|
||||||||
‘முத்தமிழ் இசைத்திலகம்’ :கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணர் |
||||||||
நாடகம் வளர்த்த தமிழிசை நாட்டினிற்கணிகலம் நாடகக் கலையே பாட்டும் இயலும் எழில் காட்டும்- நவநிலையே என்று ஒரு பாடல் கூறுகிறது. கலையிற் சிறந்தது இயல் இசை நாடகம் நாடகம் என்பது நடிப்பும் பாட்டும் என்ற சிறந்த உரையாடலின் மூலம் திருவிளையாடல் திரைப்படத்தில் இயக்குநர் அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன் சிவபெருமானும் தருமியும் தம் புலமைத்திறன் குறித்து வாதிடும் காட்சியில் நாடகம் என்றால் அது நடிப்பும் பாட்டும் இணைந்ததுதான் என்று உணர்த்துகிறார். நாடகம் என்பது இருவகைப்படும்.ஒரு நாடகத்தை எழுதி நூலாகத் தயாரித்தால் அதை நாம் படித்து சுவைக்கிறோம்.அந்நாடகத்தில் உரையாடல்கள் பாடல்கள் அனைத்தும் இருக்கும். இவை இரண்டும் சேர்ந்தால் அது நாடகம்தான், என்றாலும் அந்நாடகம் மேடையில் நடிக்கப்பெறும் போதுதான், முழுமை பெறுகிறது. அதாவது நாடகத்தைப் படித்துப் பார்க்கும்போது கிடைக்கும் சுவையைவிட அதனைப் பார்த்து மகிழும்போது சுவை கூடுகிறது.ஏனெனில், அந்நாடகப் பாத்திரங்களின்மூலம் அதன் உரையாடல்கள் பேசப்படுவதன்மூலம் அந்நாடகத்திலுள்ள பாடல்கள் பாடப்படுவதன்மூலமும், அந்நாடகத்துக்கு உயிரூட்டப்படுகின்றது.அந்நாடகம் உயிர் பெற்றுவிடுகின்றது எனவே அங்கு முழுமை கிடைக்கிறது. ஆம்! முத்தமிழில் இயலும் இசையும், நாடகத்தின் மூலம் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதால், இக்கலையின் உன்னதமான மகத்துவம் நமக்குப் புரிகிறது. எனவே, நாடகம் என்பது அதன் மரபு கெடாமல் நடிக்கப் பெறவேண்டும், நாடகத்துக்கென நல்ல பாடல்கள் எழுதப் படவேண்டும்.நல்ல காட்சியமைப்புகள் கதைக்கு ஏற்றபடி அமைய வேண்டும், நடிக்கும் கதாபாத்திரங்கள் அதன் தன்மையை உணர்ந்து நடிக்கவும், பாடவும் வேண்டும்.கூடுமானவரை நடிகர்கள் தம் சொந்தக் குரலிலிலேயே பாடி நடிக்க வேண்டும், இவைதான் அந்நாளில் நல்ல நாடகத்தின் இலக்கணமாகவும், மரபாகவும், கடைபிடிக்கப்பட்டு வந்தது.ஆனால் இன்றைய நிலையில் அது தலைகீழாக மாறிவிட்டது வருத்தத்திற்குரியது. அந்நாளில் நாடகங்களில் உரையாடல்களே இல்லாமல், பாடல்களின் மூலமே பாத்திரங்கள் தம் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.கதாபாத்திரங்கள் அனைவரும் பாடித்தான் நடிப்பார்கள்.பாடத் தெரியாதவர்களுக்கு நாடகத்தில் வேலையில்லை.பாடத் தெரிந்தவர்கள்தான் நாடகத்தில் நடிக்க முடியும்.அவர்களுக்குத் தான் வாய்ப்பு.பாடத் தெரிந்திருப்பது நடிக& நடிகையருக்கு ஓர் அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இன்று சரியாகத் தமிழைப் பேசக்கூடத் தெரியாதவர்கள் திரைப்படங்களிலேயே நடிப்பதைப் பார்க்கிறோம்.இதைக் கால வளர்ச்சி என்று கூறுவது பொருந்தாது.