|
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் - குறிக்கோள்கள் |
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்
கட்டணமில்லாத் திருக்குறள் நூல் வழங்கலும் மனனப் பயிற்சியும் உலகப் பொதுமுறையாம் திருக்குறளை இளம் வயதிலேயே மாணவ மாணவியர் மனப்பாடம் செய்தால் வாழ்நாள் முழுவதும் மனத்தில் நிற்கும். "இளமையில் கற்பவை மனத்தில் பசுமரத்தாணி போலப் பதியும்" என்பது பழமொழி. இவ்வியக்கம் வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டு சொசைட்டி என்ற மூன்று அமைப்புகளும் இணைந்து அக்டோபர் 2021ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. திருக்குறள் முற்றோதல் பயிற்சியளிப்பதில் முன் அனுபவம் உள்ள ஆசிரியர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஓர் ஒருங்கிணைப்பாளர், ஒரு பயிற்சியாளர், ஒரு புரவலர் என அடையாளம் கண்டு, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணமில்லாமல் மனனப் பயிற்சி வழங்குவது இதன் நோக்கமாகும். திருக்குறள் வழியில் அறம் சார்ந்த முன்மாதிரி தமிழ்ச் சமூகத்தைக் கட்டமைக்கும் பணியில், இது ஒரு மாநிலம் தழுவிய முதல் முயற்சி ஆகும். இந்த முயற்சியில், ஹார்வார்டு தமிழிருக்கைப் புரவலர் அமெரிக்க வாழ் மருத்துவர் திரு.விஜய் ஜானகிராமன் அவர்கள் ஒருங்கிணைப்பில் உலகத் தமிழ்வளர்ச்சி மன்றம், USA, ஒரு மாவட்டத்திற்கு 1000 திருக்குறள் நூல்கள் வீதம் ஆண்டொன்றுக்கு 40,000 திருக்குறள் நூல்களைப் பத்து ஆண்டுகளுக்கு மொத்தம் 4 லட்சம் நூல்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் குறிக்கோள்கள்: 1) தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பைத் (மாணவர் எண்ணிக்கை உச்ச வரம்பு ஏதுமில்லை, பரிசுத் தொகை உயர்வு) தொடர்ந்து, 1330 திருக்குறள் பாக்களையும் மனனம் செய்யும் மாணவர்களை அதிக அளவில் உருவாக்கி, அரசு விருதும், பரிசுத்தொகையும் பெற வைப்பது, அறம் சார்ந்த, பொருள் வளம்மிக்க நல்லிணக்க சமுதாயத்தைக் கட்டமைத்தல். 2) பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் இணைந்து செயல்பட்டு ஆர்வமும் மனனம் செய்யும் திறனும் மிக்க மாணவர்களை இனம் கண்டு, அவர்களுக்குத் திருக்குறள் மனனப் பயிற்சியை 3 -ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்புக்குள் அளித்தல். அவர்களுக்கு அரசு விருது மட்டுமின்றி உலகத் திருக்குறள் இயக்கத்தின் சார்பாகத் "திருக்குறள் முற்றோதல் - இளநிலை" சான்றிதழ் வழங்குதல். 3) முற்றோதல் முடித்த அனைவரும் கல்லூரி செல்வதற்கு முன்பு முழுமையாகக் குறளின் பொருளை அறிந்துகொள்ள வழிசெய்தல். அதில் நேர்முகத் தேர்வு , இணையவழித் தேர்வு வைத்து பொருள் உணர்ந்து கற்றவர்களுக்குத் "திருக்குறள் முற்றோதல் - முதுநிலை" சான்றிதழ் வழங்குதல். 4) திருக்குறள் முற்றோதல் பயிற்றுவிக்க, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தகுதியும், அனுபவமும், ஆர்வமும் மிக்க முற்றோதல் முடித்த பயிற்சியாளர்களை அடையாளம் கண்டு பயிற்சியாளராக்கவும், அந்தப் பயிற்சியாளருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்க ஒரு புரவலரையும், மாவட்ட ஒருங்கிணைப்புப் பணிக்காக ஓர் ஒருங்கிணைப்பாளரையும் நியமித்தல். 5) ஆண்டு தோறும் திருவள்ளுவர் நாளில், திருக்குறள் முற்றோதல் முடித்தவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட திருவள்ளுவர் சிலையின் முன் ஒன்றுகூடி, தமிழ் வளர்ச்சித்துறை, மாவட்ட நிருவாகம் ஆகியவற்றுடன் இணைந்து குழுவாகத் "திருக்குறள் முற்றோதல்" செய்து, கற்றதை மறந்துவிடாமல் இருக்க வழிசெய்தல். 6) குறள் முற்றோதல் முடித்த அனைவரின் விவரங்களையும் இணையத்தில் பட்டியலிட்டு, வரிசை எண் கொடுத்து, அவர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பெற துணை நிற்றல். 7) குறள் முற்றோதல் முடித்த அனைவரும் ஒருவருக்கொருவர் துணை நின்று உரிய கல்வி பெற்று மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழவும், வேலைவாய்ப்பில், தொழிலில் வெற்றிபெறவும் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு உரிய உதவிகளைப் பெறவும் துணைநிற்றல். 8) திருக்குறள் முற்றோதல் முடித்த மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 5% முன்னுரிமை வழங்க கோரிக்கை வைத்து அதனை அடைய முயற்சி மேற்கொள்ளப்படும். 9) அனைத்துத் தமிழ் நிகழ்வுகளிலும் ‘திருக்குறள் போற்றி’ அல்லது ‘திருக்குறள் மறையோதி’ நிகழ்ச்சியைத் தொடங்குவதை நடைமுறையில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும். 10) இதுவரை வெளிவந்துள்ள திருக்குறள் மொழிபெயர்ப்புகள், உரைநூல்கள் மட்டுமல்லாது, திருக்குறள் சார்ந்த அனைத்து விதமான நூல்களையும் தொகுத்து "உலகத் திருக்குறள் ஆராய்ச்சி மையம்" ஒன்றை கன்னியாகுமரிக்கும் சென்னைக்கும் நடுவில் அமைந்துள்ள மயிலாடுதுறையில் உருவாக்கி, அதில் திருக்குறள் கண்காட்சி, அனைத்து திருக்குறள் நூல்கள், மின்நூலகம், குறள் பரிசுப்பொருள்கள்,அரங்கங்கள் அமைத்து அதை தமிழ்க் கட்டிடக்கலை கலைநயத்துடன் அமைக்க முயற்சிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர்கள்: வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, www.ValaiTamil.com சி.இராஜேந்திரன், IRS (ப/நி) , வள்ளுவர் குரல் குடும்பம் , www.VoiceofValluvar.org இரவி சொக்கலிங்கம், சர்வீஸ் டு சொசைட்டி
|
||||||||
by Swathi on 07 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|