|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம்: கண் வலி(Madras Eye ) – 8 |
||||||||
![]() கண் வலி மெட்ராஸ் கண் ( Madras Eye ), இளஞ்சிவப்புக்கண் ( Pink Eye ) என பல்வேறு விதமாக அழைக்கப்படும் கண்ணின் வெண்படல அழற்சி ( Conjunctivitis ) நோயினைப் பற்றி இந்த வாரம் பார்க்கப் போகின்றோம்.
இந்தத் தொடரில் இடையே சற்று விலகி ஒரு நோயினைப்பற்றி தெரிந்து கொள்ள உள்ளோம். இப்போது இந்த நோய் பரவலாகப் பெருகி வருவதால் இந்த நோய்க்கான சித்த மருத்துவ தீர்வினைப்பற்றி இந்த வாரம் எழுதுங்கள் என வலைத்தமிழ் ஆசிரியர் குழு கேட்டுக்கொண்டது. மக்களுக்கு காலத்திற்கேற்ற உதவி கிடைக்க வேண்டுமென்ற உயரிய அவரது எண்ணத்தைப் பாராட்டித் தொடருவோம்.
வெண் விழிப்படலம் அல்லது கண்ணின் வெளிப்புறப்படலம் என்பது புற இமைக்கு உள்பகுதியையும் ( கண் இமையை சற்று உயர்த்திப் பார்த்தால் தெரியும் ) கண்ணின் புறக் கோளத்தையும் இணைக்கும் படலம். ஆங்கிலத்தில் கஞ்சங்டைவா (Conjunctiva ) என்று பெயர். இந்த படலத்தில் ஏற்படும் அழற்சி ( Inflammation ) கண்வலி என்று பொதுவாக மக்களால் அழைக்கப்படுகின்றது.
இதற்கு மெட்ராஸ் கண்ணோய் ( Madras Eye ) எனப் பெயர்வரக் காரணம் இதனை உண்டாக்கும் நுண்கிருமி ( Adeno Virus ) முதன்முதலில் சென்னையில்தான் இனம் கண்டறியப்பட்டது. மேலும் இக்கிருமி பரவும் காலத்தில் அதற்கு வெப்பமும் காற்றில் ஈரப்பதமும் அவசியம். பரவுவதற்கேற்ற சுழல் சென்னையில் உள்ளதால் அக்கிருமி அங்கு வேகமாகப் பரவும். வடக்கிருந்து சென்னையை சுற்றிப்பார்க்க வருபவர்களை எளிதில் இது தொற்றிக் கொள்வதால் அவர்கள் இப்பெயரால் இந்நோயினை அழைத்தார்கள்.
இந்த வைரஸ் தவிர இந்த நோயினை உண்டாக்கப் பல காரணிகள் உண்டு. சில வகையான பாக்டீரியாக்கள் (Staphylococci, Streptococci, Haemophilus, Gonococci ) ஒவ்வாமை( Allergy ) ஏற்படுத்தும் பொருட்கள் குறிப்பாக வேதிப்பொருள் கலந்த வாசனைத்திரவியங்கள் ( Perfumes ), மகரந்தத்தூள், தூசு, அழகுசாதனப் பொருட்கள், வேதிப் பொருளால் ஆனா கண்மை, அடர்ந்த புகை, வீட்டு விலங்குகளின் முடி, மருத்துவ அறிவுரையின்றிப் பயன்படுத்தும் கண் மருந்துகள், அகச்சிவப்புக்கதிர் ( Infrared rays ), புறஊதாக்கதிர் (Ultra Violet rays) கண்வறட்சி ஏற்படுத்தும் நோயநிலைகள் போன்றவை வெண் விழிப்படல அழற்சியை ( Conjunctivitis ) ஏற்படுத்துகின்றன. என்றாலும் இந்நோய் அடினோ வைரஸ் என்கிற நுண்கிருமியே ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு வேகமாகப் பரவுவதற்குக் காரணமாகின்றது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள் ஒட்டுமொத்தமாக இந்த நோயினால் பாதிக்கபடுவதற்கும் இக்கிருமயே காரணமாகின்றது.
உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் : கண் சிவத்தல், கண் வெளிப்படல வீக்கம், இமை மற்றும் கண்ணைச்சுற்றிலும் வீக்கம், கண் வலி, கண்ணைச்சுற்றிலும் சூடு, கண்ணீர் வடிதல், காய்ச்சல் (Fever), தலைவலி, மூக்கில் நீர்வடிதல் (சல தோடம்), தொண்டைக்கட்டு ஏற்படும். கண் இமைக்குள் ஏதோ ஒரு பொருள் மாட்டிக் கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்ச்சி ஏற்படும். இந்த நிலையில் பாக்டீரியா தாக்கம் கண்ணில் ஏற்பட்டால் ( Secondary bacterial infection of conjunctiva ) கண்ணிலிருந்து சீழ் வடிதல் உண்டாகும். அது மஞ்சள் அல்லது பசும் மஞ்சள் (பச்சையும் மஞ்சளும்) நிறத்தில் இருக்கும். காய்ச்சல் ஏற்படும்.
இந்த பாதிப்புகள் கடுமையாக இருந்தாலும் மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்குள் தாமாகவே சரியாகிவிடும். சிலருக்கு இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். அது ஒவ்வொருவருடைய நோய் எதிர்ப்பாற்றலைப் ( Immune Status ) பொறுத்தது.
பரவும் விதம்:
இதில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் கண்படல அழற்சி மட்டுமே ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றும். ஒவ்வாமை மற்றும் வேதிப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்பு தொற்றாது.
வைரஸ் கிருமியால் ஏற்படும் கண் நோய் வேகமாகப் பரவும். ஒரே அறையில் இருப்பதால் பரவாது. கண்ணீர் மூலம் பரவும். அதாவது பாதிக்கப்பட்ட ஒருவர் கண்ணில் கையை வைத்து அழுத்திவிட்டு பின்பு ஒருவருடன் கை குலிக்கினால் அது அடுத்தவரின் கைக்கு செல்கிறது. பின்பு அவர் கண்ணில் கை வைத்தால் கண்ணில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதே போன்று பாதிப்படைந்தவருடன் அருகிலிருப்பது, அவர் பயன்படுத்திய கைக்குட்டை, துணி, படுக்கை, தலையணையைப் பயன்படுத்துவதால் இது பரவுகின்றது. நீச்சல் குளம், உடற்பயிசிக்கூடம் போன்ற பொது இடங்கள் இந்நோயினைப் பரப்புமிடங்களாகும்.
தடுப்பு முறைகள் :
1. நோய் பரவும் காலங்களில் கைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும். அடிக்கடி படிகாரம் கலந்த நீரினைக் கொண்டு கை கழுவிக் கொள்ள வேண்டும்.
2. சூரிய ஒளி கண்ணோய் பரவுவதைத் தடுக்கும். காலை, மாலை இளம் வெயிலில் நடத்தல், கைகளைப் பலகணி போல் செய்து இளம் வெயிலைப் பார்த்தல் போன்றவை கண்ணைப் பாதுகாக்கும்.
3. உடைகள், பயன்படுத்தும் துணிகள், படுக்கை போன்றவற்றை தூய்மைப்படுத்தி வெந்நீரில் சிறிது ஊற விட வேண்டும் அல்லது சூரிய ஒளியில் காய விட வேண்டும்.
4. இது பரவும் காலங்களில் தூயநீரில் 100 மி.லி.க்கு ஒரு சிட்டிகை வீதம் படிகாரம் கலந்து கண்களைக் கழுவ வேண்டும். பின்பு இதே கரைசலைக் கண்களிலும் சொட்டாக விட்டுக் கொள்ளல் வேண்டும். இதே போன்று மஞ்சள் நீரினையும் பயன்படுத்தலாம்.
5. கை தூயமையில்லாமல் கண்ணருகே கொண்டு செல்லக் கூடாது.
6. ஒருவர் பயன்படுத்திய கண்மருந்தினை அடுத்தவர் பயன்படுத்தக் கூடாது.
7. அழகுப் பொருட்கள், கண்மை போன்றவற்றை பலர் பகிர்ந்து பயன்படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும்.
நோய் ஏற்பட்ட ஆரம்ப நிலையில் என்ன செய்ய வேண்டும்?
