LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 749 - அரணியல்

Next Kural >

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது. (தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.)
மணக்குடவர் உரை:
முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப்பட்டது அரணாவது. அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல்.
தேவநேயப் பாவாணர் உரை:
முனைமுகத்து மாற்றலர் சாய-போர்த் தொடக்கத்திலேயே பகைவர் புண்பட்டு விழுமாறு; வினைமுகத்துவீறு எய்தி-நொச்சியாரின் வினைவேறுபாடுகளாற் சிறப்புப் பெற்று; மாண்டது அரண்- பல்வேறு உறுப்புக்களாலும் மாட்சிமைப்பட்டதே சிறந்த கோட்டையரணாவது. பகைவர் அகழியை அடுத்தவுடனே பட்டுவிழுமாறு, மதில் மேலிருந்து கல்லும் அம்பும் விட்டேறும் சோனைமாரியாய்ச் சொரிதலால், 'முனைமுகத்து மாற்றலர் சாய' என்றார். தொடக்கத்திலேயே பெருந்தொகையினர் சாய்தலால், பின்னும் தாக்குப்பிடித்து நிற்றலும் பொருதலும் கூடாது பின்வாங்கியோடுவர் என்பதாம். வினைவேறுபாடுகளாவன; அகழியைக் கடக்குமுன் எய்தலும் எறிதலும் வீசுதலும்; மதிலைப்பற்றியபின், கடித்தலும் உமிழ்தலும் இறைத்தலும் எறிதலும் கோத்து வலித்தலும் கட்டுதலும் பூட்டு முறுக்குதலும், கொத்துதலும் நெட்டித் தள்ளுதலும் குத்துதலும் பொதுக்குதலும் கிழித்தலும் அடித்தலுமாகிய பொறிவினைகளும்; குத்துதலும் வெட்டுதலும் பிளத்தலுமாகிய படைவினைகளுமாம். அரண் மாண்பிற் கேற்ற பிற வுறுப்புக்கள், மதில்மேலுள்ள பதணம், ஏப்புழை, சூட்டு, ஞாயில் (ஏவறை), கொத்தளம்(காவற்கோபுரம்) முதலியனவும்; பனவர்க்குத் தெரியாது நகர்க்கு வெளியே சென்றுவர நிலத்தின் கீழமைத்த சுருங்கை முதலியனவுமாம்.
கலைஞர் உரை:
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.
Translation
At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious day.
Explanation
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.
Transliteration
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu Veereydhi Maanta Tharan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >