|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – 28 |
||||||||
![]() கண் பாதுகாப்பு இக்கால எந்திர மயமான உலகில் கண் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. கணினி (Computer), கைபேசி (Mobile), குழந்தைகளின் விளையாட்டுச் சாதனங்கள் (Digital devices), மற்றும் பல ஊடக எந்திரங்களின் பயன்பாடு அதிகமாகி விட்டது. பலருக்கு உறங்குவதற்கு முன்பும் உறங்கி எழுந்த உடனும் கணிணியையும் கைபேசியையும் பார்த்தே ஆக வேண்டும். அவர்களின் தொழில் சார்ந்தோ பிற நட்பு வட்டரங்களைத் தொடர் கொள்ளவோ இச்சாதனைங்கள் மிக மிக அவசியமாகின்றன. இந்த மின்னேந்திரச் சாதனங்களிலிருந்து (Electronic devices) வெளியேறும் ஒளி கண்களை மட்டுமல்லாமல் உடல் நலத்தையும் கெடுக்கின்றன எனப் பல ஆய்வுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
இந்தச் சாதனங்களிலிருந்து வெளியேறும் ஊதா நிற ஒளி (Blue light) கண்களைப் பலவிதமாகத் தாக்குகின்றது. கண்களைப் பாதிக்கும் புதுப்புது நோய்களுக்கு இச் சாதனங்களின் பயன்பாடு காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் பல ஆய்வுகள் நிகழ்ந்து கொண்டுள்ளன.
இச்சாதனங்களால் இரண்டு முக்கிய பாதிப்புகள் ஏற்படுவது ஆய்வுகளால் உறுதி செய்யப் பட்டுள்ளது. ஒன்று இச்சாதனங்களால் ஏற்படும் உடனடி விளைவு. அதாவது இச்சானங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது கண் இமைப்பது குறைந்து போகின்றது. கண் மிகை முயற்சி செய்து (தன் இயல்பான அளவுத் திறனுக்கு மீறி) அப்போது வேலை செய்கின்றது. இதனால் கண் இசிவு (Eye strain) ஏற்படுகின்றது. கண் வறட்சி ஏற்பட்டு இலேசான கண்வலி ஏற்படும். இச்சாதனங்களில் நாம் வேலை செய்யும் போதோ அல்லது பொழுதுபோக்கும் போதோ நம் கவனம் அந்த நிகழ்வுகளில் முழுமையாக மூழ்கியிருக்கும். அப்போது கண் வறண்டு போவதோ சிறு வலி ஏற்படுத்துவதோ நமக்குத் தெரியாது. அச்சாதனங்களை நிறுத்திய பின்பு தான் கண் பிரச்சனைகள் தெரியவரும். இது தொடர்ந்தால் கண் பார்வை மங்குதல் ஏற்படும். கண் தசைகள், கண் ஆடி (Lens) இவைகளின் வலு குறைவதே பார்வை மங்கலுக்குக் காரணம். இது மின்னேந்திரச் சாதனங்களைப் பார்ப்பதன் உடனடி விளைவாகும் (Acute Effect).
அடுத்ததாக நாட்பட்ட விளைவு (Chronic effect). இது முன்பு சொன்ன ஊதா கதிரினால் ஏற்படக் கூடியது. இச்சாதனங்களிலிருந்து வரும் ஊதா கதிருக்கு அதிக அலை நீளமும் (Wave length) அதிக ஆற்றலும் (Energy) உண்டு. இது தொடர்ச்சியாகக் கண் வழியே செலுத்தப் படுவதால் மீளாக் கண்பாதிப்புகள் (Irreversible Eye Damages) ஏற்பட வாய்ப்புள்ளன. அவற்றில் முக்கியமானது மேக்குலார் பாதிப்பு (Macular degeneration). இது குழந்தைகளிலிருந்தே இச்சாதனங்களைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோருக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
சரி இந்தச் சாதனங்களையே பயன்படுத்தக் கூடாதா ? இக்காலத்தில் மிக மிக அத்தியாவசியமான இச்சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்டே எவ்வாறு கண்களைப் பாதுகாப்பது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
முற்காலத்தில் கண் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமனதகக் கருதப்பட்டு வந்துள்ளது. இதனை நாம் சித்தர்களின் நூல்கள் வாயிலாக அறிகின்றோம். சித்தர்கள் கூறிய பாதுகாப்பு முறைகளில் சிலவற்றை இப்போது பார்க்கப் போகின்றோம். அவற்றிற்கு இக்கால மின் சாதனங்களால் ஏற்படும் பாதிப்புகள் மட்டுமின்றி பல பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
கண் பாதுகாப்பு
1. நல்லெண்ணெய் கண்ணைப் பாதுகாக்கும் முக்கிய பொருள். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் (காண்க – எண்ணெய் இட்டுக் குளித்தல்) தினமும் கண்களில் எண்ணெய் விடுவதும், நேரம் கிடைக்கும் போது உச்சியிலும் பாதத்திலும் சிறிது தேய்த்து கொள்வதும், உள்ளே உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதும் கண்களைப் பாதுகாக்கும். நல்லெண்ணெய் தற்கால பல கதிர்வீச்சுகளிலிருந்து உடம்பைப் பாதுகாக்கும்.
