LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

முப்பெரும் பாடல்கள் - பாஞ்சாலி சபதம் - இரண்டாம் பாகம் பகுதி - 3

68. விகர்ணன் சொல்வது
அண்ணனுக்குத் திறல்வீமன் வணங்கி நின்றான்.
அப்போது விகர்ணனெழுந்த தவைமுன் சொல்வான்;
பெண்ணரசி கேள்விக்குப் பாட்டன் சொன்ன
பேச்சதனை நான்கொள்ளேன்.பெண்டிர் தம்மை
எண்ணமதில் விலங்கெனவே கணவ ரெண்ணி
ஏதெனிலுஞ் செய்திடலாம் என்றான் பாட்டன்,
வண்ணமுயர் வேதநெறி மாறிப் பின்னாள்
வழங்குவதிந் நெறி என்றான்; வழுவே சொன்னான்.  284

எந்தையர்தம் மனைவியரை விற்ப துண்டோ?
இதுகாறும் அரசியரைச் சூதிற் தோற்ற
விந்தையைநீர் கேட்ட துண்டோவிலைமாதர்க்கு
விதித்ததையே பிற்கால நீதிக் காரர்
சொந்தமெனச் சாத்திரத்தில் புகுத்தி விட்டார்!
சொல்லளவே தானாலும் வழக்கந் தன்னில்
இந்தவிதஞ் செய்வதில்லை, சூதர் வீட்டில்
ஏவற்பெண பணயமில்லை என்றுங் கேட்டோம். 285

தன்னையிவன் இழந்தடிமை யான பின்னர்த்
தாரமெது? வீடேது? தாத னான
பின்னையுமோர் உடைமை உண்டோ?  என்று நம்மைப்
பெண்ணரசு கேட்கின்றார் பெண்மை வாயால்.
மன்னர்களே! களிப்பதுதான் சூதென் றாலும்
மனுநீதி துறந்திங்கே வலிய பாவந்
தன்னைஇரு விழிபார்க்க வாய்பே சீரோ?
தாத்தனே நீதிஇது தகுமோ? என்றான். 286

இவ்வாறு விகர்ணனும் உரைத்தல் கேட்டார்;
எழுந்திட்டார் சிலவேந்தர்; இரைச்ச லிட்டார்,
ஓவ்வாது சகுனிசெயுங் கொடுமைஎன்பார்;
ஒருநாளும் உலகிதனை மறக்காதென்பார்;
எவ்வாறு புகைந்தாலும் புகைந்து போவீர்;
ஏந்திழையை அவைக்களத்தே இகழ்தல் வேண்டா,
செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயச்
செருக்களத்தே தீருமடா பழியிஃதென்பார். 287

69. கர்ணன் பதில்

வேறு
விகருணன் சொல்லைக் கேட்டு
வில்லிசைக் கர்ணன் சொல்வான்:-
தகுமடா சிறியாய் நின்சொல்
தாரணி வேந்தர் யாரும்
புகுவது நன்றென் றெண்ணி
வாய்புதைத் திருந்தார் நீ தான்
மிகு முறை சொல்லி விட்டாய்.
விரகிலாய்!  புலனு மில்லாய்!  288

பெண்ணிவள் தூண்ட லெண்ணிப்
பசுமையால் பிதற்று கின்றாய்;
எண்ணிலா துரைக்க லுற்றாய்;
இவளைநாம் வென்ற தாலே
நண்ணிடும் பாவ மென்றாய்.
நாணிலாய்! பொறையு மில்லாய்!
கண்ணிய நிலைமை யோராய்;
நீதிநீ காண்ப துண்டோ?  289

மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கங்கீ ழடியார்க் கில்லை
சீரிய மகளு மல்லள்;
ஐவரைக் கலந்த தேவி
யாரடா பணியாள்! வாராய்;
பாண்டவர் மார்பி லேந்தும்
சீரையுங் களைவாய்; தையல்
சேலையுங் களைவாய்என்றான். 290

