LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..

அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டின் மூன்றாம் நாள் கலைவிழாவில் பாவலர் அறிவுமதி இயற்றி, தாஜ்நூர் இசையமைத்துள்ள “ஆடல் கண்ணகி” இசைப்பாடலுக்கு கலைமாமணி நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம்  மிகப்பெரிய பாராட்டை பெற்றது.  

பாவலர் அறிவுமதியின் ஆடல் கண்ணகி கவிதை உங்களுக்காக…

மரங்களின் தோள்கள் மீது
கைகள்
போட்டுக்கொண்டு
ஒரு
மலைக்
கிழத்தி
மகிழ்ந்தாடிக்கொண்டிருந்த
பொழுதில்
தெறித்த
ஒற்றைச்
சலங்கையெடுத்து
ஊன்றினள் ஒருத்தி
உயர்ந்த
நல்
விதை
என
வானம் திகைக்க
வளர்ந்த
மரத்தில்
சலங்கை நெற்றுகள்
சடை
சடையாகக்
காய்த்துத் தொங்கக்
கோயிற்
காட்டின்
அடம்புகள் விலக்கி
வந்த
உடுக்கையின்
பேச்சை
உள்
குடித்த
வெறியில்
அடவுகள் கட்டி
ஆடத்
தொடங்கிய
மரத்துச் சலங்கைகளது
பேரோசை
போய்
கண்ணகியாளைக்
கை
பிடித்து
இழுத்து வந்து
ஆடடி
அம்மே
ஆடு
ஆடு
என்றது
அதிர்ந்தவள் நடுங்கி

ஆடத்
தெரியாதே
என்றாள்

அதிரச் சிரித்த
அத்தனை
சலங்கைகளும்
ஆடத்
தெரியாதாம்
அம்மைக்கு

ஆடத்
தெரியாதாம்
என
உரக்கக் கூவி
உச்சுக்
கொட்டின

கூசிக் குறுகிக் குழந்தையாய்
நின்ற
கண்ணகி
கண்களிலிருந்து
உதிர்ந்தன
கண்ணீர்ப்
பரல்கள்
கண்ணீர்ப்
பரல்கள்

பரல்களின் விசும்பலில்
பட்டென
விழித்த
கொற்றவைக்
கிழவோள்
கூர்ந்து நோக்கி தன்
குழந்தையைத்
தொட்டாள்
கட்டியணைத்துக்
கண்ணீர்
துடைத்தாள்

சலங்கைகள் பறித்துச்
சடுதியில்
கோத்துக்
கண்ணகியாளின்
கால்களில்
கட்டினாள்

ஆடிப்போன அவளோ
ஆடக்
கூடாதே
தாயே
நான்
ஆடக்
கூடாதே
என்று
அழுதாள்
அழுதாள்
அழுதாள்

கோபம் தலைக்கேறிய
கொற்றவையாளோ
குனிந்து
தன்
கால்களிலும்
சலங்கைகள் கட்டிச்
சட்டென
நிமிர்ந்தவள்
செவ்வாடை தூக்கிச்
செருகிக்
கொண்டு
அடவுகள் வியக்க
ஆடத்
தொடங்கினாள்

அடவுகள்
சுழற்றிய
அதீதக் காற்றில்
மரங்கள்
ஆடின
மலைகள்
ஆடின
பறவைகள்
ஆடின
பனைகள்
ஆடின

கண்ட கண்ணகி
கண்களைத்
துடைத்தாள்

முதல்
முறை
மண்ணை
மூர்க்கமாய்
உதைத்தாள்

காடு கிழவோள் காட்டுடன்
ஆடும்
அத்தனை
அத்தனை
அதிர்வையும் அடடா… அடடா…
அள்ளி
விழுங்கி
ஆவேசமுற்று
ஆடத்
தொடங்கினாள்

ஆண்
வலைப்
பின்னல்கள்
அனைத்தும்
கிழியக்
கிழியக்
கிழிய
பெண்
சுமைப்
பாறைகள்
பிளந்து
சரியச்
சரியச்
சரிய
ஆடினாள்
ஆடினாள்
ஆடினாள்
ஆடினாள்
கண்ணகி
சலங்கைகள் அனைத்தும்
ஒலிகள்
ஒடுங்கி
உம்மென்றாயின

கொற்றவை அம்மா
கொதித்துப்பேசினாள்…

நடவு நடத் தெரியாத
கைகள்
நடம்
ஆடத்
தெரியாத
கால்கள்
நடமாடத் தகுதியற்றவை
மகளே
நடமாடத்
தகுதியற்றவை

உடலுழைப்பின்
உற்பத்தியே
இசையும்
ஆடலும்

மாட்டின் நெற்றியில்
மாட்டிய
சலங்கைகளே
ஆட்டக்
கால்களின்
அணிகள்
ஆயின

பரத முனிவனா
பறித்துத்
தந்தான்
பகர்பவர் எவரையும்
பார்த்து
நகைப்பேன்

இளங்கோ என்பவர்
யாரெனக்
கேட்கின்
அரசருக்கடுத்த
அடுக்கில்
நிற்பவர்
ஆம் அவர்
வணிகர்

அடியே கண்ணகி
அளவிற்கதிகப்
பொருள்
வளப்பெருக்கில்
பெண்களைப் பெரிதும்
பெருமை
செய்தலாய்க்
கற்பெனும்
பொய்யைக்
கற்பிதப்
படுத்தலாய்
உழைக்கத் தடுத்து
உட்கார
வைத்து
இசையைக்
கற்றல்
இழுக்கெனச்
சொல்லி
ஆடல்
கற்றல்
ஆகாதெனத்
தள்ளி
மண்மகள் அறியா
பாதக்
காரிகளென்று
மாபெரும்
பொய்யில்
மகளிரை
அமுக்கி
மாந்த இயல்பின்
மரபை
மறித்ததால்
அல்லோ

