LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

நா.மு.வேங்கடசாமி நாட்டார்

உலகிலே ஏனையுயிர்களினின்றும் மக்களை வேறுபடுத்திக் காட்டுவதாய், மக்களின் அறிவு விளக்கத்திற்குச் சிறந்த கருவியாவதாய் உள்ளது மொழி. அன்றியும் மொழியானது அதனைப் பேசிவரும் மக்களின் கருத்துப் பொருள்களைத் திரட்டி வைத்திருக்கும் கருவூலமாயிருத்தலின், அதன் அமைப்பு முதலியன கொண்டே அம்மக்களின் நாகரிக நிலையை உணர்தலும் சாலும். இப்பொழுது எத்தனையோ பலநூறு மொழிகள் உலகத்தில் வழங்குவன என்ப எனினும்,
தமிழ், எபிரேயம், கிரிக்கு, இலத்தீன் முதலிய சில மொழிகளே மிக்க பழமையும் பெருமையும் உடையனவாக அறிஞர்களாற் கொள்ளப்படுகின்றன. இவற்றுள் இருவகை வழக்கினும் நின்று நிலவுவது தமிழ். தமிழின் சிறப்பியல்பு என்னின், பிற மொழியிலின்றித் தமிழில் மட்டுமேயுள்ள தன்மையென்றாகும். பிறமொழி என்பது தமிழ் அல்லாத எல்லா மொழியையும் குறிக்குமாயினும் ஈண்டு, தமிழுக்கு எதிராக நிறுத்தி ஆராய்தற்குரியது சமஸ்கிருதம் எனப்படும் ஆரிய மொழியேயாகும்.
பரத கண்டத்து வழங்கும் மொழிகளுக்குள்ளே தென்மொழி என்றும், வடமொழி என்றும் திசைப் பெயரெடுத்து எதிர் நின்று வழங்கப்பெறுவன தமிழும் ஆரியமுமே யன்றோ? தமிழின் தனித் தன்மையையோ, உயர்வையோ கூறப்புகின், அது மற்றொன்றை வெறுப்பதோ இழிவுபடுத்துவதோ ஆகுமெனச் சிலர் கருதுகின்றனர். அத்தகைய மனப்பான்மையினர் இவ்வவையின் கண் இரார் என எண்ணுகிறேன்.
எல்லா மொழிக்கும் ஆரியமே தாயாகுமென்றும், அம்முறையே தமிழும் ஆரியத்தினின்றே தோன்றியதாகுமென்றும் கொள்ளும் ஆராய்ந்து துணியாத கொள்கையினை யுடையார் சிலர் சின்னாளின் முன்புதொட்டு இருந்து வருகின்றனர். மொழியாராய்ச்சி யென்பது புதியகலை முறைகளில் ஒன்றாகி உண்மையை விளக்கி வருகின்ற இந்நாளில் அக்கொள்கை அருகிவிட்டதென்பதில் ஐயமில்லை. எனினும், அக்கொள்கை அறவே ஒழியுமாறு, தமிழின் சிறப்பியல்புகளை உள்ளவாறு எடுத்துக் காட்டித் தெருட்டுதல் நம்மனோர் கடன். மொழிநூல் ஆராய்ச்சியாளர் மொழிகளை அவற்றின் பண்புகள் கொண்டு வெவ்வேறு குடும்பம் அல்லது குழுவாகப் பாகுபடுத்தியிருக்கின்றனர்.

வடமொழி தென்மொழி என்னும் பெயர் வழக்கே அவை வெவ்வேறு தனி மொழியாமென்பதுணர்த்தி நிற்கவும், வடக்கினின்று தெற்கு உதித்ததென்பார் போல வடமொழியினின்று தென்மொழி வந்ததென்பார் சிலர் தோன்றினமை பரிவுறற்பாலதே. அதிலும் தமிழ் இலக்கணங்களைத் துறைபோகக் கற்று "இலக்கணக் கொத்து' இயற்றிய சுவாமிநாத தேசிகர் ""ஐந்தெழுத்தாலொருபாடை யென்றறையநாண அறிவுடையோர்'' என்று கூறியதுதான் பெரிதும் இரங்கற்குரியது.

இருமொழிப்புலமையும் ஒருங்குடைய பெரியோராகிய சிவஞான முனிவர் தாம் இயற்றிய தொல்காப்பியப் பாயிர விருத்தியில் ""ஐந்திரம் நோக்கித் தொகுத்தானெனின், தமிழ் மொழிப் புணர்ச்சிக்குட்படுஞ் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறமென்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுலிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்'' என எழுதிய உரை சிந்திக்கற்பாலது.

