LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    கட்டுரை Print Friendly and PDF
- நலம் காக்கும் சித்தமருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம் : மலச்சிக்கல் – எளிய தீர்வுகள் – 10

மலச்சிக்கலுக்கான தீர்வுகளைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக அதன் அடிப்படைக் காரணங்களை நாம் அறிந்து கொள்ளல் வேண்டும்.

 

ஒருவேளை மலம் கழிப்பதற்கும்  அடுத்த வேளைக்கும் இடையே இடைவெளி அதிகமாதல் ( Infrequent bowel movements);  மலங்கழிக்கச் சிரமப்படுதல், குறைந்த அளவு வெளியாதல்;   கடினமான தன்மையுடன் கழிதல்; கழிப்பதற்கு 10 நிமிடத்திற்கு மேலாதல்; முழுமையாகக் கழியாமல் இன்னும் சிறிது மலம் குடலில் தங்கியிருப்பது போன்ற உணர்வு உண்டாதல்; அடி வயிற்றில் கனமாக ஒரு பொருள் இருப்பது போன்ற உணர்வு தோன்றல்; நாள் பட்ட நிலையில் காற்றும் வெளியேறாமல் இருத்தல்; அடி வயிற்றில் வலி தோன்றல், காற்று சேர்ந்து உப்பி போதல் ( Pain, bloating, discomfortness ) போன்ற குறிகுணங்கள் அடங்கியதே மலச்சிக்கல் ( Constipation ) எனப்படுகின்றது.

 

மலம் கழிக்கும் நிகழ்வு ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒரு நாளிற்கு ஒன்று முதல் மூன்று முறை நிகழ்வது இயல்பானதாகும்.


மலச்சிக்கல் என்பது நோய் அல்ல. உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளைத் தெரிவிக்கும் குறிகுணமே மலச்சிக்கல். என்னென்ன காரணங்களால் இது ஏற்படும் என்பதைப் பார்க்கலாம்.

 

1. உணவு : உணவில் போதுமான நார்ச்சத்துக்கள் ( கீரை, காய், பயிறு, பழங்கள் ) இல்லாமலிருப்பதே மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணமாகும். அடுத்தது போதுமான நீர் உட்கொள்ளமலிருப்பதும், நேரத்திற்கு உண்ணாமல் நீண்டநேரம் பசியோடிருப்பதும் பல வேளை உணவு உண்ணாமலிருப்பதும் காரணங்களாகின்றன.

 

2. உடம்பைக் குறைப்பதற்காக உணவின் மொத்த அளவைக் குறைத்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படும். உணவின் அளவைக் குறைக்கும் போது அதற்கு ஈடாக கீரைச்சாறு, காய்ச் சாறு வெந்நீர், தேன் கலந்த நீர், மோர் இவற்றைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

 

3. தொடர்ச்சியான பயணத்தால் மலச்சிக்கல் ஏற்படும்.

 

4. உடற்பயிற்சி இல்லாத நிலை.

 

5. மன அழுத்தம், பதற்றம் (Anxiety ).

 

6. அதிக அளவில் பால், பாலினால் செய்த உணவுகள் எடுத்துக் கொள்ளுதல்.

 

7. சில நோய் நிலைகளில் இயல்பாகவே மலச்சிக்கலும் உருவாகும். காட்டாக குடல் தசை நோய்கள், நடுக்குவாதம் (Parkinson’s disease ) குடல்புற்று, மலவாய்க்குடல் அழற்சி நோய்கள், மூலம் ( Piles ), மலவாய்க்கட்டிகள் ( Abscess ), பவுத்திரம் ( Fistula ), வெடிப்பு ( Anal Fissure ), நாட்பட்ட நீரிழிவு ( Diabetes ), போன்றவற்றைக் கூறலாம்.

 

8. சில மருந்துகளாலும் மலச்சிக்கல் ஏற்படும். அபின் சார்ந்த பொருட்கள் கலந்த மருந்துகள், வலி நிவாரணிகள் ( Some Pain Killers ), சிறுநீரினை அதிகப்படுத்தும் மருந்துகள் ( Diuretics ), வலிப்பிற்காக பயன்படுத்தும் சில மருந்துகள் ( Anti Convulsants ), வயிற்று எரிச்சலுக்காகப் பயன்படுத்தும் மருந்துகள் ( Antacids ), சில இரும்புச்சத்து மாத்திரைகள், அலுமினியம், கால்சியம். சேர்ந்த மருந்துகள் போன்றவற்றால் மலச்சிக்கல் உண்டாகும்.