2. சென்ற வாரம் பார்த்த கண்மையினை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் வாரம் இருமுறை கண் இமைகளில் இட்டுக் கொள்வதால் கண் பாதுகாக்கப் படும்.
3.நல்லெண்ணெய் போலவே தூய தேங்காய்நெய், பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பை நெய் போன்றவையும் பயன்படும்.
4. கீரைகள் : கண்ணொளியை பாதுகாக்கும் ஏராளமான கீரைகள் சித்தர் நூல்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் எளிதில் கிடைக்கக் கூடிய கரிசலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, பசலை, முருங்கை, அகத்தி, சிறுகீரை, அறுகீரை (அரைக் கீரை), கறிவேப்பிலை, கொத்துமல்லி போன்றவை அடங்கும். இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை (அல்லது உங்கள் ஊரில் விளையும் உண்ணத் தகுந்த கீரையை) தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து அந்தக் கீரைச் சாற்றினை கண்களில் துளியாக விடலாம். உடலிலும் கீரைச்சாறுடன் சீரகப் பொடி கலந்து பூசலாம். பூசி அரை மணி ஊற விட்டு பாசிப்பருப்பு மாவு போட்டுக் குளிக்கலாம். அல்லது கீரைச்சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு உடலில் பூசிக் குளிப்பதோடு கண்களில் துளியாக விட வேண்டும். இதே கீரைகளில் ஏதேனும் ஒன்றை மைய அரைத்து சிறு வில்லைகலாகத் தட்டி நீருள்ள மண் பானையில் ஒட்டி வைத்திருந்து 12 மணிநேரம் கழித்து கண்களை மூடி கண் மேல் பற்றுப் போட வேண்டும். ஒரு மணி நேரம் அவ்வாறு வைத்திருந்தால் போதும்.
5. மலர்கள் : நந்தியாவட்டம் பூச்சாற்றினைக் கண்களில் விடலாம். களாப்பூச் சாறுடன் (களாக்காய்) நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கண்களில் துளியாக விடலாம். மல்லிப் பூக்களை கண்களில் வைத்துக் கட்டலாம். (மவ்வல்)
6. கற்றாைழச் சாறு கண் துளியாக விடலாம். கற்றாைழச் சோறு கண்களில் வைத்துக் கட்டலாம். கற்றாைழயுடன் வெந்தயம் சேர்த்து உள்ளே சாப்பிடலாம். கற்றாைழத் தைலம் தேய்த்துக் குளிப்பது கண்களில் விடுவது நல்ல பலனைத் தரும்.
7. வெந்தயம், சீரகம், அதிமதுரம், சிறிய வெங்காயம், நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் போன்ற பொருட்களை உள்ளே சாப்பிடுவதும் கண்களுக்கு பயன்படுத்துவதும் மிகுந்த பயனளிக்கும். தகுந்த அறிவுரை தேவை.
8. சிற்றாமுட்டி மடக்குத்தைலம் (சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்) தேய்த்துக் குளிப்பதும், உள்ளே 10 சொட்டு சாப்பிடுவதும், கண்களில் அடிக்கடி துளியாக விடுவதும் கண்களை மட்டுமல்ல மொத்த உடலையும் பாதுகாக்கும்.
வேறு என்னென்ன முறைகளில் கண்களைப் பாதுகாக்கலாம் என அடுத்த வாரம் பார்ப்போம்.
நலப்பயணம் தொடரும்.......... |
||||||||
by Swathi on 23 Mar 2015 0 Comments | ||||||||
Tags: கண் பாதுகாப்பு சித்த மருத்துவம் கண்கள் பாதுகாப்பு கண்கள் பாதுகாப்பு முறை கண்களும் அதன் பாதுகாப்பு முறைகளும் கண் பாதுகாப்பு சித்த மருத்துவம் கண் மருந்து | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|