|
|||||
2 தமிழக ஆசிரியர்களுக்குத் தேசிய நல்லாசிரியர் விருது |
|||||
தமிழகத்தில் 2 ஆசிரியர்கள் உட்படத் தேசிய அளவில் 45 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியராக பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்தப் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்திய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தின விழாவின்போது இவ்விருது வழங்கப்படும்.
இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய அளவில் மொத்தம் 45 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில் தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியைகள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி (சிபிஎஸ்இ பள்ளி) ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எம்.விஜயலட்சுமி ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், புதுச்சேரியில் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வி. ரெக்ஸ் என்ற ராதாகிருஷ்ணனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. டெல்லியில் செப்டம்பர் 5-ல் நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர்களுக்கு வழங்கி கவுரவிக்கிறார்.
|
|||||
| by hemavathi on 27 Aug 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|