கலைஞர்களின் அக்கறையின்மையும், மெத்தனமான போக்கும், முயற்சிக் குறைவும்தான் இதற்குக் காரணம் என்று நான் உறுதியாகக் கூறுவேன். சிறிது காலத்திற்குப் பின்னர் நாடகத்தில் பாடல்கள் குறைக்கப்பட்டு, சிறு உரையாடல் கள் சேர்க்கப்பட்டன.அப்போதும், பாடல்களுக்கான மதிப்பும், மவுசும் ஒரு சிறிதும் குறையவில்லை.ஒரு குறிப்பிட்ட உரையாடலைப் பேசாமல் விட்டுவிட்டாலும், ரசிகர்கள் பொறுத்துக்கொள்வார்கள் ஆனால் பாடல்கள் ஒன்றுகூட குறைக்கப்படமாட்டாது.அவை குறைந்தால் ரசிகர்கள் சபையில் கூச்சல், குழப்பத்தை உண்டுபண்ணிவிடுவார்கள்.அந்நாளில் பாடல்களிலே அவ்வளவு மயக்கம் அவர்களுக்கு இருந்தது. காலப்போக்கில் பாடல்கள் மேலும் குறைக்கப்பட்டு, உரையாடல்களை அதிகமாக எழுதி நாடகத்தை நடித்தார்கள்.அப்போது நாடகத்தின் வடிவம் சற்று மாற்றப்பட்டுவிட்டது. தற்போது தொடக்கப் பாடல் அதாவது கடவுள் வணக்கப் பாடலோ, மொழி வாழ்த்தோ எதுவுமில்லாமல், நாடகம் தொடங்கப்பெற்று, உரையாடல்களை மட்டும் பேசிக் கொண்டு, குறைந்த காட்சியமைப்புகளுடன் ஒப்பனையிலும் போதிய கவனம் செலுத்தாமல், நான்கைந்து நடிக நடிகையர்களைக் கொண்டு நாடகம் நடத்தப்படுகிறது. இது மரபை மீறிய செயலாகும்.ஒரு கலையை மேடையில் அரங்கேற்ற வேண்டுமானால் அதன் தனித்தன்மை கெடாமல், மரபு வழியில் நின்று செய்யவேண்டும்.அதுவே பெருமை தரும், தற்போது அப்படி இல்லை மிகவும் மாறிப்போய்விட்டது. ஆனால் அன்று நாடக மேடைகளில் பாடல்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். எப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் மேடைகளில் பாடப்பட்டன அருமையான பாடல்கள், அற்புதமான சந்தங்கள், இசையில் பல்வேறு இலக்கண முறைகள், அத்தனை நாடகப் பாத்திரங்கள் தாங்கள் பேசி நடிக்கும் மேடையிலேயே தங்கள் அற்புதமான குரல் வளம் கொண்டு வகை வகையாகப் பாடி முத்தமிழின் சுவையினையும், ரசிகப் பெருமக்களுக்கு முழுமையாக வழங்கினார்கள் என்றால் அது எத்தகைய பொற்காலமாம இருந்திருக்க வேண்டும். நாடக உலகின் பொற்காலமல்லவா அது. சிறப்பான தமிழ்ப் பாடல்கள் எல்லாம் அன்று நாடக மேடைகளில்தான் பாடப்பட்டன.தமிழகத்தின் தலைசிறந்த இசைவல்லுநர்கள் எல்லாம் அன்று தம் மேதாவிலாசத்தைத் தம் பாடல்களைச் சிறப்பாக நாடக மேடைகளில் பாடித்தான் வெளிப்படுத்தினார்கள்.அவர்களுடைய அற்புதமான குரலில் பாடல்களைக் கேட்டு மகிழ்வதற்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டமே அந்நாளில் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஆம்! நல்ல தமிழிசையை அவர்கள் நாடக மேடைகளிலே வழங்கினார்கள். நல்ல தமிழிசையை அன்று நாடகங்கள் தான் வளர்த்தன.நாடக மேடைகளில் பாடப்பட்டதன்மூலம் நல்ல தமிழிசை தானாக வளர்ந்தது.பாடல்களில்தான் எத்தனை வகை. நூல் வடிவில் நமக்குக் கிடைத்திருக்கின்ற நாடகங்கள் எல்லாம் பெரும்பாலும் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.அவை யாவும் பாடல்களாகத்தான் இருந்திருக்கின்றன.உரைநடையே கிடையாது.என்வே, பழந்தமிழ் நாடகங்களில் பாடல்கள்தாம் நிறைந்திருந்தன என்பதை இந்நாட கங்கள் நிரூபிக்கின்றன.பிற்காலத்தில் தான் உரையாடல்கள் சேர்க்கப் பட்டன.நாடக கதாபாத்திரங்கள் இரண்டு வரிகள் உரையாடல்களைப் பேசுவதற்குள் உடனே, அக்கருத்தை ஒரு பாடலைப் பாடுவதன் மூலம் வெளிப்படுத்திவிடுவார்கள்.அரிச்சந்திரா நாடகத்தில், அரிச்சந்திரன் தன் மனைவி சந்திரமதியைக் காசிநகருக்கு அழைத்துச் செல்கிறான். காசி நகர் வந்தோம் பாராய் பெண்ணே! என்று ஒருவர் வசனம் பேசிவிட்டு உடனே! கரங்குவிப்பாய் மயிலே - இதோ காசி காணுதுபார் குயிலே என்று பாடத் தொடங்கிவிடுவான் அரிச்சந்திரன். இவ்வாறு அந்நாளில் அரிச்சந்திர இராமாயணம், மகாபாரதம் கி.பி.1712 முதல் 1799 வரை வாழ்ந்த சீர்காழி அருணாச்சலக் கவிராயர் எழுதப்பெற்ற இராம நாடகம், அசோகமுகி நாடகம் ஆகியவை அனைத்தும் பாடல்களாகவே நடத்தப்பெறும் நாடகங்களாக இருந்திருக்கின்றன. மேலும், கோபாலகிருஷ் பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளைப் பற்றியெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும்.நாடக மேடைகளில் பல நடிகர்களால் பாடல்பெற்ற பாடல்கள்தாம் அவை.இரணிய சங்கரா நாடகம், உத்தர ராமாயண நாடகம், சுந்தர் நாடகம், காத்தவராயன் நாடகம், சிறுதொண்டர் நாடகம் ஆகிய அனைத்திலும் பாடல்களே முக்கியத்துவம் பெற்றிருந்தன. பிறகு, குறவஞ்சி நாடகங்களில் பாடல்களோடு நடிப்பும், நாட்டியமும்கூட கலந்திருந்தன பெரும்பாலும் கலைஞர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டே அபிநயம் பிடித்து ஆடவும் செய்தார்கள். குற்றாலக் குறவஞ்சி விராலி மலைக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி சரபேந்திர பூபாளக் குறவஞ்சி ஆகியவை.மிகவும் புகழ்வாய்ந்த நாடகங்களாகும். இவற்றுள் திரிகூடராசப்பக் கவிராயார் எழுதிய திருக்குற்றாலக் குறவஞ்சி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பாடல் இலக்கியம் என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் நாடக அலங்காரம், வாசகப்பா, சபா, பள்ளு போன்ற அமைப்புகளிலும், பெயர்களிலும் கூட நாடகங்கள் இருந்திருக் கின்றன.1891-இல் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை மனோன்மணீயம் என்னும் அற்புதமான நாடகத்தை அகவற்பாலால் எழுதியிருக்கிறார்.நாடக இயல் தந்த பரிதிமாற் )கலைஞர் கூட மான விஜயம் என்னும் நாடகத்தை அகவற்பா நடையில் தந்திருக்கிறார். பண்டையக் கால நாடகப் பாடல்கள், வெண்பா, கலித்துறை, விருத்தம், தோடையம், திபதைகள், தருக்கள், கொச்சகம், தாழிசை, அகவல், கண்ணிகள், சிந்துகள், முதலிய பலவிதமான பாவிணங்களில் எழுதப்பட்டிருந்ததை அறிகிறோம். இவ்வாறு பாடல்களுடன் ஆடப் பட்டுவந்த நாடகத்தை ஒழுங்குபடுத்தி, இன்று நாம் காணும்படியான ஒரு மரபிலே நாடகமேடை அமைப்புக்கு தஞ்சை நவாப் கோவிந்தசாமிராவ் என்னும் நாடகக் கலைஞர்தாம் கொண்டுவந்தார் இதனை நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் தமது நாடகத் தமிழ் என்னும் நூலில் உறுதிப்படுத்து கிறார். தமிழ் நாடகத்தலைமையாசிரிய ராக விளங்கிவரும் என் தந்தை நாடக மேதை பத்மஸ்ரீ அவ்வை டி.