|
|||||
தெக்கத்தி மண்ணின் படைப்பாளி இரா.நாறும்பூநாதன் காலமானார். |
|||||
![]()
தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரும், தமுஎகச நிர்வாகியுமான இரா.நாறும்பூநாதன் (64) காலமானார்.
தமிழாசிரியர் ராமகிருஷ்ணன்- சண்முகத்தம்மாள் தம்பதியின் மகனான நாறும்பூநாதன் கழுகுமலையில் பிறந்தார். இவரது மனைவி சிவகாமசுந்தரி, தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாறும்பூநாதன் நெல்லையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் ராமகிருஷ்ணன், கனடாவில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது நாறும்பூநாதனுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவரது மறைவு எழுத்தாளர்கள், வாசகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற நாறும்பூநாதன் த.மு.எ.க.ச மாநில துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எழுதியுள்ள இவர், நெல்லையை மையமாக வைத்துப் பல படைப்புகளைத் தந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலையில், 1960-இல் பிறந்தவர் நாறும்பூநாதன். கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரான இவர், வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி, சிவகாமசுந்தரி தலைமை ஆசிரியை ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் தீபக் கனடாவில் பொறியாளராக உள்ளார்.
திருநெல்வேலியைச் சுற்றி வாழ்ந்த சாதாரண மக்கள் முதல் புகழ் பெற்றவர்கள்வரை பலரைப் பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்ட இவரது ‘கண் முன்னே விரியும் கடல்’ ஒரு முக்கியமான தொகுப்பு நூல். திருநெல்வேலியைப் பற்றி இவர் எழுதியிருக்கும் ‘திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்’ மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த நூல்.
நாறும்பூநாதனின் ’கனவில் உதிர்ந்த பூ’ என்ற சிறுகதை பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது சில கட்டுரைகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மக்களின் இலக்கிய முகமாக இருப்பவர் எழுத்தாளர் நாறும்பூநாதன். அவருக்குத் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு உ.வே.சா. விருது வழங்கிக் கௌரவித்தது. நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் இவரது இலக்கியப் பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது. இவரின் மறைவுக்கு இலக்கியச் செயல்பாட்டாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய ஸ்டேட் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றவர். இவர் எழுதிய சிறுகதைகள் ‘கனவில் உதிர்ந்த பூ’, ‘ஜமிலாவை எனக்கு அறிமுகப்படுத்திவன்’, ‘இலை உதிர்வதைப்போல’, ‘மரத்துப்போன சொற்கள்’ என்று தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. ‘கண் முன்னே விரியும் கடல்’, ‘கடன் எத்தனை வகைப்படும்’, ‘யானைச் சொப்பனம்’, ‘ஒரு பாடல் ஒரு கதை’, ‘திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்’, ‘வேணுவன மனிதர்கள்’, ‘பால்வண்ணம்’, ‘ஒரு தொழிற்சங்கப் போராளியின் டைரிக்குறிப்புகள்’, ‘மகாகவி பாரதி’ உள்படப் பல முக்கியக் கட்டுரைகளை இவர் எழுதியிருக்கிறார்.
திருநெல்வேலியின் பெருமைகளை விவரிக்கும் வகையில் இவர் எழுதிய ‘திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்’ என்ற நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக வருபவர்கள், தங்களுடைய விருந்தினர்களுக்கு இந்த நூலையே பரிசளிக்கும் வழக்கம் இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து செயல்பட்டுவந்த நாறும்பூநாதன், திருநெல்வேலி புத்தகத் திருவிழாவிலும், பொருநை இலக்கியத் திருவிழாவிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.
இவரது ‘யானைச் சொப்பனம்’, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளங்கலை முதலாண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரிக் காலத்தில் ’மொட்டுகள்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திய நாறும்பூநாதன், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி, உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை அதில் வெளியிட்டிருக்கிறார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன் ஆகியோரைத் தனது இலக்கிய முன்னோடிகளாகக் குறிப்பிடுவார் நாறும்பூநாதன்.
கரிசல் இலக்கியத்தின் தந்தையான கி.ராஜநாராயணன் தொடங்கி, ச.தமிழ்ச்செல்வன், வண்ணதாசன், கலாப்ரியா, நாஞ்சில் நாடன் உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்துவந்த நாறும்பூநாதன், சிறந்த சமூகச்செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.
நாறும்பூநாதனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு!
|
|||||
by hemavathi on 17 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|