LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles

நாடகங்களில் இசை: சங்கரதாஸ் சுவாமிகளின் - டாக்டர் அரிமளம் பத்மநாபன்

காயாத கானகத்தே’ , ‘ஏனோ என்னை எழுப்பலானாய்’ , ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ ஆகிய பாடல்களைக் கேட்காத செவிகள் தமிழ்நாட்டில் இருக்க இயலாது. இறவா வரம் பெற்ற இப்பாடல்களைப் படைத்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நலிந்து கிடந்த தமிழ் நாடக மேடைக்குப் புத்துயிரளித்துத் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் இப் பெருமகனார். தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டுநாயக்கன்  பட்டி என்னும் சிற்றூரில் கி.பி.1867 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் ஏழாம் நாள் பிறந்தார். இவரது தந்தையார் தாமோதரத் தேவர்; தாயார் பேச்சியம்மாள். சிறு வயதில் இராமயணப்புலவர் எனப் பெயர்பெற்ற தம் தந்தையாரிடமும், பின்னர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடமும் தமிழ் பயின்று, பெரும் புலமை பெற்றார். பதினாறாம் வயதிலேயே வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்கள் எனப் படைக்கத் தொடங்கினார். குறிப்பாக, சந்தங்கள் பாடுவதில் நிகரற்று விளங்கி சந்தமார் சங்கரதாஸ் எனப் பின்னாளில் பெரும்புகழ் பெற்றார். தமிழ்ச் சந்த மரபில், ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள் வழி வந்தவர் சங்கரதாஸ். இதற்குச் சான்றாக அவர் இயற்றியுள்ள பழநி தண்டபாணிப் பதிகம் என்னும் சிறுநூல் திகழ்கின்றது.

1891ஆம் ஆண்டில், தம் 24ஆம் வயதில் தமிழ் நாடக உலகில் அடியெடுத்து வைத்தார். தொடக்கத்தில் நாடகக் கம்பெனியில் நடிகராகச் சேர்ந்து பின் நாடக ஆசிரியராக உயர்ந்தார். சில காலம்  நாடகத் தொழிலின் மீது வெறுப்புற்றுக் காவியுடுத்தி, தலயாத்திரை மேற்கொண்டார். அது முதல் சுவாமிகள் என்றே அழைக்கப்பெற்று இன்று வரை அவ்வாறே போற்றப்படுகிறார். தமிழ் நாடக உலகில் சாமி, சுவாமிகள் என்றாலே அது சங்கரதாஸ் ஒருவரையே குறிக்கும். நாடகக் கலைஞர்கள் அவருடைய நாடகங்களை சாமி நாடகம் என்றே சொல்வது வழக்கம். தல யாத்திரையின் இறுதியில் புதுக்கோட்டைக்கு  வந்து, அப்பொழுது  அங்கு  வாழ்ந்து  வந்த  மிருதங்க  மாமேதையும், புதுக்கோட்டை தட்சிணா மூர்த்தி பிள்ளையின் குருவுமாகிய மான்பூண்டியா பிள்ளையைச் சந்தித்தார். சுவாமிகளின் சந்தப் புலமையைக் கண்டு வியந்த பிள்ளையவர்கள் அவரை சுவீகாரம் கொண்டார். சுவாமிகள் இசைப் புலமையையும் தாள நுணுக்கங்களையும் பிள்ளையவர்களிடம் கற்றறிந் தார். சுவாமிகளின் ஏராளமான பாடல்களில் காணப்படும் தாளப் பின்னல்களும் லய நுணுக் கங்களும் நடை மாற்றங்களும் அவருடைய அசாத்திய  லய ஞானத்தைப் பறைசாற்றக் கூடியவை.

1922ஆம் ஆண்டு வரை தமிழ் நாடக மேடையில், பல்வேறு சாதனைகள் புரிந்தார். 50க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றி மேடை ஏற்றினார். அவற்றில் வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, நல்லதங்காள், அரிச்சந்திர மயானகாண்டம், இரணியன் நாடகம் அல்லது பிரகலாதன் சரித்திரம், கோவலன்  சரித்திரம், ஞானசௌந்தரி,  அல்லி சரித்திரம், அபிமன்யு சுந்தரி போன்ற நாடகங்கள் தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலும் இன்றளவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவை யாவுமே முழுமையான இசை நாடகங்களாகும்.               

கட்டுப்பாடின்றியும் வரைமுறை யின்றியும் சீர்குலைந்திருந்த தமிழ் நாடக மேடையை வரைமுறைப்படுத்தி, நடிகர்களிடையே முறையான பயிற்சியின் மூலம் கட்டுப்பாட்டினை ஏற்படுத்தினார் சுவாமிகள். முறையாக இசையமைக்கப்பட்ட பாடல்கள், வசனத்துடன் கூடிய நாடகப்பிரதி களை உருவாக்கினார். தாம் சொந்தமாக நடத்திய நாடக சபைகள் மூலமும் பிற நாடகக் கம்பெனிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்ததன் வாயிலாகவும் நூற்றுக் கணக்கான இசைநாடகக் கலைஞர்களையும் நாடக ஆசிரியர்களையும் உருவாக்கினார். எஸ்.ஜி.கிட்டப்பா சகோதரர்கள், மதுரை மாரியப்ப சுவாமிகள், பாஸ்கரதாஸ், பி.எஸ்.வேலுநாயர், சுந்தரராவ்,  கே.எஸ். அனந்தநாராயண ஐயர், சி.கன்னையா,  சாமண்ணா ஐயர், மகாதேவ ஐயர், ஜி.எஸ்.முனுசாமி நாயுடு, நடேச பத்தர், சூரியநாராயண பாகவதர், விஸ்வநாததாஸ், அவ்வை தி.க.சண்முகம் சகோதரர்கள், பாலாம்பாள், பாலாமணி, வி.பி.ஜானகி முதலானவர்கள் சுவாமிகளின் குறிப்பிடத்தக்க மாணவர்களாவர். 1918 ஆம் ஆண்டு மதுரையில் தாம் தொடங்கிய ஸ்ரீ தத்துவ மீன லோசனி வித்வ பால சபா  என்ற பாலர் நாடக சபை மூலம்  பாய்ஸ் கம்பெனி   எனும் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாகவே ‘ஸ்பெஷல் நாடகம்’ எனும் புதிய நாடக மரபும் உருவாயிற்று. இந்நாடக மரபில் வந்த கலைஞர்களே தமிழ்த் திரைப் படங்களின் தொடக்க காலத்திலிருந்து கால் நூற்றாண் டுக்கும் மேல் முக்கியப் பங்கேற்றார்கள். எம்.கே. தியாகராஜபாகவதர், பி.யு. சின்னப்பா, யு.ஆர்.ஜீவரத்தினம் தொடங்கி, எம்.ஜி.ஆர்., டி.ஆர்.மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள், சிவாஜிகணேசன், எம்.என்.நம்பியார், எம்.ஆர்.ராதா, எஸ்.வி.சுப்பையா முதலானோர் இம் மரபைச் சேர்ந்தவர்களே ஆவர். மேலும், திரைப்பட இசை யமைப்பாளர் ஜி.இராமநாதன், சாகித்தியகர்த்தாக்கள் உடுமலை நாராயண கவி, தஞ்சை இராமையா தாஸ் உள்ளிட்ட பலரும் பாய்ஸ் கம்பெனி பரம்பரையினரே ஆவர்.

சுவாமிகள், இலக்கண, இலக்கியங்கள், கர்நாடக இசை, திருமுறை இசை, இந்து ஸ்தானி இசை, நாட்டுப்புற இசை, காவடிச்சிந்து, மேற்கத்திய இசை ஆகியன வற்றில் ஆழ்ந்த ஞானம் உடையவராய் விளங்கினார். தம் படைப்புகளில் இக்கலை வடிவங்களை யெல்லாம் மிகப் பொருத்தமாக ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளார். தம் அரிய நாடகப் பணிகளின் மூலம்  தமிழ் நாடகத் தலைமையாசிரியர், நாடகத் தந்தை, நாடக மறுமலர்ச்சி யாளர், நாடக இமயம் முதலான பல போற்றுதல்களைப் பெற்றுத் தமிழ் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றார். 1922ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் புதுச்சேரியில் புகழுடல் எய்தினார்.

