LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

முப்பெரும் பாடல்கள் - பாஞ்சாலி சபதம் - முதற்பாகம் பகுதி - 2

7. சகுனியின் சதி
வேறு
என்று சுயோதனன் கூறியே-நெஞ்சம்
ஈர்ந்திடக் கண்ட சகுனி தான்-அட!
இன்று தருகுவன் வெற்றியே;-இதற்கு
இத்தனை வீண்சொல் வளர்ப்ப தேன்?-இனி
ஒன்றுரைப் பேன்நல் உபாயந்தான்;.அதை
ஊன்றிக் கருத்தொடு கேட்பையால்;-ஒரு
மன்று புனைந்திடச் செய்தி நீ,-தெய்வ
மண்டப மொத்த நலங்கொண்டே  53

மண்டபங் காண வருவி ரென்-றந்த
மன்னவர் தம்மை வரவழைத்-தங்கு
கொண்ட கருத்தை முடிப்ப வே-மெல்லக்
கூட்டிவன் சூது பொரச் செய்வோம்-அந்த
வண்டரை நாழிகை யொன்றிலே-தங்கள்
வான்பொருள் யாவையும் தோற்றுனைப்-பணி
தொண்ட ரெனச்செய் திடுவன் யான்,-என்றன்
சூதின் வலிமை அறிவை நீ.  54

வெஞ்சமர் செய்திடு வோமெனில்-அதில்
வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்?-அந்தப்
பஞ்சவ் வீரம் பெரிது காண்-ஒரு
பார்த்தன்கை வில்லுக் கெதிருண்டோ?-உன்றன்
நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சியாக் -கொள்ள
நீத மில்லை முன்னைப் பார்த்திவர்-தொகை
கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால்-வெற்றி
கொண்டு பகையை அழித்துளோர். 55

நாடும் குடிகளும் செல்வமும்-எண்ணி,
நானிலத் தோர்கொடும் போர் செய்வார்;-அன்றி
ஓடுங் குருதியைத் தேக்கவோ?-தமர்
ஊன்குவை கண்டு களிக்கவோ?அந்த
நாடும் குடிகளும் செல்வமும்-ஒரு
நாழிகைப் போதினில் சூதினால்-வெல்லக்
கூடு மினிற்பிறி தெண்ணலேன்?-என்றன்
கொள்கை இதுவெனக் கூறினான். 56

இங்கிது க்டட சுயோதனன்-மிக
இங்கிதம் சொல்லினை,மாமனே!என்று
சங்கிலிப் பொன்னின் மணியிட்ட,-ஒளித்
தாமம் சகுனிக்குச் சூட்டினான்;-பின்னர்
எங்கும் புவிமிசை உன்னைப் போல்-எனக்
கில்லை இனியது சொல்லுவோர்-என்று
பொங்கும் உவகையின் மார்புறக் -கட்டிப்
பூரித்து விம்மித் தழுவினான்.  57
 
8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்
 
மற்றதன் பின்னர் இருவரும்-அரு
மந்திக் கேள்வி உடையவன்-பெருங்
கொற்றவர் கோன்திரி தராட்டிரன்-சபை
கூடி வணங்கி இருந்தனர்;-அருள்
அற்ற சகுனியும் சொல்லுவான்;-ஐய!,
ஆண்டகை நின்மகன் செய்திகேள்!-உடல்
வற்றித் துரும்பொத் திருக்கின்றான்;-உயிர்
வாழ்வை முழுதும வெறுக்கின்றான். 58

உண்ப சுவையின்றி உண்கின்றான்;-பின்
உடுப்ப திகழ உடுக்கின்றான்;-பழ
நண்பர்க ளோடுற வெய்திடான்;.எள
நாரியரைச் சிந்தை செய்திடான்;-பிள்ளை
கண்பசலை கொண்டு போயினான்-இதன்
காரணம் யாதென்று கேட்பையால்;-உயர்
திண்ப ருமத்தடந் தோளினாய்!-என்று
தீய சகுனியும் செப்பினான்.  59

தந்தையும் இவ்வுரை கேட்டதால்-உளம்
சாலவும் குன்றி வருந்தியே,-என்றன்
மைந்த!நினக்கு வருத்தமேன்?-இவன்
வார்த்தையி லேதும் பொருளுண்டோ? நினக்கு
எந்த விதத்துங் குறையுடோ?நினை
யாரும் எதிர்த்திடு வாருண்டோ?-நின்றன்
சிந்தையில் எண்ணும் பொருளெலாம்-கணந்
தேடிக் கொடுப்பவர் இல்லையோ? 60

இன்னமு தொத்த உணவுகள்-அந்த
இந்திரன் வெஃகுறும் ஆடைகள்,-பலர்
சொன்ன பணிசெயும் மன்னவர்,-வருந்
துன்பந் தவிர்க்கும் அமைச்சர்கள்,-மிக
நன்னலங் கொண்ட குடி படை-இந்த
நானில மெங்கும் பெரும்புகழ்-மிஞ்சி
மன்னும்அப் பாண்டவச் சோதரர்-இவை
வாய்ந்தும் உனக்குத் துயருண்டோ? 61

