LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டின் இயற்கையும் அதன் பாட்டியற்றிறனும்

    இனி, இங்கு ஆராய்தற்பொருட்டு எடுத்துக்கொண்ட முல்லைப்பாட்டில் "தன் மனையாளைப் பிரிந்து பகைவேந்தரொடு போர்செய்யப் போவானொரு தலைவன் தான் பிரிவதனை அவளுக்கு நயமாக உணர்த்திக் 'கார்காலத் தொடக்கத்தில் வருவேன், அதுகாரும் நீ ஆற்றியிரு' என்று சொல்லிப் பிரிய, அச் சொல்வழியே ஆற்றியிருந்தவள், அவன் சொன்ன கார்காலம் வரக்கண்டும் அவன் வந்திலாமையிற் பிரிதும் ஆற்றாளாயினள்; பின்னர்ப் பெருமுது பெண்டிர் பலவகையால் ஆற்றுவிக்கவும் ஆற்றதவள் 'இங்ஙனம் ஆற்றாது வருந்துதல் கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியுமாதலால், அவர் வருங்காறும் ஆற்றுதலே செயற்பாலது' என்று உட்கொண்டு பொறுமையுடன் இருந்த தலைவியிடத்துச், சென்ற தலைவன் மீண்டு வந்தமை" ஆகிய அகப்பொருள் இருப்புச் சொல்லப்பட்டமையால், இப் பாட்டின்கட் டலைமகன் தலைமகள் சிறப்புப்பெயர் இன்னவென்று எடுத்துச் சொல்லப்படவில்லை. இங்ஙனந் தலைமகன் தலைமகளைப் பிரியும்போது ஆற்றுவித்துப் போதலும், போனபின் அவன் வினைமுடித்து வருந்துணையும் அவள் ஆற்றியிருத்தலும் இங்கு சொல்லப்பட்ட தலைமக்களுக்கே யன்றி எல்லார்க்கும் உரியனவாகையால் ஆசிரியர் நப்பூதனார் அவர் பெயர் இங்கெடுத்துச் சொல்லாமை பற்றி வரக் கடவதோர் இழுக்கு ஒன்றுமில்லையென்றுணர்க.

    இனி, முல்லை என்னும் அக வொழுக்கத்தோடு இயைபுடைய புறவொழுக்கம் வஞ்சி என்பதாம். 'வஞ்சி தானே முல்லையது புறனே'1 என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். வஞ்சி என்பது ஓர் அரசன் நாடு கைப்பற்றுதற் பொருட்டுப் படையெடுத்துச் செல்வது. வஞ்சித்திணை முல்லைத் திணைக்குப் புறனானவாறு யாங்ஙனமெனின்; மனைவி தன் காதலனைப் பிரிந்து மனையின்கண் இருப்பது போல, அவள் கணவனும் அவளைப் பிரிந்து பாடிவீட்டின்கண் இருப்பன் ஆகலானும், தலைமகள் வீடு காட்டின்கண் இருப்பது போலப் பாடிவீடும் பகைவர் நகர்க்கு அரணான காட்டின்கண் அமைக்கப்படும் ஆகலானும் முல்லையும் வஞ்சியுந் தம்முள் இயைபு உடைய ஆயின என்க.

    இனி, நப்பூதனார் என்னும் நல்லிசைப் புலவர் 'முல்லை' என்னும் அகவொழுக்கத்தினை விரித்துச் செய்யுள் இயற்றுகின்றார். ஆகலின், அதனோடு இயைபுடைய வஞ்சியழுக்கத்தை அரசன் பகைமேற் சென்று பாசறையிலிருக்கும் இருப்புக் கூறுமுகத்தால் இதன்கண் அமைத்துக் கூறுகின்றார். இவ்வாறு தாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு மாறுபடாமல் இவ்வாசிரியர் வேறுபொருளை இதன்கட் பொருத்தி உரைக்கும் நுணுக்கம் மிகவும் வியக்கற்பாலதொன்றாம்.

