LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki )-பொய்மான் கரடு

நான்காம் அத்தியாயம்

  அன்று சாயங்காலம் செங்கோடக் கவுண்டன் சின்னம நாயக்கன்பட்டிக்குப் போனான். கொல்லனிடம் செப்பனிடக் கொடுத்திருந்த மண்வெட்டியை வாங்கிக்கொண்டு, ஹரிக்கன் லாந்தரில் மண்ணெண்ணெய் வாங்கிப் போட்டுக் கொண்டு, இன்னும் சில சில்லறைச் சாமான்களும் வாங்கி வருவதற்காகப் போனான். ஹரிக்கன் லாந்தரைச் சில்லறைச் சாமான் கடையில் வைத்துவிட்டுக் கொல்லன் உலைக்குப் போய்ச் செப்பனிட்ட மண்வெட்டியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான்.
     அன்றைக்கெல்லாம் அவன் மனமாகிய வண்டு செம்பவளவல்லியின் முக மண்டலத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு சமயம் கண்ணீர், ததும்பிச் சோகமயமாயிருந்த அந்தப் பெண்ணின் முகமும், மற்றொரு சமயம் மலர்ந்த புன்னகையுடன் குதூகலம் ததும்பிக் கொண்டிருந்த அவள் முகமும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. ஊரார் பேச்சைப் பொருட்படுத்தாதவன் போல் அவளிடம் செங்கோடன் வீம்பாகப் பேசியிருந்தபோதிலும் அவன் மனநிலையில் சிறிது மாறுதல் ஏற்பட்டுத்தான் இருந்தது. செம்பவளத்துக்கும் தனக்கும் திருமணத்தைக் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.
     இதே ஞாபகமாகச் சின்னம நாயக்கன்பட்டி வந்தவனுடைய கவனத்தை அந்த ஊர்ச் சாவடிச் சுவர்களிலும் சாலை மரங்களிலும் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்கள் ஓரளவு கவர்ந்தன. அந்த வர்ண விளம்பரங்களில் ஒரு பெண் பிள்ளையின் முகம் முக்கியமாகக் காட்சி அளித்தது. அந்த முகம் அழகாயும் வசீகரமாயும் இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். அப்படி வசீகரமாவதற்காக அந்த சினிமாக் கன்னிகை முகத்தில் எத்தனை பூச்சுப் பூசிக் கொண்டிருக்கிறாள், கண்ணிமைகளையும் புருவங்களையும் என்ன பாடுபடுத்திக்கொண்டிருக்கிறாள், உதடுகளில் எவ்வளவு வர்ணக் குழம்பைத் தடவிக் கொண்டிருக்கிறாள் என்பதெல்லாம் செங்கோடனுக்கு எப்படித் தெரியும்? 'செம்பவளம் பார்த்ததாகச் சொன்னாளே, அந்த சினிமாவில் வரும் மோகனாங்கி என்னும் பெண் இவள்தானோ? 'மோகனாங்கி' என்ற பெயர் இவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; நான் கூட இந்த சினிமாவை ஒரு தடவை பார்த்துவிட வேண்டியதுதான், இரண்டே காலணாக் காசு போனால் போகட்டும்! இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தக் கூடார சினிமா இந்த ஊரில் நடக்குமோ, என்னவோ விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது...'
     இப்படி நினைத்துக் கொண்டே சில்லறைக் கடையை நோக்கிச் சாலையோடு போய்க் கொண்டிருந்த செங்கோடன் 'பொய்மான் கரடு'க்குச் சமீபமாக வந்தான். அங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சி அவனை அப்படியே திகைத்து ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது. அரசமரத்தின் கீழ்க் கிளையொன்றில் ஒயிலாகச் சாய்ந்துகொண்டு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். சுவர்களில் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்களில் கண்ட கன்னிதான் அவள் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. உண்மையில் அப்படியல்ல. ஆனால் அந்த சினிமாக் கன்னியைப் போலவே இந்தப் பெண்ணும் குறுக்கு வகிடு எடுத்துத் தலைவாரிப் பின்னிச் சடையைத் தொங்கவிட்டுக்கொண்டும், மேல் தோள்வரையில் ஏறிச் சென்றிருந்த ரவிக்கை தரித்துக் கொண்டும், காதில் குண்டலங்கள் அணிந்து கொண்டும், நட்சத்திரப் பூப்போட்ட மெல்லிய சல்லாச் சேலை அணிந்து கொண்டும், நெற்றியில் சுருட்டை மயிர் ஊசலாட, எங்கேயோ யாரையோ பார்த்து, எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள்போல் நின்றபடியால், அவளே சினிமா விளம்பரத்தில் உள்ள பெண் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. பார்த்தது பார்த்தபடி பிரமித்துப் போய்ச் சிறிது நேரம் நின்றான்.
     அந்தப் பெண் தன்னைப் பார்த்து ஒரு பட்டிக்காட்டான் விழித்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்.