தந்தை வசனஞ் செயிவுற்றே-கொடி
சர்ப்பத்தைக் கொண்டதொர் கோமன்
வெந்தழல் போலச் சினங்கொடே-தன்னை
முறிப் பலசொல விளம்பினான்;.இவன்
மந்த மதிகொண்டு சொல்வதை-அந்த
மாமன் மதித்துரை செய்குவான்;-ஐய;
சிந்தை வெதுப்பத்தி னாலிவன்-சொலும்
சீற்ற மொழிகள் பொறுப்பையால்.  62

தன்னுளத் துள்ள குறையெலாம்-நின்றன்
சந்நிதி யிற்சென்று சொல்லிட-முதல்
என்னைப் பணித்தனன்;யானிவன்-றனை
இங்கு வலியக் கொணர்ந்திட்டேன்;
நன்னய மேசிந்தை செய்கின்றான்;-எனில்
நன்கு மொழிவ றிந்திலன்;-நெஞ்சைத்
தின்னுங் கொடுந்தழல் கொண்டவர்-சொல்லுஞ்
செய்தி தெளிய உரைப்பரோ?  63

நீ பெற்ற புத்திர னேயன்றோ?-மன்னர்
நீதி யியல்பின் அறிகின்றான்-ஒரு
தீபத்தில் சென்று கொளுத்திய-பந்தம்
தேசு குறைய எரியுமோ?-செல்வத்
தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்-மன்னர்
சாத்திரத் தேமுதற் சூத்திரம்;-பின்னும்
ஆபத் தரசர்க்கு வேறுண்டோ-தம்மில்
அன்னியர் செல்வம் மிகுதல்போல்? 64

வேள்வியில் அன்றந்தப் பாண்டவர்-நமை
வேண்டுமட் டுங்குறை செய்தனர்;-ஒரு
வேள்வி யிலாதுன் மகன்றனைப்-பலர்
கேலிசெய் தேநகைத் தார்,கண்டாய்!-புவி
ஆள்வினை முன்னவர்க் கின்றியே-புகழ்
ஆர்ந்திளை யோரது கொள்வதைப்-பற்றி
வாள்விழி மாதரும் நம்மையே-கய
மக்களென் றெண்ணி நகைத்திட்டார். 65

ஆயிரம் யானை வலிகொண்டான்-உன்றன்
ஆண்டகை மைந்த னிவன் கண்டாய்!-இந்த
மாயரு ஞாலத் துயர்ந்ததாம்-மதி
வான்குலத் திற்குமுதல்வனாம்;
ஞாயிறு நிற்பவும் மின்மினி-தன்னை
நாடித் தொழுதிடுந் தன்மைபோல்,-அவர்
வேயிருந் தூதுமொர் கண்ணனை -அந்த
வேள்வியில் சால உயர்த்தினார்.  66

ஐய!நின் மைந்தனுக் கில்லைகாண்-அவர்
அர்க்கியம் முற்படத் தந்ததே;-இந்த
வையகத் தார்வியப் பெய்தவே,-புவி
மன்னவர் சேர்ந்த சபைதனில்-மிக
நொய்யதோர் கண்ணனுக் காற்றினார்;-மன்னர்
நொந்து மனங்குன்றிப் போயினர்;-பணி
செய்யவும் கேலிகள் கேட்கவும்-உன்றன்
சேயினை வைத்தனர் பாண்டவர். 67

பாண்டவர் செல்வம் விழைகின்றான்;-புவிப்
பாரத்தை வேண்டிக் குழைகின்றான்;-மிக
நீண்டமகிதலம் முற்றிலும்-உங்கள்
நேமி செலும்புகழ் கேட்கின்றான்;-குலம்
பூண்ட பெருமை கெடாதவா-றெண்ணிப்
பொங்குகின் றான்நலம் வேட்கின்றான்;-மைந்தன்
ஆண்டகைக் கிஃது தகுமன்றோ?-இல்லை
யாமெனில வையம் நகுமன்றோ? 68

நித்தங் கடலினிற் கொண்டுபோய்-நல்ல
நீரை அளவின்றிக் கொட்டுமாம்-உயர்
வித்தகர் போற்றிடுங் கங்கையா-றது
வீணிற் பொருளை யழிப்பதோ?-ஒரு
சத்த மிலாநெடுங் காட்டினில்-புனல்
தங்கிநிற் குங்குளம் ஒன்றுண்டாம்,-அது
வைத்ததன் நீரைப் பிறர்கொளா-வகை
வாரடைப் பாசியில் மூடியே.  69

சூரிய வெப்பம் படாமலே-மரம்
சூழ்ந்த மலையடிக் கீழ்ப்பட்டே-முடை
நீரின் நித்தலும் காக்குமாம்;-இந்த
நீள்சுனை போல்வர் பலருண்டே?-எனில்
ஆரியர் செல்வம் வளர்தற்கே-நெறி
ஆயிரம் நித்தம் புதியன-கண்டு
வாரிப் பழம்பொருள் எற்றுவார்;-இந்த
வண்மையும் நீயறி யாததோ?  70