சுவாமிகளின் நாடகங்களில் இசை

முன்னரே குறிப்பிட்டபடி சுவாமிகளின் நாடகங்கள் யாவும் முழுமையான இசை நாடகங்களாகும். அவை இரவு முழுவதும் நிகழ்த்தப்படுபவை. “ஒரு கதையின் வரலாற்றைத் திரை,உடை,நடை,பாவனையாலும்,இனிய கீதங்களாலும், இடத்திற்குத் தகுந்தபடி வசனத்துடன் இயற்கையாக நடத்தப்படுவதே நாடகம்” என்று தம் நாடகங் களின் முன்னுரைகளில் கூறுகிறார் சுவாமிகள். இக்கருத்தியலுக்கேற்ப சுவாமிகளின் நாடகங்கள் ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெற்றிருக்கும். சுவாமிகளின் நாடகங்களுக்கு உயிர்நாடியாக விளங்குவது இசையே யாகும். இதன் காரணமாகவே நாடக ஆய்வாளர் பலரும் அவரின் நாடகங்களை இசையே அரங்காக உருப்பெற்றவை என்று கூறுவர். பழந்தமிழ்க் கூத்து மரபு என்பது ஆடல் பாடல்களுடன் ஒரு கதையைப் பல மணிநேரம் நிகழ்த்துதலேயாம். இம்மரபின் தொடர்ச்சியை வட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றளவும் நிகழ்த்தப் பெற்று வரும் தெருக்கூத்துக்களில் காணமுடியும்.

அக்காலத்தில் தமிழ் மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கிய இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, கதாகாலட்சேபம், கர்நாடக இசை யரங்குகள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்துப் பாடல்கள், நாட்டுப்புற இசை வடிவங்கள், பார்சிநாடகங்கள், ஆங்கில நாடகங்கள் எனப் பல்வேறு கலை வடிவங்களிலிருந்தும் சுவாமிகள் பெற்ற தாக்கங்கள் யாவும் அவர்தம் நாடகங்களில் இசை வடிவங்களாக உருப்பெற்றன என்றால் அது மிகையில்லை. பொதுவாக, இரவு பத்து மணிக்குத் தொடங்கும் நாடகம், விடியற் காலை ஐந்து மணியளவில் நிறைவுபெறும். நாடகம் தொடங்கு முன்னர் அனைத்து நடிகர்களும் கருவியிசைக் கலைஞர்களும் வினாயகர், கலைவாணி, மீனாட்சி, முருகன் என இறைப்பாடல்களைக் குழுப்பாடல்களாகப் பாடுவார்கள்; நாடகத் தலைப்பிற்கேற்பவும் துதிப்பாடல்கள் மாறிமாறி யமையும். ஹரிகதா என்னும் கதாகாலட்சேபத்தின் தொடக்கத்தில் பாடப்படும் ‘பஞ்சபதி’ போன்று இவை அமைந்திருக்கும்.

இடம் பெறும் பாடல் வகைகள்

சுவாமிகளின் நாடகங்களில் பல்வேறு இசை வடிவங்களும் பயன்படுத்தப் படுவதால் அதற்கேற்ப பல்வகைப் பாடல்களும் இடம் பெறுகின்றன. அவற்றைப் பின் வருமாறு வகைப்படுத்தலாம்.

இசை  வகை               பாடல்  வகை

1. தமிழ்த் திருமுறை இசை           ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, கொச்ச கம், கழிநெடிலடி, விருத்தங்கள், வண்ணங்கள், சந்தங்கள்

2. கர்நாடக இசை                     கிருதி, கீர்த்தனை, தில்லானா, ஜாவளி, தரு, திபதை , உருப்படி  

3. நாட்டுப்புற இசை               காவடிச்சிந்து,   நொண்டிச்சிந்து,   கும்மிச்சிந்து,           தென்பாங்கு (தெம்மாங்கு),   தெருக்கூத்து இசை

4. இந்துஸ்தானி இசை                       பஜன், கஜல், பார்சிநாடக  வர்ணமெட்டுகள்

5. மேற்கத்திய இசை           இங்க்லிஷ் நோட்

 

சுவாமிகளின் நாடகப் பாடல்களில் மிகவும் புகழ்பெற்றுச் செல்வாக்குடன் விளங்கி யவை தருக்கப் பாடல்கள் (தர்க்கம்) எனப்படும். நாடகக் கதை மாந்தர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் பாடல் வடிவில் அமைந்திருப்பதால் அவை இவ்வாறு பெயர் பெற்றன. ஒவ்வொரு நாடகத்திலும் இவ்வகைப் பாடல்களே அதிக  எண்ணிக்கையில் இருக்கும். மேற்சுட்டிய பாடல் வகைகளெல்லா வற்றையும் இத் தருக்கப் பாடல்களிலேயே காணமுடியும்.