இசையும் நடமும்
இயல்பாய்த்
தெரிந்த
கோவலப் பையன்
இரண்டும்
இல்லா
உன்னை
விடுத்து

ஆடலும்
பாடலும்
அழகும் என்று இக்
கூறிய
மூன்றிலும்
சிறந்த
மாதவியாளிடம்
மனதைக்
கொடுத்து
உன்னை
முதலில்
உடனே
இழந்துத்
தன்னையும்
முடிவில்
தானே
இழந்து

வரலாற்றுப் பிழையாய்
உன்
வாழ்வைச்
சிதைத்தான்

உடைமைப் பொருளாய்
உள்ளே
தள்ளி
மகளிரின் உரிமைகள்
மறுத்ததால்தாமே

இன வரலாற்றில்
இத்துணை
இழப்புகள்
இத்துணைச்
சரிவுகள்

ஆடலும் பாடலும்
இனத்திற்குத்
தூரமாய்
இருக்கும்
வரையில்
எழுச்சி நெருப்புகள்
எழுப்பவே
முடியா
அடிமைக்
குணங்களை
அகற்றவே
முடியா
அதனை உணர்ந்தே
அம்மா சொல்கிறேன்…
ஆடடி
கண்ணகி
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
அம்மா கொற்றவை
ஆணையும்
சமமாய்
ஆண்ட
தலைமையள்

பாடலும்
ஆடலும்
பழுத்தச்
செழுமையள்

அவ்வழிதானடி
அழுத்திச்
சொல்கிறேன்

தொடங்கடி
கண்ணகி
துணங்கை
குரவை
துடியலி பறையலி
தூய
நல்
குழலொலி
துயிலா
முழவொலி
இனிதாம்
யாழொலி
அனைத்தையும்
விழுங்கி
ஆடடி
மகளே
அருமைக்
கண்ணகி

ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடு
ஆடடி யம்மே
ஆடு
ஆடு
ஆடு!

by Swathi   on 05 Jul 2018  7 Comments
Tags: ஆடல் கண்ணகி   நர்த்தகி நடராஜ்   பாவலர் அறிவுமதி   FETNA   FETNA2018        
 தொடர்புடையவை-Related Articles
அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது.. அமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..
வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில... வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில...
தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016 தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016
சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது 2015 பேரவையின் தமிழ் விழா தமிழிசை அறிஞர் பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாணாடு விழாவாகக் கொண்டாடப்படுகிறது
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய  இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழகத்தில் நடத்திய இரண்டாம் ஆண்டு தமிழ் இசை விழா
கருத்துகள்
07-Jul-2018 01:33:25 வெ தி முருக வினோத் குமார்Vt said : Report Abuse
வணக்கம். பாவலர் அறிவுமதியின் இக் கவிதை தொகுப்பை படித்து பிரித்து பொருள் உணர்ந்து கொள்ள வேண்டும்.அவரின் கவிதை நோக்கத்தை தெளிவு படுத்த வேண்டும்.ஆடல் உயர்ந்ததென்றால் கண்ணகியின் ஆவேச நடனமே.
 
06-Jul-2018 18:31:53 புதியமாதவி said : Report Abuse
அருமை. ஆடிய பாதங்களுக்கும் ஆட்டுவித்த கவிதைகளுக்கும் வாழ்த்துகள்.
 
06-Jul-2018 08:17:10 ந.ஜெயபாலன் said : Report Abuse
அருமை
 
06-Jul-2018 05:22:47 திருமுருகன். S said : Report Abuse
Superb
 
06-Jul-2018 04:29:19 Jeganathan said : Report Abuse
தமிழ் வாழ்க
 
05-Jul-2018 19:35:59 வ.ச. பாபு said : Report Abuse
அன்புடையீர் வணக்கம். வாழ்த்துகள். தங்களின் பேரவை 2018 நிகழ்வுதனை வெளியிட்டமைக்கு நன்றி. இனி வரவிருக்கும் வலைத் தமிழ் செய்திகள் எவற்றிலும் "பெட்னா" என ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிடுதலை அறவே தவிர்த்து "பேரவை" என்று குறிப்பிடுமாறு 1991 லிருந்து 2006 வரையும் பேரவையின் பல்வேறு பெரும் பொறுப்பிலிருந்தவன் (2001 -2002 தலைவனாக - தலைமைத்தொண்டனாக ) என்ற வகையில் கேட்டுக்கொள்கிறேன். தமிழோடு (கலப்பற்ற) முழு உறவோடு இணைந்திருப்போம். நன்றி அன்புடன் வ.ச. பாபு
 
05-Jul-2018 19:35:49 வ.ச. பாபு said : Report Abuse
அன்புடையீர் வணக்கம். வாழ்த்துகள். தங்களின் பேரவை 2018 நிகழ்வுதனை வெளியிட்டமைக்கு நன்றி. இனி வரவிருக்கும் வலைத் தமிழ் செய்திகள் எவற்றிலும் "பெட்னா" என ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிடுதலை அறவே தவிர்த்து "பேரவை" என்று குறிப்பிடுமாறு 1991 லிருந்து 2006 வரையும் பேரவையின் பல்வேறு பெரும் பொறுப்பிலிருந்தவன் (2001 -2002 தலைவனாக - தலைமைத்தொண்டனாக ) என்ற வகையில் கேட்டுக்கொள்கிறேன். தமிழோடு (கலப்பற்ற) முழு உறவோடு இணைந்திருப்போம். நன்றி அன்புடன் வ.ச. பாபு
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.