 

9. வெளியிடங்களில் கழிப்பறையினை பயன்படுத்த சிலர் தயங்குவார்கள். பல வேளைகளில் பயமே மலச்சிக்கலுக்குக் காரணமாகும். சோம்பல் காரணமாக தள்ளிப்போடுவதால் மலம் கடினப்பட்டு கழிப்பதற்கு சிரமம் ஏற்படுத்தும்.

 

10. குடல் நோய்களால் குடலின் அமைப்பு மாறுபாடுகளும் இயக்க மாறுபாடுகளும் ( Structure and Functional Changes of Colon ) மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

 

11. இடுப்பு எலும்பில் தாக்கம் ஏற்படுவதைத் தொடர்ந்த நரம்புக் கோளாறுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

 

உலக மக்கள் தொகையில் 12 விழுக்காடு (%) மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்காகவில் மட்டும் வருடத்திற்கு 40 இலட்சம் பேர் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் வருடத்திற்கு 250 மில்லியன் டாலர் அளவிற்கு மலச்சிக்கலுக்கான மருந்துகள் விற்பனையாகின்றன.


சில பழக்கங்களை மாற்றுவதால் மட்டுமே இப்பிரச்சனையை எளிதாகத் தீர்த்துவிடமுடியும்.


  • வழக்கத்தை விட சற்று அதிகமாக நீர் அருந்துதல்,

 

  • அதிகாலையில் தொந்தரவு ஏற்படுத்தாத பானகங்கள் அருந்துதல் (வெந்நீர், தேன், நீராகராம் )

 

  • அதிக நார்ச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்ளுதல்,

 

  • இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெந்தயம், மல்லி விதை, சீரகம், மஞ்சள் போன்றவற்றை சமையலில் அதிகம் சேர்த்துக்கொள்ளல்.

 

  • நல்லெண்ணெய், தேங்காய் நெய், பசுநெய் போன்றவற்றை போதுமான அளவு சேர்த்துக்கொள்ளல்,

 

  • காபி, தேநீர் ( Coffee, Tea ) செயற்கைக் குளிர்பானங்கள் போன்ற வேதிப் பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்த்தல்,

 

  • மலம் கழிக்கும் எண்ணம் ஏற்பட்டவுடன் கழித்தல். மலம் கழிக்கும் போது வேறு பிரச்சனையான எண்ணங்களைத் தவிர்த்தல். மலம் கழிக்கப் போகும் போது செய்தித்தாள், புத்தகம், ஏன் மடிக்கணினியுடன் கூடச் செல்வார்கள். இது பெரும் தீங்கினை விளைவிக்கும்.

 

சிக்கலில்லாமல் மலங்கழிக்க உபாயம் கூறும் ஒரு சித்தர் பாடலைப் பார்க்கலாம்.


           “ தூங்கி விழித்தவுடன் சுத்தோ தக மருந்தில்

             ஓங்கி நின்ற பித்தம் ஒழிவதன்றி – தேங்கு

             மலமுந் திரந்தங்கா வாதாதி யுந்தத்

             தல மாத் திர முவுந்தான் ”


துயில் எழுந்ததும் வயிற்றுக்கு ஏற்ற பானத்தினை அருந்துவதால் உடலின் அழல் என்கிற ஆற்றல் சமப்படும். பின்பு எளிதாக மலங்கழியும். இதனால் வளி, அழல், ஐயம் என்கிற மூன்று ஆற்றல்களும் தந்நிலையில் சிறப்பாகச் செயல்படும் என்பதே இப்பாடலின் பொருள்.


காமம், கோபம், வஞ்சக எண்ணம் போன்ற மனதின் வேறுபட்ட நிலைகளாலும் மலச்சிக்கல் ஏற்படும் எனவும் சித்தர்கள் கூறியிருப்பதால் தியானம், மூச்சுப்பயிற்சி, யோகாசனம் போன்றவை தீர்வாக அமையும்.