கே.சண்முகம் அவர்களின் குருவாக விளங்கியவருமான தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில் இடம்பெற்ற பாடல்கள் மிகவும் புகழ் வாய்ந்தவையாகும். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைத் தந்தவர் அந்த மகான். நாடகப் பாத்திரங்களின் வாயிலாக அவர் வெளியிடும் கருத்துக்கள், பாடல் களாக வெளிவரும்: அவருடைய நாடக அமைப்பும் பாடல்களிலே காணப்படும் புலமைத்திறனும் மிகவும் போற்றுதலுக்குரியவை யாகும். அவர் தந்த அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சீமந்தனி, சதி அனுசுயா, பக்த பிர்ஹலாதன், சிறுத்தொண்டர், வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, சுலோசனாசதி, மேலும் மணிமேகலை, கோவலன் சரித்திரம, பிரபலிங்க லீலை ஆகிய நாடகங்கள் யாவும் நாடக உலகிற்குக் கிடைத்த செல்வங்களாகும். சுவாமிகளில் நாடகங்களில் வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தம், சிந்து, வண்ணம், ஓரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை, கீர்த்தனை இப்படி பலவகைப்பட்ட பாடல்கள் நிரம்பியிருக்கும்.இன்று இந்நாடகங் களை அப்படியே நடித்தால் என்னடா இது?எதுக்கெடுத்தாலும் பாட்டுதானா?என்று கேட்பார்கள்.உண்மைதான், அதனால்தான் நாடக மேடையில் நடிகர்கள் நல்ல தமிழிசையை வளர்த்தார்கள் என்று கூறுகிறோம்.இன்று காலத்துக்கேற்றவாறு பாடல்களைச் சிறிது குறைத்துக்கொண்டு நடிக்கலாம்.அதற்காக, நாடக மரபை மீறிப் பாடல்களே இல்லாமல் நடிக்க முற்படுவது அரைகுறை நாடகமாகவும் கருதப்படும் என்பதில் ஐயமில்லை.சிரித்தாலும், அழுதாலும் சண்டை போட் டாலும் கொஞ்சினாலும் எல்லாவற்றுக்கும் பாட்டுமயம்தான்.இதுவும் சம்மந்தப்பட்ட நடிகர்களே தம் சொந்தக் குரலில் பாடவும் வேண்டும்.இரவல் குரலெல்லாம் கிடையாது.பின்னணி அமைப்பும் இல்லை எப்படி உழைத்திருக்கிறார்கள் அன்றைய நடிகர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். அந்நாளைய நாடகங்களில் இடம் பெற்ற பல பாடல்களையும் சிறந்த நாடகப் புலவர்கள் எழுதினார்கள்.இராமாயண நாடகத்தில் இடம் பெற்ற பல பாடல்களை ஏகை.சி.சண்முகம் பிள்ளையவர்கள்தான் எழுதியுள்ளார். டி.கே.எஸ்.சகோதரர்களின் பாலசண்முகானந்த சபை மற்றும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீதேவி பாலவினோத சங்கீத சபை ஆகியோரின் இராமாயண நாடகங்களிலெல்லாம் இவருடைய பாடல்களே மிகுதியாக இடம்பெற்றிருந்தன. கண்டிராஜா என்னும் நாடகத்திலும் இவர் பாடல்களை எழுதியுள்ளார். மேலும் சித்திர கவி சுப்பராய முதலியார், உடுமலை சந்தச்சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார், மதுரபாஸ்கரதாஸ், சந்தானகிருஷ்ணநாயுடு, சங்கரலிங்கக் கவிராயர் போன்ற பல புகழ் வாய்ந்த நாடகப் புலவர்கள் அந்நாளில் நல்ல தமிழ்ப் பாடல்களை நாடகங்களுக்காக எழுதினார்கள். சாம்பூரூ, வடகரை சுப்பையா பாகவதர், மதுரபாஸ்கரதாஸ், லட்சுமணதாஸ், ராஜா, எஸ்.