சுவாமிகள் தம் நாடகப் பாடல்களிற்கான இசையமைப்பிற்கு இரண்டு விதமான உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார். ஒன்று, அவர் காலத்தில் இசையரங்குகளில் புகழ்பெற்று விளங்கிய பாடல்களின் வர்ணமெட்டுகள். மற்றொன்று, தாமே இயற்றி இசையமைத்து மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்று விளங்கிய பாடல்களின் வர்ணமெட்டுகள் என வகைப்படுத்தலாம். சுவாமிகளின் சம காலத்தவரான மகாகவி பாரதியும் இதே போன்று பல வர்ணமெட்டுக்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளதை இங்கு ஒப்பு நோக்கிக் கொள்ள வேண்டும். சுவாமிகளின் சமகாலப் புலவர்களைத் தொடர்ந்து, பின் வந்த புலவர்களும் அதே பழக்கத்தைப் பின்பற்றினர்.

 அவ்வாறு இயற்றப்பட்ட பாடல்கள் பெரும்பாலும் சுவாமிகளின் வர்ணமெட்டுக்களில்  அமைந்தவையே. குறிப்பாக, எத்தனை நேரமாக (தன்யாசி), பவளமெங்கே விளைகிறது, (சிந்துபைரவி), சத்யவான் மீதுனக்காசை ஏன் (பீம்ப்ளாஸ்), கழுத்தில் விழுந்த மாலை (இந்துஸ்தான் காப்பி), தேங்காயுடைந்து போச்சே (முகாரி) அடைக்கலமே அடைக்கலமே (ஆரபி), மார்க்கத்தில் கண்ட கனி (அடாணா), நீயே சகாயமென (சகானா)  என வரிசைப்படுத்த லாம். எஸ்.ஜி.கிட்டப்பா மூலம் பிரபலமான  காமி சத்யபாமா கதவைத் திறவாய் என்னும் பாடல், இந்த வனப் பெருமை என்ன சொல்லுவேன் (சத்தியவான் சாவித்திரி) என்ற பாடலின் வர்ணமெட்டில் அமைந்த தாகும். அக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்  இயற்றிய காவடிச் சிந்துப் பாடல்கள் அனைத்தின்  வர்ண மெட்டுகளிலும்  பல   பாடல்களை   இயற்றி,   தம்   நாடகங்களில் ஞான  சௌந்தரி  தவிர அனைத்திலும் பயன்படுத்தி யுள்ளார். பெரும்பாலும் அவற்றைத் தர்க்கப் பாடல்களாக அமைத்திருப்பது மிகவும் சிறப்பாகும். சுவாமிகள் தமிழ் வரலாற்றில் வர்ணமெட்டு சகாப்தத்தை  உருவாக்கியவர்  எனக் கூறலாம்.

ஏராளமான வர்ணமெட்டுக்களில் பல்வேறு வகையான பாடல்களை இயற்றிய சுவாமிகளின் நூற்றுக்கணக்கான பாடல்கள் பிற்கால நாடக ஆசிரியர்களுக்கும் பாட லாசிரியர்களுக்கும் வர்ணமெட்டுகளாக அமைந்தன என்பது வரலாறு.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சுவாமிகள் நேரடியாகப் பங்குபெறவில்லை யெனினும்,  அக்கால நாடக மேடைகளிலும்  காங்கிரஸ் மேடைகளிலும்  பாடப்பட்ட பல பாடல்கள் சுவாமிகளின் வர்ணமெட்டு களில் அமைந்தவையாகும். எடுத்துக் காட்டாக, விஸ்வநாத தாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்த ‘கதர்க் கப்பல் கொடி தோணுதே’ என்ற பாடல் பரஸ் (பரசு) இராகத்திலமைந்தது. சத்தியவான் சாவித்திரி நாடகத்தில், அம்மணி நீ சொல்லக் கேளாய் என்ற பாடலின் வர்ணமெட்டில் அமைந்ததே இப் பாடல்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியை (1901--&1950) தமிழ்நாட்டின் வர்ண மெட்டுக் காலம் என்றே குறிப்பிடலாம். பாரதிதாசன் உள்ளிட்ட எந்தப் புலவரும் சுவாமிகளின்  வர்ணமெட்டுகளின் தாக்கத்திலிருந்து தப்ப இயலவில்லை. தொடக்க காலத் தமிழ்த்  திரைப்படப் பாடல்கள் பலவும் வர்ணமெட்டுகளின் அடிப்படை யிலேயே அமைந்தன.