மேற்கண்ட தடுப்பு முறைகளை பின்பற்றாமல் நோய் தொற்றிக் கொண்டால் பாதிப்புகள் தொடங்கும்போதே சில மருத்துவமுறைகளைப் பின்பற்றிவிட்டால் பெரிய பதிப்புகள் ஏற்படாது. அதாவது கண் எரிச்சல், சிவத்தல் போன்ற குறிகுணங்கள் சிறிது சிறிதாக தொடங்கும் போது என்னென்ன செய்யலாம்? எனப் பார்க்கப் போகின்றோம்.
1. பன்னீர் ( Rose water ) 100 மி.லி.க்கு ஒரு சிட்டிகை ( Pinch ) படிகாரம் ( Alum ) கலந்து கரைத்து வடிகட்டி இந்தக் கரைசலை கண்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 3 துளி விட்டு கொள்ளல் வேண்டும்.
2. சிறிய வெங்காயத்தை நீள வட்டமாக இரண்டாக வெட்டி ஒருதுண்டை எடுத்து கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு இமைகள் சேருமிடத்தில் அழுத்தித் தேய்க்க வேண்டும். வெங்காய சாறு கண்ணிற்குள் இறங்கி அதிக எரிச்சலைத் தரும். பயப்படத் தேவையில்லை. சில நிமிடங்களில் எரிச்சல் குறைந்து கண்சிவப்பு நீங்கிவிடும். முழுமையாக நீங்கும் வரை சில மணிநேர இடைவெளியில் மீண்டும் செய்யலாம். மிகவும் வேதனையான மருத்துவம் போல் தெரிந்தாலும் மிகச்சிறந்த பலனைத் தரும். நோயுடன் ஒரு வாரம் அவதியுறுவதைத் தவிர்க்க சில நிமிடங்கள் எரிச்சலை தாங்கிக் கொள்வது நலம்.
3. இதுவும் சற்று கடினமானது போன்ற தோற்றமளிக்கும் சிறந்த மருத்துவம் தான். சிறுநீர் ( Urine ) மருத்துவம் என அழைக்கப்படும் இதில், யாருக்கு பாதிப்புள்ளதோ அவரின் காலை முதல் சிறுநீரை தூய பாத்திரத்தில் சிறிது பிடித்து வைத்துக் கொண்டு அரைமணிக்கு ஒரு முறை ஒவ்வொரு கண்ணிற்கும் மூன்று துளிகள் விட்டுக் கொண்டு வந்தால் 3 மணி நேரத்திற்குள் சரியாகிவிடும். கண்பாதிப்பு ஏற்படத் தொடங்கும்போதே செய்தல் வேண்டும். நோய் முற்றிய நிலையில் பெரிய பலனை எதிர்பார்க்க முடியாது.
நோய் வந்திருக்கும் போது என்னென்ன செய்யக்கூடாது?
1. தொழில் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் விடுப்பு விடுத்து ஓய்வெடுக்க வேண்டும். முற்றிலும் குணமாகும் வரை வெளியில் செல்லக்கூடாது. பிறருக்குப் பரவாமலிருக்கவும் இது பயன்படும்.
2. பயன்படுத்தும் துணிகளை அடிக்கடி தூய்மைப்படுத்துதல் வேண்டும். வேறு யாரும் அவற்றை தொட்டு பாதிப்பு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
3. முக அலங்காரம், கண் இமைக்குகுள் போடப்படும் ஆடி ( Contact Lenses ) பயன்படுத்தக் கூடாது.
4. கண்ணைத் தொடுதல், அழுத்துதல், தேய்த்தல் கூடாது.
5. இக்கிருமி ஒருவாரம் வரை பிறரைப் பாதிக்கும் ஆற்றலுடன் இருக்கும். எனவே இக்காலங்களிலும் நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம் போன்ற பொது இடங்களுக்குச் செல்லக் கூடாது.
6. ஒருவருக்குப் பரிந்துரைத்த கண் மருந்தை வேறு ஒருவர் பயன்படுத்த கூடாது. தமக்கே வேறு ஒரு காலத்தில் உபயோகிக்கக் கூடாது.
எளிய பாதிபேற்படுத்தாத வீட்டு மருத்துவ முறைகள்:
1. தூய்மையான நீரே சிறந்த பலனளிக்கும். தூய நீரினால் கண்ணை கழுவுவது, தூய நீரினை துணியால் நனைத்து கண்ணிற்கு ஒற்றடமிடுவது நலமுண்டாக்கும்.
