொண்டு செய்யவேண்டும். ஒரு துப்பரவு தொழிலாளி தான் இந்த நாட்டை சுத்தப்படுத்தும் முக்கியமான வேலையை செய்கிறோம் என்ற உணர்வுடன் வேலை செய்யவேண்டும், ஒரு மருத்துவர் ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பது அதிமுக்கியமான பணி என்பதை உணர்ந்து கடமையுணர்வுடன் ஈடுபடவேண்டும். எனவே நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்... இந்த நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஒரு இயக்கமாக மாறவேண்டும். நான் என் நாட்டின் மதிப்பை குறைக்கும் எந்த செயலையும் செய்யமாட்டேன் என்ற உணர்வு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டும் . நான் அப்படிப்பட்ட ஓர் இயக்கத்தை, ஒரு உணர்வை உருவாக்கவே விரும்புகிறேன். நம் நாட்டின் 1.25 பில்லியன் மக்களுக்கும் இந்த உணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன். நம் 2020 ல் நுழையும்போது உலக நாடுகளில் வேலை செய்ய தகுதியான ஆள் பற்றாக்குறையால் (Workforce) திண்டாடும் நிலை ஏற்படும். அதை நாம் நம் இளைஞர் சக்தியைக் கொண்டு சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
குறிப்பாக செவிலியர், ஆசிரியர் போன்ற துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கிறது. நாம் நம் இளைஞர்களுக்கு நல்ல தரமான பயிற்சியை அளித்து நம்மால் உலகிற்குத் தேவையான அளவில் நம் இளைஞர்களை அனுப்பமுடியும். உலகின் அனைத்து தேவைக்கும் இந்திய இளைஞர்கள் பங்காற்றி நமக்குரிய நிலையை நாம் எட்ட முடியும். இந்தியாவில் ஆட்டோவில் பயணிக்க நாம் பத்து ரூபாய் செலவிடுகிறோம், ஆனால் செய்வாய் கிரகத்திற்கு செல்ல ஒரு கிலோமீட்டருக்கு ஏழு ரூபாய்தான் ஆகிறது. இது நம் திறமையால் சாத்தியமான ஒன்று . இதில் முதல் முயற்சியிலேயே வெற்றியை ஈட்டிய நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளோம். அமெரிக்காவும், இந்தியாவும் பூமியில் மட்டுமன்றி செவ்வாய் கிரகத்திலும் பேச்சு நடத்தக் கூடிய அளவில் வளர்ந்துள்ளோம். செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பும் விண்கலனுக்கு ஆகும் செலவு என்பது ஒரு ஹாலிவுட் படத்திற்கு ஆகும் செலவை விடக் குறைவாகும் வகையில் நாம் சாத்தியப்படுத்தியுள்ளோம்.
இதை உணர்ந்துதான் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தகுதியை அதிகரிக்கும் நோக்கில் தனி அமைச்சகம் (Skill Development) ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நம் மக்களின் திறமைகளை இந்த அமைச்சகத்தின் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். வேலை பெறுவது என்பதைத் தாண்டி வேலைகளை உருவாக்கும் நிலையில் நம் இளைஞர்களை தயார்படுத்தவேண்டியது அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். நம் நாட்டில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் நோக்கம் அது நம் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள அனைவருக்கும் சேவைசெய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் ஐம்பது சதவிகிதத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை . எனவேதான் அந்த மக்கள் கந்துவட்டி போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு சிரமப்படுவதும், தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாக இருந்தது. இப்படிப்பட்ட நிலை அரசாங்கம் என்பது வசதிபடைத்தவர்களுக்கு சேவை செய்வதற்கு மட்டும்தானா என்ற கேள்வியை எழுப்புகிறது.. எனவேதான் இந்த அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கியில் இருந்து சென்று வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு கணக்கு தொடங்கும் வேலையை ஆரம்பித்தது. இரண்டு வாரத்தில் நான்கு மில்லியன் மக்களுக்கு மேல் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளனர். இது மேலும் தொடரும். வங்கிக் கணக்கு தொடங்க எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் செய்ததால் இதுவரை புதிதாக கணக்கு தொடங்கியவர்கள் 15 மில்லியன் அளவிற்கு பணத்தை வங்கிக்கனகுகளில் போட்டுள்ளனர். எனவே அவர்களும் இந்த மாற்றத்தில், வளர்ச்சியில் பங்கெடுக்க ஆயத்தமாக உள்ளதையே இது காட்டுகிறது.
