|
||||||||
மியான்மர் நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 2056-ஆக அதிகரிப்பு |
||||||||
![]()
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக, மண்டலே நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தற்போது அந்தப் பணிகள் மந்தமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 270 பேரை இன்னும் காணவில்லை என்றும் ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது. 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மியான்மரின் பெரும்பகுதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. பேரழிவின் உண்மையான அளவு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. எனினும், இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியதால், மியான்மரில் ஒரு வாரத் துக்கம் அனுசரிப்பதாக ஆட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்று ஆளும் ராணுவ ஆட்சிக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் சவால்களைச் சந்தித்து வரும் மியான்மருக்கு இந்த நிலநடுக்கம் எதிர்கொள்ள முடியாத துயரத்தை அளித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்புக் குழுக்கள் போதுமான அளவில் இல்லாததால், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான வாய்ப்பு மங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை இந்தியா, சீன, ரஷ்யா ஆகிய நாடுகள் மியான்மருக்கு அளித்து வருகின்றன. மக்கள் தொடர்ந்து அச்சத்தின் பிடியில் இருப்பதாகவும், கட்டிடங்கள் இல்லாத வெட்டவெளிகளில் மக்கள் உறங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்டலே நகரில் உள்ள 1,000 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை நிரம்பி வழிகிறது. இதனால், நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
|
||||||||
by hemavathi on 31 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|