2. வெண்மையான பருத்தித்துணியினை சூடாக்கி மிதமான சூட்டில் ( Luke warm ) ஒற்றடமிட வேண்டும். ஒவ்வாமையால் ( Allergy ) ஏற்படும் கண்ணோய்க்கு குளிர் நீரில் ஒற்றடமிடல் வேண்டும்.
3. தூய்மையான தேனினை கண்துளியாகப் பயன்படுத்தலாம். சற்று எரிச்சலும் வலியும் ஏற்படும். ஆனால சிறந்த பலனைக் கொடுக்கும். அதிகம் எரிச்சலிருந்தால் நீருடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
4. இளம் வேப்பிலை சாற்றினைக் கண்துளியாக பயன்படுத்தலாம். அதனுடன் மஞ்சளும் கலந்து பயன்படுத்தும்போது அதிக பலன் கிடைகின்றது.
5. திரிபலாச் சூரணம் ( சித்த மருந்துக்கடைகளில் கிடைக்கும் ) ஒரு தேக்கரண்டியுடன் 400 மி.லி நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லி யாக வற்றியவுடன் படிகாரம் ஒரு சிட்டிகை போட்டு கரைத்து வடிகட்டி கண் கழுவவும், கண்துளியாகவும் பயன்படுத்த வேண்டும்.
6. மல்லிகைப் பூவினை வெண் துணியால் சுருட்டி கண்ணில் வைத்துக் கட்டிக் கொள்ள வலி மற்றும் வீக்கம் குறையும்.
7. தாய்ப்பாலினைக் கண்துளியாக விடும்போது விரைவில் குணமாவதை உணரமுடியும். கிடைக்காதவர்கள் காய்ச்சி குளிரவிட்ட பசும்பாலைப் பயன்படுத்தலாம்.
8. கற்றாளைச் சோறுடன் (உள்புறம் நுங்கு போன்றுள்ள பகுதி ) படிகாரம் கலந்து வைத்திருந்தால் சில நிமிடங்களில் அதிலிருந்து சாறு வடியும். அதனைக் கண்துளியாகப் பயன்படுத்தலாம்.
9. விளக்கெண்ணெய் உடன் மஞ்சள் கலந்து சூடாக்கி வடிகட்டி சூடு ஆரிய பின்பு கண்துளியாகப் பயன்படுத்தலாம். கண்ணைசுற்றிலும் தடவலாம். சூடாக இருக்கும் போது தூய பருத்தித்துணியினால் தோய்த்து ஒற்றடமிடலாம்.
10. இக்காலத்தில் கோதுமை, பால், வெள்ளைச் சீனி ( White Sugar ), கிழங்கு வகைகள் போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும். இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம், நாட்டுத்தக்காளி, விதையுடன் திராட்சை, பிற பழங்களையும், கீரை, காய், பயறு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் எதிர்ப்பாற்றல் அதிகமாகி நோய் விரைவில் தீரும். 11. பஞ்ச கவ்யம் ( பசு நெய், பசும்பால், பசுந்தயிர், பசுவின் நீர், பசுஞ்சானநீர் இவை கலந்த பொருள் ) கண்ணில் விட்டு கண்ணைகச் சுற்றி தடவ வேண்டும். இதனை ஒரு தேக்கரண்டி காலை மற்றும் மாலை என உள்ளே உண்டு வர வேண்டும்.
12. சீரகத்தை தண்ணீரில் போட்டுக்காய்ச்சி வடிகட்டி அதனைக் கொண்டு கண்ணைக் கழுவி, கண்துளியாகவும் பயன்படுத்த வேண்டும்.
இவற்றில் எது ஒருவரால் பின்பற்ற முடியுமோ அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவையாவும் பக்க விளைவற்ற எளிய முறைகளாகும். இவற்றை கொண்டே நோயைத் தடுக்கவும், நோய்த்தாக்கதிலிருந்து விடுபடவும் முடியும். இவை தவிர பல சித்த மருந்துகளும் உண்டு. அவற்றை முறையாச் சித்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
நலப் பயணம் தொடரும்.................
|
||||||||
by Swathi on 03 Nov 2014 1 Comments | ||||||||
Tags: மெட்ராஸ் ஐ Madras Eye Siddha Maruthuvam சித்த மருத்துவம் Pink Eye Conjunctivitis கண்ணின் வெண்படல அழற்சி | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|