9. திரிதராட்டிரன் பதில் கூறுதல்
கள்ளச் சகுனியும் இங்ஙனே பல
கற்பனை சொல்லித்தன் உள்ளத்தின்-பொருள்
கொள்ளப் பகட்டுதல் கேட்டபின்-பெருங்
கோபத் தொடேதிரி தாட்டிரன்,-அட!
பிள்ளையை நாசம் புரியவே-ஒரு
பேயென நீ வந்து தோன்றினாய்;-பெரு
வெள்ளத்தைப் புல்லொன் றெதிர்க்குமோ:-இள
வேந்தரை நாம்வெல்ல லாகுமோ? 71

சோதரர் தம்முட் பகையுண்டோ?-ஒரு
சுற்றத்தி லேபெருஞ் செற்றமோ?-நம்மில்
ஆதரங் கொட்வ ரல்லரோ?-முன்னர்
ஆயிரஞ் சூழ்ச்சி இவன்செய்தும்-அந்தச்
சீதரன் தண்ணரு ளாலுமோர்-பெருஞ்
சீலத்தி னாலும் புயவலி-கொண்டும்
யாதொரு தீங்கும் இலாமலே-பிழைத்
தெண்ணருங கீர்த்திபெற் றாரன்றோ? 72

பிள்ளைப் பருவந் தொடங்சிகயே-இந்தப்
பிச்சன் அவர்க்குப் பெரும்பகை -செய்து
கொள்ளப் படாத பெரும்பழி-யன்றிக்
கொண்டதொர் நன்மை சிறிதுண்டோ?-நெஞ்சில்
எள்ளத் தகுந்த பகைமையோ?-அவர்
யார்க்கும் இளைத்த வகையுண்டோ?-வெறும்
நொள்ளைக் கதைகள் கதைக்கிறாய்,-பழ
நூலின் பொருளைச் சிதைக்கிறாய், 73

மன்னவர் நீதி சொலவந்தாய்-பகை
மாமலை யைச்சிறு மட்குடம்-கொள்ளச்
சொன்னதொர் நூல்சற்றுக் காட்டுவாய்!-விண்ணில்
சூரியன் போல்நிக ரின்றியே-புகழ்
துன்னப் புவிச்சக்க ராதிபம்-உடற்
சோதரர் தாங்கொண் டிருப்பவும்-தந்தை
என்னக் கருதி அவரெனைப் -பணிந்து
என்சொற் கடங்கி நடப்பவும்,  74

முன்னை இவன்செய்த தீதெலாம்-அவர்
முற்றும் மறந்தவ ராகியே-தன்னைத்
தின்ன வருமொர் தவளையைக்-கண்டு
சிங்கஞ் சிரித்தருள் செய்தல்போல-துணை
யென்ன இவனை மதிப்பவும்-அவர்
ஏற்றத்தைக் கண்டும் அஞ்சாமலே-நின்றன்
சின்ன மதியினை என்சொல்வேன் -பகை
செய்திட எண்ணிப் பிதற்றினாய்,  75
 
ஒப்பில் வலிமை யுடையதாந் -துணை
யோடு பகைத்தல் உறுதியோ-நம்மைத்
தப்பிழைத் தாரந்த வேள்வியில்-என்று
சாலம் எவரிடஞ் செய்கிறாய்?-மயல்
அப்பி விழிதடு மாறியே-இவன்
அங்கு மிங்கும் விழுந் தாடல் கண்டு-அந்தத்
துப்பிதழ் மைத்துனி தான்சிரித் -திடில்
தோஷ மிதில்மிக வந்ததோ?  76

தவறி விழுபவர் தம்மையே-பெற்ற
தாயுஞ் சிரித்தல் மரபன்றோ?-எனில்
இவனைத் துணைவர் சிரித்ததோர்-செயல்
எண்ணரும் பாதக மாகுமோ?-மனக்
கவலை வளர்த்திடல் வேண்டுவோர்-ஒரு
காரணங் காணுதல் கஷ்டமோ?-வெறும்
அவல மொழிகள் அளப்பதேன்?-தொழில்
ஆயிர முண்டவை செய்குவீர்.  77

சின்னஞ் சிறிய வயதிலே-இவன்
தீமை அவர்க்குத் தொடங்கினான்-அவர்
என்னரும் புத்திரன் என்றெண்ணித் -தங்கள்
யாகத் திவனைத் தலைக்கொண்டு-பசும்
பொன்னை நிறைத்ததொர் பையினை-மனம்
போலச் செலவிடு வாய்என்றே-தந்து
மன்னவர் காண இவனுக்கே-தம்முள்
மாண்பு கொடுத்தன ரல்லரோ?  78

கண்ணனுக் கேமுதல் அர்க்கியம்-அவர்
காட்டினர் என்று பழித்தனை!-எனில்,
நண்ணும் விருந்தினர்க் கன்றியே-நம்முள்
நாமுப சாரங்கள் செய்வதோ?-உறவு
அண்ணனும் தம்பியும் ஆதலால்-அவர்
அன்னிய மாநமைக் கொண்டிலர்;-முகில்
வண்ணன் அதிதியர் தம்முளே-முதல்
மாண்புடை யானெனக் கொண்டனர். 79