இவ்வுரை கேட்டா ரைவர்;
பணிமக்க ளேவா முன்னர்
தெவ்வர்கண் டஞ்சு மார்பைத்
திறந்தவர், துணியைப் போட்டார்.
நவ்வியைப் போன்ற கண்ணாள்,
ஞான சுந்தரி, பாஞ்சாலி
எவ்வழி உய்வோமென்றே
தியங்கினாள், இணைக்கை கோத்தாள். 291

70. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை
 
துச்சா தனன்எழுந்தே-அன்னை
துகிலினை மன்றிடை யுரித லுற்றான்.
அச்சோ, தேவர்க ளே! -என்று
அலறி அவ் விதுரனுந் தரைசாய்ந் தான்.
பிச்சே றியவனைப் போல்-அந்தப்
பேயனுந் துகிலினை உரிகையி லே,
உட்சோ தியிற் கலந்தாள்-அன்னை
உலகத்தை மறந்தாள் ஒருமை யுற்றாள். 292

ஹரி, ஹரி, ஹரி என்றாள்; -கண்ணா!
அபய மபயமுனக் கபய மென் றான்.
கரியினுக் கருள்புரிந் தே-அன்று
கயத்திடை முதலையின் உயிர்மடித் தாய்!
கரிய நன்னிற முடையாய்! -அன்று
காளிங்கன் தலைமிசை நடம்புரிந் தாய்!
பெரியதொர் பொருளா வாய்! -கண்ணா!
பேசரும் பழமறைப் பொருளா வாய்!  293

சக்கர மேந்தி நின்றாய்! -கண்ணா!
சாரங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளா வாய்! -கண்ணா!
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய்!-கண்ணா!
தொண்டர்கண் ணீர்களைத் துடைத்திடு வாய்!
தக்கவர் தமைக்காப் பாய், -அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட் டாய். 294

வானத்துள் வானா வாய, -தீ
மண், நீர், காற்றினில் அவையா வாய்;
மோனத்துள் வீழ்ந்திருப் பார்-தவ
முனிவர்தம் அகத்தினி லொளிர்தரு வாய்;
கானத்துப் பொய்கையி லே-தனிக்
கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி, -அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப் பாய்!  295

ஆதியி லாதி யப்பா! -கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொரு ளே!
சோதிக்குஞ் சோதி யப்பா! -என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடு வாய்!
மாதிக்கு வெளியினி லே-நடு
வானத்திற் பறந்திடும் கருடன் மிசை
சோதிக்குள் ஊர்ந்திடு வாய், -கண்ணா!
சுடர்ப் பொருளே பே ரடற்பொரு ளே!  296

கம்பத்தி லுள்ளா னோ-அடா!
காட்டுன் றன் கடவுளைத் தூணிடத் தே!
வம்புரை செயு மூடா-என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத் தான்
செம்பவிர் குழலுடை யான்; -அந்தத்
தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழு தேன்; -என்னை
நாணழி யாதிங்கு காத்தருள் வாய். 297

வாக்கினுக் சுசனை யும்-நின்றன்
வாக்கினிலசைத்திடும் வலிமையி னாய்,
ஆக்கினை கரத்துடை யான்-என்றன்
அன்புடை எந்தை!  என் னருட்கடலே!
நோக்கினிற் கதிருடை யாய்! -இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள் வாய்!
தேக்குநல் வானமு தே! -இங்குச்
சிற்றிடை யாய்ச்சி யில் வெண்ணெ யுண்டாய்!  298

வையகம் காத்திடு வாய்! ; -கண்ணா!
மணிவண் ணா, என்றன் மனச் சுடரே!
ஐய, நின் பதமல ரே-சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி! என்றாள்.
பொய்யர்தந் துயரினைப் போல், -நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்,
தையலர் கருணையைப் போல், -கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல். 299