    இன்னுந் தாங் கூறல்வேண்டும் முதன்மையான ஒரு பொருளைப் பொறுக்கான சொற்றொகுதியினால் எடுத்துக் கோவையாகத் திரித்து நூற்றுக்கொண்டு செல்லும்போது, அப்பொருளின் இடையே அதனோடு இயைபுடைய வேறொரு பொருளை இயைத்துச் சொல்லல் வேண்டுவது நேருமாயின் அப்பொருளின்பங் கெடாமல் இடன் அறிந்து அதனைப் பிணைப்பது நல்லிசைப் புலவரிடத்துக் காணப்படும் அரிய வினைத்திறனா மென்பது அறியற்பாற்று. இவ்வரிய வினைத்திறன் நப்பூதனார் இயற்றிய இச் செய்யுளின்கண் ஆழ்ந்தமைந்து விளங்கிக் கிடக்கின்றது. 'முல்லை' என்னும் அகவொழுக்கத்தினை விதந்து சொல்லவந்த ஆசிரியர் அதனை முற்றுங் கூறி முடித்தபின், அதனோடு இயைபுடைய அரசன் போர்மேற் செல்வதான வஞ்சியைக் கூறுவாராயிற், கற்பவர்க்குப், பின் ஒட்டிச் சொல்லப்படும் வஞ்சி ஒழுக்கத்தினைக் கேட்டலிற் கருத்து ஊன்றாமையே யன்றி, இருவேறு ஒழுக்கங்கள் தனித்தனியே சொல்லப்பட்டும் ஒன்றற்கே உரிய முல்லை என்னும் பெயர் மட்டுமே சூட்டிய குற்றமும் உண்டாம். அவ்வாறன்றி முல்லைப் பொருளுக்கு நடுவே எங்கேனும் ஓரிடத்திற் பொருத்தமின்றி அவ் வஞ்சிப் பொருளை மாட்டிவிடினுங் கற்போர் உணர்வு இளைப்படையுமாகலின் அதுவுங் குற்றமேயாகும். இனி, இக்குற்றமெல்லாம் அணுகாமல், இணங்கப் பொருத்து மிடந்தான் யாதோ வெனிற் கூறுதும். எடுத்துச் சொல்லப்படும் முதன்மைப் பொருள் முற்றும் முடிவுபெறாமற் காற்பங்கோ அல்லது அரைப்பங்கோ சிறிது கருக்கொண்டு ஓரிடத்திற் கூடி நின்று, கற்பார்க்கு 'இனி இ·து எங்ஙனம் முடியும்! எங்ஙனம் முடியும்!' என்று முடிவு அறியும் விருப்பத்தினை எழுப்புவித்து, அவர் அதனை முழுதுங் கற்றுத் துறைபோகும் வண்ணம் அப்பொருள் இடையறுந்து நிற்கும் இடமே, பிற பொருளை இணைப்பதற்கு இசைவான இடுக்கு வெளியாம் என்க.