கண்ணனுக் கேயது சாலுமென்று-உயர்
கங்கை மகன்சொலச் செய்தனர்-இதைப்
பண்ணரும் பாவமென் றெண்ணினால்-அதன்
பார மவர்தமைச் சாருமோ?-பின்னும்,
கண்ணனை ஏதெனக் கொண்டனை-அவன்
காலிற் சிறிதுக ளொப்பவர்-நிலத்
தெண்ணரும் மன்னவர் தம்முளே-பிறர்
யாரு மிலையெனல் காணுவாய்.  80

ஆதிப் பரம்பொருள் நாரணன்-தெளி
வாகிய பொற்கடல் மீதிலே-நல்ல
சோதிப் பணாமுடி யாயிரம்-கொண்ட
தொல்லறி வென்னுமோர் பாம்பின்மேல்-ஒரு
போதத் துயில்கொளும் நாயகன்,-கலை
போந்து புவிமிசைத் தோன்றினான்-இந்தச்
சீதக் குவளை விழியினான்-என்று
செப்புவர் உண்மை தெளிந்தவர்.  81

நானெனும் ஆணவந் தள்ளலும்-இந்த
ஞாலத்தைத் தானெனக் கொள்ளலும்-பர
மோன நிலையின் நடத்தலும்-ஒரு
மூவகைக் காலங் கடத்தலும் நடு
வான கருமங்கள் செய்தலும்-உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்தலும்-பிறர்
ஊனைச் சிதைத்திடும் போதினும்-தனது
உள்ளம் அருளின் நெகுதலும்,  82

ஆயிரங் கால முயற்சியால்-பெற
லாவர் இப்பேறுகள் ஞானியர்;-இவை
தாயின் வயிற்றில் பிறந்தன்றே-தம்மைச்
சார்ந்து விளங்கப் பெறுவரேல்,-இந்த
மாயிரு ஞாலம் அவர்தமைத்-தெய்வ
மாண்புடை யாரென்று போற்றுங்காண்!-ஒரு
பேயினை வேதம் உணர்த்தல்போல்,-கண்ணன்
பெற்றி உனக்கெவர் பேசுவார்?  83

10. துரியோதனன் சினங் கொள்ளுதல்
வேறு
வெற்றி வேற்கைப் பரதர்தங் கோமான்,
மேன்மை கொண்ட விழியகத் துள்ளோன்,
பெற்றி மிக்க விதுர னறிவைப்
பன்னும் ம்ற்றொரு கண்ணெனக் கொண்டோன்,
முற்று ணர்திரி தாட்டிரன் என்போன்
மூடப் பிள்ளைக்கு மாமன் சொல் வார்த்தை
எற்றி நல்ல வழக்குரை செய்தே
ஏற்ற வாறு நயங்கள் புகட்ட,  84

கொல்லும் நோய்க்கு மருந்துசெய் போழ்தில்
கூடும வெம்மைய தாய்ப்பிணக் குற்றே
தொல்லு ணர்வின் மருத்துவன் தன்னைச்
சோர்வு றுத்துதல் போல்,ஒரு தந்தை
சொல்லும் வார்த்தையி லோதெரு ளாதரன்
தோமி ழைப்பதி லோர்மதி யுள்ளான்,
கல்லும் ஒப்பிடத் தந்தை விளக்கும்
கட்டு ரைக்குக் கடுஞ்சின முற்றான் 85

11. துரியோதனன் தீ மொழி
வேறு
பாம்பைக் கொடியேன் றுயர்த்தவன்-அந்தப்
பாம்பெனச் சீறி மொழிகுவான்;-அட!
தாம்பெற்ற மைந்தர்குத் தீதுசெய்-திடும்
தந்தையர் பார்மிசை உண்டுகொல்?-கெட்ட
வேம்பு நிகரிவ னுக்குநான்;சுவை
மிக்க சருக்கரை பாண்டவர்;-அவர்
தீம்பு செய்தாலும் புகழ்கின்றான்,-திருத்
தேடினும் என்னை இகழ்கின்றான். 86

மன்னர்க்கு நீதி யொருவகை;-பிற
மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை-என்று
சொன்ன வியாழ முனிவனை-இவன்
சுத்த மடையனென் றெண்ணியே,-மற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான்,-உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்,-அவர்
சின்ன முறச்செய வேதிறங்-கெட்ட
செத்தையென் றென்னை நினைக்கிறான்; 87

இந்திர போகங்கள் என்கிறான்,-உண
வின்பமும் மாதரின் இன்பமும்-இவன்
மந்திர மும்படை மாட்சியும்-கொண்டு
வாழ்வதை விட்டிங்கு வீணிலே-பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே-உளம்
தேம்புதல் பேதைமை என்கிறான்;-மன்னர்
தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே-எங்கள்
தந்தையை ஒப்பவர் இல்லைகாண்! 88