Make In India: உலகில் குறைவான விலையில் பொருள்களை உற்பத்தி செய்ய உகந்த இடமாக இந்தியாவை மாற்றிவருகிறோம். இதுவரை தொழில் தொடங்க பல்வேறு இன்னல்கள் இருந்தது. அவை அனைத்தும் களையப்பட்டு அனைத்து வசதிகளையும் இணையத்திலும், கைபேசியிலும் எளிமையாக செய்துமுடிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும். உங்களுடைய ஆலோசனைகளை mygov.in என்ற இணையத்தில் பதிவு செய்து என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும். முந்தைய அரசுகள் நாங்கள் இந்த சட்டத்தை உருவாக்கயுள்ளோம், அந்த சட்டத்த்தை உருவாக்கியுள்ளோம் என்று பேசினார்கள், என் சிந்தனை சற்று மாறுபட்டதாக இருக்கிறது. நாட்டிற்கு உதவாத காலாவதியான சட்டங்களை ஒவ்வொன்றாக அகற்றப்போகிறோம், அதற்காக ஒரு குழு அமைத்து விரைவில் வேலைகள் தொடங்க இருக்கிறது.
அரசு ஊழியர்கள்: தில்லியில் அரசு ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வருவதாக நீங்கள் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். இது ஒரு செய்தியா? இந்த செய்தி எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இது அவர்களின் கடமையல்லவா?
சுத்தம் -சுகாதாரம் (Clean India) பிரதமர் பெரிய விஷயங்களில் அல்லவா கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் கருதலாம் . நான் நாட்டின் கழிப்பிடங்களை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதை முக்கியமாகக் கருதுகிறேன். என்னிடம் பெரிதாக திட்டம் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்பவர்களிடம் "நான் டீ விற்று" இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் ஒரு சாதாரண மனிதன் அதனால்தான் அடிப்படை செயல்களுக்கு, நாட்டின் சாமானியர்களின் தேவைகளுக்கு உகந்ததை செய்யவேண்டும் என்று விரும்புகிறேன் என்று நினைக்கிறேன்.
கங்கையை சுத்தம் செய்வதை முக்கியமாகக் கருதுகிறேன். காரணம் கங்கையை மக்களின் நம்பிக்கையாக மட்டும் பார்க்கவில்லை அதை சுத்தமாக வைத்திருப்பதன் தேவையை உணர்கிறேன் .
2019-ல் மகாத்மா காந்தியின் 15-வது நினைவுநாள் வருகிறது. காந்தி நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தார், நாம் அவருக்கு என்ன செய்யமுடியும் என்று ஓவ்வொருவரும் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். 2019-ல் காந்திக்கு மிகவும் பிடித்தமான சுத்தமான இந்தியாவை உருவாக்கவேண்டும். வரும் 2020-க்குள் 75- வது சுதந்திரதினம் வருகிறது. அதற்குள் மக்கள் அனைவரின் எதிர்ப்பார்ப்புகளையும் முழுமையாக ஈடுகட்ட கைகோர்த்து உழைப்போம். இதற்குள் சொந்த வீடு இல்லாதவர்களே நாட்டில் இல்லை என்னும் நிலையை எட்டுவோம்.
2015-அடுத்த ஆண்டு வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் சனவரி 8 ,9 ஆகிய நாட்கள் காந்தி இந்தியா திரும்பியதைக் குறிக்கும் பொருட்டு வெளிநாட்டுவாழ் இந்தியர் நாள் (Immigration Day) என்று கொண்டாடப்படும். இந்நிகழ்ச்சி 2015-ல் அகமதாபாத்தில் நடக்க இருக்கிறது. மகாத்மா காந்தியை உதாரணமாகக் கொண்டு நீங்களும் இந்தியாவிற்கு பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நான் பிரதமராகப் பொறுப்பேற்றதும் உங்களுக்கு இருக்கும் சில பிரச்சினைகளை என் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டது. அதற்கு உடனடியான தீர்வுகளை வழங்குவதாக முடிவெடுக்கப் பட்டுள்ளது.
1. PIO/OCI இரண்டும் ஒன்றாக்கப்படும். 2. PIO வைத்திருப்பவர்கள் விசாவிற்கு சில இன்னல்களை சந்திப்பதை அறிந்தேன். எனவே அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் விசா வழங்குவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. 3.இந்தியாவில் அதிக நாட்கள் தங்கும்போது வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் காவல் நிலையம் செல்லும் நடைமுறை நீக்கப்படும். 4. இந்தியாவிற்கு செல்பவர்களுக்கு விசா நடைமுறை எளிமையாக்கப்படும். சுற்றுலா பயணிகளுக்கு நடைமுறையில் இருக்கும் விசா நடைமுறை எளிமையாக்கப்படும் (Visa on Arrival)
பல ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கும் கொடுக்காத அன்பை எனக்கு வழங்கியிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் . நாட்டின் வளர்ச்சிக்கு கைகோர்த்து உழைப்போம் என்று கூறி விடைபெற்றார்.. |
||||||||
by Swathi on 29 Sep 2014 0 Comments | ||||||||
Tags: மோடி உரை அமெரிக்காவில் மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரை Madison Sq Circle Make In India மேக் இன் இந்தியா | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|