|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : உடற்பயிற்சி தொடர்ச்சி . . . - 51 |
||||||||
![]() அளவிற்கு அதிகமான உடற்பயிற்சி தீமை உண்டாக்கும்
முறையான வழிகாட்டுதல் இல்லாமல் செய்யப்படும் தொடர் பயிற்சிகள், தொடர் ஓட்டம் (Multiple marathons) போன்றவை உடலிற்குக் கேட்டினை உண்டாக்கும். உள் உறுப்புகளின் தசை பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக இதயத் தசை இயக்க மாறுபாடுகள் ஏற்படும்.
காவல்துறை, பாதுகாப்புத் துறைகளில் ஈடுபட விரும்புவோர் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுவார்கள். அவர்கள் முறையான ஆலோசனையோடு போதுமான ஓய்வு எடுத்து பயிற்சி செய்தல் வேண்டும். குறுகிய காலத்தில் அளவிற்கதிகமாக பயிற்சி செய்யக் கூடாது. படிப்படியாக பயிற்சியினைக் கூட்டி உடலிற்குப் பழக்கப்படுத்த வேண்டும். இல்லாவிடில் உடல் எதிர்ப்பாற்றல் குறைவு, அடிக்கடி மார்புச்சளி பிடித்தல், சுரம் போன்றவை ஏற்படும். இதற்கு வருத்தும் உடற்பயிற்சியினால் ஏற்படும் நோய்நிலை (Over Training Syndrome) என்று பெயர்.
இது போன்று தொடர் பயிற்சியில் ஈடுபடும் போது அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களின் அறிவுரையும் மருத்துவ அறிவுரையும் அவசியம்.
மிதமாகச் செய்யப்படும் நடைபயிற்சி, தோட்டப் பராமரிப்பு, நீச்சல் போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படும் என்கிற அச்சம் தேவையில்லை.
ஒரு நாளில் தொடர்ச்சியாகப் பணிபுரிவதால் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் மன அழுத்தங்களையும் நீக்குவதாக உடற்பயிற்சி அமைய வேண்டும். உடல் உழைப்பின்றி அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு (Sedentary Lifestyle) உடற்பயிற்சி அவசியம். அது அளவிற்கு அதிகமாகச் சென்று உடலை வருத்துவது போன்றிருக்கக் கூடாது.
எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
வயதிற்குத் தகுந்தாற்போலும் உடல் உழைப்பிற்குத் தகுந்தாற்போலும் உடல் வாகிற்குத் தகுந்தாற்போலும் (Age, work and body constitution) உடற்பயிற்சி நேரம் மாறுபடும்.
6 வயது முதல் 18 வயது வரை.
ஓடி விளையாடும் பருவம். ஒரு நாளிற்குக் குறைந்த பக்கம் 1 மணி நேரம் மாலை வெயிலில் விளையாட வேண்டும். அதில் ஓடுதல், தாண்டுதல், துள்ளிக் குதித்தல், உயரம் ஏறுதல் (கயிறு பிடித்து ஏறுதல்) போன்றவற்றை அடக்கிய விளையாட்டுக்களாக இருத்தல் வேண்டும். உடல் உழைப்புடன் மூளைக்கு வேலையும் கொடுப்பது போன்ற விளையாட்டுக்களை மாணவர்கள் விளையாடுவதால் அவர்களின் கற்கும் திறன் பல மடங்கு மேம்படும். மேலும் அவர்களுக்குப் பிற்காலத்தில் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, உடல் பருமன், இதய நோய்கள், புற்று நோய்கள் வரும் வாய்ப்பு பெருவாரியாகக் குறையும்.
தொலைக்காட்சி, சினிமா, மின்சாதன விளையாட்டுக்கள் போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் வேண்டும். அவற்றை பொழுது போக்காகக் கொண்டு விட்டால் பல கேடுகள் தொடரும்.
19 வயது முதல் 60 வயது வரை:
ஒரு நாளிற்கு குறைந்த பக்கம் 20 – 30 நிமிட உடற்பயிற்சி அவசியம். 40 வயதைத் தாண்டியவர்கள் உடல்நிலையைப் பொருத்து பயிற்சிக் கால அளவினைக் கூட்டிக் கொள்ளலாம். எந்த உடல் பிரச்சனைகளும் இல்லையெனில் 20 நிமிட துரிதப் பயிற்சியே போதுமானது. இரவு உறங்கும் முன் 15 நிமிட குறு நடை (சிறிய எட்டு வைத்து மெதுவாக நடத்தல்) அவசியம்.
61 வயதிற்கு மேல்
20 நிமிடத் துரிதப் பயிற்சியும் நடைபயிற்சியும் அவசியம். 40 நிமிடத்திலிருந்து 50 நிமிடம் மெதுவாக நடந்தால் போதுமானது.
படி ஏறும்போதோ உயரமான பகுதிகளில் ஏறும்போதோ மார்பு வலி, பெருமூச்சு, அதிக வியர்வை, மயக்கம் ஏற்பட்டால் உடனடியான மருத்துவ ஆலோசனை அவசியம்.
உடற்பயிற்சியால்
1. மாரடைப்பு வருவதை 35% தடுத்துவிட முடியும்,
2. சர்க்கரை நோயினை 50% தடுத்துவிட முடியும்,
3. மூட்டுக்களில் ஏற்படும் நோய்களை (Arthritis) 85% தடுத்தவிட முடியும்,
4. மார்பகப் புற்றுநோயை (Breast cancer) 20% தடுத்தவிட முடியும்,
5. குடல் புற்றுநோயை 50% தடுத்தவிட முடியும்,
6. எலும்பு முறிவுகளை (எலும்பு பலப்படுவதால்) 60% தடுத்தவிட முடியும்,
7. மன அழுத்தத்தையும் நினைவு குறைவையும் (Depression and Dementia) 30% தடுத்தவிட முடியும்,
என ஓர் ஆய்வு நமக்குத் தெரிவிக்கின்றது.
தகுந்த அனுபவ அறிவின் துணையோடு செய்யப்படும் உடற்பயிற்சி பல நோய்களைத் தடுப்பதோடு நீண்ட நலமான ஆயுளைக் கொடுக்கும்.
|
||||||||
by Swathi on 14 Sep 2015 0 Comments | ||||||||
Tags: Exercise Exercise Benefits உடற்பயிற்சி சித்த மருத்துவம் Siddha Maruthuvam Over Exercising Udarpayirchi | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|