LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

முப்பெரும் பாடல்கள் - கண்ணன் பாட்டு பகுதி - 2

5. கண்ணன் - என் அரசன்

1. பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்.

2. கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;
எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்
இழந்த நாள்கள் யுகமெனப் போகுமே.

3. படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;
இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்
என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான்.

4. கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
கோலு யர்த்துல காண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான்.

5. வான நீர்க்கு வருந்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான்.

6. காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்
கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே?

7. நாம வன்வலி நம்பியி ருக்கவும்,
நாண மின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
சிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான்.

8. தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான்.

9. காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
கணத்தி லேடதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப் போலவே,
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான்.

10. வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்.

11. சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ?
இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்!

12. கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான்.

13. நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்
நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.

14. கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே!
அண்ண லின்னருள் நாடிய நாடுதான்
அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே!

6. கண்ணன் - என் சீடன்

ஆசிரியப்பா
யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்
என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்,
என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால்         5

என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்,
யான்சொலுங் கவிதை என்மதி யளவை
இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று
கருதுவான் போலவும், கண்ணக் கள்வன் 10

சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!
பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்து
பட்டன தொல்லை பலபெரும் பாரதம்;
உளத்தினை வென்றிடேன்; <உலகினை வெல்லவும்
தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் 15

சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்,
தன்னுளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள
மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி
இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் 20

தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு,
மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து,
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்
பல்வகை யால்அகப் பற்றுறச் செய்தான்,
வெறும்வாய், மெல்லங் கிழவிக் கிஃதோர்  25

அவலாய் மூண்டது; யானுமங் கவனை
உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய்,
இன்னது செய்திடேல், இவரொடு பழகேல்,
இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல்,
இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், 30

இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்
எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,
ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்
கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம்
எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் 35

நெறியினுக் கெல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பா னாயினன், நானிலத் தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமாக் கொண்ட சிறுமதி, யுடையேன்
கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் 40

விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்
தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்
இகழுமிக் கவனாய், என்மனம் வருந்த
நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் 45

கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர்
கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை
இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்
நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் 50

தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது
முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன்
பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்
நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் 55

சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன்
தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்,
மானுடந் தவறி மடிவுறா வண்ணம்,
கண்ணனை நானும் காத்திட விரும்பித்
தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும் 60

சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்
எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை
கண்ணன் பித்தனாய்க் காட்டா ளாகி, 65

எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய்,
எவ்வகைப் பயனிலுங் கருத்திழந் தவனாய்,
குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்
யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான்
இதனால்,   70

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற;
யான்கடுஞ் சினமுற்று எவ்வகை யானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்
எனப்பெருந் தாபம் எய்தினே னாகி,
எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் 75

ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய
நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்
என்றுளந் தெண்ணி இசைந்திடுஞ் சமயங்
காத்திருந் திட்டேன், ஒருநாள் கண்ணனைத்
தனியே எனது வீட்டினிற் கண்டு  80

மகனே, என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி,
நின்னிட மொன்று கேட்பேன்; நீயது
செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே
மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். 85

சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோர் தமையே அருகினிற் கொண்டு
பொருளினுக் கலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி 90

இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்;
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்.
ஆதலால்,
என்பயன் கருதி, எனக்கொரு துணையாய் 95

என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே
என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,
இவ்வுரைக் கிணங்குவாய் என்றேன், கண்ணனும்,
அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே 100

தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது?
காரிய மொன்று காட்டுவை யாயின்,
இருப்பேன் என்றான். இவனுடைய இயல்பையும்
திறனையுங் கருதி, என் செய்யுளை யெல்லாம்
நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் 105

கொடுந்திடுந் தொழிலினைக் கொள்ளுதி என்றேன்
நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்;
செல்வேன் என்றான்; சினத்தோடு நானும்
பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்
கையினிற் கொடுத்துக் கவனுற இதனை 110

எழுதுக என்றேன்; இணங்குவான் போன்றதைக்
கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்
செல்வேன் என்றான். சினந்தீ யாகிநான்
ஏதடா, சொன்ன சொல் அழிந்துரைக் கின்றாய்;
பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது 115

பிழையிலை போ<லும் என்றேன், அதற்கு
நாளைவந் திவ்வினை நடத்துவேன் என்றான்.
இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச்
செய்கின் றனையா? செய்குவ தில்லையா?
ஓருரை சொல் என் றுறுமினேன். கண்ணனும் 120

இல்லை யென் றொருசொல் இமைக்குமுன் கூறினான்.
வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்
கண்சிவந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான்
சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும்
இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே; 125

என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ
போந்திடல் வேண்டா, போ, போ, போ என்று
இடியுறச் சொன்னேன். கண்ணனும் எழுந்து
செல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட
மகனே! போகுதி வாழ்கநீ; நின்னைத் 130

தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்,
தோற்றுவிட் டேனடா! சூழ்ச்சிகள் அழிந்தேன்.
மறித்தினி வாராய், செல்லுதி வாழி நீ!
எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். 135

சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே
எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;
காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்;
ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன்.
தொழில்பல புரிவேன். துன்பமிங் கென்றும். 140

இனிநினக் கென்னால், எய்திடா தெனப்பல
நல்லசொல் <லுரைத்து நகைத்தனன் மறைந்தான்
மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்
மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் 145

அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்;
தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய், உலகினில் வேண்டிய தொழிலெலாம்
ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ என்றான், வாழ்கமற் றவனே! 150

7. கண்ணன் - எனது சற்குரு

புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், பக்தி

1. சாத்திரங் கள்பல தேடினேன் - அங்குச்
சங்கையில் லாதன சங்கையாம் -பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்ம்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் - சக
மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம்
ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன

2. நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல
நாள்கள் அலைந்திடும் போதினில், - நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே - தடி
ஊன்றிச் சென்றாரொர் கிழவனார்; - ஒளி
கூடுமுகமும், தெளிவுதான் - குடி
கொண்ட விழியும், சடைகளும் - வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே - பல
சங்கதி பேசி வருகையில்

3. என்னுளத் தாசை யறிந்தவர் - மிக
இன்புற் றுரைத்திட லாயினர் - தம்பி
நின்னுளத் திற்குத் தகுந்தவன் - சுடர்
நித்திய மோனத் திருப்பவன், - உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன் - வட
மாமது ரைப்பதி யாள்கின்றான் - கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் - அவன்
சத்தியங் கூறுவன் என்றனர்.

4. மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு
வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்றன்
நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி
நன்மை தருகென வேண்டினன்; - அவன்
காமனைப் போன்ற வடிவமும் - இளங்
காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப்
போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும்

5. ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர்
ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி
வேடந் தரித்த கிழவரைக் - கொல்ல
வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் - சிறு
நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன்
நாளுங் கவலையில் மூழ்கினோன்; தவப்
பாடுபட் டோர்க்கும் விளங்கிடா - உண்மை
பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?

6. என்று கருதி யிருந்திட்டேன் - பின்னர்
என்னைத் தனியிடங் கொண்டுபோய், - நினை
நன்று மருவுக! மைந்தனே! - பர
ஞான முரைத்திடக் கேட்பைநீ - நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமே - சிந்தை
ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு
விண்ணை யளக்கும் அறிவுதான்!

7. சந்திரன் சோதி யுடையதாம் - அது
சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
சேர்ந்து தழுவி அருள்செயும்; அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
மாயக் களிப்பெருங் கூத்துக்காண் - இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
சாத்திரம் பொய் யென்று தள்ளடா!

8. ஆதித் தனிப்பொரு ளாகுமோர் - கடல்
ஆருங் குமிழி உயிர்களாம் - அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்-வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
நேர்மைத் தொழிலில் - இயங்குவார்;

9. சித்தத்தி லேசிவம் நாடுவார் - இங்குச்
சேர்ந்து களித்துல காளுவார்; நல்ல
மத்த மதவெங் களிறுபோல் - நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார்; இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநந்தம் - எனச்
சூழ்ந்து கவலைகள் தள்ளியே

10. சோதி அறிவில் விளங்கவும் - உயர்
சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அற
நீதி முறைவழு வாமலே - எந்த
நேரமும் பூமித் தொழில்செய்து - கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே - இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில்,

11. ஆடுதல், பாடுதல், சித்திரம் - கவி
யாதி யினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
நாளினில் எய்தப் பெருகுவார் - அவர்
காடு புதரில் வளரினும் - தெய்வக்
காவனம் என்றதைப் போற்றலாம்.

12. ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
ஞானம் விரைவினில் எய்துவாய் - எனத்
தேனி லினிய குரலிலே - கண்ணன்
செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
ஏகி மறைந்தது கண்டிலேன்; அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
ஆட லுலகென நான் கண்டேன்!

8. கண்ணம்மா - என் குழந்தை

(பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)
(ராகம் - பைரவி) (தாளம் - ரூபகம்)
ஸ ஸ ஸ - ஸா ஸா-பபப
தநீத - பதப - பா
பபப - பதப - பமா - கரிஸா
ரிகம - ரிகரி - ஸா
என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.

1. சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

2. பிள்ளைக் கனியமுதே, - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே!

3. ஓடி வருகையிலே - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

4. உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ!
5. கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!

6. சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ!

7. உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? -  கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ?

8. சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்.

9. இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமொர் தெய்வ முண்டோ?

10. மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிரிது முண்டோ?

9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்
ரசங்கள்: அற்புதம், சிருங்காரம்
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)

4. பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5. புள்ளாங் குழல்கொண்டு வருவான்; அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே.
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன் - பொய்ம்மை
குத்திரம் பழிசொலச் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.