மாதர் தம் இன்பம் எனக்கென்றான்,-புவி
மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்-நல்ல
சாதமும் நெய்யும் எனக் கென்றான்,-எங்கும்
சர்ற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான்;-அட!
ஆதர விங்ஙனம் பிள்ளைமேல்-வைக்கும்
அப்பன் உலகினில் வேறுண்டோ?உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தை நீ-குறை
சொல்ல இனியிட மேதையா!  89

சொல்லின் நயங்கள் அறிந்திலேன்,-உனைச்
சொல்லினில் வெல்ல விரும்பிலேன்;-கருங்
கல்லிடை நாருரிப் பாருண்டோ?-நினைக்
காரணங் காட்டுத லாகுமோ?-என்னைக்
கொல்லினும் வேறெது செய்யினும்,-நெஞ்சில்
கொண்ட கருத்தை விடுகிறேன்;-அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக்-கண்டு
போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்; 90

வாது நின்னொடு தொடுக்கிலேன்;-ஒரு
வார்த்தை மட்டுஞ்சொலக் கேட்பையால்;ஒரு
தீது நமக்கு வராமலே-வெற்றி
சோர்வதற் கோர்வழி யுண்டு,காண்!-களிச்
சூதுக் கவரை-வெற்றி
தோற்றிடு மாறு புரியலாம்;-இதற்
கேதுந் தடைகள் சொல்லாமலே-என
தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால் 91

12. திரிதராட்டிரன் பதில்
வேறு
திரிதாட் டிரன் செவியில்-இந்தத்
தீமொழி புகுதலுந் திகைத்து விட்டான்!
பெரிதாத் துயர் கொணர்ந்தாய்;-கொடும்
பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்;
அரிதாக் குதல்போலாம்-அமர்
ஆங்கவ ரொடுபொரல் அவலம் என்றேன்;
நரிதாக் குதல்போலாம்-இந்த
நாணமில் செயலினை நாடுவ னோ? 92

ஆரியர் செய்வாரோ?-இந்த
ஆண்மையி லாச்செயல் எண்ணுவரோ?
பாரினில் பிறருடைமை-வெஃகும்
பதரினைப் போலொரு பதருண்டோ?
பேரியற் செல்வங்களும்-இசைப்
பெருமையும் எய்திட விரும்புதியேல்,
காரியம் இதுவாமோ?-என்றன்
காளை யன்றோ இது கருத லடா! 93

வீரனுக் கேயிசை வார்-திரு,
மேதினி எனுமிரு மனைவியர் தாம்,
ஆரமர் தமரல் லார்-மிசை
ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதி யேல்,
பாரத நாட்டினிலே-அந்தப்
பாண்டவ ரெனப்புகழ் படைத்திடு வாய்;
சோரர்தம் மகனோ நீ?-உயர்
சோமன்ற னோருகுலத் தோன்ற லன்றோ? 94

தம்மொரு கருமத்திலே-நித்தம்
தளர்வறு முயற்சி மற்றோர்பொருளை
இம்மியுங் கருதாமை,-சார்ந்
திருப்பவர் தமைநன்கு காத்திடுதல்:
இம்மையில் இவற்றினையே-செல்வத்
திலக்கணம் என் றனர் மூதறிஞர்.
அம்ம,இங் கிதனை யெலாம் நீ
அறிந்திலையோ? பிழையாற்றல் நன்றோ? 95

நின்னுடைத் தோளனை யார்-இள
நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ?
என்னுடை யுயிரன்றோ?-எனை
எண்ணிஇக் கொள்கையை நீக்குதியால்!
பொன்னுடை மார்பகத் தார்-இளம்
பொற்கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும்பல் இன்பத்தினும்-உளம்
இசையவிட் டேஇதை மறந்தி டடா! 96

13. துரியோதனன் பதில்
வேறு
தந்தை இஃது மொழிந்திடல் கேட்டே,
தாரி சைந்த நெடுவரைக் தோளான்;
எந்தை,நின்னொடு வாதிடல் வேண்டேன்
என்று பன்முறை கூறியும் கேளாய்;
வந்த காரியங் கேட்டி மற் றங்குன்
வார்த்தை யன்றிஅப் பாண்டவர் வாரார்;
இந்த வார்த்தை உரைத்து விடாயேல்
இங்கு நின்முன் என் ஆவி இறுப்பேன். 97

மதித மக்கென் றிலாதவர் கோடி
வண்மைச் சாத்திரக் கேள்விகள் கேட்டும்
பதியுஞ் சாத்திரத் துள்ளுறை காணார்,
பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்
துதிகள் சொல்லும் விதுரன் மொழியைச்
சுருதி யாமெனக் கொண்டனை நீ தான்;
அதிக மோகம் அவனுளங் கொண்டான்
ஐவர் மீதில்,இங் கெம்மை வெறுப்பான். 98

தலைவன் ஆங்குப் பிறர்கையில் பொம்மை;
சார்ந்து நிற்பவர்க் குய்ந்நெறி உண்டோ?
உலைவ லால் திரி தாட்டிர வர்க்கத்
துள்ள வர்க்கு நலமென்ப தில்லை;
நிலையி லாதன செல்வமும் மாண்பும்
நித்தம் தேடி வருந்த லிலாமே
விலையி லாநிதி கொண்டனம்என்றே
மெய்கு ழைந்து துயில்பவர் மூடர். 99