    இவ்வாறு இப்பாட்டின்கண் முல்லைப் பொருள் இடையறுந்து நிற்கும் இடுக்குவெளி யாதோவெனிற் கூறுதும்; தலைமகன் கூறிய கார்காலம் வருதலை உணர்ந்து ஆற்றாமல் அழுது வருந்தும் நங்கைக்கு நற்சொற்கேட்டு வந்த பெருமுது பெண்டிர், " நாங்களும் படைத்தலைவருங் கேட்ட நற்சொல்லால் நின் காதலன் தான் எடுத்துப்போன போர் வினையை விரைவில் முடித்துத் திரும்பி நின்னுடன் வந்து சேர்வன்; அவன் வரும் வரையில் நீ ஆற்றிக்கொண்டு இருத்தல் வேண்டும்" என்று பலகாலுஞ் சொல்லி வற்புறுத்தவும், அவள் அவர் சொற்களைக் கேளாளாய், மைதீட்டிய பூப்போன்ற கண்ணினின்றும் நீர் முத்துப் போல் துளித்துளியாய் விழக் கலுழ்ந்து வருந்தினாள் என 23 ஆவது வரியில் முல்லைப்பொருள் முற்றும் முடிவு பெறாமல் இடையறுந்து நிற்பது காண்க. இப்பாட்டினைக் கற்போர் இவ்வளவில் தாங் கற்பதை நிறுத்திவிடாமல், இங்ஙனம் வருந்திய அப்பெண்மணி பின் எவ்வாறு ஆயினள் எனப் பின்னும் அறிதற்கு மிக விழைகுவர்; இங்ஙனம் அவர் முடிவறியும் விழைவால் மேலுங் கற்பதற்கு மனவெழுச்சி மிகுந்து நிற்கும் பொழுது பிறபொருள் இடையே இணைத்துச் சொல்லப்படுமாயினும் அதனால் அவர் தாம் சிறிதும் இளைப்படையாது, அவ்விடைப்பட்ட பொருளையுங் கற்று மேற்சென்று பொருள்முடிவு காண்பாரென்பது தெற்றென விளங்கும். ஆகவே, இங்ஙனம் முல்லைப்பொருள் இடையறுந்து நிற்கும் இடங்கண்டு அங்கே முல்லைப் பொருளை மறித்து, அதனோடு இயைபுடைய வஞ்சிப் பொருளைக் கொணர்ந்து நுழைத்துப், பின் மறிக்கப்பட்ட முல்லைப் பொருளை 80 ஆவது வரியிலே "இன்துயில் வதியுநற்காணாள் துயர் உழந்து " என்பதுடன் கொண்டு போய் இணங்கக் கொளுத்தி, ஆசிரியர் அச் செய்யுளைத் திறம்பட நடாத்தும் நுட்பவினையின் அருமைப் பாட்டை உய்த்துணர்ந்து மகிழ்ந்து கொள்க.

    இன்னும் இவ் வகப்பொருள் முல்லை யழுக்கத்தினை அவ்வாறு நடாத்திக் கொண்டு சென்று, 88 ஆவது வரியில் "இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்" என்பதுடன் முடிக்குமிடத்தும் வினைவயிற்பிரிந்த தலைமகன் மீண்டு வந்தமை சொல்லவேண்டுதலின், அங்ஙனஞ் சொல்லப்படும் பொருளையுங் கற்போர் உற்றுநோக்கும் பொருட்டு 'இவ்வாறு கிடந்தோளுடைய அழகிய செவி நிறைய ஆரவாரித்தன' என்று மேல் ஓட்டப்படுஞ் சொற்றொடரின் பயனிலையான 'ஆரவாரித்தன' என்பதை, முடிக்கப்படும் அகப்பொருளின் இறுதி மொழியான 'கிடந்தோள்' என்பதுடன் சேர்த்தி, அதன் எழுவாயான 'வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே' என்பதைக் கடையிலே நிறுத்தி, அவ்விரண்டற்கும் இடையில் அவன் மீண்டு வந்தமை விளங்கக்கூறி அமைத்தார். முடிக்கின்ற இடத்திற் 'கிடந்தோள் செவிநிறைய ஆலின' என்று உரைப்பின், எவை ஆலின? என்னும் ஆராய்ச்சி தோன்றி மேல்வரும் பொருள் அறிய வேட்கை மிகும் ஆதலால், இவ்வாறு பயனிலையை முன்னும் எழுவாயைப் பின்னுமாக வைத்துப் பிறழக்கூறினார் என்க. இங்ஙனம் பிறழக் கூறுதல் பொருள் வலிவு தோன்றுதற் பொருட்டுங், கற்பார்க்கு மேலுமேலும் விழைவுள்ளந் தோற்றுவித்தற் பொருட்டுமேயாம் என்பது ஆங்கிலமொழியிற் பெயின்2 என்பவர் எழுதிய அரியதோர் அணியிலக்கண நூலிலுங் கண்டுகொள்க. இந் நுணுக்கமெல்லாம் நன்கறிந்து செய்யுளியற்றிய நப்பூதனார் பேரறிவும் பேராற்றலும் பெரிதும் வியக்கற்பாலனவாம் என்க.

by Swathi   on 22 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.