|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : பருவகால ஒழுக்கங்கள் – அறிமுகம் – 31 |
||||||||
![]() பருவகால ஒழுக்கங்கள் – அறிமுகம் தமிழர்கள் பன்னிரண்டு மாதங்கள் கொண்ட ஓர் ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்திருக்கின்றனர். ஒவ்வொரு பருவங்களும் இரண்டு மாதங்களைக் கொண்டது.
ஈராறு திங்களையும் இவ்விரண்டாய் வில் முதலாய்
ஓராறிருதுவாய் ஓதுவரே – சீரார்
இரும் பொழுதின் பேர் தான் இருபணி வேனில்
கருமுகில் கூதிரெனக் காண்.
- மருத்துவத் தனிப்பாடல்
1. இளவேனில் காலம் – சித்திரை, வைகாசி (April 14 – June 13)
2. முதுவேனில் காலம் – ஆனி, ஆடி (June 14 – August 13)
3. கார் காலம் - ஆவணி, புரட்டாசி (August 14 – October 13)
4. கூதிர் காலம் – ஐப்பசி, கார்த்திகை (October 14 – December 13)
5. முன்பனிக் காலம் – மார்கழி, தை (December 14 – February 13)
6. பின்பனிக் காலம் – மாசி, பங்குனி (February 14 – April 13)
தமிழகத்தில் நிலவும் பருவ மாற்றங்களின் அடிப்படையில் இந்த ஆறு பருவ காலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறு பருவங்களும் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது சூரியனின் தெற்கு நோக்கிய அல்லது வடக்கு நோக்கிய இயக்கத்தினை (பூமியின் சுழற்சியை) அடிப்படையாகக் கொண்டவை. இந்த ஒவ்வொரு பருவங்களிலும் நடக்கும் இயற்கை நிகழ்வுகள் வேறுபடும். ஒவ்வொரு பருவத்திற்கென தனி குணங்கள் உண்டு. பருவகாலங்களின் நிகழ்வுகளில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் இலக்கியங்களில் எழுதப்பட்ட காலம் முதல் இன்று வரை அந்த பருவத்திற்கான தனி குணங்களில் பெரிய மாற்றங்களில்லை.
உதாரணமாக கார்கால நிகழ்வுகளின் இந்திர கோபப் பூச்சி மகிழ்தலும், காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குவதும் பல இடங்களில் காணாமல் போய்விட்டன. ஆனால் கார் காலத்தின் தனி குணமான குளிர் காற்று வீசுதலும் அதனைத் தாங்குவதற்காக உடல் வெப்பம் தொலிற்குச் சென்று விடுவதால் உயிர் வெப்பம் (உள்வெப்பம்) குறைவதுமான அடிப்படை குணங்களில் மாற்றங்களில்லை.
கால மாற்றங்களுக்கேற்றவாறு உடலும் தம்மை மாற்றி அமைத்துக் கொள்ள முயற்சி செய்யும். அந்த முயற்சிகளுக்கு துணை செய்வது போன்ற செயல்களை நாம் செய்தால் பருவ மாற்றங்களால் உடலும் மனமும் பாதிப்படையாதவாறு காப்பாற்றிக் கொள்ளலாம். பருவ மாற்றத்தால் நிகழும் சில உடல் மாற்றங்கள்:
பருவ மாற்றத்தால் உடல் எடை மாற்றம் நிகழும். உறக்கத்தில் மாற்றம் நிகழும். சோர்வு அல்லது புத்துணர்ச்சி கூடும். பசி ஆர்வம் கூடும் அல்லது குறையும்.
மனதைப் பொருத்துவரை இனம்புரியாத அச்சமோ மகிழ்வோ உண்டாகும். மன அழுத்தம் அல்லது பதற்றம் கூடும்.
இதே போன்று பருவ மாற்றங்களினால் காரணமில்லா உடல் மற்றும் மன பிரச்சனைகள் ஏற்படுவதாக பல இக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த கால மாற்றங்களுக்கு ஏற்ற உணவுகள் செயல்களை சித்தர் நூல்கள் கூறியுள்ளன. அவற்றை முறையாக பின்பற்றினால் அக்காலங்களில் வரும் நோய்களை மட்டுமின்றி பிற பருவ காலங்களிலோ வாழ்வின் வேறு ஒரு காலத்திலோ உடலைத் தாக்கும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நோய் எதிர்பாற்றலை பொறுத்த வரையில் முன்பனி, பின்பனி காலங்களில் (December 14 to April 13) உயர்ந்த நிலையில் இருக்கும். மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிர்களும் தாவரங்களும் உயர்ந்த ஆற்றலுடன் இருக்கும்.
இளவேனில் காலத்திலும் கூதிர் காலத்திலும் (April 14 to June 13 & October 14 to December 13) உயிர்களின் எதிர்ப்பாற்றல் மத்திம நிலையில் இருக்கும்.
முதுவேனில் காலத்திலும் கார் காலத்திலும் (June 14 to October 13) உயிர்களின் ஆற்றல் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும். அந்தந்த காலங்களில் உடல், உயிர் ஆற்றல்களை உயர்த்திக் கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
எந்தெந்த காலங்களில் என்னென்ன செய்ய வேண்டும் ? என்னென்ன செய்யக் கூடாது என இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்.
நலப்பயணம் தொடரும்.........................
|
||||||||
by Swathi on 13 Apr 2015 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|