பழைய வானிதி போதுமென் றெண்ணிப்
பாங்கு காத்திடு மன்னவர் வாழ்வை
விழையும் அன்னியர் ஓர்கணத் துற்றே
வென்ற ழிக்கும் விதி அறி யாயோ?
குழைத லென்பது மன்னவர்க் கில்லை;
கூடக் கூடப்பின் கூட்டுதல் வேண்டும்;
பிழைஒன் றேஅர சர்க்குண்டு, கண்டாய்;
பிறரைத் தாழ்ந்து வதிற்சலிப் பெய்தல். 100

வேறு
வெல்வதெங் குலத்தொழி லாம்;-அந்த
விதத்தினில் இசையினும் தவறிலை காண்!
நல்வழி தீய வழி-என
நாமதிற் சோதனை செயத்தகு மோ?
செல்வழி யாவினு மே-பகை
தீர்த்திடல் சாலுமென் றனர்பெரி யோர்;
கொல்வது தான் படையோ?-பகை
குமைப்பன யாவும்நற் படையல வோ? 101

வேறு
கற்றத் தாரிவர் என்றனை ஐயா!
தோற்றத் தாலும் பிறவியி னாலும்,
பற்றல ரென்றும் நண்பர்க ளென்றும்
பார்ப்ப தில்லை உலகினில் யாரும்;
மற்றெத் தாலும் பகையுறல் இல்லை;
வடிவினில் இல்லை அளவினில் இல்லை;
உற்ற துன்பத்தி னாற்பகை உண்டாம்,
ஓர்தொ ழில்பயில் வார்தமக் குள்ளே 102

பூமித் தெய்வம் விழுங்கிடும கண்டாய்
புரவ லர்பகை காய்கிலர் தம்மை;
நாமிப் பூதலத் தேகுறை வெய்த
நாளும் பாண்டவர் ஏறுகின் றாரால்;
நேமி மன்னர் பகைசிறி தென்றே
நினைவ யர்ந்திருப் பாரெனில்,நோய்போல்,
சாமி,அந்தப் பகைமிக லுற்றே
சடிதி மாய்த்திடும் என்பதும் காணாய். 103

போர்செய் வோமெனில் நீதடுக் கின்றாய்;
புவியி னோரும் பழிபல சொல்வார்,
தார்செய் தோளிளம் பாண்டவர் தம்மைச்
சமரில் வெல்வதும் ஆங்கெளி தன்றாம்;
யார்செய் புண்ணியத் தோநமக் குற்றான்
எங்க ளாருயிர் போன்றஇம் மாமன்;
நேர்செய் சூதினில் வென்று தருவான்;
நீதித் தர்மனும் சூதில்அன் புள்ளோன். 104

பகைவர் வாழ்வினில இன்புறு வாயோ?
பார தர்க்கு முடிமணி யன்னாய்!
புகையும் என்றன் உளத்தினை வீறில்
புன்சொற் கூறி அவிதிதிட லாமோ?
நகைசெய் தார்தமை நாளை நகைப்போம்;
நமரிப் பாண்டவர் என்னில் இஃதாலே
மிகையு றுந்தன்ப மேது? நம் மோடு
வேறு றாதெமைச் சார்ந்துநன் குய்வார். 105

ஐய சூதிற் கவரை அழைத்தால்,
ஆடி உய்குதும்,அஃதியற் றாயேல்,
பொய்யன் றென்னுரை;என்னியல் போர்வாய்;
பொய்மை வீறென்றுஞ் சொல்லிய துண்டோ?
நைய நின்முனர் என்சிரங் கொய்தே
நானிங் காவி இறுத்திடு வேனால்;
செய்ய லாவது செய்குதி என்றான்;
திரித ராட்டிரன் நெஞ்ச முடைந்தான். 106

14. திரிதராட்டிரன் சம்மதித்தல்
 
வேறுவிதிசெயும் விளைவி னுக்கே-இங்கு
வேறு செய்வோர் புவிமீ துளரோ?
மதிசெறி விதுரன் அன்றே-இது
வருந்திறன் அறிந்துமுன் எனக்குரைத்தான்.
அதிசயக் கொடுங் கோலம்-விளைந்
தரசர்தங் குலத்தினை அழிக்கும் என்றான்;
சதிசெயத் தொடங்கி விட்டாய்-நின்றன்
சதியினிற்றானது விளையும்என்றான். 107

விதி!விதி! விதி!மகனே!-இனி
வேறெது சொல்லுவன் அட மகனே!
கதியுறுங் கால னன்றோ-இந்தக்
கயமக னெனநினைச் சார்ந்து விட்டான்?
கொதியுறு முளம் வேண்டா;-நின்றன்
கொள்கையின் படிஅவர் தமை அழைப்பேன்;
வதியுறு மனை செல்வாய்.-என்று
வழியுங்கண் ணீரொடு விடை கொடுத்தான். 108