(எ.கா.) ஸத்வ குண போதன் --& எப்போ வருவாரோ       

       காதல் கனி ரசமே & நாத தனுமனிஸம் 

சுவாமிகளின் பிரசித்தி பெற்ற நாடகங் களே தொடக்க காலத் திரைப்படங்களாக வெளி வந்தன. பெரும்பாலும், சுவாமிகளின்  நாடகப் பரம்பரையினரே அந்த் திரைப்படங்களிலும்  பங்கேற்றனர்.

(எ. கா.)   வள்ளி திருமணம் , பவளக்கொடி , சத்தியவான் சாவித்திரி, அல்லி அர்ஜுனா, கண்ணகி (கோவலன் சரித்திரம்), ஞான சௌந்தரி. 

சுவாமிகளின்  நாடகப் பாடல்கள் மூலம் பாமர மக்களிடமும் பல இராகங்களும் வர்ண மெட்டுக்களும் மிகவும் பிரபலமாயின. பாமரர்களும் இராகங்கள் பெயர்களை மட்டுமின்றி அவற்றை அடையாளம் காணவும் (வீபீமீஸீtவீயீஹ்) அறிந்திருந்தனர். அவ்வாறு பிரபலமான சில இராகங்கள் வருமாறு:

பைரவி, தன்யாசி, கமாஸ், செஞ்சுருட்டி, யதுகுலகாம்போதி, காம்போதி, கல்யாணி, தோடி, பிலகரி, மோகனம், ஆரபி, சுத்தசாவேரி, பேகட, பூர்விகல்யாணி, பரஸ், சகானா, காப்பி, பீம்ப்ளாஸ் , அடாணா, முகாரி, பெஹாக்(பியாக்), ஜோன்புரி, சிந்துபைரவி.   

சுவாமிகளின்  நாடகங்களில் மிகவும் பிரபலமான சில பாடல்கள் வருமாறு:

 

 

வள்ளி  திருமணம்                பருவ காலத்தை வீணாய்             -  

பிலஹரி

                மார்க்கத்தில் கண்ட கனி                - 

அடாணா

 

 

 கோவலன்சரித்திரம்            கழுத்தில் விழுந்த மாலை           - 

 இந்துஸ்தானி காப்பி

                 நீயே சகாயமென

                                -  

சஹானா

 

 

 

பவளக்கொடி              மனமிக்க மெலிவாகி                          -

காவடிச்சிந்து

                பவளமெங்கே விளைகிறது         -

சிந்துபைரவி 

                எத்தனை நேரமாக இப்படி              -

தன்யாசி

 

இலங்கா தகனம்           

-              நீ போய் உரைப்பாய் அனுமானே             -

இராகமாலிகை

                (இராக முத்திரையுடன் 8 இராகங்களில் அமைந்தது)

பழனி தண்டபாணிப் பதிகம்         ஞானப் பழத்தைப் பிழிந்து              -

இராகமாலிகை

 

சுவாமிகள்  தனிப் பாடல்கள் பலவும் எழுதி யிருக்கிறார். இறவா வரம் பெற்ற ஏராளமான பாடல்களையும் இனிய தமிழில் உன்னதமான நாடகங்களையும்  படைத்த  சங்கரதாஸ் சுவாமிகளைத் தமிழுலகம் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் , நாடகத் தந்தை , நாடக இமயம் என்றெல்லாம்  புகழ்ந்து போற்றுவதில் வியப்பில்லை.

இன்றைக்கும் சுவாமிகளின் நாடகங்களை மட்டுமே நிகழ்த்தி வாழ்க்கை நடத்தி வரும் 3000 கலைஞர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். சங்கீத உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்கிய அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் , டி.என்.இராஜரத்தினம் பிள்ளை போன்றோரெல்லாம்  சுவாமிகளின் நாடகங்களைக் கண்டு களித்து  இசை இன்பத்தையும் துய்த்தவர்கள். அக் காலக் கர்நாடக இசை யரங்குகளிலும் சுவாமிகளின் நாடக இசை பெரும் செல்வாக்கைச் செலுத்தியிருந்தது.

குறிப்பாக , சிந்துபைரவி, பெஹாக் போன்ற இராகங்கள்,  இங்கிலிஷ்நோட் , இந்துஸ்தானி மெட்டுகள் ஆகியன இசை யரங்குகளில்  இடம் பெற்றதற்கு சுவாமிகளின்  நாடகங்களே  பெரிதும் காரணமாய் விளங்கின. தமிழில் நாடகமும் இசையும் இருக்கின்ற வரை சுவாமிகளின் புகழும் அவர் தம் படைப்புகளும் நிலை பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.  

by Swathi   on 28 Jan 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.