|
||||||||
தமிழிசை அறிஞர்களை அறிவோம்:மு_அருணாச்சலம் [1909 - 1992] |
||||||||
![]() திருப்பனந்தாள் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் மு.அருணாச்சலம் அவர்கள்.தமிழிலக்கிய வரலாற்றிலும் ஆராய்ச்சி உலகிலும் இந்த பெயரை கடக்காமல் இருக்கவே முடியாது. 9 ஆம் நூற்றாண்டில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தமிழிலக்கிய வரலாற்றை செறிவுபட எழுதியவர் மு.அ இன்றும் அதை தாண்டிய ஒரு முயற்சி நடக்கவில்லை. உவேசா,வையாப்புரிபிள்ளை ஆகியோரிடம் மாணவராக இருந்தவர்.ஒரு செழுமையான இலக்கிய மரபின் ஆகச்சிறந்த வாரிசாக ஜொலித்தவர். தமிழ்/சம்ஸ்கிருதம்/ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்.தமிழ் இசை வரலாறு,அதோடு மிகச்சிறந்த தமிழிசை மேதைகளையும் ஆவணப்படுத்தியுள்ளார்.முத்துத்தாண்டவர்,மாரிமுத்தாப்பிள்ளை,அருணாச்சலகவிராயர் என்ற இசை ஆதிமும்மூர்த்திகளை பற்றிய முக்கிய ஆய்வு கட்டுரைகளை எழுதியவர். ராஜாஜி-டிகேசி ரசிகமணி-கிவாஜா போன்ற மேதைகளுடன் மிக நெருங்கிப் பழகியிருக்கிறார்.மேதா விலாசத்தால் ஏற்பட்ட நட்பு.காந்தியத்தினாலும் காங்கிரஸ்ஸினாலும் கவர்ந்திழுக்கப்பட்டவர்.கிருபாளினி மற்றும் வினோபாவே போன்ற பெருந்தலைவர்களுடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த பேராசியராக பணியாற்றியவர்.அப்போது அங்கு துணைவேந்தராக பணியாற்றியவர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆவார்.சென்னை சித்தாந்த சைவ சமாஜ இயக்கத்தின் தலைவராக பணிபுரிந்தவர். கடைசியில் தன் சொந்த கிராமமான திருச்சிற்றம்பலத்திலேயே காந்தி வித்யாலயா என்ற உயர்நிலைப்பள்ளி மற்றும் பதிப்பகமும்,ஆசிரியர் பயிற்ச்சிப்பள்ளி,ஆசிரமும் ஆரம்பித்திருக்கிறார்.மிக முக்கியமான புத்தகங்களை பதிப்பித்தும் ஆய்வுகளை வெளியிட்டுமுள்ளார்.இன்று வரை அந்த பள்ளியை அவரது மகன் திரு.சிதம்பரநாதன் நடத்தி வருகிறார். நேற்று மு.அவின் 109 வது பிறந்தநாள் எனவே அவர் வாழ்ந்த வீடு மற்றும் அவரது நூலகத்தை காணும் ஆர்வத்துடன் நானும் எனது நண்பர் முரளியும் சென்றோம்.மிக நல்ல உபசரிப்புடன் பழைய வரலாறுகளையும் மு.அவின் ஆய்வுகள் பற்றியும் சிலாகிப்புடன் தன் வயது நிலையையும் கருதாமல் எங்களுக்கு சமமாக பகிர்ந்து கொண்டார்.மகிழ்சியாக இருந்தது. ஏடுகளை தேடி தன் தந்தையோடு சென்றது..சிறு வயதில் தன் தந்தையை பார்க்க வரும் அறிஞர்களோடு தனக்கிருக்கும் சுவாரஸ்யமான உரையாடல்களை பகிர்ந்து கொண்டார். திரு.வி.க,ராஜாஜி போன்றவர்கள் தன் தந்தையை வீட்டில் சந்திக்க வரும் நிகழ்சிகளை சொன்னார்.இன்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் மேலைநாட்டு தமிழறிஞர்கள் இவரை தேடி வருகிறார்கள் ஆய்வுகளுக்காக. விவசாயம்,கல்வி நிலையம்,சிவன் கோவில் என்று கொழித்தும் செழித்தும் கிடக்கும் திருச்சிற்றம்பலத்தில் ரம்மியமான ஆக்கபூர்வமான வாழ்க்கையை தொடர்கிறார். சிதிலமடைந்த கோவில்கள் பற்றியும்,பல சிலைகளை பற்றியும் அதன் கலைத்துவத்தை பற்றியும் பேசினார்.இடிபாடுகளில் உள்ள கோவில்களுக்கு ஏதாவது முடிந்ததை செய்யுங்கள் அதை வெளிவுலகுக்கு கொண்டு வாருங்கள்.அவைதான் நம் கலாச்சார பொக்கிஷங்கள் என்றார்.இங்கு நடந்த அரசியல்களை பற்றி வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார். எங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும் என் தந்தை சொன்னது போலவே "தமிழை தேர்ந்தெடுத்து படிக்காதவர்களே ஒரு காலத்தில் இந்த மொழியை புரிந்து காக்க வருவார்கள்" என்பதை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது உங்களை சந்தித்தது என்றார். நாங்கள் எதையும் காக்கும் அளவில் இல்லை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வந்தோம் என்று மரியாதையை தெரிவித்துவிட்டு கிளம்பினோம். Thanks: Sundar Raja Cholan
|
||||||||
by Swathi on 31 Oct 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|