15. சபா நிர்மாணம்

வேறு
மஞ்சனும் மாமனும் போயின பின்னர்,
மன்னன் வினைஞர் பலரை அழைத்தே,
பஞ்சவர் வேள்வியிற் கண்டது போலப்
பாங்கி னுயர்ந்ததொர் மண்டபஞ் செய்வீர்!
மிஞ்சு பொருளதற் காற்றுவன் என்றான்;
மிக்க உவகையொ டாங்கர் சென்றே
கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக்
கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றை. 109

வேறு
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்,
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்,
நல்ல தொழிலுணர்ந் தார்செய லேன்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார். 110

16. விதுரனைத் தூதுவிடல்
தம்பி விதுரனை மன்னன் அழைத்தான்;
தக்க பரிசுகள் கொண்டினி தேகி,
எம்பியின் மக்கள் இருந்தர சாளும்
இந்திர மாநகர் சார்ந்தவர் தம்பால்,
கொம்பினை யொத்த மடப்பிடி யோடும்
கூடிஇங் கெய்தி விருந்து களிக்க
நம்பி அழைத்தனன் கௌரவர் கோமான்
நல்லதொர் நுந்தைஎனஉரை செய்வாய். 111

நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறும்
நன்மணி மண்டபம் செய்ததும் சொல்வாய்;
நீடு புகழ்பெரு வேள்வியில் அந்நாள்
நேயமொ டேகித் திரும்பிய பின்னர்
பீடுறு மக்களை ஓர்முறை இங்கே
பேணி அழைத்து விருந்துக ளாற்றக்
கூடும் வயதிற் கிழவன் விரும்பிக்
கூறினன் இஃதெ னச் சொல்லுவை கண்டாய்! 112

பேச்சி னிடையிற்சகுனிசொற் கேட்டே
பேயெனும் பிள்ளை கருத்தினிற் கொண்ட
தீச்செயல் இஃதென் றதையுங் குறிப்பாற்
செப்பிடு வாய்என மன்னவன் கூறப்
போச்சுது! போச்சுது பாரத நாடு!
போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!
ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம்;
ஐய இதனைத் தடுத்தல் அரிதோ? 113

என்று விதுரன் பெருந்துயர் கொண்டே
ஏங்கிப் பலசொல் இயம்பிய பின்னர்
சென்று வருகுதி,தம்பி,இனிமேல்
சிந்தனை ஏதும் இதிற்செய மாட்டேன்
வென்று படுத்தனன் வெவ்விதி என்னை;
மேலை விளைவுகள் நீஅறி யாயோ?
அன்று விதித்ததை இன்று தடுத்தல்
யார்க்கெளிதென்றுமெய் சோர்ந்து விழுந்தான். 114

17. விதுரன் தூது செல்லுதல்

வேறு
அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்;
அடவிமலை ஆறெல்லாம் கடந்து போகித்
திண்ணமுறு தடந்தோளும் உளமுங்கொண்டு
திருமலியப் பாண்டவர் தாம் அரசு செய்யும்
வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான்
வழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி
வண்ணமற லாகித்தன் இதயத் துள்ளே
இனையபல மொழிகூறி இரங்கு வானால், 115

நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு,
நீரமுதம் எனப்பாய்நது நரம்பும் நாடு,
கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங்
குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு,
ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல
நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப்
பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு
பண்ணவர்போல் மக்களெலாம் பயிலும் நாடு, 116

அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர
அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர்
கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும்
காவினத்து நறுமலரின் கமழைக் தென்றல்
பொன்னங்க மணிமடவார் மாட மீது
புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச,
வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ,மாதர்
மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு. 117

பேரறமும் பெருந்தொழிலிலும் பிறங்கு நாடு,
பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரும்நாடு,
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
வேள்விஎனும் இவையெல்லாம் விளங்கும் நாடு,
சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு,
தொல்லுலகின் முடிமணிபோல் தோன்றும் நாடு,
பாரதர்தந் நாட்டினிலே நாச மெய்தப்
பாவியென் துணைபுரியும் பான்மை என்னே! 118

18. விதுரனை வரவேற்றல்
வேறு
விதுரன் வருஞ்செய்தி தாஞ்செவி யுற்றே,
வீறுடை ஐவர் உளமகிழ் பூத்துச்
சதுரங்க சேனை யுடன்பல பரிசும்
தாளமும் மேளமும் தாங்கொண்டு சென்றே
எதிர்கொண் டழைத்து,மணிமுடி தாழ்த்தி,
ஏந்தல் விதுரன் பதமலர் போற்றி,
மதுரமொழியிற் குசலங்கள் பேசி,
மன்ன னொடுந்திரு மாளிகை சேர்ந்தார். 119

குந்தி எனும்பெயர்த் தெய்வதந் தன்னைக்
கோமகன் கண்டு வணங்கிய பின்னர்,
வெந்திறல் கொண்ட துருபதன் செல்வம்
வெள்கித் தலைகுனிந் தாங்குவந் தெய்தி.
அந்தி மயங்க விசும்பிடைத் தோன்றும்
ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை
மந்திரந் தேர்ந்தொர் மாமன் அடிக்கண்
வைத்து வணங்கி வனப்புற நின்றான், 120

