|
|||||
கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் கடிதம் |
|||||
![]()
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்குப் பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ”கர்நாடகாவின் கல்வி முறையில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் அடங்கிய இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு வலியுறுத்தி கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் புருசோத்தம் பிளிமலே கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “ ‘நமது நிலம், நமது ஆட்சி' என்ற அமைப்பைத் தீவிரமாக நிறுவி அதற்காகப் பணியாற்றி வரும் ஸ்ரீரமேஷ் பெல்லன்கொண்டா அளித்த வேண்டுகோளுடன், ஒரு கோரிக்கையையும் நான் சமர்ப்பிக்கிறேன். கர்நாடகா இருமொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அவர் விரிவான மனுவைச் சமர்ப்பித்துள்ளார். மொழிப் பிரச்சினைகள் தொடர்பாகத் தற்போதைய சூழலில் நடைபெற்று வரும் பல்வேறு விவாதங்களைக் கருத்தில் கொண்டு, கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் என்று தோன்றுகிறது. எப்படியிருந்தாலும், இந்த விஷயத்தில் அரசு மட்டத்தில் பொருத்தமான முடிவு எடுக்கப்பட வேண்டியிருப்பதால், உங்கள் வழிகாட்டுதலை நான் நாடுகிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்துடன், குடிமக்கள் கூட்டுக்குழுவான 'நம்ம நாடு நம்ம ஆல்விகே' (NNNA) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பெல்லம்கொண்டா சமர்ப்பித்த மனுவையும் இணைத்து அனுப்பியுள்ளார். அதில், ’இந்தித் திணிப்பைக் கடுமையாக எதிர்க்கும் மற்றும் கல்வி, நிர்வாகம் மற்றும் பொதுத் தகவல் தொடர்பு ஆகியவற்றில் கன்னடம் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கட்டாய மொழிகளாக இருக்க வேண்டும்’ எனக் கோரியுள்ளது.
தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள், நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் மொழியியல் பாகுபாடு குறித்த கவலைகளை இந்த மனு எடுத்துக்காட்டுகிறது. யு.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி மற்றும் வங்கித் தேர்வுகள் போன்ற ஆட்சேர்ப்பு செயல்முறைகளில் இந்தி பேசுபவர்களுக்கு மத்திய அரசின் கொள்கைகள் சாதகமாக உள்ளன.
இதனால் இந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் பாதகமாக உள்ளனர் என்று அது வாதிடுகிறது. மேலும், அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழியையும் தேசிய மொழியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தி ஒரு தேசிய மொழியாக முன்னிறுத்தப்படுவதை மனு விமர்சிக்கிறது. மத்திய ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் பிராந்திய மொழிகளைச் சேர்க்கவும், தேசபக்தி முழக்கங்களில் இந்திக்குப் பதிலாகக் கன்னடத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் கர்நாடக அரசை இந்த மனு வலியுறுத்துகிறது.
|
|||||
by hemavathi on 08 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|