|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது? – 43 |
||||||||
![]() தாகம், பசி உணர்ச்சிகளை ஏன் அடக்கக் கூடாது?
பசியும் தாகமும் உடலின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய உதவும் உணர்ச்சிகளாகும். இந்த இரண்டு உணர்வுகளின் பின்னணியில் பல சிக்கலான உடல் இயங்கியல் நிகழ்வுகள் உள்ளன. முக்கியமாக சீரண மண்டலம் (Gastro Intestinal System), நாளமில்லாச் சுரப்பி மண்டலம் (Endocrine System), மூளை போன்றவற்றைக் கூறலாம். உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றல் குறையும் போது இந்த உடல் இயங்கியல் நிகழ்வுகள் தூண்டப்பட்டு பசி, தாக உணர்ச்சிகள் ஏற்படுகின்றன.
ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டு இந்த உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் விட்டால் பல சிக்கலான பின் விளைவுகள் தொடரும். பசியையும் தாகத்தையும் அடக்கினால் ஏற்படும் கேடுகளை பின்வரும் சித்தர் பாடல் விளக்குகின்றது.
“தீவனத் தடைகள் செய்யில்
தேகமே யங்க பங்கம்
மேவுறுஞ் சூலை பிரமை
மிக் குட லிளைப் புண்டாகும்
தாவுற முகமே வாடிச்
சந்துகள் நோதல் செய்யும்
சீவனக்கினி யா தாரம்
தேர் முனி யுரைத்த தாகமே.”
காலத்தில் உண்ணாமலும் நீர் அருந்தாமலும் விட்டால் உடல் உறுப்புகள் மெலிவு படும். ஏழு உடற் கட்டுக்களின் (நீர்த்துவம், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மூளை, சுக்கிலம் – விந்து, அண்டக்கரு) செயல்களும் பாதிக்கப்படும். சூலை நோயும் (சூலம் என்கிற ஆயுதத்தால் உடல் முழுவதும் குத்துதலால் ஏற்படும் வழியைப் போன்ற துன்பத்தை உண்டாக்கும் நோய்கள்) பிரமை என்கிற மன நோயும் ஏற்படும். முக வாட்டம் ஏற்பட்டு மூட்டுக்கள் அனைத்திலும் வலியுண்டாகும்.
நீரும், நெருப்பும் உடல் உறுப்புகளுக்கு அடிப்படை உந்து பொருட்களாகும். பசியும் தாகமும் அடக்கப்பட்டால் காச நோய் (Tuberculosis) போன்ற கடுமையான நோய்கள் உடலைத் தாக்கும் என மேற்கண்ட பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.
பல நோய்களின் அடிப்படைக் காரணங்களை சித்தர்கள் விளக்கும் போது முதன்மைக் காரணமாக பசியினைக் குறிப்பிடுகின்றனர். காட்டாக ஒரு பாடலைப் பார்க்கலாம்.
“நோயினுற்பத்தி கேள் நோன்மைகூர் மைந்தனே
நோனமையால் வெகுளி நோனாத பசியால்”
என்று தேரையர் எனும் சித்தர் கூறுகின்றார்.
பசியினால் உடனடியாக ஏற்படும் உடல் துன்பங்கள்:
உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றல் குறைவு படுவதால் உடனடியாக உடல் சோர்வு ஏற்படும்.
செய்து கொண்டிருக்கும் வேலையில் கவனக் குறைவு ஏற்படும். கூர்ந்து கவனித்து நுட்பமாகச் செய்யும் செயலில் தடங்கள் ஏற்படும்.
மன எரிச்சல் ஏற்படும். சிறு பிரச்சனைகளுக்கு கோபம் கொள்ளும் தன்மை ஏற்படும்.
உடல் நடுக்கம், படபடப்பு, தலைசுற்றல், கண் இருளல், தலைவலி ஏற்படும்.
இவைகள் ஒரேயொரு வேளை பசியோடிருக்கும் போது ஏற்படும் நிகழ்வுகளாகும். இதுவே தொடர் நிகழ்வாக (Long term) மாறும் போது பல உடல் கேடுகள் ஏற்படும்.
தொடர்ச்சியாக பசி உணர்ச்சியை அடக்கும் மனப்பான்மை பலரிடம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் எடை குறைப்பதற்கு பசியோடிருப்பதை பலர் வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இது தவறான வழியாகும். தொடர்ச்சியாக பசியோடு இருந்து உடலைப் பழக்கப் படுத்துவதால் பல நலக் கேடுகள் உண்டாகும். அவை:
1. போதுமான ஊட்டம் தேவையான நேரத்தில் கிடைக்காததால் உடல் இயங்கியலில் பல பாதிப்புகள் ஏற்படும். சில முக்கியமான உறுப்புக்களின் செல்கள் அழியும். அவை மீண்டும் பழையபடி உருவாக இயலாமல் போகலாம்.