     "என்னப்பா, பார்க்கிறாய்?" என்று அவள் கேட்டாள்.
     செங்கோடனுடைய காதில் கிணுகிணுவென்று மணி ஒலித்தது. பூங்குயில்களின் கீதம் கேட்டது.
     எங்கிருந்தோ ஒரு முரட்டுத் தைரியம் அவனுக்கு ஏற்பட்டது. 
     "வேறு என்னத்தைப் பார்க்கிறது? உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.
     அந்தப் பெண்ணுக்குப் பொங்கிவந்த கோபம் ஒரு கணத்தில் எப்படியோ மாறியது. அவள் முகம் மலர்ந்தது. பல் வரிசை தெரிந்தது.
     அதைப் பார்த்த செங்கோடனும் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு புன்னகை புரிந்தான். 
     "என்னப்பா, சிரிக்கிறாய்?" என்று அவள் கேட்டாள்.
     "பின்னே, அழச் சொல்கிறாயா?" என்றான் செங்கோடன்.
     "பாவம், அழ வேண்டாம்! உன் பெண்சாதி தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறாள்!"
     "எனக்குக் கலியாணம் இனிமேல்தான் ஆகவேண்டும். எத்தனையோ பேர் பெண் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தான் இதுவரையில் சம்மதிக்கவில்லை!" என்று செங்கோடன் சொல்லிவிட்டு அர்த்த புஷ்டி நிறைந்த பார்வையை அந்தப் பெண் மீது செலுத்தினான்.
     ஆனால் அந்த அர்த்தம் அப்பெண்ணின் மனத்தில் பட்டதாக அவள் காட்டிக்கொள்ளவில்லை.
     "ரொம்ப சரி; நீ சம்மதம் கொடுத்துக் கலியாணம் நிச்சயமாகிறபோது எனக்குக் கட்டாயம் கலியாண கடுதாசி போடு" என்றாள்.
     "கடுதாசி கட்டாயம் போடுகிறேன். ஆனால் பெயரும், விலாசமும் தெரிந்தால் தானே கடுதாசி போடலாம் உன் பெயர் என்ன?" என்று செங்கோடன் கேட்டான்.
     "பெரிய வம்புக்காரனாயிருக்கிறாயே? என் பெயர் குமாரி பங்கஜா. உன் பெயர் என்ன?"
     'குமாரி பங்கஜா' என்று அவள் சொன்னது 'ராஜகுமாரி பங்கஜா' என்று செங்கோடன் காதில் விழுந்தது. 'அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்; நினைத்தது சரியாய்ப் போயிற்று' என்று மனத்தில் எண்ணிக் கொண்டான்.
     "உன் பெயர் என்ன? சொல்லமாட்டாயா?" என்று மறுபடியும் குமாரி பங்கஜா கேட்டாள்.
     "சொல்லுவதற்கு என்ன தடை? என் பெயர் ராஜா செங்கோடக் கவுண்டன்" என்றான்.
     குமாரி பங்கஜா குலுங்கச் சிரித்தாள். "வெறும் ராஜாவா? மகாராஜாவா?" என்று கேட்டாள்.
     "என்னுடைய பத்து ஏக்கரா காட்டிற்கு நான் தான் ராஜா, மகாராஜா, ஏக சக்ராதிபதி எல்லாம்!" என்றான் செங்கோடன் பெருமிதத்துடன்.
     "சரி, போய், உன்னுடைய ராஜ்யத்தைச் சரியாகப் பரிபாலனம் பண்ணு! இங்கே நடு ரோட்டில் நின்றால் என்ன பிரயோஜனம்?" என்றாள் குமாரி பங்கஜா.
     "ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் போய் விடுகிறேன்" என்றான் செங்கோடன்.
     "அது என்ன கேள்வி?" 
     "சுவரிலே, மரத்திலேயெல்லாம் சினிமாப் படம் ஒட்டியிருக்கிறதே, அதிலே ஒரு அம்மா இருக்காங்களே, அது நீதானே?" என்று கேட்டான்.
     "சேச்சே! அந்த மூவன்னா தேவி நான் இல்லவே இல்லை! நான் சினிமாவிலே நடித்தால் அவளைக் காட்டிலும் நூறு பங்கு நன்றாக நடிப்பேன்" என்றாள் பங்கஜா.
     "சேச்சே! போயும் போயும் அந்தக் கேவலமான தொழிலுக்கு நீ போவானேன்?" என்றான் செங்கோடன்.
     "எதைக் கேவலமான தொழில் என்று சொல்லுகிறாய்?"
     "சினிமாவில் நடிக்கிறதைத்தான் சொல்கிறேன். சினிமாவில் நடித்தால் மானம், மரியாதையை விட்டு...."
     "இதற்குத்தான் பட்டிக்காடு என்று சொல்கிறது" என்றாள் பங்கஜா.