தொல்காப்பியத்திற்கு முதனூல் "ஐந்திரம்' எனக் கூறிய சுப்பிரமணிய தீக்கிதர் கூற்றையே ஆசிரியர் சிவஞான முனிவர் இங்ஙனம் மறுத்துரைத்தாராவார். தமிழிலக்கணத்திற்கு வடமொழி இலக்கணம் முதனூலாதல் எவ்வாற்றானும் பொருந்தாதென்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. தேசிகர் கூற்றும் இதனானே மறுக்கப்பட்டமை ஓர்க. வடமொழியிற் பெறப்படாத தமிழ்ச் சிறப்பியல்புகள் இவையெனத் தமிழிலக்கணப் பகுதிகள் பலவற்றைக் கிளந்தெடுத்தோதிய ஆசிரியர், அதனோடமையாது, "இன்னோரன்ன பிறவும்' எனவும் கூறிப்போந்தனர். வடமொழியிற் பெறப்படும் தமிழியல்புதான் வேறு யாதுளது? பெயர்ச்சொல், வினைச்சொல், வினைமுதல், செயப்படுபொருள், பயனிலை, என்னலாமோ? இவையில்லாத மொழிகளே உலகத்திலில்லை. உவகையில் இன்சொல்லும், வெகுளியில் வன்சொல்லும் எழுதல்போல இவையெல்லாம் எல்லா மொழியினும் இயல்பிலே அமைதற்குரியன. இவற்றை ஒன்றினின்று மற்றொன்றிற்கு வந்தனவென்று கூறுவோன் ""மருந்திற் றணியாத பித்தனென் ரெள்ளப்படுவான்'' என்பது தேற்றம்.
இனி, ""ஐந்தெழுத்தாலொரு மொழியெனவும் அறிவுடையோர் நாணுவர்'' என்னுங் கூற்றை இன்னுஞ் சிறிது ஆராயாது விடுதல் தக்கதன்று. தமிழெழுத்துக்கள் முப்பத்து மூன்றென ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியிருப்பவும், அதனைச் சிறிதும் சிந்தியாது ஐந்தெழுத்தென்று கூறியது என் கருதி? தமிழ் முதலெழுத்துக்கள் முப்பதில் இருபத்தைந்தெழுத்து வடமொழியிலிருத்தலின் அவற்றைக் கழித்து, எஞ்சிய ஐந்துமே தமிழுக்குரியவாகக் கூறலாயிற்றெனின், வடமொழி எழுத்துக்கள் யாவும் பிறமொழிகளில் காணப்படுதலின் வடமொழிக்கென ஓரெழுத்தேனும் இன்றென ஏன் கூறுதல் கூடாது? இனி அவர் எள்ளிக்கூறிய ஐந்தெழுத்தும் அத்துணை எளிமையுடையனவல்ல வென்பதையும் ஓர் எடுத்துக்காட்டில் வைத்து விளக்குகின்றேன்.
""நற்றா டொழா அரெனினன்''
என்பது ஓர் குறட்பாவின் பின்னடி. இவ்வடியை வடமொழியில் எழுதுதல் சாலுமோ? இதன் முதலிலுள்ள "ந' என்னும் ஒன்றன்றி மற்றைய எழுத்துக்கள் எழுதப்படாவாயின் வடமொழியன்றோ பெரிதும் எழுத்துக் குறைபாடுடையதென இது காட்டா நிற்கும்? இப்பொழுது ஐந்தெழுத்து எத்துணைப் பெருமையுடையன வென்பது காண்க.

தமிழானது பகுத்தறிவுடைய மக்கள் முதலிய உயிரை உயர்திணை என்றும், பகுத்தறிவில்லாத உயிரையும், உயிரில் பொருளையும் அஃறிணை என்றும் அறிவுபற்றிப் பாகுபாடு செய்திருப்பதுபோல வடமொழி செய்யவில்லை; வேறு எம்மொழியும் செய்யவில்லை. இவ்விருவகைப் பெயர்களே தமிழ் மக்களின் உயரிய அறிவையும், கொள்கையையும், தமிழின் தனி மாண்பையும் விளக்குதற்குப் போதியனவாகும். தமிழ் எழுத்துக்களில் மொழிக்கு முதலில் வருவன இவை, இறுதியில் வருவன இவை, இவற்றோடு மயங்குதற்குரியன இவை எனச் செய்திருக்கும் வரையறையும், தமிழ்ச் சொற்கள் நிறுத்தச் சொல்லும் குறித்து வரும் கிளவியுமாகப் புணரும்பொழுது உண்டாகும் மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என்னும் திரிவுகளும், இயல்பும் எல்லாம் தமிழுக்குச் சிறப்பாகவுரியவை. ஒலியியல்பிற்கு மாறுபடாதவை. தமிழ் இலக்கணம் கூறுகின்ற சந்தியும் இளஞ்சிறார் உள்ளிட்ட மக்கள் பேச்சினுள் சந்தியும் ஒன்றே; வடமொழிச்சந்தி அன்னதன்று.