பெண்ணொளி வாழ்த்திடு வார்-அந்தப்
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்,
கண்ண பிரானரு ளால், -தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதி தாய்
வண்ணப்பொற் சேலைக ளாம்-அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தன வே!
எண்ணத்தி லடங்கா வே; -அவை
எத்தனை எத்தனை நிறத்தன வோ!  300

பொன்னிழை பட்டிழை யும்-பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைக ளாய்
சென்னியிற் கைகுவித் தாள்-அவள்
செவ்விய மேனியைச் சார்ந்துநின் றே
முன்னிய ஹரிநா மம்-தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திட வே,
துன்னிய துகிற்கூட் டம்-கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட் டான். 301

தேவர்கள் பூச்சொரிந் தார்-ஓம்
ஜெயஜெய பாரத சக்திஎன்றே.
ஆவலோ டெழுந்து நின்று-மன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழு தான்.
சாவடி மறவரெல் லாம்-ஓம்
சக்திசக்தி சக்திஎன்று கரங்குவித் தார்.
காவலின் நெறிபிழைத் தான்-கொடி
கடியர வுடையவன் தலைகவிழ்ந் தான். 302

71. வீமன் செய்த சபதம்

வேறு
வீமனெழுந் துரைசெய் வான்:-இங்கு
விண்ணவ ராணை, பரா சக்தி யாணை;
தாமரைப் பூபினில் வந்தான்-மறை
சாற்றிய தேவன் திருக்கழ லாணை;
மாமகளைக் கொண்ட தேவன் எங்கள்
மரபுக்குத் தேவன் கண்ணன் பதத்தாணை
காமனைக் கண்ணழ லாலே-சுட்டுக்
காலனை வென்றவன் பொன்னடிமீதில் 303

ஆணையிட் டிஃதுரை செய்வேன்:-இந்த
ஆண்மை யிலாத்துரி யோதனன் றன்னை,
பேணும் பெருங்கன லொத்தாள்-எங்கள்
பெண்டு திரௌபதியைத் தொடைமீதில்
நாணின்றி வந்திருஎன்றான்-இந்த
நாய்மக னாந்துரி யோதனன் றன்னை,
மாணற்ற மன்னர்கண் முன்னே, -என்றன்
வன்மையி னால்யுத்த ரங்கத்தின் கண்ணே,  304

தொடையைப் பிளந் துயிர் மாய்ப்பேன்-தம்பி
சூரத் துச்சாதனன் தன்னையு மாங்கே
கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்; -அங்கு
கள்ளென ஊறு மிரத்தங் குடிப்பேன்,
நடைபெறுங் காண்பி ருலகீர்! -இது
நான்சொல்லும் வார்த்தைஎன் றெண்ணிடல் வேண்டா
தடையற்ற தெய்வத்தின் வார்த்தை-இது
சாதனை செய்க, பராசக்தி! என்றான். 305

72. அர்ஜுனன் சபதம்
 
பார்த்தனெழுந்துரை செய்வான்:-இந்தப்
பாதகக் கர்ணனைப் போரில் மடிப்பேன்.
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு-எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழ லாணை;
கார்த்தடங் கண்ணி எந்தேவி -அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய், -ஹே!
பூதலமே! அந்தப் போதினில்என்றான். 306

73. பாஞ்சாலி சபதம்
 
தேவி திரௌபதி சொல்வாள்-ஓம்,
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர், -அந்தப்
பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டுங் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல்முடிப் பேன் யான்; -இது
செய்யு முன்னே முடியேனென் றுரைத்தாள். 307

ஓமென் றுரைத்தனர் தேவர்; -ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்.
பூமி யதிர்ச்சி உண்டாச்சு-விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற் காற்று.
சாமி தருமன் புவிக்கே -என்று
சாட்சி யுரைத்தன பூதங்க ளைந்தும்!
நாமுங் கதையை முடித்தோம்-இந்த
நானில முற்றும் நல் லின்பத்தில் வாழ்க!  308
சபதச் சருக்கம் முற்றும்
பாஞ்சாலி சபதம் முற்றிற்று.

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.