     இத்தனை நேரமும் அவளுடன் சரிக்குச் சரியாகச் சாமர்த்தியமாகப் பேசிக்கொண்டு வந்த செங்கோடன் இப்போது தான் பிசகு செய்துவிட்டதாக உணர்ந்தான். சினிமா விஷயமாகச் செம்பாகூடத் தன்னை இடித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. ஆகையால், முதல் தர அரசியல்வாதியைப் போல் தன் கொள்கையை ஒரு நொடியில் மாற்றிக் கொண்டான்.
     "எனக்குக்கூட சினிமா என்றால் ஆசைதான். இன்று இராத்திரி இந்த ஊர்க் கூடார சினிமாவுக்குப் போகப் போகிறேன்" என்றான்.
     "அப்படியா? இந்த முக்கியமான செய்தியைப் பேப்பருக்கு அனுப்பிப் போடச் சொல்ல வேண்டியதுதான்" என்றாள் குமாரி பங்கஜா.
     "பேப்பரிலே போட வேண்டியதில்லை; உனக்குத் தெரிந்தாலே போதும்!" என்றான் செங்கோடன்.
     "எனக்கு ஏன் தெரிய வேணும்?"
     "என்னை அங்கே பார்க்கலாம் என்பதற்காகச் சொன்னேன். நீயும் இன்றைக்கு இராத்திரி சினிமாவுக்கு வருவாயல்லவா?"
     "நான் வராமல் சினிமா நடக்குமா? கட்டாயம் வருவேன்."
     "அப்படியானால் அங்கே உன்னை அவசியம் பார்க்கிறேன்."
     "டிக்கெட்டுக்குப் பணம்?"
     "அதைப்பற்றிக் கவலைப்படாதே, டிக்கெட்டு நான் வாங்கி விடுகிறேன். இரண்டே காலணாவுக்குப் பஞ்சம் வந்து விடவில்லை."
     குமாரி பங்கஜா வந்த சிரிப்பை அடக்கி கொள்ள முடியாதவளாய் வேறு பக்கம் பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.
     இதற்குள் அங்கே ஊர்ப் பிள்ளைகள் ஏழெட்டுப் பேர் கூடிவிட்டார்கள்.
     அதைப் பார்த்த பங்கஜா இனி அங்கே நின்று அந்தப் பட்டிக்காட்டானோடு விளையாட்டுப் பேச்சுப் பேசக் கூடாதென்று மேடையிலிருந்து கீழிறங்கி நடக்கத் தொடங்கினாள்.
     அவளோடு நாமும் போவோமா என்று செங்கோடன் ஒரு நிமிஷம் யோசித்தான். வீட்டுக்குத் திரும்பிப்போய் சினிமாவுக்குப் பணம் கொண்டு வரவேண்டிய அவசியத்தை உத்தேசித்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.
     குமாரி பங்கஜா ஐம்பது அடி தூரம் போனபிறகு "சினிமாக் கூடாரத்திலே அவசியம் சந்திக்கிறேன்" என்று ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கூவினான்.
     பங்கஜா திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள்.
     அந்தப் புன்னகையில் செங்கோடனுடைய உள்ளம் சொக்கித் தன்னை மறந்து லயித்தது.
     அந்த நிலையில் அவன் சில்லறைக் கடைக்குச் சென்றான்.
     "என்னப்பா, செங்கோடா, அந்த அம்மாவுடன் நெடு நேரம் பேசிக்கொண்டு நின்றாயே? என்ன பேசினாய்?" என்றான் கடை முதலாளி.
     "என்னத்தைப் பேசுகிறது? வெறுமனே க்ஷேம சமாசாரந்தான் பேசிக்கொண்டிருந்தோம்."
     "அந்த அம்மாளை முன்னாலேயே உனக்குத் தெரியுமா என்ன?"
     "நல்ல கேள்வி! ரொம்ப நாளாய்ப் பழக்கமாயிற்றே!"
     கடைக்குச் சாமான் வாங்க வந்த இன்னொரு மனிதரிடம் கடை முதலாளி, "கேட்டீர்களா, முதலியார், நம்ம ஊர்ப் பஞ்சாயத்து மானேஜர் புதிதாக வந்திருக்கிறார் அல்ல? அவருடைய தங்கை - ஒரு படித்த அம்மாள் - வந்திருக்கிறாள் அல்ல? அந்த அம்மாளுக்கும் நம்ம செங்கோடனுக்கும் வெகு நாளாய்ச் சிநேகிதமாம்!" என்று சொன்னார்.
     "ஆமாம்; வெகுநாளாகச் சிநேகிதம்" என்று செங்கோடன் சொல்லிவிட்டு ஹரிக்கன் லாந்தரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். மேலே அவர்கள் இன்னும் ஏதாவது அந்த அம்மாளைப் பற்றிக் கேட்டால் தன்னுடைய குட்டு உடைந்துவிடும் என்று கொஞ்சம் அவனுக்குப் பயம் இருந்தது. 

by Swathi   on 22 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.