|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 37 |
||||||||
![]() கதிரவனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயணம்) தெற்கு நோக்கிய நகர்வு (தட்சிணாயணம்) காலங்களில் உடல் நலம்
கதிரவனின் நகரும் திசையினை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆண்டினை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். கதிரவன் கிழக்கு திசையில் ஒவ்வொரு நாளும் சிறிது மாறுபட்ட இடத்திலேயே உதிக்கும். பூமியின் சுழற்சியே இதற்கு அடிப்படை. இவ்வாறு ஒவ்வொரு நாளும் கதிரவன் உதிக்கும் இடம் வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தால் அது வடநோக்கிய நகர்வு காலம் (உத்தராயணம்) என்றும் அதுவே தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தால் தெற்கு நோக்கிய நகர்வு (தட்சிணாயணம்) காலம் என்றும் அழைக்கப்படுகிறது.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆகிய ஆறு மாதங்களும் கதிரவனின் வடநோக்கிய நகர்வு காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களும் கதிரவனின் தெற்கு நோக்கிய நகர்வு காலமாகும்.
கதிரவனின் வடக்கு நோக்கிய காலத்தின் தன்மை:
“ வடக்குச் செலவாய் வழங்கும் பொழுதில்
திடமுடன் ஞாயிறு தீய்க்கும் – உடலுரம்போம்
ஈர்த்திடும் பூசார மெல்லா மதனால்
ஓர் போக்கிக் கால முரம்”
கதிரவனின் வட நோக்கிய நகரும் காலம் அனல் மிகுந்திருக்கும் காலமாகும். இக்காலத்தில் சுற்றுப் புறத்தில் சூடுடன் காற்றும் மிகுந்து இருக்கும். இதனால் உடல் வலிமை மிகவும் குறையும். உடல் வறட்சி கூடும். இக்காலத்தில் உயிரினங்களின் வலிமையும் குறையும்.
என்ன செய்ய வேண்டும் ?
1. மார்கழி மாதத்திலேயே (தட்சிணாயன முடிவு) உடலைப் பாதுகாக்கத் தொடங்குதல் வேண்டும். உடல் வலிமையைக் குறைய விடாத முயற்சிகளை அம்மாதத்திலேயே செய்ய வேண்டும்.
2. மார்கழி மாதம் கண்டிப்பாக அதிகாலை 4.30 மணிக்குத் துயிலெழுதல் வேண்டும்.
3. ஓகப் (யோகப்) பயிற்சிகளை அதிகாலையிலேயே செய்தல் வேண்டும். அவற்றில் முக்கியமானது வளிநிலைப் பயிற்சி (பிராணாயாமம்)
4. ஏதேனும் ஒரு காய கல்ப மூலிகையினை உடலிற்கு ஏற்றாற்போல் எடுத்துக் கொள்ள வேண்டும். காட்டாக துளசி, வேம்பு, வில்வம், கரிசாலை, பொன்னாங்கண்ணி.
5. எண்ணெய்க் குளியல்: அந்தந்த சிறு பொழுது காலத்திற்கு ஏற்றார்போல மூலிகைகள் கலந்து காய்ச்சிய எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
6. கதிரவனின் வடக்கு நோக்கிய நகர்வு காலத் தொடக்கத்தில் வாந்தி மருத்துவம் மேற்கொள்ளல் வேண்டும்.
7. பசி ஆர்வம் இக்காலங்களில் குறைந்திருக்கும். அதனால் முக்குற்ற சமப்பொருட்களை (வளி, அழல், ஐயம் - என்கிற உயிராற்றலை சமப்படுத்தும் பொருட்களாகிய சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், ஏலக்காய் போன்றவை) அதிகம் பயன்படுத்த வேண்டும்.
8. எண்ணெய் கொப்புளித்தல் வாரம் 2 முறை செய்தல் வேண்டும். (வாய்த் தூய்மைப் பகுதியைக் காண்க)
9. வாரம் 2 முறை எண்ணெய் அல்லது மூலிகைச் சாற்றினை விடுதல் வேண்டும் (கண் பாதுகாப்பு என்ற பகுதியினைக் காண்க)
10. இக்காலங்களில் இளம் வெயிலில் நடை பயிற்சி, ஓகப் பயிற்சி போன்ற பயிற்சிகளை செய்வதால் உடல் வன்மை மிகும். வெயிலும் காற்றும் அதிகமாக இருக்கும் நேரங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்குதல் வேண்டும்.
கதிரவனின் தெற்கு நோக்கிய காலத்தின் தன்மை :
“தென் திசைப் போக்கெனச் செப்பிடுங் காலத்தில்
துன்றிய கார்முகில் தூற்றலால் – பொன் திகழ்
ஞாயிற்றின் வெம்மையும் நானிலங் கால் சூடும் போய்
ஆயிடும் தட்பமறி”
இக்காலத்தில் எல்லா வகையான நிலங்களிலும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்) உள்ள சூடு மாறி குளிர்ச்சி யடையும்.
பூமியில் கதிரவனின் வெப்ப ஆட்சி மாறி நிலவின் ஆட்சி ஓங்கி யிருக்கும்.
இக்காலத்தில் உடலின் வலிமை மேம்பட்டிருக்கும். அது போலவே எல்லா உயிரினங்களின் வலிமையும் உயர்ந்திருக்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் மனித உடலின் வலிமை குறைந்திருந்தால் ஏற்படக்கூடிய நோய்களின் வலிமையும் மிகுந்திருக்கும். எனவே பிற நுண்ணுயிர்களின் மூலம் பரவும் நோய்கள் தொற்றாதவாறு பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். (நுண்ணுயிர்களின் வலிமையும் இக்காலத்தில் மிகுந்திருக்கும்)
வடக்கு நோக்கிய நகர்வு காலத்தில் தொற்றாத நோய்கள் (Non – Communicable diseases) பரவும். தெற்கு நோக்கிய காலத்தில் தோற்றும் நோய்கள் (Infectious diseases) அதிகம் பரவும். எனவே தோற்று நோய்த் தடுப்பு முறைகளை மட்டும் இக்கால கட்டத்தில் பின்பற்ற வேண்டும். மேலும் பொதுவான கால ஒழுக்கங்களை அந்தந்த காலத்திற்குத் தகுந்தாற் போன்று கடைபிடிக்க வேண்டும்.
நலப்பயணம் தொடரும்........ |
||||||||
by Swathi on 25 May 2015 0 Comments | ||||||||
Tags: உத்தராயணம் தட்சிணாயணம் Siddha Maruthuvam சித்த மருத்துவம் | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|