தங்கப் பதுமை எனவந்து நின்ற
தையலுக் கையன்,நல் லாசிகள் கூறி
அங்கங் குளிர்ந்திட வாழ்த்திய பின்னர்
ஆங்குவந் துற்ற உறவினர் நண்பர்
சிங்க மெனத்திகழ் வீரர் புலவர்
சேவகர் யொரொடுஞ் செய்திகள் பேசிப்
பொங்கு திருவின் நகர்வ லம்வந்து
போழ்து கழிந்திர வாகிய பின்னர்.  121

19. விதுரன் அழைத்தல்
ஐவர் தமையுந் தனிக்கொண்டு போகி,
ஆங்கொரு செம்பொன் னரங்கில் இருந்தே:-
மைவரைத் தோளன்,பெரும்புக ழாளன்,
மாமகள் பூமகட் கோர்மண வாளன்,
மெய்வரு கேள்வி மிகுந்த புலவன்,
வேந்தர் பிரான்,திரி தாட்டிரக் கோமான்
தெய்வ நலங்கள் சிறந்திட நும்மைச்
சீரொடு நித்தலும் வாழ்கென வாழ்த்தி, 122

உங்களுக் கென்னிடம் சொல்லி விடுத்தான்
ஓர்செய்தி;மற்றஃ துரைத்திடக் கேளீர
மங்களம் வாந்தநல் அத்தி புரத்தே
வையக மீதில் இணையற்ற தாகத்
தங்கும் எழிற்பெரு மண்டபம் ஒன்று
தம்பியர் சூழ்ந்து சமைத்தனர் கண்டீர்!
அங்கதன் விந்தை அழகினைக் காண
அப்பொடு நும்மை அழைத்தனன் வேந்தன். 123

வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து
மீண்டு பலதின மாயின வேனும்,
வாள்வைக்கும் நல்விழி மங்கைய டேநீர்
வந்தெங்க ளூரில் மறுவிருந் தாட
நாள்வைக்குஞ் சோதிட ராலிது மட்டும்
நாயகன் நும்மை அழைத்திட வில்லை;
கேக்விக் கொருமி திலாதிப னொத்தோன்
கேடற்ற மாதம் இதுவெனக் கண்டே, 124

வந்து விருந்து களித்திட நும்மை
வாழ்த்தி அழைத்தனன் என்னரு மக்காள்;
சந்துகண் டேஅச் சகுனிசொற் கேட்டுத்
தன்மை இழந்த சுயோதன மூடன்
விந்தை பொருந்திய மண்டபத் தும்மை
வெய்யபுன் சூது களித்திடச் செய்யும்
மந்திர மொன்றும் மனத்திடைக் கொண்டான்;
வன்ம மிதுவும் நுமக்கறி வித்தேன் 125

20. தருமபுத்திரன் பதில்
 
என்று விதுரன் இயம்பத் தருமன்
எண்ணங் கலங்கிச் சிலசொல் உரைப்பான்;
மன்று புனைந்தது கேட்டுமிச் சூதின்
வார்த்தையைக் கேட்டுமிங் கென்தன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்ற தையா!
சிந்தையில் ஐயம் விளைகின்ற தையா!
நன்று நமக்கு நினைப்பவ னல்லன்;
நம்ப லரிது சுயதனன் றன்னை.  126

கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு
குத்திர மான சதிபல செய்தான்;
சொலலப் படாதவ னாலெமக் கான
துன்ப மனைத்தையும் நீ அறி யாயோ?
வெல்லகக் கடவர் எவரென்ற போதும்
வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தக்
சொல்லுதி நீஒரு சூழ்ச்சிஇங் கென்றான். 127

21. விதுரன் பதில்
வேறு
விதுரனும் சொல்லு கிறான்;-இதை
விடமென்ச சான்றவர் வெகுளுவர் காண்;
சதுரெனக் கொள்ளுவ ரோ?-இதன்
தாழ்மை யெலாமவர்க் குரைத்து விட்டேன்;
இதுமிகத் தீதென் றே-அண்ணன்
எத்தனை சொல்லியும் இள வரசன்
மதுமிகுத் துண்டவன் போல்-ஒரு
வார்த்தையை யேபற்றிப் பிதற்றுகிறான். 128

கல்லெனில் இணங்கி விடும்-அண்ணன்
காட்டிய நீதிகள் கணக்கில வாம்;
புல்லனிங் கவற்றை யெலாம்-உளம்
புகுதலொட் டாதுதன் மடமையினால்
சல்லியச் சூதினி லே-மனம்
தளர்வற நின்றிடுந் தகைமை சொன்னேன்;
சொல்லிய குறிப்பறிந் தே-நலந்
தோன்றிய வழியினைத் தொடர்கஎன்றான். 129


by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural 3. காலத்தாழ்ச்சி , திருக்குறளில் மக்கள் தொடர்பும் நிர்வாகமும் | Thirukkural
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.