2. உடல் உறுப்புக்களின் ஊட்டம் குறையும். உடல் மெலிவு ஏற்படும். (ஏழு உடற்கட்டுக்களின் வலிமை குறையும்) குறிப்பாக பசி நேரத்தில் தசைகளுக்கு வலு கொடுக்கக் கூடிய புரதச் சத்து உடல் ஆற்றலுக்குப் பயன்படுத்தப் படுவதால் தசை மெலிந்து உடல் சுருங்கிப் போகும்.
3. உடல் எதிர்ப்பாற்றல் குறைவதால் அடிக்கடி சிறு சிறு உடல் பிரச்சனைகள் ஏற்படும். நாளடைவில் பெரிய நோய்கள் உடலில் தொற்றிக் கொள்ளும்.
4. மூளையின் இயக்கம் பாதிக்கப்படும். குறிப்பாக நரம்பு வேதிப் பொருட்களின் (Neuro transmitters) சமச்சீர் நிலை பசியின் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. இதனால் கோபம், பதட்டம் போன்ற செயல் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
5. பெண்களுக்கு ஒழுங்கற்றப் பூப்பு சுழற்சி (Irregular menstrual cycle), முடி உதிரல், எலும்பு உறுதிக் குறைவு (Osteoporosis) போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு தோல் சுருங்கி இளமையிலேயே முதுமைத் தோற்றம் ஏற்படும்.
6. மன பாதிப்புகள் உண்டாகும். முதலில் மனக்குவிப்புத் திறன் (Concentrating capacity) படிப்படியாகக் குறையும். உறக்கமின்மை, முடிவெடுக்க முடியாத தன்மை, எரிச்சல் மனப்பான்மை ஏற்படும். நாளடைவில் சமுதாயத்திலிருந்து தம்மை விடிவித்துக் கொள்ளும் (Social withdrawal) மனப்பான்மை ஏற்படும். தனித்தன்மையும் ஆளுமைத் திறனும் குறையும்.
7. ஒரு நாள் முழுவதும் பசியோடிருப்பதால் 1 கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளது. இப்படி வேகமாக எடை குறைவது தொடர் நிகழ்வாக இருந்தால் உடலின் முக்கிய உள் உறுப்புகள் செயல்பாடு வேகமாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை உடனடியாக நாட வேண்டிய நிலை ஏற்படும்.
8. உடலின் நீர்த்துவம் வேகமாகக் குறையும். தொடர்ச்சியாக நீர்த்துவம் குறைந்து கொண்டே சென்றால் அது சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
9. தோல் சுருக்கம் ஏற்படும். தோல் வறட்சி ஏற்பட்டு தோல் நிறம் மாறும். தோலின் நீட்சித் தன்மை (Flexibility) மாறி விறைப்புத் தன்மை (Stiffness) ஏற்படும்.
10. இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். பல இதய பாதிப்புகள் ஏற்படும்.
11. உடலின் மின் அயனிகள் (Electrolyte) சமச்சீரற்ற நிலையை அடையும். இதனால் இதயம், நரம்பு மண்டலம், தசை மண்டலம் வெகுவாகப் பாதிக்கப்படும்.
12. உயிர் வாயுவையும் (Oxygen) ஊட்டச்சத்துக்களையும் எடுத்துக் செல்லும் ஆற்றலை இரத்தம் படிப்படியாக இழக்கும்.
13. உடலின் இரத்த அழுத்தக் குறைவு நிலை (Hypotension) ஏற்படும். இதனால் உடலின் இயல்பான வெப்பநிலை குறையும்.
14. மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்படும்.
பசியை அடக்குவதால் இது போன்ற பல இடர்பாடுகளை உடல் சந்திக்கும். உடல் எடை குறைக்க பசியோடிருத்தல் என்பது வழியாகாது. உடல் எடை குறைக்கவும், உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ளவும் பலர் குறிப்பாக இளம் பெண்கள் பசி ஏற்பட்டாலும் பசியில்லாதது போன்ற மன நிலையுடன் இருக்கின்றனர். இதற்கு பசியற்ற உள நோய் (Anorexia Nervosa) என்று பெயர். உடல் எடை கூடி விடும் என்கிற பயத்துடன் உண்ணுவதில் ஓர் ஒழுங்கீனத்தைப் பின்பற்றுவதே பசியற்ற நிலையினை உருவாக்கி விடும்.
பசியையும் தாகத்தையும் தொடர்ச்சியாக அடக்குவதால் உடல் அந்த உணர்வினைத் தாங்கப் பழக்கப்பட்டு விடும். அது ஒரு போதும் நல வாழ்விற்கு வழி வகுக்காது.
நலப்பயணம் தொடரும்.................................
|
||||||||
by Swathi on 07 Jul 2015 0 Comments | ||||||||
Tags: Control Hungry Hungree Siddha Maruthuvam Pasi Thagam சித்த மருத்துவம் தாகம் | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|