 

சில எளிய தீர்வுகள்:

 

1. திரிபலைப் பொடி (கடுக்காய், நெல்லிக்காய் வற்றல், தான்றிக்காய் இவை சம அளவு கலந்த பொடி – சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

இதனை 2 முதல் 5 கிராம் அளவிற்கு வெந்நீரில் கலந்து காலையும், மாலையும் வெறும் வயிற்றில் அருந்தி வருவதால் மலச்சிக்கல் தீர்வதோடு, உடலும் வலிமையாகும். பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

 

2. விதையோடு கூடிய காய்ந்த திராட்சையை 20 – 30  எண்ணிக்கை தண்ணீரில் ஊறப்போட்டு அதிகாலையில் அதனை மென்று சாப்பிட்டு நீர் அருந்த சிறந்த பலனுண்டாகும். பெண்கள் மகப்பேறு காலத்திலும் கருவுற்றிற்கும் போதும் இதனை பயன்படுத்தலாம்.

 

3. கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இயக்கம் சீராவதோடு குடலின் உள் அடுக்குகளில் நெய்ப்புத் தன்மையை ஏற்படுத்தி மலச்சிக்கலைத் தீர்க்கும். நீரழிவு நோயர்களும் பழங்களைப் பயன்படுத்தலாம்.

 

4. எலுமிச்சை சாறு 5 மி.லி யுடன் ஒரு சிட்டிகை உப்பு 300 மி.லி வெந்நீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் தீரும். உடலிற்கு உற்சாகம் தரும்.

 

5. அத்திப்பழம், வாழைப்பழம், பப்பாளிப்பழம், பேரீச்சம்பழம் போன்ற பழங்களை மட்டும் இரவு உணவாகப் பயன்படுத்த நிரந்தரத் தீர்வு உண்டாகும்.

 

6. அலிசி விதையை (Flax Seed ) உணவுடன் போதுமான அளவு சேர்த்துக் கொள்வதால் குடல் இயக்கம் சீராகும். அதி இரத்த அழுத்தம், நீரழிவு, புற்றுநோய், மூட்டுவாத நோய்கள், இதய நோய்களுக்கு எதிரான ஆற்றலை உடலிற்கு அலிசி விதை வழங்கும். எனவே அந்த நோயுடையோர் அலிசியை மலச்சிக்கல் நீக்க அதிகம் பயன்படுத்த வேண்டும்.

 

7. விளக்கெண்ணெய் – இரவு உணவிற்கு முன் ஒரு தேக்கரண்டி வெந்நீருடன் கலந்து பருகுவதால் மிகச்சிறந்த தீர்வினைக் கொடுக்கும். இதனால் நாட்பட்ட மலச்சிக்கலால் வரும் ஆசன வாய் நோய்களான மூலம், பவுத்திரம், கட்டிகள், வெடிப்புகள் வராமல் தடுக்கப்படும்.

 

8. கற்றாழைச் சாறு எடுத்து (கற்றாழைச் சோறுடன் படிகாரம் கலந்து எடுக்க வேண்டும் ) அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அல்லது பழச்சாறுகளுடன் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிப்பதில் குடல் சுத்தமாகும்.

 

9. மோருடன் இஞ்சி, பெருங்காயம், கல் உப்பு கலந்து உணவுடன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் குடல் தன்மை பாதுகாக்கப்பட்டு ( நன்மைபுரியும் நுண்ணுயிர் அமைப்பு சீர்படுத்தப்பட்டு ) மலச்சிக்கல் தடுக்கப் படுகின்றது.

 

10. வெந்தயத்தை 12  மணிநேரம் நீரில் ஊற விட்டு பின்பு 12  மணி நேரம் ஈரத்துடன் காற்றுபுகாமல் வைத்தால் முறை கட்டி விடும் . அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது காயவிட்டு பொடித்து ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி வெந்நீருடன் கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

 

11. நிலவாகை ( Senna ) இலைப் பொடியுடன் சம அளவு மல்லி விதைப் பொடி அதற்கு கால் அளவு பெருங்காயப் பொடி சேர்த்து இந்தக் கலவையிலிருந்து 1 தேக்கரண்டி இரு வேளை வெந்நீருடன் கலந்து பருகி வந்தால் மலச்சிக்கல் தீரும்.