எஸ்.அ.சண்முகதாஸ், கரிகேச நல்லூர் முத்தையாபாகவதர் போன்ற சிறந்த நாடகப் பாடலாசிரியர்கள் இருந்தனர். இதற்குப் பிற்பட்ட காலத்தில் 1933-க்குப் பிறகும் நல்லாசிரியர்கள் பலர் நாடகங்களுக்காகப் பாடல்கள் புனைந்தனர். அவர்களில் கவி.ஆறுமுகனார், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, டி.கே.முத்துசாமி (இவர் அவ்வை சண்முகத்தின் மூத்த சகோதரர்) பி.வேங்கடாசலம், புத்தனேரி சுப்பிரமணியம், எம்.கே.ஆத்மநாதன், திருச்சி பாரதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் மகாகவி பாரதியார், கவியோகி சந்தானந்த பாரதி, பாவேந்தர், பாரதிதாசன், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஆகியோரின் பாடல்களையெல்லாம் என் தந்தை அவ்வை சண்முகம் அவர்கள் தம் நாடக சபையில் நாடகங்களில் தகுந்த காட்சிகளில் சேர்த்து இக்கவிஞர்களையெல்லாம் பெருமைப் படுத்தியிருக்கிறார் என்பது நாடக மேடையின் வரலாறாகும். அந்நாளில் நாடகங்கள் அரங்கேற்றப்படும் நாளில் நாடக அரங்கில் அன்றைய நாடகத்தில் இடம்பெறும் பாடல்கள் மட்டும் அடங்கிய பாடப் புத்தகங்கள் அச்சடித்து விற்பனை செய்வதுண்டு.எங்கள் நாடக சபையிலும், அவ்வழக்கம் இருந்தது. சுமார் ஆயிரம் பிரதிகள் இரண்டு நாட்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடும் என்றால் பாருங்கள் இன்று நாடகத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு என்ன வரவேற்பு இருந்திருக்கிறது பார்த்தீர்களா? அந்நாளில் நாடகப் பாடல்கள் மிகும் பிரபலமானவை. இன்று திரைப்படம் வெளியிடும்போது பாடல் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன அவற்றையும் வேறு ஏதோ கம்பெனிகள் வெளியிடுகிறார்களே தவிர, நாடக சபைகள் வெளியிடுவதைப்போல், திரைப்படங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் வெளியிடுவதில்லை. ஆனால் ஒரு காலத்தின் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது கம்பெனி பாட்டுப் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் இப்போது இல்லை.மேலும் இப்போதுள்ள திரைப்பாடல்களுக்குப் புத்தகம் வேறு வேண்டுமா என்ன?மனப்பாடமா செய்யப்போகிறோம்.பெரும்பாலான பாடல்கள் ஆபாசக் களஞ்சியமாக அல்லவா இருக்கின்றன? ஆம்! இது இக்காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும். |
||||||||
by Swathi on 28 Jan 2016 1 Comments | ||||||||
Tags: டி.கே.எஸ்.கலைவாணர் TKS Kalaivanar | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|