தமிழிலுள்ள பால் வகுப்பில் முறைப்பிறழ்வு சிறிதுமில்லை. வடமொழிலுள்ள பால் வகுப்போ சொன்னோக்கங்கொண்டு ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும், இரண்டையும் அலியாகவும் கூறும் பிறழ்ச்சியுடையது. ஒருமை பன்மை என்பது தமிழ் வழக்கு. ஒருமை, இருமை, பன்மை என்பது வடமொழி வழக்கு; வடமொழியிலே ஒரு பெயரைச் சார்ந்து நிற்றற்குரிய வேற்றுமை யுருபு அதன் அடைமொழிகள் எல்லாவற்றோடும் கூடியிருக்கும். அங்ஙனம் வருவது தமிழ் வழக்கன்று; பின் வருவதை எடுத்துக் காட்டாகக் கொள்க: "கடற்கரையில் உள்ளதும் பாவங்களை அழிப்பதும் முனிபுங்கவர்களுக்கு அநுகூலமானதுமாகிய சுகந்தம் என்னும் மலையினது குகையில் வசிப்போனும் தன் ஒளியால் விளங்குவோனும் மக்களின் துன்பத்தைப் போக்குவோனும் ஆகிய முருகனை வழிபடுகின்றோம்' என்று தமிழில் வரற்பாலது, "கடற்கரையில் உள்ளதில் பாவங்களை அழிப்பதில் முனிபுங்கவர்களுக்கு அநுகூலமானதில் சுகந்தம் என்னும் மலையில் குகையில் வசிப்போனை தன் ஒளியால் விளங்குவோனை மக்களின் துன்பத்தைப் போக்குவோனை முருகனை வழிபடுகின்றோம்' என வடமொழியில் வரும். மற்றும் வடமொழியில் வேற்றுமை ஏழேயாகத் தமிழின் கண் எட்டாகும்.
"இந்திரன் எட்டாம் வேற்றுமை யென்றனன்' என்பார் உளரேனும் வடமொழியின் போக்கு விளியைத் தனி வேற்றுமையாகக் கொண்டதன்று; தமிழிலே விளி வேற்றுமை பரந்திருப்பதொன்று; தொல்காப்பியர் "விளிமரபு' என ஓர் இயல் கொடுத்து முப்பத்தேழு சூத்திரங்களாலே அதனை விரித்து விளக்குதலும் காண்க. தமிழிலுள்ள வினைச்சொற்கள் திணை, பால், இடம், காலம் என்பவற்றை ஒருங்குணர்த்தும் சிறப்புடையன; வேறு எம்மொழியிலும் அத்தகையச் சிறப்பு காணப்படவில்லை.

"கண்டான்' என்னும் வினைமுற்றிலே, முதனிலையானது காண்டலாகிய தொழிலையும், இறுதி நிலையாகிய உயர்திணை ஆண்பால் படக்கை வினை முதலையும், இடை நிலையானது இறந்த காலத்தையும் வெளிப்படையாகக் காட்டி நிற்றல் காண்க. இங்ஙனமாக எழுத்து, சொல் இலக்கணங்களில் காணப்படும் வேறுபாடுகளும் தமிழின் தனிமாண்புகளும் பலவாம்.
இனி, வடமொழியினும் பிறமொழிகளிலும் இலக்கணம் என்று கூறப்படுவது எழுத்து சொல்லமைதி யளவேயாகும். வடநூலார் இலக்கணத்தைச் "சத்தநூல்' என வழங்குதலும் காண்க. தமிழிலக்கணமோ எழுத்துஞ் சொல்லுமாகிய ஒலியளவில் அடங்குவதன்று; மக்கள் உறுதிப்பொருள் செய்துணர்த்தும் பொருட் பகுதியையுடையது. பொருளிலக்கணம் வேறெம்மொழியிலுமின்றித் தமிழில் மட்டுமே யுள்ளதென்பது அனைவராலும் நன்கறியப்பட்டது. தமிழானது பிற இலக்கணங்களைக் காட்டினும் பொருளிலக்கணத்தையே சிறந்ததாகவும் இன்றியமையாததாகவும் கொண்டுள்ள தென்பது ""எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றறிவே'' என்னும் இறையனாரகப் பொருள் உரையானும் அறியப்படும்''.
பொருளிலக்கணம் அகம், புறம் என்னும் இருகூறுடையதாகி அகம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் நுதலுவது. அகமானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்னும் ஏழு திணைகளையும், புறமானது வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை என்னும் ஏழு திணைகளையும் ஒவ்வொரு திணையும் பற்பல துறைகளையும் உடையன. தமிழிலுள்ள சான்றோர் செய்யுட்களெல்லாம் அகத்திணை துறைகளோடு பொருந்தியனவாகவே இருக்கும். ஒரு செய்யுளேனும் பொருளிலக்கணத்திற்கு இலக்கியமாகாத தாயிராது. பொருளிலக்கணம் தமிழுக்கேயுரியது. எனவே அவ்விலக்கணத்துடன் பொருந்த எழுந்த செய்யுட்களெல்லாமும் தமிழுக்குரியன வென்பது கூறாதேயமையும். இவ்வுண்மை யுணர்வார்க்குத் தமிழானது வேறெம்மொழிக்கும் கடமைப்பட்டிராத "தனிச் செம்மொழி' யென்பது புலப்படும். உணராதாரே பலவாறு பிதற்றாநிற்பர்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.