12.  இளநீர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகினால் மலக்கட்டு நீங்கிவிடும்.


13.  பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, முருங்கைக் கீரை, இதில் ஏதேனும் ஒன்றுடன் தேங்காய், சீரகம் சேர்த்து காலை மட்டும் பச்சையாக உண்டுவர மலச்சிக்கல் தீரும்.


14.  நாட்டுத்தக்காளி பழம் தினம் இரண்டு உண்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து நிரந்தரத் தீர்வு பெறலாம்.


15.  எள் விதையைப் பொடி செய்து பனை வெல்லத்துடன் கலந்து 4 முதல் 6 தேக்கரண்டி அளவிற்கு தினமும் உண்டுவர ( வெவ்வேறு வேளைகளில் பிரித்தும் உண்ணலாம் ) மலச்சிக்கல் தீரும்.


16.  2 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் பருகி வர மலச்சிக்கல் தீரும்.


17.  தேங்காய்ப் பாலுடன் ஏலக்காய் பனைவெல்லம் சேர்த்துப் பருக மலச்சிக்கல் தீரும்.

  

இவை மலச்சிக்கலை தீர்க்கும் சில வழிமுறைகளாகும். ஏராளமான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் இருந்தாலும் இவற்றை மட்டும் குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று இவை எளிதாகச் செய்து பயன்படுத்த முடியும். மற்றொன்று மிகவும் முக்கியமானது. இங்கே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும் மலச்சிக்கலைத் தீர்ப்பதோடு உடம்பிற்கு வலுவூட்டுவதாக உள்ளன.

 

முற்றுப் பெறாத அயனிகள் ( Free Radicals ) என்பவை வளர்சிதை மாற்றக் கழிவுகளாக உடலில் தோன்றக் கூடிய கழிவுகள். இவை உடனடியாக நீக்கப்படாவிட்டால் உடல் எளிதில் வயோதிகத் தன்மையை அடைந்துவிடும். இவை சர்க்கரை நோய், இதய நோய்கள், புற்று நோய்கள், மூட்டு நோய்கள் ஏற்படக் காரணமாக உள்ளதாக இக்கால ஆய்வுகள் கூறுகின்றன. நாம் இங்கே மலச்சிக்கலை நீக்கக் குறிப்பிட்டுள்ள அத்தனை பொருட்களும் இந்த அயனிகளை வேகமாக உடலை விட்டு நீக்கும் ஆற்றல் பெற்றவை ( Potent Free radical scavenging agents )

 

எனவே இவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அவை மலச்சிக்கலைத் தீர்ப்பதோடு உடலை இளமையோடு இருக்கச் செய்து பல நோய்களிலிருந்து காக்கும்.

  

நலப் பயணம் தொடரும்...

 

by Swathi   on 18 Nov 2014  2 Comments
Tags: Mala Sikkal   மலச்சிக்கல்   Constipation   Siddha Maruthuvam   சித்த மருத்துவம்        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies
பீர்க்கங்காய் கடைசல் பீர்க்கங்காய் கடைசல்
உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !! உடலின் ஆரோக்கியத்திற்கு அவசியமான காய் : பீர்க்கங்காய் !!
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51
நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50 நலம் காக்கும் சித்த மருத்துவம் - உடற்பயிற்சி - 50
நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49 நலம் காக்கும் சித்த மருத்துவம் : மூச்சுக்காற்று இயக்கத்தைத் தடைசெய்வதால் உண்டாகும் துன்பங்கள் - 49
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விந்துவை அடக்கினால் வரும் துன்பங்கள் – 48
நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள்  – 47 நலம் காக்கும் சித்த மருத்துவம் : விழிநீரினைத் தடுத்தால் ஏற்படும் துன்பங்கள் – 47
கருத்துகள்
03-May-2017 11:33:01 Prabu said : Report Abuse
உங்களின் கட்டுரைகள் மிக மிக பயன் உள்ளவைகள் . உளமார்ந்த நன்றி உங்களுக்கு.
 
28-Dec-2015 02:31:39 chitra said : Report Abuse
மிக உ ம் நல்ல டிப்ஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.